இனக் கலவரத்தைத் தூண்டுவது எளிது. ஆனால், ஒற்றுமையை வளர்ப்பது கடினம். பாகிஸ்தான், கராச்சியில் மே மாதம் பேருந்தில் பயணித்த 43 இஸ்லாமியர்களை மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இப்போது ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மிகப் பழமையான மதர் இம்மானுவேல் என்ற கருப்பர்களின் சர்ச்சுக்கு, கொலை செய்யும் நோக்கத்தோடு 21 வயது இளைஞரான டைலன் ரூஃப் கடந்த ஜூன் 17-இல் சென்றபோது பைபிள் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் டைலன் ரூஃபை வரவேற்று உட்காரச் செய்தனர்.
அவர்களது கனிவான உபசரிப்பு அவரிடம் ஒரு கணம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், நோக்கம் கருப்பர்களைக் கொன்று இனக் கலவரத்தைத் தூண்டுதல், அதையே குறிவைத்து பாதகச் செயலில் ஈடுபட்டார். ஒன்பது கருப்பர்களை சுட்டு வீழ்த்தினார்.
இவ்வாறு பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் ஒருவித மனநிலை குன்றியவர்கள். தன்னலம் மிகுதல், அதன் காரணமாக மனிதர்களை விரோதிகளாகப் பார்க்கும் மனோபாவம், ஒட்டுறவற்ற வாழ்க்கை, சமுதாயத்தின் மீது வெறுப்பு - இவையெல்லாம் பயங்கரவாதிகளின் அடையாளங்கள்.
மனநிலை மாற்றம் என்பது ஒழுக்கமான வாழ்க்கை மூலமும், சிந்தனைகளை நேர்வழியில் ஒருமுகப்படுத்துதல் மூலமும் ஏற்படும். ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் என்ற அழிவுப் பாதையைத் தவிர்த்து முன்னேற்றம் என்ற வளமைப் பாதையில் பயணிக்கவும், இயற்கையை நேச உணர்வோடு அணுகி அதன் வளங்களை எல்லோருடைய பயன்பாட்டுக்காகப் பகிர்ந்து கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இயற்கை வளமையையும், சுற்றுச்சூழலையும், சமுதாயத்தையும் நேச உணர்வோடு பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தவல்லது யோகா என்னும் உன்னதப் பயிற்சி. சிந்தனை, ஆழ்மன உணர்வு, செயல்கள் இவற்றை ஒருமுகப்படுத்துகிறது. செயல்களில் நிதானத்தை ஊக்குவிக்கிறது. சமுதாயத்தோடு ஒன்றி வாழும் மனப் பக்குவத்தை வளர்க்கிறது. எனவே, உலக நாடுகள் யோகா தினம் அனுசரிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
சக்தி தரும் சூரியன் அதிகமாகப் பிரகாசிக்கும் நாளான ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச அளவில் யோகா தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை 2014 டிசம்பர் 11-இல் ஒருமனதாகத் தீர்மானம் மூலம் அங்கீகாரம் அளித்தது.÷உத்தராயணத்திலிருந்து தட்சிணாயனத்துக்குப் பிரபஞ்சம் சஞ்சரிக்கும் நல்ல நாளில் (ஜூன் 21) உலகெங்கிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது இந்தியாவுக்குப் பெருமை.
புது தில்லியில் 35,985 யோகா ஆர்வலர்கள், 35 நிமிடங்களில் 21 ஆசனங்கள் செய்தனர். கின்னஸ் சாதனை அளவுப்படி இதுதான் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கு கொண்ட யோகா பயிற்சி. இரண்டாவது சாதனை 84 நாடுகளிலிருந்து ஆர்வலர்கள் பங்கு கொண்டது.
சாதனை ஒருபுறம் இருக்க சில எதிர்மறைக் குரல்களும் எழுந்தன. இந்து மதக் கோட்பாடுகள் கொண்ட யோகப் பயிற்சி மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதுதான் முக்கிய வாதம்.
யோகா பயிற்சி மதத்துக்கு அப்பாற்பட்டது. மனதையும், சிந்தனையையும் உடலோடு ஒருமுகப்படுத்துவது, கட்டுக்கடங்காத மனம், நினைவலைகளின் பாய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவருவது யோகப் பயிற்சி. இது எல்லா மனிதர்களுக்கும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருந்தும்.
இஸ்லாமியத் தோழர்கள் மனம் லயித்து ஐந்து முறை தொழுகை செய்கிறார்கள். யோகா முறையில் இது வஜ்ராசன அமர்வு. கிறிஸ்தவர்கள் பக்தி சிரத்தையுடன் ஆலயங்களுக்குச் செல்வதும், மனதைக் கட்டுப்படுத்தி ஜெபிப்பதும் ஒருவித யோக நிலையே ஆகும். யோகப் பாதையை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாது. அது எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்ல
வல்லது.
பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரம் 196 யாப்புகள் கொண்டது. முதன்முதலாக அரேபிய மொழியில் அல்பரோனி என்ற அறிஞரால் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பெயர் கிதாப் பதஞ்சலி. மொஹமத் கஜினி மொழிபெயர்ப்புக்கு ஆணையிட்டதாக சரித்திரம்.
திருமூலர் திருமந்திரத்தில் யோகக் கலையைப் பற்றி ஆத்மார்த்தமாக உணர்த்தியுள்ளார். "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்'. ஆதலால், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிவோம், உடம்பை வளர்ப்போம், உயிரை வளர்ப்போம் என்கிறார்.
ஏனெனில், உடம்பினுக்குள்ளே உறு பொருள், உலகத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி உள்ளது, அந்த உத்தம சக்தியிருப்பதால் உடம்பினை, செய்கைகளுக்கு உகந்ததாக பராமரிப்பதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். யோக முறையின் மூலம் மனதையும், உடலையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
மன அழுத்தம் பலரை பாதிக்கிறது. மன அழுத்தம் நிறைந்த துறை காவல் துறை. அன்றாடம் பதற்றம் சூழ்ந்த உலகில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு காவலர்களுடையது.
கொலை, கொள்ளை, களவு, பேரிடர் தாக்கம், உயிரிழப்பு இவற்றையே நாள்தோறும் பார்த்துப் பிரச்னைகளைக் கையாள்வது, தீர்வு காண்பது என்பது மிகப் பெரிய சவால்.
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தம் விளைவிக்கக் கூடிய பணி. பரபரப்போடு செயல்பட வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கால தாமதம் கூடாது. போக்குவரத்து நெரிசலில் பயணிப்பதே மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதைவிட பன்மடங்கு இறுக்கம் நிறைந்த ஓய்வில்லாத பணி காவலர் பணி.
யோகப் பயிற்சி காவல் துறைக்கு இன்றியமையாதது. மன அழுத்தத்தை சீராக்கி நிதானத்தை அளிக்கும். வாழ்க்கையின் அவலங்களைக் காணும்போது, சபலங்களின் வலையில் விழாமல் நம்மையே பாதுகாத்துக் கொள்வது அவசியம். சபல வலையில் வீழ்ந்த பலர் காவல் துறையில் மீள முடியாத நிலையில் மடிந்த சான்றுகள் பல. இத்தகைய நோயாளிகளுக்கு யோகா ஓர் அருமருந்து.
சந்தர்ப்பவசம், ஏழ்மை, அறிவின்மை காரணமாகக் குற்றம் புரிபவர்கள் ஏராளம். இந்தியாவில் 1,494 சிறைகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 134 சிறைகள். சராசரியாக எல்லாச் சிறைகளிலும் சுமார் நான்கு லட்சம் குற்றம் புரிந்தவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் ஏதோ ஒரு விதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிவதே மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
பல தொண்டு அமைப்புகளின் உதவியோடு சிறைகளில் யோகா பயிற்சி நடத்தப்படுகிறது. ஈஷா யோகா, வாழும் கலை அமைப்பு, சத்ய சாய், உலக அமைதிக் காப்பகம் போன்ற பல தொண்டு நிறுவனங்கள் சிறை இல்லங்களில் யோகா பயிற்சியும், சுவாசப் பயிற்சியும் அளிக்கின்றன.
யோகாவின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பயிற்சி நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. தனித்திருந்து அமைதியாக மூச்சைக் கட்டுப்படுத்தி அமரும்போது ஒருவித சாந்தம் சூழ்கிறது. செய்த காரியங்களின் நல்லவை, கெட்டவை புலப்படுகிறது.
பூரண தன்னிலை உணர்வு ஓங்கினாலே நேரான பாதையை அடையாளம் காட்டும், திருந்தி வாழ உத்வேகம் பிறக்கும். இது சிறைச்சாலை மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்க்கையிலும் தவறுகளைக் களைந்து சீரான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் என்பது உண்மை. யோகப் பயிற்சிக்குப் பிறகு, பல இல்லவாசிகள் மனதிலிருந்து பாரம் இறங்கியதுபோல ஆனந்தக் கண்ணீர் வடித்ததைப் பார்த்திருக்கிறேன்.
யோகி ஜக்கி வாசுதேவ் கூறுவார்: "இமாலய மலைத் தொடர், இந்துமஹா சமுத்திரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்பவர்களான இந்தியர்கள் தொன்றுதொட்டு வாழ்க்கையின் உண்மை நிலையை அறிவதற்காகப் பாடுபட்டனர்.
ஒரு கோட்பாட்டின் மீதான நம்பிக்கையைவிட, இயற்கையின் பல பரிமாணங்களின் விந்தையை உணர்ந்து தெளிவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்கள். சொர்க்கத்தை அடைவதை விட உன்னத விடுதலையே உயரிய குறிக்கோளாகக் கொண்டவர்கள்'.
யோகப் பயிற்சி அத்தகைய நிலையை உணர்வதற்கு வழிவகுக்கிறது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம் (நல் ஆகாரம்), தாரணை, தியானம், சமாதி என்று எட்டு நிலைகள் வழியே நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவுகிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு யோகக் கலையை பரவச் செய்த மகான் சுவாமி விவேகானந்தர். சிகாகோ நகரில் சர்வ மதங்கள் கூட்டமைப்பில், உலக ஒற்றுமைக்காக எல்லோரையும் கவரும் விதத்தில் சொற்பொழிவாற்றி இந்தியாவின் அருமை பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்துடன், யோகப் பயிற்சியின் உயர் நோக்கத்தையும் உணர்த்தினார்.
வியத்நாம் போர், அமைதியின்மை, நம்பிக்கையிழப்பு ஆகியன 1960, 70-களில் பல நாடுகளில் இளைஞர்களை பாதித்தது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற அடக்கமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்தியாவின் மீது மேல் நாட்டவர் பார்வை திரும்பியதில், யோகா என்ற தியான வழி பலரையும் கவர்ந்தது. மேலை நாடுகள் குறிப்பாக, அமெரிக்காவில் யோகா பயிற்சி மையம் இல்லாத நகரே இல்லை என்ற அளவில் வளர்ந்துள்ளது.
அமெரிக்காவில் சுய உதவியை ஓங்கச் செய்யும் சொற்பொழிவாளர் தீபக் சோப்ரா, அடுத்த தலைமுறையின் அடையாள மொழியாக யோகா உருவெடுத்துள்ளது என்று பெருமிதப்படுகிறார். இளைஞர்களுக்கு ஏற்றவாறு பவர் யோகா, கலை யோகா, அத்லெடிக் யோகா என்று பல வகையில் யோகாசனப் பயிற்சி அளிக்கும் மையங்கள் உருவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பிறந்த குப்புசாமி என்ற தமிழர் மருத்துவர் பட்டம் பெற்று தமிழ்நாடு, மலேசியாவில் மருத்துவராகப் பணியாற்றி, 1924-ஆம் வருடம் தியானம் புரிய ரிஷிகேஷ் அடைந்து துறவறம் பூண்டு சுவாமி சிவானந்தராக உருவெடுத்தார்.
சிவானந்த ஆஸ்ரமக் கிளைகள் உலகின் பல நாடுகளில் உள்ளன. மக்கள் சேவை ஒன்றே தாரக மந்திரமாகக் கொண்ட இந்த அமைப்பில் யோகா பயிற்சி எல்லா இடங்களிலும் அளிக்கப்படுகிறது.
யோகா ஒருவரை நல்ல மனிதராக்குகிறது, நற்செயல்கள் புரிய வைக்கிறது என்கிறார் சுவாமி சிவானந்தர்.
அறிவுசார்ந்த நமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வளர்த்த கலை யோகக் கலை. விலைமதிக்க முடியாத பொக்கிஷமான யோகக் கலையை உலகுக்கு இந்தியா அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.