வங்கிக் கணக்கு மூலமாக பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படும் ஒரு சாதனம் காசோலையாகும் (Cheque). பொருளாதார உலகில் காசோலைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
காசோலை பயன்பாட்டினால், ஒருவருக்கொருவர் இடையேயான கொடுக்கல் வாங்கலில், பண நோட்டுகளின் பரிமாற்றம் குறைகிறது. காசோலை மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில், பணம் கொடுத்தவர் மற்றும் பெற்றுக் கொண்டவரின் வழித்தடங்களை (Money trail) வங்கிக் கணக்கு மூலமாக எளிதாகக் கண்டறிய முடியும்.
காசோலை பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதன் மூலம், கருப்புப் பணப் புழக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். சொத்து உரிமை மாற்றுப் பரிவர்த்தனைகளில், கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 20,000 ரூபாய்க்கு மேலான தொகைக்கு காசோலைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முறைப்பாடு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இடநிலைப் பயன்மாற்றம் (ரியல் எஸ்டேட்) துறையில் வியாபித்திருக்கும் கருப்புப் பண வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
9-ஆம் நூற்றாண்டில், பாரசீக, வியாபாரிகளிடையே உதயமான பணப் பரிமாற்றத்திற்கான ஒரு மாற்று யோசனை (Sakks), உலகின் மற்ற பகுதிகளுக்கு மெல்லப் பரவி, மேம்பாடு அடைந்து, 1717-ஆம் ஆண்டில், பாங்க் ஆஃப் இங்கிலாந்து, அச்சடிக்கப்பட்ட காசோலைகளை அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுத்தது. காசோலையை கையில் வைத்திருப்ப ஒரு கெüரவ அடையாளமாகக் கருதப்பட்ட காலம் அது.
காசோலைகளின் வடிவமும், வங்கிகள் காசோலைகளைக் கையாளும் முறைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வங்கியில் செலுத்தப்படும் காசோலைகள், "கிளியரிங் ஹவுஸ்' என்ற பொது இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் பரிமாறப்பட்டு வந்தன.
2010-இல் அறிமுகப்படுத்தப்பட்ட Cheque truncation system (CTS) என்ற மேம்படுத்தப்பட்ட முறையில், வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகளின் பிம்பங்கள், கணினி மூலம் வங்கிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இம்முறையில், வாடிக்கையாளர் கணக்கில் அவர் செலுத்திய காசோலை தொகை, முன்பைவிட விரைவாக வரவு வைக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் அனைவரும், பயன்படுத்தப்படாத பழைய காசோலைகளுக்குப் பதிலாக, CT2010 என்று குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகளை வங்கிகளிடமிருந்து பெற்று, அவற்றைத்தான் இனி பயன்படுத்த வேண்டும்.
CTS முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, காசோலைகளின் தேதி, பெறுபவரின் பெயர் மற்றும் தொகை சம்பந்தப்பட்ட திருத்தங்களைச் செய்து, அதில் கணக்குக்குச் சொந்தக்காரர் கையொப்பம் இட்டிருந்தாலும், அவற்றை வங்கிகள் அனுமதிப்பதில்லை.
ஆகையால், காசோலையில் விவரங்களை எழுதும்போது, தவறுகள் நேர்ந்தால், அந்தக் காசோலையை ரத்து செய்துவிட்டு, புதிய காசோலையை எழுத வேண்டும். ஒரு காசோலையை ரத்து செய்யும்போது, கையெழுத்திடும் பகுதியைக் கிழித்துவிடுவதால், அதைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே, வங்கியில் செலுத்த வேண்டிய காசோலையின் பிம்பத்தை மட்டும் வங்கிக்கு அனுப்பி, அதற்குரிய தொகையை கணக்கில் வரவு வைக்கும் வசதி பிரிட்டனில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. நாளடைவில், இந்த வசதி நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
காசோலைகளின் அடிப் பகுதியில், மையத்தில் காணப்படும் 9 இலக்க எண், அந்த வங்கிக்குரிய MICR (Magneticink character recognition) எண்ணாகும். இதில், ஒவ்வொரு மூன்று இலக்கத்திலும் வங்கியைப் பற்றிய பிரத்யேக தகவல் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, 560015005 என்பதில், 560 பெங்களூரு நகரத்தையும், 015 கனரா வங்கியையும், 005 கணக்கு வைக்கப்பட்டிருக்கும் அவென்யூ சாலை கிளையையும் குறிக்கின்றன.
மாதாந்திரச் சம்பளம், ஓய்வூதியம், நிறுவன வைப்புகளுக்கான வட்டி, நிறுவனப் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான ஈவுத்தொகையை வங்கிக் கணக்கில் Electronic Clearing Service (ECS) நேரடியாகச் செலுத்துவதற்கு MICR எண் அவசியமானதாகும். இந்த எண் தவறாகப் பதியப்பட்டால், தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம். அதனால்தான், தொகையைச் செலுத்துபவர்கள், அதைப் பெறுபவரின் வங்கிக் கணக்குக்குரிய காசோலையின் அசல் அல்லது நகலை கேட்டுப் பெறுகின்றனர்.
முதலீடுகளின் மீதான வட்டி மற்றும் ஈவுத்தொகைகளுக்கான காசோலைகள் தபாலில் தொலைந்து போவது மற்றும் தவறாக மற்றவர்களால் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ECS முறைக்கு மாறுவது நல்லது. இதற்கான தனிக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதும், காசோலைகளைச் செலுத்துவதற்கு வங்கிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய சிரமத்தையும், நேரத்தையும் தவிர்க்கலாம் என்பதும் இந்த முறையில் காணப்படும் நன்மைகளாகும்.
மேலும், இந்த முறையில் இணைவது அல்லது விலகிக்கொள்வதற்கான வழிமுறைகள் மிகவும் எளிதானது. தவணை முறையில் முதலீடுகள் (Systematic investment plan), கடன் தொகைக்கான தவணைகள் (EMIs), மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு காசோலையைப் பயன்படுத்தாமல், ECS முறையைப் பயன்படுத்தலாம்.
காசோலைகளின் செல்லத்தக்க காலம் (Validity period), அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியிலிருந்து மூன்று மாதங்கள் வரைதான். அதற்குள், காசோலையை வங்கியில் செலுத்த வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், காசோலை வழங்கியவரை (Drawer) அணுகி, தற்போதைய தேதியிட்ட இன்னொரு காசோலையைப் பெறுவதுதான் மாற்று வழியாகும்.
மேலும், காசோலை தொகைக்குச் சொந்தக்காரர் (Payee), அந்தக் காசோலையை வங்கியில் செலுத்துவதில் ஏற்படும் தாமத இடைவேளையில், வழங்கியவரின் கணக்கில் இருப்பு குறைந்திருந்தால், அதற்கு வங்கி பொறுப்பு ஏற்காது.
மேலும், காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முழுத்தொகையும் கணக்கில் இருப்பு (Full balance) இருந்தால்தான், வங்கி பணத்தைப் பட்டுவாடா செய்யும். நஷ்டத்தைத் தவிர்க்க, இருப்பில் இருக்கும் பணத்தை பட்டுவாடா செய்யும்படி வங்கியை வற்புறுத்த முடியாது. ஆகையால், பெறப்படும் காசோலைகளை வங்கியில் உடனடியாகச் செலுத்திவிடுவதால், பண இழப்புகளைத் தவிர்க்கலாம்.
காசோலைகளைப் பெறுபவரின் வயது, இடமாற்றம், கவனக்குறைவு முதலிய பல காரணங்களால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பணமாக மாற்றப்படாமலேயே காலாவதி ஆகிவிடுகின்றன.
உலகெங்கிலும் நிலவும் இந்தப் பொது பிரச்னையை மையமாகக் கொண்டு, Seinfeld, King of Queens போன்ற தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
வங்கிக் கணக்கில், தொகைக்கான இருப்பை நிலுவையில் வைத்துவிட்டுத்தான் காசோலை எழுதப்பட வேண்டும் என்பது பொது விதி. ஆனால், விதிக்கும், நடைமுறைக்கும் இடையே பல வேறுபாடுகள் நிலவுகின்றன. வங்கியில் செலுத்தப்படும் சில காசோலைகள், பல காரணங்களுக்காக உரியவர் கணக்கில் வரவு வைக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன.
காசோலைக்கான தொகையை அளிப்பதை நிறுத்தி வைக்கும்படி (Stop payment order of cheque) ஆணை, மூன்று மாதங்களுக்கு முன் தேதியிட்ட காலாவதியான காசோலை (Stale cheque), பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque), கையொப்பத்தில் வேறுபாடு (Signature difference) போன்ற காரணங்களுக்காக, பொதுவாக காசோலை திருப்பி அனுப்பப்படலாம்.
இவைதவிர, வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லை (Insufficient funds) என்ற காரணத்திற்காக காசோலை திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் காசோலையை வழங்கியவரின் பேரில், ஏமாற்று உள்பட பல சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பண இழப்பீட்டைத் தவிர்க்க, காசோலையை வங்கியில் செலுத்தியவர், சில பரிகார நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வங்கிக் காசோலைகளுக்கான செயல்பாடுகள் Negotiable Instruments Act மூலம் வரைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் 138-ஆவது பிரிவின்படி, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்குவது "கிரிமினல்' குற்றமாகக் கருதப்பட்டு, அம்மாதிரி காசோலை வழங்கியவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.
நிதி இருப்பு பற்றாக்குறையால் (Insufficient balance) காசோலை திரும்பினால், அது திரும்பிய 30 நாள்களுக்குள், அந்தக் காசோலை வழங்கியவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். அந்த அறிவிப்பில், காசோலை தொகை 15 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அறிவிப்பு பெறப்பட்ட 30 நாள்களுக்குள் பணம் செலுத்தப்படவில்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அறிவிப்பு காலாவதி தேதியிலிருந்து 30 நாள்களுக்குள், காசோலை கொடுத்தவர் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், சட்டத்திலுள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல ஏமாற்றுக்காரர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறையின்படி, பாதிக்கப்பட்ட நபர், வழக்கு தொடுக்க நினைத்தால், காசோலை வழங்கிய நபர் வசிக்கும் நகருக்குச் சென்று, அங்குள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க முடியும். அலைச்சலைத் தவிர்க்க பலர், வழக்கு தொடுப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டும் வழக்கு தொடுக்காதவர்கள் 18 லட்சம் பேர்களுக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தக் குறைகளைப் போக்குவதற்கு மத்திய அரசு, சமீபத்தில் ஓர் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, காசோலை செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் நகரத்திலேயே, பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்கலாம்.
ஒரே நபர் அளித்த பல காசோலைகள், பல நகரங்களில் உள்ள வங்கிகளில் செலுத்தப்பட வேண்டியிருந்தாலும், அந்தக் காசோலையைப் பெற்ற நபர், தனக்கு செüகரியமான நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.
பொருள் மற்றும் சொத்துப் பரிமாற்றத்தின்போது, காசோலைக்கான தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகே பரிமாற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதை தொடர்புடையவர்கள் மனதில் கொண்டு செயல்பட்டால், ஏமாற்றுக்காரர்களின் தந்திரங்களிலிருந்து தப்பிக்கலாம்.
காசோலை, வியாபார உலகில் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் சாதனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.