உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...

நம்முடைய உடல், மன நலப் பயிற்சிகளுக்கு அதி உன்னத உலக அங்கீகாரம் கிடைத்ததற்கு, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படலாம்.

நம்முடைய உடல், மன நலப் பயிற்சிகளுக்கு அதி உன்னத உலக அங்கீகாரம் கிடைத்ததற்கு, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படலாம். நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதுதான் யோகாவும் தியானமும். புத்தர் அமர்ந்து யோகா அடிப்படையில் தியானம் செய்து, பல உண்மைத் தத்துவங்களை உலகிற்கு அளித்தார். பதஞ்சலி முனிவர் யோகா பற்றிய சூத்திரமே உருவாக்கி இருக்கிறார்.
 பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2014-இல் ஐ.நா. சபையில் உரையாற்றியபோது, யோகா எப்படி மனித மனதைப் பண்படுத்துகிறது, உடல் நலத்தைப் பேணிக் காக்கிறது என்ற அடிப்படையில், உலகம் முழுவதும் வருடத்தில் ஒரு நாளை யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ஆம் நாளை உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
 ஜூன் 21-இல் உலகம் முழுவதும் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. அன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு கோடி மக்களுக்கும் மேலாக உலகம் முழுவதிலுமாய் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்கள் என்பது ஒரு செய்தி மட்டுமல்ல, இது ஒரு புதிய வரலாற்றுச் சாதனை.
 இதில் இந்தியா மட்டுமல்லாமல், பல இஸ்லாமிய, கிறித்துவ, புத்த கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகள் என்கிற வேறுபாடே இல்லாமல் பெரும்பாலான நாடுகள் உலக யோகா தினத்தை வெற்றிகரமாகக் கொண்டாடின.
 யோகாவின் சிறப்பு, அது எப்படி உடல் நலத்தைப் பேணிக் காக்கிறது, மனதை அமைதிப்படுத்துகிறது, நோய் நொடிகளிலிருந்து, இருதய நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு வரை எப்படிக் குறைக்கிறது என்பதை எல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக, பல நாடுகளில் நிரூபித்துள்ளார்கள். குறிப்பாக, மகரிஷி மகேஷ்யோகியிடமிருந்து, உலகின் பல நாடுகளில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த பிரபலங்கள் பயிற்சி பெற்று, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
 இதற்கு முன்பே, சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல மாபெரும் பெரியோர்கள் பல நாடுகளுக்குச் சென்று யோகாவின் சிறப்புகளைப் பற்றி உரையாற்றிப் பயிற்சி அளித்துள்ளார்கள். நம் நாட்டின் தந்தை மகாத்மா காந்தியும் யோகாவும், தியானமும் செய்து வந்தார். அதேபோல, நமது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் யோகா பயிற்சி செய்தவர் என்பதும், அவர் சிரசாசனம் உள்ளிட்ட சில ஆசனங்களைச் செய்வார் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
 சாதாரண மக்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், யோகா பயிற்சிக் கூடங்கள் போன்ற பல இடங்களிலும், வாழும் கலை பயிற்சி அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மறைந்த வேதாத்ரி மகரிஷி, ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் மற்றும் பலரும், இத்துறையில் நிபுணத்துவம் பெற்று நம் நாட்டில் யோகாவையும், தியானத்தையும் பரப்புவதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.
 நம் நாட்டின் பல விஞ்ஞானப் பலன்களை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கும்போது, நம் நாடு அதில் பங்கு கொள்ளவும் இல்லை, பலன் பெறவும் இல்லை, வணிக வர்த்தகத்தில் ஈடுபடவும் இல்லை என்பது முழுமையான உண்மை. அதுபற்றி நாம் குறைபட்டுக் கொள்கிறோமே தவிர, அந்த வெற்றியை அடைய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனை.
 "நீம்' என்று அழைக்கப்படும் வேம்பு தொடர்பான பொருள்களுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுவிட்டனர் என்பதற்கும், அதேபோல, பாசுமதி அரிசிக்கு மற்ற நாடுகள் காப்புரிமை பெற முயற்சித்தனர் என்பதும், பல உலகப் புகழ் பெற்ற மருந்து நிறுவனங்கள் தூய மஞ்சளை நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் நிதர்சன உண்மைகள்.
 எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் கண்டுபிடித்து, பயன்படுத்திவரும் இவற்றுக்கு இன்று யார்யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம், நாம் அவற்றிற்கு உரிமை கொண்டாடாமல் விட்டுவிட்டதுதான்.
 அலர்ஜியோ, சளியோ பிடித்துக் கொண்டால், கொதிக்க வைத்த பாலில் கொஞ்சம் மஞ்சளையும், மிளகையும் சேர்த்து சாப்பிட குணமாகும் என்பது பாட்டி வைத்தியப் பாரம்பரிய முறை. இது நம்முடைய பாரம்பரியப் பழக்க வழக்கப் பண்பாடு.
 அதேபோல, கொள் தானியத்தைப் பயன்படுத்தி சட்னி, ரசம் போன்றவற்றைச் செய்து சாப்பிட்டால் உடல் இளைக்கும். சர்க்கரை நோய்க்கும் இது ஓர் அருமருந்து. இவையெல்லாம் மருந்துகளாகி வெளிநாட்டினரால் காப்புரிமை கோரப்படுகின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?
 முருங்கை இலை, காய் போன்றவை மாத்திரைகளும், கேப்சூல்களும் செய்வதற்காக தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் வணிகம் செய்து வருகின்றனர்.
 இதுபோன்றே துளசி, வில்வம், வெற்றிலை மற்றும் பல மூலிகைகள், கீரை வகைகளின் சிறப்புகளை உலகின் பல நாடுகள் விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து, வணிக வெற்றியாக மாற்றி பல லட்சம் கோடிகளில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல வேளையாக மஞ்சள், மிளகு, முருங்கைப் பொருள்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு அரசியல், மத, ஜாதி வர்ணங்கள் பூசப்படவில்லை.
 இதுதவிர, புத்த மதத்தில் "ஜென் புத்திசம்' என்ற ஒரு மிகப் பிரபலமான புகழ் வாய்ந்த பிரிவு, அந்த மதத்தில் முன்னணி இடம் வகிக்கிறது. இதில் கையாளப்படும் குங்பூ, கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சி முறைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்துதான் சென்றன. புத்த மதக் கோட்பாடுகளில் நிபுணரான போதி தர்மர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் நடைப் பயணம் செய்து, தியானத்தின் அடிப்படையிலும், யோகாவின் அடிப்படையிலும் இந்த அருங்கலைகளை சீன நாட்டிற்கு "ஜென் புத்திசம்' என்ற பெயரில் அளித்துள்ளார்.
 போதி தருமரைப் பற்றிய அனைத்து விவரங்களும், சாதனைகளும் முழுமையாக வெளிவரவில்லை. ஜப்பானிய நாட்டவர்கள் இந்திய நாடு ஏன் போதி தர்மருக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை, அவரைப் பற்றிய புத்தகங்களை ஏன் வெளிக் கொணரவில்லை என்று கேட்கிறார்கள். பெüத்தம் என்பதால் நாம் அவரைச் சொந்தம் கொண்டாடவில்லை. அவர் பெüத்தர் என்பது முக்கியமா? இல்லை இந்தியர் என்பது முக்கியமா? மதமா பெரிது, தேசமல்லவா?
 நம் நாட்டில் வெளிநாட்டவர்கள் ஐ.நா. சபையால் யோகா தினம் அறிவிக்கப்படுவதுவரை யோகா, தியானம் உள்ளிட்ட மற்ற மருத்துவக் குணங்கள் கொண்ட இந்தியப் பொருள்களைப் பற்றிப் பேசும்போது, அது இந்தியாவில் இருந்து வந்தது, இது இந்தியாவில் உருவானது என்று பேசுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவில் மட்டும் யோகா தொடர்பான பொருள்களுக்கான வர்த்தக அளவு ரூபாய் 1,70,000 கோடி என மதிப்பிட்டுள்ளார்கள்.
 இதுதவிர, பயிற்சிக் கூடங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என இவை மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானமாக வருகிறது என்பது தனிக் கணக்கு. பல நாடுகளில் இருக்கும் யோகா தொடர்பான வணிகம், வர்த்தக மதிப்பு என்ற அளவில் குறைந்தது ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி மதிப்பு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 இப்படி மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உலகம் முழுவதும் வர்த்தகம் தொடர்பான யோகா பொருள்களும், பயிற்சிக் கூடங்களும் இருக்கும்போது, அதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது நமது நியாயமான கேள்வி.
 இதிலிருந்து நாம் பெறுவதுதான் என்ன? யோகா என்று சொன்னால் அது இந்து மதத்துடன் தொடர்பானது அல்லது பெüத்த மதத்துடன் தொடர்பானது என்பதால் நாம் உரிமை கொண்டாடாமல் விட்டுவிடுவதா?
 ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய நாட்டின் ஒரு பாரம்பரிய சிறப்பான யோகாவை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும், உலக யோகா நாள் தேவை என்று இந்தியப் பிரதமர் விடுத்த கோரிக்கையை, இந்தியாவிற்கும் யோகாவிற்கும் இருக்கும் தொடர்பையும், வரலாற்றையும் ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டு ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக அறிவித்தது. அதை உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
 இதை உலக யோகா தினமாக ஜூன் 21-ஐ அறிவித்ததும், பெரும்பாலான நாடுகள் பின்பற்றியதும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த ஒரு பெரிய வெற்றி. இந்த உண்மையை நம் நாட்டில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மறுப்பதும், அந்த வெற்றியை சிறுமைப்படுத்துவதும், தேவையே இல்லாமல் மதச் சாயம் பூசுவதும் வேதனையானவை. உலகம் நம்மைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்காதா?
 உலகில் உள்ள நாடுகளில் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்காத நாடுகள் நமது தெற்காசிய நாடுகள் மட்டுமே.
 "பிராணாயாமம்' என்கிற யோகாவின் ஓர் அங்கமான மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்து வந்தால், பாதிக்கும் மேலான நோய்கள் அண்டாது என்கிற ஆரோக்கிய ரகசியத்தை நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தும், அதை நமக்குக் கொடையாக அளித்திருந்தும், அது மதம் சார்ந்தது என்று ஒதுக்க முற்பட்டால் அதைவிட முட்டாள்தனம் இருக்க முடியுமா?
 "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்பார் திருவள்ளுவர்!
 
 கட்டுரையாளர்:
 இந்திய } ரஷிய/ஜப்பான் வர்த்தக அமைப்புகளின் தலைவர்.
 மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உலகம் முழுவதும் வர்த்தகம் தொடர்பான யோகா பொருள்களும், பயிற்சிக் கூடங்களும் இருக்கும்போது, அதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது நமது கேள்வி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com