இந்தியாவின் மகள்' ஆவணப்படம் பற்றிய சர்ச்சை, மீண்டும் நாடு முழுதும் "நிர்பயா' வழக்கு, விசாரணை, நீதிமன்ற தாமதம், தூக்கு தண்டணை என பல்வேறு தளங்களுக்குள்ளும் இழுத்து சென்று விட்டிருக்கிறது.
ஆனால், இம்முறை அதிகமாக விவாதிக்கப்பட்டது, முகேஷ் சிங்கின் கருத்து "இந்திய சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை' பிரதிபலிக்கிறதா என்பது தான்.
அது மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண் சமூகமும் தெருக்களில் "காமவெறி' பிடித்து அலைவதைப் போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத, பெண்களைக் கீழ்த்தரமாக நடத்தும் மோசமான நாடு இந்தியா எனவும் பலவித கண்டனக் குரல்கள் எழுப்பப்படுகின்றன.
இவர்களில் பலர் கூறும் கருத்துகளில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், இந்த நாட்டின் அடிப்படைத் தன்மையாகவும், பண்பாடாகவும் இல்லாத ஒன்று இப்போது பூதாகரமான தோற்றத்தில் வந்து பெண்ணே "எச்சரிக்கை, எச்சரிக்கை' என கூவும் நிலைமை எதனால் வந்தது?
இந்த நாட்டில் தான் பெண்களை தெய்வங்களாக, சர்வ சக்தியாக பார்க்கின்ற அம்சம் ஆதிகாலம் தொட்டு இருந்து வந்துள்ளது. ஒருபுறம் தெய்வமாகவும், இயற்கையின் வடிவங்களை பெண்மையின் அடையாளங்களாகவும் பார்க்கச் சொல்லிக் கொடுத்த தலைமுறைகள் மாற மாற நம் சிந்தனை, செயல்பாடுகளில் மாற்றம் வரத் துவங்கியது.
ஆதிகால ரிக்வேதம் "எங்கு பெண்கள் மகிழ்வோடு இருக்கிறார்களோ அங்குதான் செல்வம் செழிக்கும்' என்ற ஒற்றை கருத்தில் பெண்களுக்கான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது.
ஆனால், காலப்போக்கில் இடைச்செருகல்களும், அதிகாரத்தின் பக்கம் இருப்போரின் மனநிலையும், பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் சிறிது சிறிதாகக் குறைத்து இன்று பெண்களுக்கான உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் புதிது புதிதாக சட்டங்கள் இயற்ற வேண்டிய நிலைக்கு நம்மைக் கொண்டு வந்திருக்கிறது.
பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரை பெண்களை முன்னிறுத்தியே, பெருமைப்படுத்தியே வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். பிறந்தது "பெண் குழந்தை' எனத் தெரிந்தவுடன் "மகாலட்சுமி வந்தாச்சு' என கொண்டாடி மகிழ்ந்தது நம் முந்தைய தலைமுறை.
இன்று "கருவறைக்குள்ளேயே' பெண் சிசுக்களைக் காப்பாற்ற சட்டங்களையும், பெண் குழந்தையை கொண்டாடுங்கள் என அரசாங்கம், செலவு செய்து பிரசாரம் செய்யும் நிலைக்கு நம்மைத் தள்ளி இருப்பது மேற்கத்திய அன்னிய நாகரிகத்தின் பாதிப்பில் உள்ள நம் நிகழ் கால சமூகமா? அல்லது காலம் காலமாக இந்நாட்டில் பின்பற்றப்படும் பண்பாட்டின் கூறுகளா?
திருமணமாகிக் கணவன் வீடு செல்லும் தன் வீட்டுப் பெண்ணிற்கு "சீதனம்' என்ற பெயரில் அவளுடைய கௌரவமான வாழ்க்கைக்காக, மனமுவந்து வழங்கி அவளது பொருளாதார நிலைக்கும் பக்க பலமாக இருந்தது நம் பாரம்பரியப் பண்பாடு, முந்தைய சமுதாயம்.
ஆனால், காலப்போக்கிலே தன் சொத்துரிமைக்காகப் போராடி, போராடி சட்டங்களை கொண்டுவரச் செய்து நீதிமன்றங்களின் கதவுகளை பெண்கள் தட்டச் செய்திருப்பது அன்னிய நாகரிக பாதிப்பில் இருக்கும் இன்றைய சமுதாயம்.
"பெண்ணைக் கைநீட்டி அடிப்பவன் மனிதனா' எனக் கேட்டு வீட்டுக்குள்ளே நடக்கும் வன்முறைகளை, முன்பின் தெரியாத மனிதன் கூடக் கேள்வி கேட்டுப் பாதுகாக்க முடியும் என சொல்லிக் கொடுத்திருந்தது நமது முன்னோர் சமூகம்.
ஆனால், வீடுகளில் மட்டுமல்ல, பொது இடங்களில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கூட "சட்டம் பார்த்துக் கொள்ளட்டும்' என பாராமுகமாகிப் போவதைத்தான் நாம் நாகரிகம் எனச் சொல்கிறோமா?
தன் சகோதரியை, தாயை, மகளை, ஏன் தோழியைக் கூட சீண்டியவனை, கேலி செய்தவனை, தட்டிக் கேட்டு அது கொலை வரை சென்று தண்டனை அடைந்தவர்கள் இந்த நாட்டில் ஆயிரமாயிரம் பேர் உண்டு.
அந்த ஆழ்மன உணர்வுதான் "நிர்பயா'விற்கு நடந்த கொடூரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்தது. தெருக்களில் இறங்கிப் போராட வைத்தது. இந்த நாட்டின் ஆண்களும் தான் அந்த போராட்டத்தில் தங்களை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
தன் சகோதரியின் திருமணத்திற்காக பாலைவனத்திலும், தூர நாடுகளிலும் தன் குடும்பத்தைப் பிரிந்து கொடுமைகள் அனுபவித்துப் பணம் சேர்க்கும் சகோதரர்களைக் கொண்டுள்ள நாடு இது.
தன் இளமைக் காலம் போனாலும் பரவாயில்லை என, தன் சகோதரிகளின் திருமணத்தை முடித்த பின்னர்தான் எனக்கு என, 40 வயதுவரை கூட திருமண வாழ்க்கையை தள்ளிப்போடும் சகோதரர்களை "பொறுப்பான பிள்ளை' என இன்னமும் கொண்டாடிக் கொண்டுதானே இருக்கிறோம்.
"சீதனம்' என்பதை வரதட்சணையாக்கி அதையும் கட்டாயமாக்கி நம் இளைஞர்களை எங்கோ துடிதுடிக்கும் வாழ்க்கையை வாழவைத்திருப்பது எது?
பிற்போக்குத் தனமான சில சாமியார்கள் சொல்லும் அரைவேக்காட்டுத்தனமான "உடை கற்பு' பற்றிய விஷயங்களைக் கேட்டு மத குருமார்கள் பெண்களுக்கெதிரான மனநிலையை வளர்த்தெடுக்கிறார்கள் என கொதிக்கும் சிலர், சுவாமி விவேகானந்தர் போன்ற துறவிகள்தான் பெண்களுக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்தவர்கள் என்கிற உண்மையை மறந்து விடுகிறார்கள்.
ஒரு மதமோ, சமூகமோ, பிற்போக்குத்தனத்திலே உறைகின்ற பொழுதெல்லாம் பண்பாட்டின், கலாசாரத்தின் அடிப்படையில் புதிய எழுச்சியை விவேகானந்தர், இராஜாராம் மோகன்ராய் போன்ற பெரியோர்கள்தான் வென்று நிற்கிறார்களே தவிர, அரைகுறை சாமியார்கள் அல்ல.
கர்ப்பகிரகத்துக்குள்ளே பெண்களே நுழைந்து பூசை செய்யும் முறையை உருவாக்கி பெண்களுக்கும், ஆன்மீகத்துக்குமான தூரத்தை முழுமையாக உடைத்து "ஆன்மீகப் புரட்சியையே' உருவாக்கி வைத்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம்.
தன் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் "சுயம்வரம்' என்கிற மிகப்பெரிய சுதந்திரந்தை நாட்டின் இளவரசிகள் மட்டுமல்ல, சாமானியப் பெண்ணும் தனக்குப் பிடித்தவனை மணக்கலாம் என அங்கீகாரத்தை வழங்கியிருந்தது நம் சங்க காலம்.
சில இனக் குழுக்களிடையே தன் கணவனைப் பிடிக்காவிட்டால் "அறுத்துக் கட்டும்' வழக்கத்தின்படி அடுத்த ஆண்மகனைக் கைப்பிடிக்கும் பழக்கத்தைக்கூட வைத்திருந்தோம்.
சர்வ சாதாரணமாகப் பெண்ணின் தனிமனித உணர்வு என கடக்கும் அவர்களை "காட்டுமிராண்டிகள்' என சில சமயம் நாம் அழைப்பது உண்டு.
ஆனால், இணங்காத பெண்ணின் மீது "ஆசிட் அடிக்கும் நிகழ்வுகள் சமீப காலங்களில் பெருகி கொண்டு போவதன் காரணம் நம் சொல்லிக் கொடுத்த கலாசாரமா அல்லது நமது பண்பாடு சொல்லிக் கொடுக்காத, அன்னிய மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியான நாகரிகமா?
"நிர்பயா' ஆவணப்படத்தின் மூலமாக "பொதுவான இந்திய ஆணாதிக்க மனோநிலையைப் படம் பிடிக்கும் மேற்கத்திய நாட்டின் நிறுவனங்கள், தங்கள் நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் படம் பிடித்து உலகம் முழுதும் காட்டட்டுமே.
படித்த, நாகரிகம் மிக்க, "பெண் முதலில்' (ஜ்ர்ம்ங்ய் ச்ண்ழ்ள்ற்) எனக் கூறிக்கொள்ளும் பண்பாட்டு சிறப்புமிக்க நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை ஒப்பீடு செய்துள்ள விவரங்கள் சில கீழே:
பாலியல் வன்கொடுமை விழுக்காடு (ஒரு லட்சத்திற்கு)
அமெரிக்கா 26.6
பிரேசில் 24.9
நார்வே 22.3
பின்லாந்து 18.7
ஸ்வீடன் 66.5
ரஷியா 18.3
இந்தியா 02.0
இந்த புள்ளிவிவரம் மூலம் இந்தியா பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான நாடு என நிறுவ வரவில்லை. ஆனால், உலகம் முழுதும் இருக்கும் நிலையைவிட நம் நாடு பரவாயில்லை எனச் சொல்லும் நிலையில் இருக்கிறோம்.
பெண்களை விளம்பரப் பொருளாக, வியாபார உத்தியாக, மாற்ற நினைக்கும் "உலகப் பொது மனப்பான்மை'யிலிருந்து நம் இந்திய மகளைக் காப்பாற்ற நினைத்தால் தாயை, தாய் நாட்டை, குலதெய்வத்தை மதிக்கும் நம் இந்திய ஆண் மகன்களுக்கு அனைத்துப் பெண்களையும், அதேபோல் பாவிக்கச் செய்யும் நாம் பாரம்பரியத்தை கலாசாரத்தை பண்பாட்டை மீண்டும் கற்றுக் கொடுப்போம்.
மிருகவெறி பிடித்த சில ஆண் கயவர்களின் செயல்களால், சில அரசியல், ஆன்மிக நபர்களின் அரைகுறை பேச்சுகளால், சில்லறைத் தனமான சிறுமதியாளர்களின் எண்ணங்களால் இந்நாட்டு "ஆணாதிக்க மனோபாவத்தை' எடை போடாமல்,
"பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!'
என்ற முண்டாசுக் கவிஞனின் "ஆண்மை மனோபாவத்தை' மீட்டெடுப்போம்.
பெண்களுக்கான இருப்பை, உணர்வை மதிக்கும், உன் துயர், உன் வேதனை என்னுடையதும் தான் என பகிர்ந்து கொள்ளும், உன்நேசம், பாசம் என்னை இயக்குகின்ற சக்தியாக உள்ளது எனப் போற்றும் அத்தனை ஆண்களையும் போற்றுவோம்!
கட்டுரையாளர்: மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.