மாமியார் என்கிற அம்மா!

இந்த மாதம் என் மாமியாருக்கு 95 வயது ஆகியிருக்கும். அவருக்கு "மாமியார்' என்ற சொல்லே பிடிக்காது.
மாமியார் என்கிற அம்மா!
Updated on
4 min read

இந்த மாதம் என் மாமியாருக்கு 95 வயது ஆகியிருக்கும். அவருக்கு "மாமியார்' என்ற சொல்லே பிடிக்காது. "அந்த வார்த்தைக்கே ஒரு பொல்லாத தொனி இருக்கு. அதுவே கண்ணை உருட்டுகிறது' என்பார். அவர் அம்மாவாக, ஒரு நல்ல ஆசானாக எல்லாவற்றிற்கும் மேல் ஒரு நல்ல நட்பின் அடையாளமாக இருந்தார்.

மனைவி அமைவது மட்டுமல்ல, நமக்கு நல்ல உறவுகள் அமைவது, ஏன் நாம் நல்ல பெற்றோரின் வயிற்றில் பிறப்பது கூட இறைவன் கொடுத்த வரம்தான். அது போலத்தான் நம் துணையின் குடும்பம் அமைவதும்.

என் கணவரின் பெற்றோர் இருந்த இடம் மயிலாடுதுறை. இங்கே கோர்ட் விடுமுறை என்றால் நாங்கள் அங்கு சென்று விடுவோம். புக்ககம் சென்று திரும்பும்பொழுது "கொழுகொழு கன்றே' என்று வந்த ஒரே பெண் நானாகத்தான் இருப்பேன். காவேரித் தண்ணீரின் மகத்துவம் மட்டுமல்ல, அங்கிருந்த அப்பா, அம்மாவின் அன்பும் அதற்குக் காரணம்.

அந்த வீட்டில் புத்தகக் களஞ்சியமே இருக்கும். அம்மாதான் சமைப்பார். என்னை சமைக்க விடமாட்டார். மருமகள் என்ற இறுக்கமே இல்லாத ஒரு சொர்க்கம்தான் மாய வரம் எனக்கு அது ஒரு மாய வரம் தான்.

அம்மா சொல்லுவார், "தன் பிள்ளைக்கு அந்த அந்த வயதில் என்ன என்ன விருப்பமோ அதை எல்லாம் செய்வதில் தயக்கம் இல்லாத ஒரு பெண், அவனுக்கு உரிய வயதில் அமைந்த இல்லறத் துணையுடன் மட்டும் ஏன் போட்டியிட வேண்டும்? அவன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவது மட்டும் அவள் கண்களை ஏன் உறுத்துகிறது?

அது போலவே தன் கணவர் ஓர் அம்மா இல்லாமல் பிறக்க முடியாது என்று ஏன் பெண்களுக்குப் புரியவில்லை?' உண்மையாக இது பெண்களுக்குப் புரிந்தால் நம் உறவுகள் பொன்னாக ஜொலிக்கும்.

அம்மா நல்ல மருமகளாகவும் நல்ல மாமியாராகவும் இருந்தார். இது போன்று அம்மா எனக்குப் பல விதங்களில் வழிகாட்டி, எனக்கு அவர் அற்புதமாக அமைந்த ஒரு முன் மாதிரி.

என் கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வலுத்தால், "உங்களை விட்டு விட்டுப் போகலாம் என்றால், அம்மாவை விடணுமே, அது முடியாது' என்பேன். ஸ்ரீதேவனும் சிரித்து விடுவார்.

நாங்கள் ஐந்து பேர் மருமகள்கள். அம்மா எங்களை அழைக்கும் பொழுது பெயர் மாற்றி மாற்றி அழைப்பார். "அம்மா, நான் அகிலா இல்லை' என்று கிண்டல் செய்வேன். அவர் எங்கள் ஐவரையும் சமமாக நினைத்ததால்தானே சொல்லில் அப்படி வந்தது? ஆனால் பெரும்பாலும் "கண்ணா' என்றுதான் கூப்பிடுவார்.

இப்பொழுது "சாதி' "சாதி' என்று எழுத்துலகத்திலும் நீதித்துறையிலும் இன்னும் பல இடங்களிலும் ஒரு அபஸ்வரக் குரல் மிரட்டுகிறதே, அது எங்கள் மாயவரம் வீட்டில் கேட்காது. அம்மாவுக்கு இது போன்ற பேதங்கள் தெரியாது.

அவர் பிள்ளைகளின் அனைத்துத் தோழர்களுமே "பாரத விலாஸ்' தோழர்கள். மாயவரம் பட்டமங்கலத் தெருவில் எங்கள் வீட்டில் நாள் கணக்கில் தங்குவார்கள். அம்மாவை அவர்களும் "அம்மா' என்றே அழைப்பார்கள்.

மெல்லிய நகைச்சுவை உணர்வு உண்டு அம்மாவுக்கு. அவர் மாயவரத்தை விட்டு சென்னைக்கு வந்துவிட்ட பிறகு, இங்கே யாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டாலும் "ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாம் வா' என்று என்னை அழைத்துக் கொண்டு கிளம்புவார். நாங்கள் போய் பார்த்து விட்டு வருவோம்.

மிகவும் சீரியஸ் என்று கவலைப்பட வைத்த மூன்று உறவினர்கள் நாங்கள் போய் பார்த்து விட்டு வந்த சில நாள்களிலேயே குணமாகி விட்டார்கள். "காக்கையும் பனம்பழமும்' கதைதான்.

ஆனால், அம்மா என்னிடம் "ஒரு விளம்பரம் கொடுக்கலாமா? உடம்பு சீரியஸா? கவலை வேண்டாம். இவ்விடத்திலிருந்து இரண்டு பேர் வந்து பார்ப்பார்கள். சட்டென்று குணம் தெரியும் என்று. நமக்கு நிறைய டிமாண்ட் இருக்கும்' என்றார்.

மாயவரத்தில் அப்பாவைப் பார்க்க யாரேனும் விருந்தினர் வந்தால், அவர் உள்ளே வந்து "நாலு இலை இருக்கா' என்று கேட்பாராம். அம்மாவுக்கு "இலை இருக்கு. சாப்பாடு வேண்டாமா' என்று கேட்கத் தோன்றுமாம். இப்படி என்னிடம் சொல்வார்.

ஆனால், எனக்குத் தெரியும் உடனே நாலு பேருக்கும் சாப்பாடு தயாராகியிருக்கும். இப்பொழுது உள்ள வசதிகள் அப்போது அங்கே கிடையாது. அடுப்பும் குமுட்டியும்தான், அம்மியும் ஆட்டுக்கல்லும்தான்.

எத்தனை உறவினருடைய திருமணங்கள், எத்தனைப் பிள்ளைப் பேறுகளை அந்த இல்லம் பார்த்திருக்கிறது. எவ்வளவு பேருக்கு அம்மா தன் கைகளால் சமைத்திருப்பார்? சென்னை வந்த பிறகும் அந்த அன்னபூரணி தன் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. என் உறவினர்களுக்கு ஊறுகாய் வகைகளும் பலகார வகைகளும் பார்சல் கட்டப்பட்டு விநியோகம் ஆகும். "பாவம் கண்ணா, அவளுக்கு ஹாங்காங்கில் எங்கே நாரத்தங்காய் பச்சடி கிடைக்கும்?'

அம்மாவின் கைமணம் அற்புதம் - அதில் அன்பும் கலந்ததனால். அவர் செய்யும் திருவாதிரைக் களிகுழம்பை உண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.

இலையில் உட்கார்ந்தால் யாரையும் திட்டக்கூடாது என்பது அவர் கொள்கை. இதை முழுக்க முழுக்க பயன்படுத்திக் கொண்டவர்கள் என் இரு மகன்கள். அவர்கள் சாப்பிட அடம் பிடிப்பார்கள், நான் திட்டமுடியாது. ஆகையால் என்னை எகத்தாளமாகப் பார்த்துவிட்டுப் போய் விடுவார்கள்.

நான் "பசியென்று வரட்டும் பார்த்துக்கலாம்' என்று கறுவுவேன். என்னிடம் வந்து கேட்க அவர்கள் என்ன லூஸா? அரைமணிக்கெல்லாம் இருவர் கைகளிலும் பாட்டி செய்த தித்திப்பு ரொட்டி, சாக்லெட் - விஷமப் புன்னகை உதட்டில்.

நான்கு பேர் ஆடிய அந்த ஆட்டத்தில் நான் மட்டும் தோல்வி என்று அன்று நினைத்தேன். இன்று புரிகிறது நானும் தோற்கவில்லை என்று.

என் கணவர் மறைவிற்குப் பின் ஒரு முறை அம்மா தயார் செய்து வைத்திருந்த ஒரு உணவை நான் "எனக்கு வேண்டாம்' என்றேன். "ஏன்' என்று கேட்டார் அம்மா. "இது அவருக்கு மிகவும் பிடித்த ஓன்று, ஆகையால் எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை' என்று சொன்னேன்.

அம்மா சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெல்ல "நீ சாப்பிட்டால் என் பிள்ளை சாப்பிடறான்னு நான் நினைச்சுப்பேன்' என்று கூறினார். அதன் பின் எப்படி மறுப்பது?

அவர் தந்தை கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். அப்பாவும் நிறைய படிப்பார். அதனால் அந்த வீடு ஒரு நூலகம் போல இருக்கும். இந்தப் பக்கம் பார்த்தால் தொ.மு. பாஸ்கர தொண்டைமானின் "வேங்கடம் முதல் குமரி வரை' அந்தப் பக்கம் பார்த்தால், டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' நடுவில் ஸம்ஸ்கிருத நூல்கள், எங்கும் சட்டப் புத்தகங்கள்.

அம்மாவுக்கு டால்ஸ்டாய் மிகவும் பிடிக்கும், அது போலவே "பொன்னியின் செல்வ'னும் பிடிக்கும். என் பிள்ளைகளுக்கு அம்மா கதை சொல்வார். அவர்களுடன் சீட்டு விளையாடுவார். அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அம்மா. அப்பா மறைவிற்குப் பின்னர் அவர் மாயவரத்தில் இருந்து சென்னைக்கு வந்து எங்களுடன் இருந்தார்.

தன் மக்களிடம் இமயம் போல அன்பு வைத்திருந்தார். அவர்கள் சிறுவர்களாக இருக்கும்பொழுது ஒரு நாள் கூட அவர்களைக் கடிந்து கொணடதே இல்லையாம். நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் தன்னுடைய சுதந்திரத்தையும் அவர் விடாமல் காத்தார். இங்கு வந்த பின்பு தனக்கு என்று ஒரு இடம் வேண்டும் என்று அவருக்கு ஒரு தீர்மானம். "நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் எல்லாரும் வரவேண்டும். உங்கள் சுதந்திரமும் இருக்கும் எனக்கும் அப்படியே' என்று மெதுவாக சொல்லிச் சொல்லி என் கணவரிடம் அனுமதி பெற்று தான் நினைத்ததை சாதித்துக்கொண்டார்.

அழுகையான திரைப்படம், நாடகம் இவையெல்லாம் அவருக்கு அறவே பிடிக்காது. நகைச்சுவை ரசம் இருந்தால்தான் ரசிப்பார்.

அதிலும் "அம்மா செண்டிமெண்ட்' என்கிறார்களே அது அவருக்கு எப்போதும் எட்டிக்காய். திரைப்படத்தில் தாயாக நடிக்கும் நடிகை தான் இறக்கும் தறுவாயில் நீண்ட வசனம் பேசிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் அம்மா அங்கிருந்து போய்விடுவார்.

அவருடைய முணுமுணுப்பு கேட்கும் "பத்து மாதம் சுமந்து பெத்தாளாம்... வேண்டாமே, இரண்டு மாதத்திலேயே வெளியே தள்ளட்டுமே... இல்லை பதினாறு மாதம் வெச்சுக்கட்டுமே... முடியுமா? என்ன பேச்சு இது? ... சாகற நேரத்திலே குழந்தை கிட்டே இவளைக் கல்யாணம் பண்ணிக்க்கோ அவளை பண்ணிக்காதேன்னு சத்யம்... இவ போனப்புறம் அவன்னா தவிக்கணும் ... குழந்தை விருப்பத்தை நெறைவேத்தறதா இல்ல தன் விருப்பத்தை அவன் மேல திணிக்கறதா...'

இப்படி.

அன்று முழுதும் அம்மா சற்றே மேக மூட்டமாக இருப்பார். இது திரைப்படம்தானே என்று நினைக்க மாட்டார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் என்று திடமாக நம்பினார் அம்மா.

"பெண்கள் அழக்கூடாது' என்று சொல்வார். இதற்கு இரு பக்கங்கள் உண்டு, பெண்களை அழவிடக்கூடாது, அவர்கள் அழக்கூடாது இரண்டும். பல வருடங்களுக்கு முன் ஒரு அம்மையார் தன் மருமகளின் கையை சூடான தோசைக்கல்லில் வைத்துத் தேய்த்தாராம். இதை என்னிடம் சொல்லும்பொழுது அம்மா கண்களில் ஈரம். "எப்படித்தான் நம் வீட்டுக்கு வந்த குழந்தையை இப்படி படுத்த மனம் வருமோ?' என்றார்.

இன்னொரு பெண்ணின் கணவர் தினமும் இரவு குதிரை சாரட்டு வண்டியில் ஏறி (அந்தக் காலத்தில்) ஜவ்வாது மணக்க எங்கோ சென்று விட்டு, மறுநாள் காலையில் வீடு திரும்புவாராம். அந்தப் பெண் பார்த்தாள், பொறுமை இழந்தாள்.

ஒரு நாள் மாலை இரண்டு சாரட்டு வண்டி வீட்டின் முன் நின்றதாம். கணவர் "யாருக்கு இன்னொன்று' என்று கேட்டாராம். "எனக்குத்தான்' என்றாள் அந்தப் பெண். அன்றோடு அந்த கணவர் விளக்கு வைத்த பிறகு வீட்டைவிட்டு செல்வதை விட்டு விட்டார்.

இந்தக் கதையை என்னிடம் சொல்லும்பொழுது அம்மா கண்களில் பெருமிதம் ஒளிரும். பெண்கள் பயப்படக்கூடாது, அதுவும் அநியாயத்துக்கு கட்டாயம் அடங்கக்கூடாது என்பார் அம்மா.

"இவ ஒரு போர்... மாமியாரைப் பற்றி ஒன்றும் சொல்லமாட்டாள்' என்று கூட என்னைப் பற்றி சிலர் சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அம்மாவைப் பற்றி நாம் என்ன புகார் சொல்லுவது?

அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அலை அலையாய் ஏதேதோ நினைவுகள் என் நெஞ்சத்தில் மோதுகின்றன. நான் அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் - இன்றும்!

கட்டுரையாளர்: நீதிபதி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com