பிகார் மாநிலத்தில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நண்பர்களும் பெற்றோரும் சாளரங்கள் வழியாக விடைத்துணுக்குகள் வழங்கிய செய்தியும், படங்களும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. 600 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிகார் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்தநாளே, தமிழ்நாட்டில், ஒசூர் பகுதியில் பொதுத் தேர்வு நடைபெறும் கூடத்திலிருந்து கேள்வித்தாள் கட்செவித் தகவல் (வாட்ஸ்அப்) மூலம் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஐந்து பள்ளிகளில் சுமார் 131 அறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர்.
மாணவர்கள் விடைத்துணுக்குகள் (பிட்) எடுத்துச் செல்வது காலகாலமாக நடைபெற்றுவருவதுதான். அதற்குக் காரணம் அவர்கள் படிக்கவில்லை, அல்லது படிப்பில் பின்தங்கியவர்கள் என்பதே.
தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இத்தகைய செயலில் ஈடுபடும் அந்த மாணவருக்குத் தேர்ச்சி அடைந்தால் போதும் என்பதுதான் நோக்கமே தவிர, மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் முதலிடம் வர வேண்டும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது. இத்தகைய மாணவர்களின் செயல் "தவறான நடத்தை' (மிஸ்காண்டக்ட்) இது குற்றம் (கிரைம்) அல்ல.
தேர்வுக் கூடத்தில் எதையும் எழுதாமல் "திருதிரு' என விழிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதும்கூட புதிதல்ல. அதற்குக் காரணம் இரக்கம்தான்.
தேர்வு எழுதிய மாணவர்கள் ஒவ்வொருவராக வெளியேறும்போது, இந்த "திருதிரு' மாணவனின் விடைத்தாளை அறைக் கண்காணிப்பாளர் புரட்டிப் பார்ப்பார். சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய் போன்ற கேள்விகளுக்கு மட்டும் சரியான விடையை விரலால் சுட்டிக்காட்டுவார்.
அந்த மாணவர் 30 மதிப்பெண் பெற்றாலும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கருணை மதிப்பெண் போட்டு தேர்ச்சி கொடுத்துவிடுவார் என்ற நல்ல எண்ணத்தால்தான் அப்படிச் செய்வார்.
அந்த மாணவனுக்கு ஒரு கல்வி ஆண்டு வீணாக வேண்டாம் என்பதுதான் அந்த இரக்கத்துக்கு காரணம். இது முறை அல்லதான். ஆனால், முறைகேடும் அல்ல. இதுவும் மிக அரிதான நிகழ்வுதான். அதைவிட முக்கியம், அந்நாளில் அத்தகைய ஆசிரியருக்கு விடை தெரிந்திருந்தது.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அந்த பாடப்பிரிவுக்கான ஆசிரியருக்கு இடமாறுதல் நிச்சயம் என்பதால், அதிகபட்சமாக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை இத்தகைய நடவடிக்கையில் இறங்கவைத்தது.
மாணவர்கள் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும். ஆகவே, சரியான விடையைத் தேர்ந்தெடு, அல்லது கோடிட்ட இடத்தை நிரப்புக போன்ற ஒரு மதிப்பெண் அல்லது இரண்டு மதிப்பெண் கேள்விகளை மட்டும் சொல்லிக் கொடுத்தனர்.
இதற்காக அறைக் கண்காணிப்பாளர்களை வசமாக்கினர். அல்லது அவர் தண்ணீர், தேநீர் அருந்தும் இடைவெளியில் விடைகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தனர். இவர்களது நோக்கம் எப்படியாவது இடமாறுதலைத் தவிர்ப்பது.
ஆனால், தற்போது எந்தப் பள்ளி 100% தேர்ச்சி பெறுகிறது. எந்தப் பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெறுகிறார்கள் என்பதில் வணிகம் புகுந்துவிட்டதால், தனியார் பள்ளிகள் இந்த கேள்வித்தாளை கட்செவித் தகவலில் கடத்திப்போய் சரியான விடையை திரும்பப் பெறும் அவல நிலைமை உருவாகிவிட்டது.
மிகச் சில மாணவர்களின் அறிவின்மையானாலும், மிகச் சில ஆசிரியர்களின் இரக்கத்தாலும் நடைபெற்ற தவறுகள், இன்று கற்பித்தல் திறன் இல்லாத ஆசிரியர்களாலும் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளாலும் நடத்தப்படும் "குற்றச் செயலாக" மாறிவிட்டன.
ஒரு தனியார் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100% தேர்ச்சி என்று விளம்பரப்படுத்தி, அது உண்மையாகவும் இருந்தால் அந்தப் பள்ளியின் உயர்நிலைப் பிரிவுகளில், பிளஸ் 1-இல் சேர்க்க விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாகிறது.
நன்கொடை, கல்விக் கட்டணம், பிற கட்டணங்களைக் கூட்டி வசூலிக்கும் சலுகையையும், பெற்றோருக்கு இதை சகித்துக்கொள்ளும் மனநிலையையும் இந்த 100% தேர்ச்சி எனும் மந்திரச்சொல் உருவாக்குகிறது. இது ஒரு தூண்டில் புழு.
இதை ஒழிக்க வேண்டுமானால் ஒரே வழி, தமிழக கல்வித் துறை சார்பில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு மட்டுமான கற்பித்தலை வகுப்பு, பாடப்பிரிவு வாரியாக பள்ளி நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும்.
அல்லது குறுந்தகடாக அனைத்து பள்ளிகளுக்கும் தந்து, அதை முதலில் டி.வி.யில் ஒளிபரப்பி, அது தொடர்பான கேள்வி கேட்பவர் மற்றும் குறுந்தேர்வு நடத்துவோராக பள்ளி ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
திறமையான ஆசிரியர்கள் டி.வி. மூலம் பாடம் நடத்த முடியும் என்றால், அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் சரியாக கற்றுத் தருவதில்லை என்ற பேச்சே இருக்காது.
அப்படியான சூழ்நிலையில், கல்விக் கொள்ளை தனியார் பள்ளிகளுக்குப் போகாமல், அரசுப் பள்ளியிலேயே மாணவர்களைச் சேர்க்க பெற்றோர் முன்வருவர். ஏனென்றால், கட்டணம் கிடையாது. தேர்வுக் கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும். மேலும், ஆசிரியர் நியமனம் இடஒதுக்கீட்டுக்கு பங்கமில்லாத, அதே நேரத்தில் தகுதி அடிப்படையிலேயே அமைய வேண்டும்.
ஆசிரியர் நியமனத்துக்கான தகுதியில் செய்து கொள்ளப்படும் சமரசம்தான் இன்று அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை கூவிக்கூவி அழைக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியது. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு வழி வகுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.