வங்கிகள் மாற வேண்டும்

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்று சொல்வது, வங்கித் துறையின் சமீபத்திய நடவடிக்கைக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். கடந்த இரண்டு மாத காலத்தில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இரு முறை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
Updated on
3 min read

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்று சொல்வது, வங்கித் துறையின் சமீபத்திய நடவடிக்கைக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். கடந்த இரண்டு மாத காலத்தில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இரு முறை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

15.1.15 அன்று ரெப்போ வட்டி விகிதம் 8-லிருந்து 7.75 சதவீதமாகவும். 4.3.15 அன்று, வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புகள், வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதற்கான வலுவான அறிகுறிகளாகும் (Strong signals).

ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, வங்கிகள் தாங்கள் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை இதுவரை குறைக்கவில்லை. அதே சமயத்தில், சிறு முதலீட்டாளர்களைப் பாதிக்கும் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைத்து விட்டன.

2009, ஏப்ரல் மாதம் 4.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி, 2011 அக்டோபர் வரை படிப்படியாக 13 முறை ஏற்றப்பட்டு, 8.50 சதவீத உச்சத்தை தொட்டு நின்றது. அதற்கு பிறகு நான்கு முறை இறக்கப்பட்டு, தற்போது 7.50 சதவீத அளவில் இருக்கிறது.

கடன்களின் மீதான வட்டி குறைந்தால்தான், வங்கிகளில் கடன் பெற்று தொழில் விரிவுபடுத்துவது, புதிய தொழில் துவங்குவது போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கும் என்று அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் வங்கிகள் அறிவுரை சொல்லி வந்தன.

அதை ஆமோதித்து உள்நாட்டு மொத்த தொழில் உற்பத்தியை பெருக்க வங்கி கடன் வட்டி விகிதம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற கருத்தை அரசும் பல்வேறு தொழில் அமைப்புகளும் ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தி வந்தன. வட்டி குறைப்பிற்கான சூழ்நிலை கனியவில்லை என்றாலும், இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை யாரும் எதிர்பாராத தருணத்தில் வெளியிட்டது.

முதலீடுகளையும் (Investments), வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும் பல திட்டங்கள் அடங்கிய புதிய அரசின் முதல் முழு பட்ஜெட் அறிவிப்பு வெளியான மூன்றாவது நாள் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது, இரு அமைப்புகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டன என்பதற்கான அறிகுறியாக பொருளாதார வட்டாரங்களில் கருதப்பட்டது.

இது, ரிசர்வ் வங்கி, பொருளாதார காரணிகளுக்கு மட்டும் அடிபணியும் நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி, நாட்டின் தொழில் பெருக்கத்திற்கு தேவையான சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ரெப்போவிற்கான வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வங்கிகளுக்கு சமிக்ஞைதான் கொடுக்க முடியுமே தவிர, ஆணை இடமுடியாது. வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம், வங்கிகளின் நிர்வாகக் குழுவை சார்ந்ததாகும்.

ஆனால், வட்டியைக் குறைக்காமல், வங்கிகள் காலம் தாழ்த்துவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும். ஒவ்வொரு நாள் தாமதமும், நாட்டின் முதலீட்டு சுழற்சி நிகழ்வுகளை (Investment cycle) பாதிக்கும் என்பது, இந்த நடவடிக்கைகளின் நேரடியான எதிர்மறை விளைவாகும்.

வட்டி குறைக்கப்படுவது தங்கள் லாபத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்ற வங்கிகளின் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. கடன் வழங்குவதிலும், வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதிலும் வங்கிகள் தங்கள் திறமையை மேம்படுத்தியிருந்தால் அவற்றின் லாபத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக்கடன்களை வளரவிட்ட அரசு வங்கி நிர்வாகங்கள், தங்கள் கடந்த கால தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டிய காலக்கட்டம் இது.

ஆனால், தங்கள் கடந்த கால தவறுகளினால் விளைந்த நஷ்டத்தை ஈடுகட்ட, கடன்களின் மீதான வட்டி விகிதத்தை குறைக்காமல் செயல்படுவது என்பது, நாட்டு நலனை முன்னிறுத்தி தற்கால நடைமுறை தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றி அமைத்து கொள்ள வங்கி நிர்வாகங்கள் தயங்குவதையே காட்டுகிறது.

வங்கிகளின் தயக்கத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, அவர்களே ஊக்குவித்து வளர்த்த, வாராக்கடன்களை தள்ளிப்போடும் வித்தையான கடன் மறு சீரமைப்பு திட்டமாகும் (Restructuring of loans).

வாராக் கடனாக கோர உருவம் எடுக்கும் நிலையில் உள்ள, தகுதியற்ற பல கடன்களை மறு சீரமைப்பு என்ற அலங்காரத்தை செய்து, அவற்றை நேர்த்தியான கடன்களாக வெளி உலகிற்கு வங்கிகள் காட்டி வந்துள்ளன.

அம்மாதிரி அலங்கரிக்கப்பட்ட கடன்களின் அளவு, 6 லட்சம் கோடிக்கு மேல் வளர்ந்து நிற்கின்றது. உலக வங்கி வரலாற்றில் முதன் முறையாக, அம்மாதிரி கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதம், குறைத்த கடன் தவணைகள், நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஆகிய பிரத்தியேக சலுகைகள் வழங்கப்பட்டன.

2002 - 2013 கால கட்டத்தில், வங்கிகளின் மொத்த கடன் தொகை 779 சதவீதம் அதிகரித்தது. அதே சமயத்தில், மறு சீரமைக்கப்பட்ட கடன் தொகை 3,087 சதவிகிதம் வளர்ந்தது.

அவற்றில், பெரும்பாலான கடன்கள், வாராக்கடன்களாக மாறி, வங்கிகளின் வரவு - செலவு கணக்கை (Balance sheet) அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டன. இதுவரை, இம்மாதிரி கடன்களுக்கு வங்கிகள் தங்கள் வரவிலிருந்து 5 சதவீத நிதி ஒதுக்கீடு (டழ்ர்ஸ்ண்ள்ண்ர்ய்) செய்தால் போதும்.

பொருளாதார தளர்ச்சியின் போது வழங்கப்பட்ட சலுகைகள் சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்ட உண்மை நிலைமையை புரிந்து கொண்ட ரிசர்வ் வங்கி, அம்மாதிரி கடன்களும் இனி வாராக்கடன்களாக கருதப்பட்டு, அதற்கேற்ப 15 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

வங்கிகளைப் பொருத்தவரை, இம்மாதிரி நிகழ்வுகள் வளர்த்த கடா மார்பில் பாய்வதை போன்றதுதான்.

வங்கிகளின் வியாபாரம் வேகமாக அதிகரித்து, அவற்றின் லாபம் பெருகினால்தான் இம்மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வங்கிகள் ஓரளவு தப்பிக்க முடியும். ஆனால், வட்டி குறைப்பு, இனிய சேவை, புதிய அணுகுமுறை ஆகிய செயல்பாடுகள் மூலம்தான் வங்கிகளில் வியாபாரம் பெருகும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.

வங்கிகளைவிட குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் பல நிதி ஆதார சாதனங்கள் (ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ண்ய்ள்ற்ழ்ன்ம்ங்ய்ற்ள்) சமீப காலங்களில் உருவாகி, தொழில் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சீரமைக்கப்பட்ட வளர்ந்து வரும் கடன் பத்திர சந்தை (Regulated Bond market), குறுகிய கால வியாபார கடன் பத்திரங்கள் (Short term Commercial paper), வெளி நாட்டு வியாபார கடன்கள் (External commercial borrowing) ஆகியவற்றின் வளர்ச்சி, வங்கி கடன் வளர்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடி வங்கி நிர்வாகிகளை சந்தித்தபோது, "வங்கி நிர்வாகங்கள் நாட்டு நலனை மனதில் நிறுத்தி, தாங்களாகவே முன்வந்து, பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அந்தந்த பகுதிகளில், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில் திட்டங்களை தேர்ந்தெடுத்து, கடன் வழங்கி ஊக்குவிக்கவேண்டும். ரிசர்வ் வங்கியோ அரசோ கட்டளை பிறப்பித்தால் மட்டும் செயல்பட்டால் போதும் என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று கூறிய அறிவுரை வங்கிகளால் அவசியம் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும்.

வங்கி தொழிலில், வாடிக்கையாளர் சேவைக்கு முதலிடம் அளிக்கப்படவேண்டும். நிர்வாக சுதந்திரம், எண்ணற்ற வழிமுறைகள் ஆகியவற்றை விட, வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் கூடிய இனிய அணுகுமுறை வங்கிகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் என்பதை வங்கி நிர்வாகங்கள் உணர்ந்து அதற்கேற்ற பயிற்சிகளை அளிக்கவேண்டும்.

வங்கித் துறைக்கு சமீப காலங்களில், போட்டிகள் பல விதங்களில் உருவாகி வருகின்றன. குறைந்த செலவில், வங்கிகளாக செயல்படக்கூடிய பணப்பட்டுவாடா வங்கிகள் (Payment banks) விரைவில் செயல்பட நடவடிக்கைகளை துவங்கி விட்டன.

இம்மாதிரி வியாபாரப் போட்டிகளை சமாளிக்க, வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்தி வங்கிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் முன், வங்கி ஊழியர்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் நிகழ்ச்சி, வாராக்கடன்களின் விசுவரூபத்தை அவர்கள் உணர்ந்து விட்டதையே காட்டுகிறது.

இந்த சமூக அக்கறை, கடன் வழங்குவதில் அவ்வப்போது நடக்கும் முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவ வேண்டும். அந்தப் பணியைச் செய்ய, வங்கி ஊழியர்களைவிட வேறு எவரும் தகுதி வாய்ந்தவர்கள் அல்லர்.

பொதுத்துறை வங்கிகள் மக்களின் உற்ற நண்பன் என்ற நற்பெயர், வங்கிகள் சம்பாதிக்கும் லாபத்தைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com