கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் "நாங்கள் படைப்பாளிகள்; சுதந்திரமானவர்கள்; எங்கள் எழுத்துகளுக்கு யாரும் தடை போட முடியாது; தடை போட்டுத் தடுக்க முற்படுவது பிற்போக்குத்தனமானது; அது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடும்; அதோடு, எழுத்தாளனுக்கென்றே இருக்கும் அடிப்படை சுதந்திரத்தையும் பறித்துவிடும்; எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு நாங்கள் எழுதியதற்கும், எழுதப் போவதற்கும் ஆதரவு நல்க வேண்டும். மக்கள் ஆதரவுதான் இலக்கியம் வளர அடிப்படையாக அமையும்' என்கிறார்கள்.
ஓவியர்கள், சிற்பிகள் ஆகியோர் "நாங்கள் மகத்தான கலைஞர்கள்; காலம் காலமாக ஓவியங்கள் தீட்டிக் கொண்டும், சிற்பங்கள் செய்து கொண்டும் வருகிறோம்; மனித குலத்தின் வரலாறு என்பதே எங்களின் படைப்புகளின் வழியாகவே அறியப்படுகிறது;
எங்கள் படைப்புகள் ஆபாசமாக இருக்கிறது என்று சொல்லக் கூடாது; அப்படி சொல்கிறவர்கள் பிற்போக்குவாதிகள்; படைப்பு என்பதன் சரித்திரம் அறியாதவர்கள்; அவர்கள் சொல்வதைப் பொருள்படுத்தக்கூடாது; எங்களின் படைப்பு சுதந்திரத்தை அங்கீகரித்து அனைவரும் ஆதரவு தர வேண்டும்' என்கிறார்கள்.
சினிமாக் கலைஞர்கள் பலர், குறிப்பாக இயக்குநர்கள் "சினிமா நவீனமானது; ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்டது; ஆனாலும், நெடுங்காலத்து ஆடல் பாடல்களில் இருந்து புத்துயிர் பெற்றது; சினிமா ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் உலகம் முழுவதும் பரவி விட்டது; அது எல்லோரையும் மகிழ்விக்கிறது;
மக்கள் மறுபடியும் மறுபடியும் சினிமா பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்; அதனைப் பார்த்து சனாதனவாதிகள் - மக்கள் விரோதிகள் பொறாமைப்படுகிறார்கள்; சிரித்து மகிழும் மக்களைப் பார்த்து கடுங்கோபம் கொள்கிறார்கள்; அவர்கள் சினிமாவை ஒழிக்க, மக்கள் சந்தோஷப்படுவதைப் பறிக்க, சினிமா ஆபாசமாக இருக்கிறது, கெட்ட வார்த்தைகள் பேசுகிறது, மரபான வாழ்க்கையைப் பழிக்கிறது' என்று கூக்குரல் இடுகிறார்கள்.
"நாங்கள் வாழ்க்கையில் இல்லாத எதையும் சினிமாவில் காட்டுவதில்லை. சினிமாவில் ஆபாசம், வன்முறை, பாலியல் கொடுமைகள் இருக்கின்றன என்றால் அது சமூகத்தில் இருக்கிறது. எனவே, காட்டப்படுகிறது. அதனைக் காட்டக் கூடாது என்று தடை போடுவது, தணிக்கை செய்வது கூடாது.
தணிக்கை என்பது கலைக்கு இருக்கவே கூடாது. அது சினிமாவின் குரலை நெரித்து விடுகிறது. அதனால் நல்ல, கலாபூர்வமான சினிமா வராமல் போய் விடுகிறது.
சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்றால் தணிக்கை வாரியத்தைக் கலைத்துவிட வேண்டும்' என்கிறார்கள்.
சுதந்திர நாட்டில் சுதந்திரம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. அதுதான் சுதந்திரம் என்பதன் சுதந்திரம்.
ஆனால், சுதந்திரம் என்பது பொறுப்பில் இருந்து வருகிறது. அதாவது, பொறுப்பில்லாத சுதந்திரம் கிடையாது. சமூகத்தில் அடுத்தவரை நிந்தனை செய்ய, அவதூறு பேச, அவமரியாதை புரிய சுதந்திரம் இல்லை.
சுதந்திரம் என்பது சமுத்திரம் போல பறந்து பட்டது என்றாலும், வரையறை செய்யப்பட்ட எல்லை கொண்டது.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் அரசியல் சாசனம் இருக்கிறது. அதில் வழங்கப்பட்டிருப்பதுதான் சுதந்திரம். அதனை மீறி எதுவும் செய்ய முடியாது. எனக்குச் சுதந்திரம் இருக்கிறது. நான் பிறப்பின் வழியாகக் கொண்டு வந்திருப்பது என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், அரசியல் சாசனத்திற்குள் தான் பேச, எழுத, படம் வரைய, சினிமா எடுக்க முடியும். இருந்தாலும், சாசனம் என்பது மாற்ற முடியாதது இல்லை. அது மனிதர்கள் கூடிச் செய்ததுதான்.
எனவே, மறுபடியும் மனிதர்கள் கூடி சாசனத்தில் திருத்தங்கள் செய்கிறார்கள். அமெரிக்க அரசியல் சாசனம், இந்திய அரசியல் சாசனமெல்லாம் பல முறை திருத்தம் செய்யப்பட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
முன்னேற்றம் என்பது மக்கள் நலன் சார்ந்தது. அது பரந்துபட்ட அம்சங்கள் கொண்டது. அது உயர்ந்தவர்கள், மெத்தப் படித்தவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள் என்று பாகுபாடு காட்டுவதில்லை.
அதோடு பல்வேறு பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் இறை நம்பிக்கைகள் கொண்டு சுதந்திரமாக வாழ சுதந்திரம் கொடுத்திருக்கிறது.
அவர்கள் வாழ்க்கை, பண்பாட்டை, சமயக் கோட்பாடுகளை பற்றி விமர்சனம் செய்ய, தீர்ப்பு வழங்க, தண்டனை கொடுக்க யாருக்கும் உரிமையில்லை.
பெரும்பான்மையான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் என்பதாலோ, அவர்கள் எழுதவும் படிக்கவும் கற்காமல் இருக்கிறார்கள் என்பதாலோ அவர்கள் மூடர்கள் இல்லை.
பள்ளிக்கூட படிப்பு மட்டுமே ஞானம் இல்லை. முதலில் சுதந்திரம் கேட்கிறவர்கள் மற்றவர்களின் சுதந்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். புரிதல்தான், தன் சுதந்திரம், சகோதர மனிதர்களின் சுதந்திரம் பற்றிய அறிதலுக்கு ஆதாரமாகும்.
சுதந்திரம் என்பதன் மேன்மையைச் சொல்ல ஒரு சுதந்திர விரும்பி, "எங்கே பூரண சுதந்திரம் இருக்கிறதோ அதுவே என் தாய்நாடு' என்றுரைத்தான்.
அது கேட்டு வெகுண்ட இன்னொரு சுதந்திர ஆர்வலன், "எந்த நாடு அடிமைப்பட்டு சுதந்திரத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதுவே என் நாடு, அந்த மக்களோடுதான் நான் இருக்கிறேன்' என்றான்.
ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது. அது பல நூறு ஆண்டுகளில் உருவாகி ஒரு பண்பாக மாறியிருக்கிறது.
சமூகமாக வாழும் மனிதர்கள் ஒன்று போல் இருந்தாலும் ஒன்றில்லை. எனவேதான், அவர்கள் மாறுபட்ட சிந்தனையோடு வாழ்கிறார்கள் என்பதோடு எதிர் எதிரான சித்தாந்தங்கள் கொண்டிருக்கிறார்கள். அதுதான் மனிதர்கள் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது.
வரலாறு என்பது நிகழ்காலத்திற்கு முன்னால் நடந்ததுதான். ஆனால், அதன் மீது விமர்சனம் வைப்பதற்கு உரிமை இருக்கிறது என்றாலும் நிந்தனை செய்வதற்கு அங்கீகாரம் கிடையாது.
வாழ்க்கை என்பது ஒற்றை இழையில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல இழைகள் இருக்கின்றன. அதனை அறிவதும் அறியாமல் எழுதுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதாவது, நிகழ்ந்த ஒன்றின் மீது தீர்க்கமான முறையில் நீதி வழங்கும் அதிகாரம் சுதந்திரம் இல்லை. அறியப்பட்ட சரித்திரத்தில் அறியபடாத பல அம்சங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு கவிஞனும், எழுத்தாளனும், சிற்பியும், சினிமா இயக்குநரும் தன்னை நீதிமானாக, தனக்கு சகலமானவற்றைப் பற்றியும் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய மன்னன் ஹம்முராபி போல கடவுள் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு தீர்ப்பு வழங்கினான்.
ஆனால், நவீன கலைஞன் தனக்குத்தானே கடவுளாகிக் கொண்டு எழுதுகிறான். சமூகம் மனிதர்களின் அறிவாற்றலின் கட்டமைப்புதான்.
அது அறியப்படவிலலை என்பதால் இல்லை என்றாகிவிடாது. அதுவே சுதந்திரம் என்பதை கட்டமைப்பிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறது.
என் ஆய்வின் முடிவு என்றும், அறிந்தது என்றும் சொல்லிக்கொண்டு சமூகத்தையும், மகளிரையும் அவதூறு செய்ய உரிமை இல்லை. அது சுதந்திரம் கிடையாது.
அரசியல் சித்தாந்தம், சமூகக் காரணங்களுக்காக எதிர்ப்பு, ஆதரவு என்பதில் சுதந்திரம் என்பதைச் சேர்த்துக் கொள்ள முடியாது. அது கும்பல் கலாசாரத்தில் சேர்வதில்லை.
எவ்வளவு பெரும் திரளாகக் கூடினாலும், கோஷம் போட்டாலும் உண்மையை சாகடிக்க முடியாது. "உங்கள் முகத்தை என் படைப்புகளில் பார்த்து முகம் சுளிக்காதீர்கள்' என்று சொல்லக் கூடாது.
கிராமங்களிலும், வனப் பகுதிகளிலும் வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் இல்லை. அவர்கள் எழுதப் படிக்கக் கற்கவில்லை என்பதால் மூடர்கள் கிடையாது.
குறைந்த அளவில் துணி உடுக்கிறார்கள் என்பதால் நிர்வாணமாகத் திரிகிறார்கள் என்றோ, ஆபாசமாக இருக்கிறார்கள் என்றோ சொல்லக்கூடாது. அவர்களின் தூய வாழ்க்கை மீது அழுக்கை ஏற்றி வைக்க யாருக்கும் உரிமையில்லை.
அவர்களின் நெடுநாளைய பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஒழுக்க நியதிகள், இறை நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் மீது அவதூறு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது என்பது மட்டுமல்ல, அதற்கு எவருக்கும் சுதந்திரமும் இல்லை!
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.