அணு மின் நிலையத்தின் ஆராய்ச்சி மையம் மூலம் பெறப்பெற்ற தரமான நிலக்கடலை விதைகளை பாளையங்கோட்டை மத்திய சிறை இல்லவாசிகள் சிறை வளாகத்தில் பயிரிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அதிக மகசூல் கொடுக்கக்கூடிய விதைகள். விளைச்சலும் அதிகம், நிலத்தில் நின்று உழைக்கும் சிறைவாசிகளின் மனமும் சமன்படும். சிறைத் துறை எடுத்துக் கொண்ட சீரிய முயற்சி பாராட்டுக்குரியது.
சிறைச்சாலை பராமரிப்பு பாதிப்புகள் நிறைந்த பணி. சட்டத்தை மீறியவர்கள், காவல் துறையால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தோள் உரசும் களம். அங்கு கோபதாபங்கள் அதிகம். எல்லோருக்கும் குறைந்தபட்ச மன அழுத்தம் இருக்கும்.
சந்தர்ப்பவசத்தால் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்டவர்கள், நொடிப்பொழுதில் நிதானம் இழப்பதால் குற்றத்தில் மாட்டிக்கொள்பவர்கள், பொய் வழக்குகளில் புனையப்பட்டவர்கள் - இவர்களோடு புழலே புழங்குமிடம் என்று வரும் பழம் குற்றவாளிகள்.
"சிறைக் கைதிகள் அடிமைகள் அல்லர். நாட்டின் உடைமைகள் என்று சிறைவாசிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்' என்பதை மகாத்மா காந்தி வலியுறுத்தி உள்ளார். சிறை என்றால் கொடுமைப்படுத்தும் இடமல்ல, சிறை வாசிகளை நல்வழிப்படுத்தும் ஸ்தலம் என்று அரசும், நீதித் துறையும், மனித உரிமை ஆர்வலர்களும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தும் கருத்தும் இது ஒன்றுதான்.
சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் முயற்சிகளில் பல நாடுகள் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன. முக்கியமாக, ஐரோப்பிய நாடான நார்வே இதற்கு முன் மாதிரியாக உள்ளது. மனிதாபிமானம் என்பதைப் பிரதானமாக வைத்து வித்தியாசமான, புரட்சிகரமான மூல தத்துவ மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஹால்டன் பெங்சால் என்ற மத்தியச் சிறை நார்வே தலைநகர் ஆஸ்லோவிலிருந்து தெற்கே இரண்டு மணி நேர சாலை வழித் தொலைவில் உள்ளது. பசுமையான இயற்கைச் சூழலுக்கு மத்தியில் இந்தச் சிறை அமைந்துள்ளது. 25 அடி மதில் சுவர். அதில் பொருத்திய சக்தி வாய்ந்த ஒளி விளக்குகள் மட்டுமே சிறை என்பதற்கான அடையாளங்கள். உலகிலேயே மிக பாதுகாப்பான சிறை, அதே சமயம் மனித உரிமைகள் காக்கப்படும் சிறந்த வளாகம் என்ற நற்பெயரும் பெற்றது ஹால்டன் சிறை.
ஹால்டன் சிறையில் உள்ளே சிறைவாசிகளுக்கு வேறு தடை ஒன்றும் இல்லை, பயம் இல்லை. சிறைப் பணியாளர்களின் அன்பான, நம்பிக்கை அளிக்கும் அணுகுமுறையும் அவர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது. இதுவே அவர்கள் திருந்துவதற்கு வழி
வகுக்கிறது.
நார்வே நாட்டில் மரண தண்டனை கிடையாது. அதிகபட்ச சிறைத் தண்டனை 21 வருடங்களுக்கு மேல் இல்லை. கடுங்காவல் தண்டனை என்பதில்லை. மிகக் கொடுங்குற்றம் புரிந்தவர்களுக்கும் திருந்த ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சிறை ஆளுமையின் மையக் கருத்து, குற்றம் புரிந்தவர் திருந்தி சமுதாயத்தோடு இணைவதுதான், சிறையில் அடைபட்டு கொடுமைக்கு ஆளாவதற்கல்ல.
சிறைக்கு உள்ளே இருப்பதற்குப் பதிலாக வெளியில் இருப்பதே மேல் என்பதுதான் அடிப்படைக் குறிக்கோள். இதை எந்த அளவுக்கு ஒப்புக்கொள்ள முடியும் என்பது விவாதத்துக்கு உரியது. அந்தந்த நாட்டின் சமுதாய நிலைப்பாட்டைப் பொருத்தது. ஆனால், இந்த உயரிய சித்தாந்தம் முழுமையாகவே நார்வே சிறைத் துறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிறைப் பாதுகாப்பு இரண்டு வகைப்பட்டது. மாற்றமின்றி ஒரே நிலைப்பாட்டில் பாதுகாப்பளிப்பது, மற்றொன்று தேவைக்கேற்ற மாற்றங்களோடு பாதுகாப்பு உணர்வை எல்லா செயல்பாடுகளிலும் நிறைவேற்றுதல். இரண்டாவது முறை "டைனமிக் செக்யூரிட்டி' எனப்படும். "டைனமிக் செக்யூரிட்டி' முறையைக் கையாளுகிறது ஹால்டன் சிறை. முதுகெலும்பைப் புரட்டியெடுக்கும் கட்டாய வேலை 1930 முதல் நீக்கப்பட்டு விட்டது.
ஆந்த்ரே ப்ரெவிக் என்பவர் உலகிலேயே தனி மனிதன் நடத்திய மிக கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர். 2011-இல் தலைநகர் ஆஸ்லோவில் அரசு வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்ததில் 77 பேர் உயிர் இழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அதுமட்டுமல்ல, குண்டு வைத்து விட்டு பக்கத்தில் கோடை முகாமில் குழுமியிருந்தவர்களைச் சுட்டுத் தள்ளியதில் பலர் காயமடைந்தனர். அத்தகைய கொடுங்கோலனுக்கும் 21 வருட சிறைத் தண்டனை மட்டுமே. நார்வேயில் 1902-இல் மரண தண்டனை ரத்தானது. 1981-இல் ஆயுள் தணடனையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் மிகக் கொடுமை நிறைந்த சிறைகள் அமெரிக்காவில்தான் உள்ளன. அதிகமான சிறைவாசிகளும் அமெரிக்காவில்தான். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 700 கைதிகள் என்ற விகிதம், நார்வேயிலோ ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 75 சிறைவாசிகள் மட்டுமே. நமது நாட்டில் ஒரு லட்சத்துக்கு 35 சிறைவாசிகள், தமிழகத்தில் 20 தான்.
உலகில் ஐம்பது மோசமான சிறைகளில் நியூயார்க் சிங்க் சிங்க், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அல்கட்ராஸ் போன்ற பல சிறைகள் அமெரிக்காவில் உள்ளன.
2013-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மொத்த சிறைகள் 1,391. அதில் புழல், திஹார் போன்ற மத்தியச் சிறைகள் 130, திறந்தவெளி சிறை 53, பெண்களுக்காக 19. சராசரி 4 லட்சம் சிறைவாசிகளுக்கு இடம் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்பது மத்தியச் சிறை, பெண்களுக்கு 6, திறந்தவெளி 2, கிளை மற்றும் மாவட்டச் சிறைகள் சேர்த்து மொத்தம் 135. இதில் 21,951 பேரை அடைக்கலாம். சிறு வயது குற்றவாளிகளுக்காக 12 சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் உள்ளன.
நாடு முழுவதும் சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 4.12 லட்சம். அதில் வழக்கு விசாரணைக்குக் காத்திருப்பவர்கள் 2.78 லட்சம். மொத்தத்தில் 67.6 சதவீதம். அவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகமாக 83,518 சிறைவாசிகள், மத்தியப் பிரதேசத்தில் 34,708, பிகாரில் 31,259.
தமிழகத்தில் சிறைவாசிகளின் எண்ணிக்கை 14,290. இவர்களில் 75 சதவீதம் பேர் படிப்பறிவற்றவர்கள். ஆனால், பட்டப் படிப்பு படித்த குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம், பிகாரில்தான் அதிகம். சுமார் 2,000 பேர். நன்மதிப்பீடற்ற கல்வியால் என்ன பயன்?
தண்டனை பெற்றவர்களில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் சுமார் 60 சதவீதம். நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு வன்புணர்ச்சி குற்றங்களில் தண்டனை அடைந்தவர்கள் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது நல்ல மாற்றம். இந்தியாவில் உள்ள முக்கால்வாசி சிறைகளில் (தமிழகத்தைத் தவிர) இருப்பிடத்தைவிட 15 சதவீதம் அதிகமாகவே சிறைவாசிகள் உள்ளனர். சிறைகளில் நெரிசல் மனித உரிமைப் பிரச்னையாகக் கருதப்படுகிறது.
சிறைப் பாதுகாப்புத் தவிர இல்லவாசிகளின் உடல் நலம் பாதுகாப்பதும், உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியப் பொறுப்பாகிறது. சிறையில் மரணம் ஏற்பட்டால் உடனே விசாரணை என்று பல்வகை தலைவலி சிறைக் கண்காணிப்பாளருக்கு உண்டு. இயற்கை மரணம் தவிர தற்கொலை அல்லது வேறு அசம்பாவிதம், சண்டைச் சச்சரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2013-ஆம் வருட புள்ளிவிவரப்படி இந்தியச் சிறைகளில் 1,597 சிறைவாசிகள் உயிரிழந்தனர். அதில் தற்கொலை 115. தற்கொலைக்கு முக்கியக் காரணம் தாழ்வு மனப்பான்மை, சுய நம்பிக்கை இழத்தல், இனம்புரியாத பயம், போதை, மதுவுக்கு அடிமையானவர்கள், சிறையில் அவை கிடைக்காதபோது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதைத் தடுப்பதற்கு சிறைவாசிகளை பல்வேறு பயனுள்ள வேலைகளில் ஈடுபடுத்தி மனம் அமைதியடையச் செய்யப்படுகிறது.
மனநிலை அறிவதற்காகவும், அதை சீர்செய்வதற்காகவும் மனநல மருத்துவர்கள் எல்லா மத்தியச் சிறைகளிலும் உள்ளனர். சட்டத்தின் வழியாக சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கான இல்லம் சிறை.
இல்லவாசிகளுக்கு மன வளர் பயிற்சியையும் ஆலோசனையையும் மனநல மருத்துவர்கள் வழங்குகிறார்கள். இது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு மட்டுமல்ல, சிறை வளாகத்தில் அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
வாழ்க்கையில் நேர்மையான மாற்று வழி அமைத்துக் கொடுக்க சிறைவாசிகளுக்கு விவசாயம், சிறு தொழில்கள், கணினிப் பயிற்சி, தச்சுத் தொழில், நெசவு, அடுமனை, உலோகத் தொழில் பட்டறை போன்றவற்றில் தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
புழல் சிறையில் அடுமனை மூலம் ரொட்டி, கேக் மற்றும் பலகார வகைகள், ஃபிரீடம் என்ற சின்னம் பதித்து விற்பனையாகிறது. தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்தியச் சிறைகளின் நிலப்பரப்பு சுமார் 1,000 ஏக்கர்.
அதிக அளவில் காய்கறி வகைகள் எல்லா சிறைகளிலும் இல்லவாசிகள் உழைப்போடு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவர்களுக்கு செய்த வேலைக்கு தின ஊதியமும் அளிக்கப்படுகிறது. விடுதலையான பிறகு உழைப்பால் சேர்ந்த தொகை சுமுகமான வாழ்க்கையைத் தொடங்க உதவும்.
தில்லி திஹார் சிறையில்தான் அதிகமாகப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. 2013-ஆம் வருடம் அதன் மதிப்பு ரூ. 27.92 கோடி. தமிழ்நாடு சிறை உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.12.9 கோடி.
சிறைகள் பராமரிப்பு சமுதாயத்தின் கலாசார பிரதிபலிப்பு. மண்ணை நேசிக்கும் உணர்வை விவசாயம் தரும். அதனைக் கற்றுப் பழகும் இல்லவாசிகள் குற்றமற்ற வாழ்வில் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்: ஐ.பி.எஸ். அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.