காந்தியடிகள் எனும் தலைவாழையின் கீழ் வெடித்த சிங்கங்கள் பண்டித நேரு பிரானும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும். தேச விடுதலை எனும் ஆடையை நெய்வதற்காக வருவிக்கப்பட்ட நெய்குழலும், நூலும் என இருவரையும் சொல்லலாம் அல்லது அகத்தி மரத்தைச் சுற்றிப் படரும் வெற்றிலைக் கொடி என்றும் சொல்லலாம்.
தேசிய நீரோடையில் நேரு எனும் மீன் உடன்போக்கிலே நீச்சல் போட்டது. நேதாஜி என்ற மீன் எதிர்நீச்சல் போட்டது. என்றாலும், நீரின்றி இரண்டும் வாழா.
நேருவுக்குக் காந்தியடிகள் குருநாதர் என்றால், நேதாஜிக்கு சி.ஆர். தாஸ் குருநாதர். சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இருவரும் இளம் துருக்கியர்களாக அறிமுகம் ஆகிறார்கள். இங்கிலாந்திலே படித்துப் பட்டதாரி ஆனவர்கள் இருவரும். நேதாஜி ஐ.சி.எஸ். படிப்பில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று, தர வரிசையில் நான்காவது இடத்தையும் பெற்றார்.
ஐ.சி.எஸ். படிப்புக்குரிய வேலைவாய்ப்பை ஆங்கில அரசு தந்தபோது, என் மண்ணில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குச் சமாதி கட்ட வந்தவனே தவிர, அவர்களுக்குக் கீழ் வேலை பார்க்க வந்தவன் அல்ல என மறுதலித்தார். விளைவு, அலிப்பூர் சிறையில் ஆங்கில அரசு தள்ளியது. அடுத்து, மாண்டலே (பர்மா) சிறையில் நேதாஜி 2 ஆண்டு காலம் தள்ளப்
பட்டார்.
இன்றைக்குச் சிலர், நேரு ஏதோ நேதாஜிக்குப் பகையாளி போல வினாக்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள பாசமும், நேசமும், சுமங்கலியின் தாலி போலக் கழுத்துக்குக் கீழே மறைந்து கிடக்கும்.ஜவாஹர்லால் நேரு, தம் மகள் இந்திராவுக்குப் பிறந்த குழந்தையை (ராஜீவ்) ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்குச் செல்கின்ற இடைவெளியில் மட்டுமே பார்த்து மகிழ முடிந்தது.
அதுபோல நேதாஜி தம்முடைய மகள் அனிதாவை 2 வயதுக் குழந்தையாக வியன்னாவில் பார்த்ததோடு சரி. தியாகத் தழும்புகள் இருவரின் உடம்பிலும் அட்சரேகை - தீர்க்கரேகையாகக் கைகோத்துச் செல்லும்.
1939-ஆம் ஆண்டு நிகழவிருந்த திரிபுரி (ஜபல்பூர்) காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைவராக காந்தியடிகளின் விருப்பத்துக்கு மாறாகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நேதாஜி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனால், காரிய கமிட்டி உறுப்பினர்கள் 12 பேரையும் காந்தியடிகள் ராஜிநாமா செய்யச் சொல்கிறார். தலைமையின் கட்டளைக்கு இணங்க, நேருவைத் தவிர 11 உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துவிடுகின்றனர்.
நேரு ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்றால், நேதாஜியை நேரில் சந்தித்துத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யாமல், தொடர்ந்து பணியாற்ற வற்புறுத்துவதற்குத்தான்.
"நேரு அண்ட் போஸ்: பேரலல் லைவ்ஸ்' எனும் நூலை எழுதிய வரலாற்றாசிரியர் ருத்ராங்குஷ் முகர்ஜி, நேருவோடு நேதாஜி இணைந்து வரலாற்றுச் சாதனை படைக்க முடியும் என்று தீர்க்கமாக
நம்பினார்.
ஆனால், நேருவால் காந்தியடிகளைச் சார்ந்து வாழ முடிந்ததே தவிர, தனித்தியங்க முடியவில்லை என்று சான்று பகருகிறார். மேலும், நேதாஜி தாம் வகுத்திருந்த இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவுக்கு, ஜவாஹர்லால் நேரு பிரிவு (விங்) என்றே பெயரிட்டிருந்தார்.
இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ.) ஜப்பானிய படையோடு இணைந்து இம்பாலில் போரிட்டபோது, ஆங்கிலப் படை அபரிமிதமான வெற்றி பெற்றது. இந்திய தேசிய ராணுவத்திலிருந்து, தோற்றுப்போன நூற்றுக்கணக்கான வீரர்களைப் பிடித்து வந்த ஆங்கிலேயர், அவர்களைச் செங்கோட்டையில் விசாரித்து, அங்கேயே (கோர்ட் மார்ஷல்) சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர்.
செய்தி கேட்ட நேரு துடித்தெழுந்தார். புகழ்பெற்ற வழக்குரைஞர்களான பூலாபாய் தேசாய், சாப்ரூ, கட்ஜு, ஆசப் அலி போன்றோரைத் திரட்டித் தாமும் ஒரு கறுப்பு கவுன் அணிந்து, அப்பழுக்கற்ற தேச பக்தர்களான அவர்களைக் கொல்வது நீதியன்று என வாதிட்டு வென்றார். இதனால், நேருவுக்கு நேதாஜி மேலிருந்த பற்றும், பாசமும் புலப்படுகிறது.
இவ்விரண்டு பெருந்தலைவர்களும், இரண்டாம் உலகப் போரின்போது, சேவியர் ஆஃப் த வேல்டு' எனக் கொண்டாடப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சிலாலேயே வியந்து பாராட்டப் பெற்றவர்கள். "நான் பார்த்த அளவில், இந்த உலகத்தில் பயம் என்பதே இன்னதென்று தெரியாத மனிதர் நேரு ஒருவரே என பாராட்டிய சர்ச்சில், நேதாஜி சிங்கப்பூரில் ஜப்பானியப் படையோடு சேர்ந்து, ஆங்கிலப் படையைப் புறங்காணச் செய்த செய்தியைச் (23.10.1943-இல்) செவிமடுத்து அலறிப் போய்விட்டார்.
இந்த நேதாஜி அசாத்திய துணிச்சல்காரர். உலகத்தையே ஆள நினைக்கும் ஆங்கிலேயரை, இரண்டு முறை குருடாக்கி, அவமானப்படுத்திவிட்டார் எனக்கூறிப் பதறிப் போனார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது மாநாடு 1922-இல் சோவியத்தில் நடந்தது. அதில் பங்கேற்க சி.ஆர். தாஸ், நேதாஜி, எஸ்.ஏ. டாங்கே, தோழியர் நளினி குப்தா ஆகிய 4 பேர் மட்டுமே இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டனர். 1922-லேயே சர்வதேச அங்கீகாரம் பெற்றவர் நேதாஜி.
அத்தகைய பெரும் போராளியான நேதாஜி 18.8.1945-இல் தைவானில் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, வாய்விட்டுப் பலருக்கு மத்தியில் கதறியவர் நேரு.
என்றாலும், தேச பக்தரான நேதாஜியின் குடும்பத்தாரின் மீது 1948-இல் இருந்து 1968 வரை புலன் விசாரணை செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர்கள் குடும்பத்துக்கு வரும் மடல்களைப் பிரித்துப் பார்த்துப் படியெடுத்துக்கொண்டு அனுப்பியது ஏன்? நேதாஜியின் குடும்பத்தார் எங்கு சென்றாலும், தொடர்ந்து சென்று வேவு பார்த்தது ஏன்? நேதாஜி மறைவுக்குப் பிறகும் அவருடைய கடிதத் தொடர்புகளைப் பகிரங்கமாக வெளியிடாதது ஏன் என்று குடும்பத்தாரும், ஊடகத்தாரும் முன்பைக் காட்டிலும் இப்போது ஓங்காரமிட்டு வினாக்களைத் தொடுக்கின்றனர்.
நேருவும், அவருக்குப் பின் வந்த பிரதமர்களும், அடிமை இந்தியாவில் போராளிகள் மட்டுமே. ஆனால், விடுதலைக்குப் பின் அவர்கள் ஆட்சியாளர்கள். அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டுத்தான் செயல்பட முடியும், தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.
ஒற்றாடல் (இன்றைய இன்டலிஜன்ஸ் பீரோ) என்று ஓர் அதிகாரமே திருவள்ளுவர் வகுத்திருக்கிறார். ஒற்றாடலையும், சட்டத்தின் வழிநடத்தலையும் மன்னவன் இரண்டு கண்களாகக் கருத வேண்டும். மேலும், பகைவர், நண்பர், நொதுமலர் என்னும் மூன்று திறத்தாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும், நாள்தோறும் ஒற்றன் மூலம் அறிந்து கொள்ளுதல் ஆள்பவருக்குரிய தொழில் என்றார் திருவள்ளுவர்.
1937-இல் மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தின் முதல்வர். அவரது அமைச்சரவையில் டாக்டர் சுப்பராயனும் ஓர் அமைச்சர். என்றாலும், அவரது வீட்டிலேயே சி.ஐ.டி.க்களை அமர்த்திப் புலன் ஆராய்ந்தார் முதல்வர். ஏனென்றால், டாக்டர் சுப்பராயன் வீட்டில் அவரைத் தவிர, அனைவரும் கம்யூனிஸ்டுகள். தலைமறைவுக் கலகங்கள் வெடித்துக் கொண்டிருந்த
காலமது.
அடுத்து, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியையும், அவரது குடும்பத்தாரையும் கண்காணிக்கும்படி உளவுத் துறையை ஏவியிருந்ததைப் புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த எம்.கே. தார் உறுதி செய்கிறார்.
நேதாஜியின் மனைவி எமிலி சென்கல் ஆஸ்திரிய நாட்டுப் பெண். நாஜிக்களோடும், பாஸிஸ்டுகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். அதனால், புலன் விசாரணைக்கும், வேவு பார்த்தலுக்கும் குடும்பத்தினர் உள்ளாயினர்.
நேதாஜி விமான விபத்திலே மறைந்தார் என்ற செய்தியை கேள்விப்பட்ட அன்றைக்கு வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபு, "நேதாஜி காலமானார் என்ற செய்தி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தலைமறைவாக சோவியத் செல்வதற்குப் பரப்பப்பட்ட வதந்திதான் அது' என்று 25.08.1945-இல் தனது நாள்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி, இரண்டொரு முறை தம் கண்களுக்கு நேதாஜி தென்பட்டதாகச் சொல்கிறார்.
எனவே, நேதாஜியினுடைய மறைவை விசாரிக்க மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஷா நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், ஜி.டி. கோஸ்லா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேதாஜி மறைவை உறுதி செய்கின்றன. ஆனால், மூன்றாவதாக அமைக்கப்பட்ட நீதியரசர் எம்.கே.முகர்ஜி குழு "அவர் மறையவில்லை, எங்கோ தப்பிச் சென்றுவிட்டார்' என்று எழுதிவிட்டது.
நேரு புலன் அறிந்ததும், உளவு பார்த்ததும் நேதாஜி எங்கேயாவது உயிரோடு இருக்கமாட்டாரா என்ற நப்பாசையில் கூட இருக்கலாம். செங்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் உருவிழக்கும், பொடியாகும். நேருவும், நேதாஜியும் வைரக் கற்கள் அல்லவா? ஒன்றோடு ஒன்று உரசுகிறபோது மேலும் மெருகேறுகின்றன, ஜொலிக்கின்றன.
ஒரு தந்தைக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், மூத்த பிள்ளை அப்பாவின் தொழில்களுக்குத் துணையாக வீட்டோடு இருந்துவிடுவார். இரண்டாவது பிள்ளை பட்டாளத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றுவார்.
காந்தியடிகளின் மூத்த பிள்ளையாக நேரு, அவரது சொல் கேட்டு வீட்டுப் பிள்ளையாக இருந்துவிட்டார். நேதாஜியோ வீட்டைவிட்டு வெளியேறி, தானே ஓர் ராணுவத்தைத் திரட்டி, நாட்டுப் பிள்ளையாகிவிட்டார்.
கேள்வி எழுப்புபவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதி பாடியது போலத் துஞ்சும் பொழுதினும் தாயின் பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தினராகிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெய்ஹிந்த் எனும் தாரக மந்திரத்தைக் கடல் அலைகளிலும் ஓங்கி ஒலிக்கச் செய்தவர். அவர் உயிரோடிருந்தால், பாரத மாதாவின் விலங்கொடிக்கப்பட்டது (ஆகஸ்ட் 15, 1947) என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில், தலையாலே நடந்து வந்திருப்பாரே தாய்நாட்டுக்கு!
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.