பலனளித்துள்ளதா தலித் நலத் திட்டங்கள்?

இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாகியும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரமும்,
Updated on
4 min read

இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாகியும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரமும், சமூக அந்தஸ்தும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலவிதமான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோதும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை.
 1. தலித் இன மக்களை மேம்படுத்த தனித் தொகுதி, 2. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, 3. தீண்டாமை இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளிலிருந்து தலித்துகளைக் காப்பாற்றிட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 4. தலித்துகளுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்பது, தலித்துகளுக்கு விவசாய நிலங்கள் - இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குவது, 5. கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கான மத்திய அரசின் சிறப்புக்கூறுத் திட்டம். இப்படி ஐந்து வகையாகத் தலித் இன மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களைப் பட்டிய
 லிடலாம்.
 இதில், முதலாவதான ரிசர்வ் தொகுதி எனப்படும் தனித் தொகுதி முறை மூலம் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் இன மக்களின் பிரதிநிதிகள் தான் சார்ந்து செயல்படுகிற கட்சியின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகிறார். கட்சிக்குக் கட்டுப்பட்டவராகவே கருதப்படுகிறார்.
 இதன் காரணமாகத் தலித் இன மக்களின் நலன் அல்லது கட்சி நலன் என்று வரும்போது கட்சி நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் உள்ளது என்பது நடைமுறை உண்மை.
 தனித் தொகுதி முறை மூலம் தலித் இன மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்பது கானல் நீராகவே உள்ளது.
 தலித் சமூகம் சார்ந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்தால்கூட பொதுத் தொகுதிகளில் தலித் வகுப்பினருக்கு வாய்ப்புக் கிடைப்பது அரிதிலும் அரிது மட்டுமே. மேலும், தனித் தொகுதிகளை தீர்மானிப்பதில்கூட அரசியல் சித்து வேலைகள் நடைபெறுகின்றன.
 இரண்டாவதாக, கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு. இதன் மூலம், தலித் இன மக்களில் ஒரு பகுதியினர் பலனடைந்து உள்ளனர். இதில் பலனடைந்தவர்களின் குடும்பங்களே திரும்பத் திரும்பப் பயனடைகின்றனர்.
 பெரும்பாலான தலித் இன மக்கள் இட ஒதுக்கீட்டு முறையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் தலித் இன மக்களின் இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் நிலுவையில் வைக்கப்படுவதும், சில நேரங்களில் மற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதும் நடைபெறுகிறது.
 தலித் இன மக்களின் சலுகைகளை அபகரிக்கும் உள்நோக்கத்துடன், மதம்மாறிச் சென்றவர்களும் தங்களை ஹிந்து தலித் என்கிற சான்றிதழைப் பெற்று ஹிந்து தலித் இன மக்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
 கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் தனியார் ஆதிக்கம் நிலவுகிறது. அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்கள்கூட தனியார்மயமாகி வருகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமற்ற நிலையில் உள்ளது. மேலும், சிறுபான்மை கல்வி, தொழில் நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த மறுத்து வருகின்றனர்.
 மூன்றாவதாக, தீண்டாமை இழிவுகளை ஒழித்திட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தலித் இன மக்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அரணாக உள்ளது. ஆனால், பல நேரங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பழிவாங்கும் உணர்வுகளுக்காகவும், பிற சமுதாயத்தவரை அச்சுறுத்தும் வகையிலும், பணம் பறிக்கவும் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 தமிழகத்தில் இன்னும் பரவலாக சுமார் 30 சதவீதம் கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, தனிச் சுடுகாடு, ஆலயங்களுக்குள் தலித் இன மக்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை, பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க முடியாத நிலை. இன்னும் சில கிராமங்களில் காலில் செருப்பணிந்து பொது தெருக்களில் தலித் இன மக்கள் செல்ல முடியாது. மேம்பட்ட சமூகத்தினர் எதிரில் வந்தால் இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து இறங்கித்தான் செல்ல வேண்டும். இத்தகைய நிலை இன்றும் சில பகுதிகளில் நீடிக்கிறது.
 வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தலித் இன மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக பிற சமூகத்தவரோடு பகை உணர்வையே வளர்த்து வருகிறது.
 இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலித் இன மக்கள் சென்று வழிபட முடிகிறது. சில தனியார் கோயில்களில் பிற சமூகத்தவர் வழிபட அனுமதிப்பது இல்லை. தேவாலயங்களில்கூட தீண்டாமைக் கொடுமை உள்ளது. இந்த நிலை மாறிட அனைத்து சமூகத்தவரின் மத்தியிலும் மன மாற்றம் ஏற்பட வேண்டும்.
 நான்காவதாக, தலித் இன மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. மாவட்டம்தோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமூகத்தவராலும், அரசாலும், கிறிஸ்தவ மிஷனரிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்
 டுள்ளன.
 தலித் இன மக்கள் விவசாயம் செய்யவும், வீடுகளை அமைத்துக் கொள்ளவும் பயன்பட வேண்டிய இந்த நிலங்களை மீட்கும் முயற்சிகள் பேச்சளவில் மட்டுமே உள்ளன. பெரும்பாலும் தலித் இன மக்கள் விவசாயக் கூலிகளாகவும், கடை நிலை தொழில் செய்பவர்களாகவுமே உள்ளனர்.
 பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு தலித் இன மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டால், தலித் இன மக்களின் வாழ்வாதாரம் உயரும். பஞ்சமி நிலங்கள் பிறர் பயன்பாட்டுக்கு விற்கப்பட்டிருந்தால் அல்லது பட்டா வழங்கப்பட்டிருந்தால்கூட சட்டப்படி செல்லாது.
 இதேபோல் மலைவாழ் மக்கள், வனவாசிகள், பழங்குடியினர் ஆகியோரின் நிலங்களும் ஏராளமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்பதற்கும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
 ஐந்தாவதாக, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சிறப்புக்கூறுத் திட்டம். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1977-1982) தலித் இன மக்களின் மேம்பாட்டுக்காக சிறப்புக்கூறுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
 இந்தத் திட்டத்தின்படி, தலித் இன மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கும். மாநில அரசுகள் இந்த நிதியைப் பெற்று அந்தந்த மாநிலங்களில் உள்ள தலித் இன மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் நலத் துறைக்கு சிறப்புக்கூறுத் திட்டத்தைத் திட்டமிட்டு செயல்படுத்த அதிகாரம் உள்ளது. தலித் இன மக்களுக்குத் திட்டங்கள் நேரடியாகப் பலன் கொடுக்கும் முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
 மாநில அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் சிறப்புக்கூறுத் திட்டத்தின்படி செலவழிக்கப்பட உள்ள தொகையைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் 19 சதவீதம் உள்ள தலித் இன மக்களுக்கு சிறப்புக்கூறுத் திட்டத்தின்படி மத்திய அரசு வழங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் தொகை பிற வகைகளில் செலவிடப்பட்ட பெருந்தவறு தொடர்ந்து நடந்து வருகிறது.
 இந்த சிறப்புக்கூறுத் திட்டத்தின்படி, மத்திய அரசு ஒதுக்கும் தொகை தமிழக அரசால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது போக மீதியிருக்கும் தொகை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்படும் அவலமும் நடந்தேறி வருகிறது. இதை இந்தியத் தணிக்கைத் துறையும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் வெளிப்படுத்தியுள்ளன.
 தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி வளர்ச்சிக் கழகம், அதாவது தாட்கோ நிறுவனம்கூட தனது நோக்கத்தின்படி தலித் இன மக்களுக்குத் தேவைப்படும் வீடுகளைக் கட்டுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் போதிய உதவிகளை முழுமையாகச் செய்வதில்லை. தாட்கோ நிறுவனம் மூலம் வழங்கப்படும் கடன்களுக்குகூட சொத்துப் பத்திர ஜாமீன் கேட்கின்றனர்.
 தலித் இன மக்களுக்காக அரசு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தாமல் தாமதம் செய்கின்றனர். ஆதிதிராவிட மாணவர் விடுதியின் அவல நிலைகள் குறித்து பலமுறை செய்திகள் வெளியாகி உள்ளன. தலித் இன மக்களுக்கு எதிரான செயல்கள் முன்பை விடக் குறைந்துள்ள போதிலும் முழுமையாக நீங்கிடவில்லை.
 "பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை என்பது தாற்காலிகமானதுதான். இட ஒதுக்கீட்டு உரிமைகள் மூலம் தலித் சமூகம் பலனடைந்த பிறகு சமூகத்தில் சமத்துவ நிலை வந்துவிடும். அதன் பிறகு, இட ஒதுக்கீடு முறை கைவிடப்படும்' என்று இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 தீண்டாமை இழிவுகளுக்கு ஆளாக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி, பொருளாதார, சமூக அந்தஸ்து மேம்பட ஓயாமல் உழைத்த அம்பேத்கர், தலித் இன மக்களுக்கான இரட்டை வாக்குரிமை அதாவது, தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஒரு வாக்கு, பொதுவான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு என இரண்டு வாக்குரிமைகள் பெற்றவர்களாகத் தலித் இன மக்கள் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடினார்.
 காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டத்துக்குப் பிறகு, காந்தியடிகள் - அம்பேத்கர் ஆகிய இரு தலைவர்கள் சந்தித்துப் பேசி உடன்பாடு செய்து கொண்டனர். இதில் காந்தியடிகளின் உயிர் காக்கப்பட வேண்டும் என்கிற அக்கறை காரணமாக, இரட்டை வாக்குரிமை கோரிக்கையை அம்பேத்கர் கைவிட்டார்.
 அதன் பின்னர், தலித் இன மக்களின் மேம்பாட்டுக்காகவும் காந்தியடிகள் பாடுபடுவது என்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சுதந்திரத்துக்குப் பிறகு நேரு தலைமையிலான அமைச்சரவையில் அம்பேத்கரை சட்ட அமைச்சராக காந்தியடிகளே பரிந்துரை செய்தார்.
 தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அம்பேத்கர் தெளிவான சட்ட வடிவம் கொடுத்தார். காந்தியடிகள் தலித் இன மக்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு சமூக தளத்தில் ஓயாமல் உழைத்தார்.
 காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரின் கனவுகள் நனவாக, தலித் இன மக்கள் சம அந்தஸ்து பெற நாம் சட்டப்பூர்வமாகவும், சமூகத் தளத்திலும் நமது முயற்சிகளைத் தொடருவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com