சட்டத்தின் பிடியில் சிறார்கள்!

இணைய தளத்தில் முகநூல் மூலமாக சிறுவர், சிறுமியரை பாலியல் கொடுமைக்குள்ளாக்க நினைத்த சில கயவர்களது
Updated on
4 min read

இணைய தளத்தில் முகநூல் மூலமாக சிறுவர், சிறுமியரை பாலியல் கொடுமைக்குள்ளாக்க நினைத்த சில கயவர்களது திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. வக்கிர மனிதர்கள் சமுதாயத்தில் நல்லவர்கள் போல உலவுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய இணைய தளத்தைப் பின்தொடரும் கனவான்கள் இருப்பதால்தானே இணைய தளத்தில் விரசமும் வக்கிரமும் வளர்ந்து வருகின்றன.
 கருத்துச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேசமயம் அதனூடே பல நெருடலான விஷயங்கள் பின்னிப்படர்ந்து பிணைவதும் தடுக்கப்பட வேண்டும்.
 2012 நிர்பயா நிகழ்விற்குப் பிறகு பாலியல் சம்பத்தப்பட்ட பல நிலைப்பாடுகள் சர்ச்சைக்கு வந்துள்ளன. அதில் முக்கியமானது குற்றவாளியின் வயது குறித்தது.
 தில்லி நிர்பயா வல்லுறவு வழக்கில் ஆறு குற்றவாளிகளில் முதல் ஐந்து குற்றவாளிகளான ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகுர் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்ரா என்ற இளம் குற்றவாளிக்கு மூன்றாண்டு நன்னடத்தைப் பள்ளியில் இருக்க வேண்டும் என்ற தண்டனை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காவல் துறை தரப்பு விசாரணையில் ஆறு குற்றவாளிகளில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டவன் இளம் குற்றவாளிதான் என்ற உண்மையே இந்த சர்ச்சைக்குக் காரணம்.
 நிர்பயா வழக்கின் பின்னணியில் சிறார்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் வயது வரம்பை நிர்ணயிக்க சிறார் நீதி முறை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, எதிப்புகளுக்கிடையில் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, வயது வரம்பு பரிந்துரையைத் தவிர இதர கருத்துகளை ஏற்று, திருத்திய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 அதன்படி கடுங்குற்றம் புரியும் 16 வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்கள் இளம் குற்றவாளிகளாகக் கருதப்படாமல் பொது சட்டத்தின் கீழ் விசாரித்து தணடனை வழங்கப்படுவர்.
 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 82-இன் கீழ் ஏழு வயதிற்கு உள்பட்ட ஒரு குழந்தையினால் செய்யப்படும் குற்றம், குற்றம் ஆகாது. மேலும், பிரிவு 83-இன்படி ஏழு வயதிற்கு மேற்பட்டதும் பன்னிரெண்டு வயதிற்கு உள்பட்டதும் புரிந்துகொள்வதற்குப் பக்குவமடையாததுமான ஒரு குழந்தையின் செய்கை குற்றமாக இருந்தாலும் குற்றமாகாது. இந்திய சாட்சிய சட்டம் 118-இன் கீழும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 சிறார் நீதிமுறைச் சட்டங்கள் காலப்போக்கில் வளர்ந்த பின்னணியைப் பார்க்க வேண்டும். 1919-20இல் அமைக்கப்பட்ட இந்திய சிறை சீர்திருத்தக் குழு, குற்றங்களில் சிக்கும் சிறார்களை சாதாரண குற்றவாளிகள் போல கருதாமல் சிறப்பு வழி முறையில் கையாளப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. நமது நாட்டில் முதல் முறையாக மதறாஸ் சிறார் சட்டம் 1920-இல் இயற்றப்பட்டது.
 இதில் குற்றத்தில் சிக்கும் குழந்தைகள், பராரியாகத் திரியும், பரிதவிப்பில் விடப்படும் குழந்தைகள் சிறப்பு சிறார் நீதிமன்றங்கள் மூலம் தீர்வு வழங்கி அவர்கள் திருந்தி பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க வழிவகை செய்யும் நோக்கம் சட்டத்தில் வரையறுக்கப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கண்ணியமான எதிர்காலம் அமைத்தல் வேண்டும் என்பது சிறந்த அணுகுமுறை.
 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கைகளை வழிநடத்தும் நெறிகள், குழந்தைகள் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவையான போஷாக்கு, ஆரோக்கியம், கல்வி அளிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
 அதைத் தொடர்ந்து, அரசின் திட்டங்களில் குழந்தைகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும், தொழில்வள முன்னேற்றத்தோடு குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் தலை தூக்கின. மக்கள்தொகை பெருக்கத்தால் வளமையின் பயன்பாடு எல்லோருக்கும் சென்றடைவதில் குறைகள் ஏராளம்.
 வாழ்வைத் தேடி நகரங்களுக்குக் குடிபெயர்ந்த குடும்பங்கள் ஏழ்மையில் தத்தளித்தன. குழந்தைகள் மேற்பார்வையின்றி குற்றவலையில் சிக்குவதைத் தடுக்க முடியவில்லை. சிறார் குற்றங்கள் பெருகின. பராமரிப்பின்றி குற்றவலையில் விழும் குழந்தைகளின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, 1960-ஆம் ஆண்டு திருத்திய சிறார் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
 இந்தச் சட்டத்தில் முக்கிய மாற்றம் சட்ட வழியிலிருந்து குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
 1960, 70-களில் பல நாடுகளில் இளைஞர்கள் வேலையில் நாட்டமில்லாது, வாழ்வில் பிடிப்பில்லாத அவல நிலை உருவானது. வியத்நாம் யுத்தம், இஸ்ரேல் பாலஸ்தீன சண்டை, பொருளாதாரத் தொய்வு, சர்வதேச அரசியல் சித்தாந்தம் அடிப்படையில் பிரிவினை, இவற்றால் அதிகமாக இளைய தலைமுறையினர்தான் பாதிக்கப்பட்டார்கள்.
 அவர்களிடையே போதைப்பொருள் உள்கொள்ளும் பழக்கம், ஹிப்பி கலாசாரம் பீடித்துக்கொண்டது. உள்நாட்டு கலகங்களில் அதிகமாக விவரம் அறியாத சிறுவர் - சிறுமியரை பயங்கரவாதிகள் ஈடுபடுத்தினர். உலக அளவில் இளைஞர்கள் ஈடுபடும் குற்றங்களும் அதிகமாயின.
 1978-ஆம் ஆண்டு போலந்து நாடு, ஐக்கிய நாடு சபையில் பல நாடுகளில் குழந்தைகள் படும் இன்னல்களைக் களையவும், உள்நாட்டு கலவரங்கள், போர்களில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாதிரி செயல் பிரேரணை சமர்ப்பித்தது. இதன் மீது சுமார் 10 ஆண்டு விவாதம் நடந்தது. இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து, நமது நாட்டிலும் மீண்டும் சிறார் சட்டத் திருத்தம், சிறார் நீதி நிலை சட்டமாக ஜுவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் 1986-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் ஆண் குழந்தைகளுக்கான வயது 16, பெண் குழந்தைகள் 18 என்று வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
 புது சட்டத்தில் சிறார் நல வாரியம், சீர்திருத்தப் பள்ளிகள், குற்றங்களில் சிக்கிய சிறார்களுக்கு முதல் கட்ட வரவேற்பு இல்லங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகளை குழந்தை குற்றவாளிகளைப் பராமரிக்க ஈடுபடுத்துதல் போன்ற பல நல்ல ஏற்பாடுகள் உள்ளன. நடைமுறைப்படுத்துவதிலும், கட்டமைப்புகளை நிறுவுவதிலும் பல மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது. சீர்திருத்தப் பள்ளிகளில் முறைகேடுகள், குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற புகார்கள் எழுந்தன.
 1989-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நலம் மற்றும் அவர்கள் உரிமைகள் பாதுகாப்பு இணக்க ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதில் முதல் உறுப்பில் குழந்தைகள் வயது உச்சவரம்பு 18 என்பது முக்கிய குறிப்பு. இந்தியா உள்பட 192 நாடுகள் இதற்கு அங்கீகாரம் அளித்தன.
 இளம் குற்றவாளிகளுக்கு நீதி வழி தீர்வு பெயிஜிங்க் ரூல்ஸ் என்று ஐக்கிய நாடுகள் சபை 1985-ஆம் ஆண்டு வகுத்த குறைந்த பட்ச குழந்தைகள் பாதுகாப்பு அறிவிப்பின் அடிப்படையில் அமைந்தது. இதை மையமாக வைத்துதான் எல்லா நாடுகளிலும் குழந்தைகள் குற்றச் சட்ட அமலாக்கம் மேற்கொள்ளப்பட்டது.
 1990-களில் உலகமயம், தாராளமயம், வெளிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளால் புதிய நகரங்கள் தோன்றின. சேவை சார்ந்த வேலைகளுக்கு தேவை ஏற்பட்டதால் மக்கள் வரத்து நகரங்களில் அதிகரித்தது. நெரிசலுக்கு ஏற்றவாறு வசதிகள் பெருகவில்லை. விலை வாசிக்கேற்ப போதுமான வருமானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இதனால், முதலில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்.
 குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வசதியில்லை. வேலைக்குச் சென்று குடும்ப வருவாய்க்கு பங்களிக்க வேண்டிய நிர்பந்தம். பொறுப்பற்ற பெற்றோரின் கவனிப்பின்மை, நிராதரவான குழந்தைகள், பேட்டை தாதாக்களிடம் சிக்கி குற்றவலையில் தள்ளப்படுவது வேதனை.
 அவ்வாறு திரியும் சிறார்களுக்குப் பாதுகாப்பு என்ற ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டு சிறார் நீதிநிலை சட்டம் மாற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இதில் சிறுவர், சிறுமியர் இருவருக்கும் வயது 18 எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது முக்கிய மாற்றம். 2006-ஆம் வருடம் சிறார் வயது, குற்றம் நடந்த சமயத்திலிருந்து கணக்கிடவேண்டும் என்பதோடு வேறு சில திருத்தங்கள் சிறார் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 பதினாறு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்கு உள்பட்டவர் வல்லுறவு, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடும் போது அவர்களை குழந்தை குற்றவாளிகளாகக் கருத வேண்டுமா அல்லது வயது வந்தவர்க்கான குற்ற நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமா என்பதுதான் பிரச்னை.
 சமூக ஆர்வலர்கள் சர்வதேச அளவில் சிறார்களுக்கு 18 வயது உச்சவரம்பு இருக்கையில் அதை குறைப்பது தவறு, மேலும் இதில் பாதிப்படைபவர்கள் ஏழைகள், அவர்களது சமுதாயச் சூழல் , கல்வி வாழ்வாதாரம் போன்ற பயன்கள் கிடைக்காத நிலையில் குற்ற வலையில் விழும் வாய்ப்பு அதிகம்.வாழ்க்கை நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குறுகிய கண்ணோட்டத் தீர்வு நியாயமற்றது என்பது ஒரு வாதம்.
 ஆனால், அதேசமயம் ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி, தகவல் பரிமாற்றத்தில் நல்லது கெட்டது என்று பல வகை உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகள், காட்சிகளால் இளம் வயதிலேயே வக்கிரங்கள் வளர்கின்றன. அதன் பாதிப்பால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், சிறார் என்ற போர்வையில் கோரமான உருவம் மறைந்திருந்து புரியும் கொடுங்குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை மறுக்கலாகாது.
 தேசிய குற்ற ஆவணத்தின் 2013 புள்ளிவிவரப்படி சுமார் 28,000 சிறார்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர், அதில் 3,887 சிறார்கள் கொடுங்குற்றவாளிகள். உச்சநீதிமன்றம் சிறார்கள் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவது அதிகமாகி வருவதைக் கருத்தில் கொண்டு சட்ட மாற்றத் தேவையை ஆராய வேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு அரசு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
 பல நாடுகளில் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு சிறார் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாவில் 16, பிரிட்டனில் பத்திலிருந்து பதினேழு, நமது நாட்டில், குற்றத் தன்மையை நிபுணர்கள் ஆராய்ந்து குற்ற விசாரணை முறை தீர்மானித்தல், 21 வயது கடந்தாலும் சிறார் சிறையிலேயே தண்டனை முடித்தல், குற்ற நிகழ்வின் போதிருக்கும் வயதையே பின்பு கைதானாலும் கணக்கில் கொள்ளல் போன்ற பாதுகாப்பு வளையங்களோடு 16-லிருந்து 18 என்பதில் தவறில்லை.
 எல்லாவற்றிலும் முக்கியம், காவல் துறை தவறிழைக்கும் சிறார்களை லாக்கப்பில் வைக்காது, சட்ட மாற்றங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏழ்மை கொடியது, அது சமுதாயத்தின் மீது வெறுப்பையும் பொறாமையையும் தூண்டும், ஆனால், அதுவே கடுங்குற்றங்களுக்கு வித்திட அனுமதிக்கக் கூடாது. அதனால் பாதிப்பும் ஏழைகளுக்குத்தான்.
 குற்ற நடைமுறை சிறார்களின் எதிர்காலம் சிதையாது அமைந்தால் நல்லது. அதுவே சிறார் சட்டத்தின் நோக்கம்.
 சிறார்கள் குற்றம் புரிகிறார்கள் என்றால் ஒரு வகையில் ஏற்றத் தாழ்வுகளைக் களையாத சமுதாயமும் காரணம்தானே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com