சமீபத்தில் வெளியான அரசு வங்கிகளின் கடந்த முழு நிதியாண்டின் முடிவு அறிக்கைகள் பொருளாதார வட்டாரங்களில் புதிய கலக்கத்தைத் தோற்றுவித்துள்ளன. வளர்ந்து வரும் வாராக் கடன்களைப் பற்றிய தகவல்தான் அந்த கலக்கத்துக்குக் காரணம்.
கடந்த காலாண்டில் உச்சத்தைத் தொட்ட வாராக் கடன்களின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வங்கி நிர்வாகங்கள் ஆறுதல் வார்த்தைகளை அள்ளித் தெளித்தன. ஆனால், அலகாபாத் வங்கியிலிருந்து யுனைடெட் வங்கி வரை பெரும்பாலான வங்கிகளின் வாராக் கடன்கள் கடந்த நிதி ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் அதிகரித்திருப்பது வங்கித் துறையில் பெரும் கவலைக்குரிய பொருளாதாரப் பின்னடைவு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வங்கித் துறையின் இந்தப் பின்னடைவு இன்னும் சில காலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
பெரிய வங்கிகள் முதல் சிறிய வங்கிகள் வரை வாராக் கடன் எனும் சுழலில் சிக்கித் தவிக்கின்றன. இரண்டாவது பெரிய அரசுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.26,000 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.15,000 கோடி, யூனியன் வங்கி ரூ.13,000 கோடி, சென்ட்ரல் வங்கி ரூ.12,000 கோடி, யூகோ வங்கி ரூ.11,000 கோடி, அலகாபாத் வங்கி ரூ.8,500 கோடி என்று வங்கிகளின் வாராக் கடன் பட்டியல் தளர்ச்சி இல்லாமல் வளர்ந்து வருவது சாதாரண குடிமகனுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
கடந்த நிதியாண்டில், வங்கிகளின் வாராக் கடன் மொத்தக் கடன் தொகையில் 4.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.4 லட்சம் கோடிகளைத் தொட்டு நிற்கிறது.
பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் வைப்புத் தொகைகள்தான் (டெபாசிட்) கடன் வழங்குவதற்கு வங்கிகளின் பிரதான மூலதனத் தொகையாகும். வைப்புத் தொகைக்கும், கடனுக்கும் இடையேயான வட்டி வித்தியாசம்தான் வங்கிகளின் பிரதான வருமானமாகும். வங்கிகளின் லாபம், பெருமளவில் வட்டி வருமானத்தையே சார்ந்திருக்கின்றன. பழுதடையாத மூலதனத்தின் மீதுதான் வங்கிகள் வட்டித் தொகையை வசூலிக்க முடியும்.
ஆனால், வாராக் கடன்கள் மூலதனத்தைப் பழுதடையச் செய்வதால், அந்தக் கடன்களின் மீதான செலுத்தப்படாத வட்டித் தொகையை வங்கிகள் லாபக் கணக்கில் சேர்க்க முடியாது. அதைத்தவிர, வாராக் கடன்களுக்காக வங்கிகள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை (Provision for Non Performing assets) ஒதுக்க வேண்டும். இதனால், வங்கிகளின் லாபம் குறையும்.
வாராக் கடன் என்ற சுழலில் சிக்கிய வங்கிகளின் வியாபாரம் பெருகினால்தான், லாபம் அதிகரித்து ஏற்கெனவே விளைந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல், வாராக் கடன்கள் பெருகுவதைத் தடுத்து நிறுத்த, புதிய கடன்களை வழங்க வங்கிகள் பெரும் தயக்கம் காட்டுகின்றன. கடந்த நிதி ஆண்டில், வங்கிகளின் வியாபாரம் தேக்க நிலையைக் கண்டிருப்பது நிதி அறிக்கைகள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.
பழுதடைந்த மூலதனத்தை சரிகட்ட, பாதிக்கப்பட்ட வங்கிகள் மத்திய அரசை சார்ந்திருக்கின்றன. மத்திய அரசின் வருமானம், பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளை சார்ந்திருக்கிறது. இந்த சங்கிலித் தொடர் கணக்குப்படி, வங்கிகளின் வாராக் கடன்கள் பொது மக்கள் தலையில் இடியாக இறங்கி அதிக வரிகளாக உருவெடுக்கின்றன.
அரசு வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசாகும். 49 சதவீதம் வரையிலான பங்குகள், பொது மக்கள் பரஸ்பர நிதிகள் (Mutual funds) உள்பட பலதரப்பட்ட முதலீட்டாளர்கள் இடையே பரவிக் கிடக்கின்றன. வாராக் கடன்களால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்பட்டிருப்பதால், சமீப காலங்களில் வங்கிப் பங்குகளின் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால், தங்கள் முதலீட்டின் பெரும் பகுதியை இழந்து இன்னலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள் சிறு முதலீட்டாளர்கள்தான்.
அடித்தட்டு மக்கள் வரை ஊடுருவிப் பாயும் வாராக் கடன் என்ற சாபத்திலிருந்து வங்கிகள் படிப்படியாக மீண்டு வருவதற்கு சில பரிகாரங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அரசு வங்கிகளின் பெரும்பாலான கடன் தொகை, கட்டுமானம் (Infrastructure), இரும்பு, ஜவுளி, ஆகாய வழிப் போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் கட்டுமானம் போன்ற சில துறைகள் நீண்ட காலத்துக்கான அதிக மூலதன தேவைப்பாடு உடையவைகளாகும்.
நாட்டின் வேகமான பொருளாதார முன்னேற்றத்துக்கு, உள்கட்டுமான வசதிகள் தேவை என்பதால், அரசு வங்கிகள் அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி ரூபாயை கடனாக வழங்கிக் கொண்டிருப்பதைத் தங்கள் சமூகக் கடமையாகக் கருதுகின்றன. இந்தத் துறையின் கடன் தேவைகளில் 85 சதவீதம் வரை அரசு வங்கிகள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் முழுமை பெற நீண்ட காலம் ஆகும்.
கடன் பெற்ற கட்டுமான திட்டங்கள் முழுமை அடைந்தால்தான், வழங்கப்பட்ட கடன் தொகையை வங்கிகள் திரும்பப் பெற முடியும். பெரும் தொகைகளைக் கடனாகப் பெற்ற திட்டங்கள், சமூக எதிர்ப்புகள், சுற்றுச்சூழல் சம்பந்தமான அனுமதிகளுக்கான காத்திருப்பு, நிலம் கையகப்படுத்துதல் போன்ற தடைக் கற்களைத் தாண்ட முடியாமல் முடங்கி நிற்கின்றன.
சட்ட சீர்திருத்தங்கள் மூலம், இந்தத் தடைகளை அரசாங்கம் விலக்க முற்பட்டால்தான், திட்டங்கள் பூர்த்தி அடைந்து, பலன் தர ஆரம்பிக்கும். அப்பொழுதுதான், வங்கிக் கடன்களும் திரும்ப செலுத்தப்படும்.
ஆகையால், மத்திய அரசு, இந்தக் குறைகளைப் போக்க வேகமாக செயல்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. அதுவரை, கட்டுமான வசதிகளுக்காக வழங்கப்பட்ட பெரும் கடன் தொகைகளுக்கு வாராக் கடன் விதிமுறைகளிலிருந்து நீண்ட கால விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், கடன் வழங்கப்பட்ட தொழில் துறையைப் பற்றி வங்கிகளுக்கு ஓரளவு நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், வழங்கப்பட்ட கடன் தொகை சரிவர பயன்படுத்தப்படுகிறதா (End use of funds) என்பதை வங்கிகள் சரிவர கணிக்க முடியும்.
உள்கட்டுமான துறை சார்ந்த நுணுக்கங்களைக் கணித்து, கண்காணிக்கும் (Credit appraisal and Monitoring of infra loans) தனித்திறமை வங்கிகளிடம் தற்போது கிடையாது. இந்தத் துறைக்கு அரசு வங்கிகளால் வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையில் 25 சதவீதத்துக்கு மேல் பழுதுபட்டிருப்பதே இதற்கு அத்தாட்சியாகும்.
வங்கிகளின் இம்மாதிரி எல்லைக் கோடுகளை (Limitations) மனதில்கொண்டு, இனிவரும் காலங்களில் கட்டுமான துறைக்கு கடன் உதவி வழங்கி, அந்தத் திட்டங்களின் வளர்ச்சியைத் தொழில்ரீதியாக கண்காணிக்க (Professional monitoring of projects) தனி நிதி வாரியம் அமைக்கப்பட வேண்டியதற்கான அவசியம் மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும். உள்கட்டுமான வசதிகள் போதிய அளவு வளர்ச்சி அடைந்தால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2 சதவீதம் வரை அதிகரிக்கும்.
நிலுவையில் இருக்கும் வாராக் கடன்களின் பெரும் பகுதி பல வங்கிகளின் கூட்டமைப்பு மூலம் (Consortium of banks) வழங்கப்பட்டவையாகும். பெருந்தொகை தேவைப்படும் தொழில் திட்டங்களுக்கு இம்மாதிரி கூட்டமைப்புகள் கடன் வழங்குகின்றன. கூட்டமைப்பின் தலைமை அங்கத்தினரின் கணிப்பின் படியே மற்ற வங்கிகள் தங்கள் கடன் கொள்கைகளை வகுக்கின்றன.
அதற்கு பதில், கூட்டமைப்பின் அங்கத்தினராகும் ஒவ்வொரு வங்கியும் திட்டத்தைப் பற்றிய நன்மை, தீமைகளை (Project study and due diligence) தனிப்பட்ட முறையில் கணித்து, அதற்கேற்ப தங்கள் கடன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதனால், ஓர் அங்கத்தினரின் கண்ணுக்குப் புலப்படாத சில நுணுக்கங்கள் மற்றொருவருக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது. இதனால், கூட்டதோடு கூட்டமாக செயல்படும் எண்ணம் தவிர்க்கப்படும்.
ஒரு கடன் தொகை வாராக் கடனின் வாயிலில் நிற்கும்போது, அதை உள்ளிழுக்க, மற்றொரு புதிய கடனை வழங்கும் பழக்கத்தை (Ever greening of loans) வங்கிகள் அறவே நிறுத்த வேண்டும். இம்மாதிரி முறைகேடுகளால், கொடுத்த கடனை வசூலிக்க முடியாத சுழலில் வங்கிகள் சிக்கித் தவிக்கின்றன.
தொழில் நிறுவனங்களின் கடன் தேவைகளை சரியான நேரத்தில், முழுமையான அளவில் வங்கிகள் பூர்த்தி செய்ய வேண்டியது மிக அவசியமாகும். கடன் தேவையை நிர்ணயிக்கும் ஆய்வுகளில் (Credit appraisal stage) கடனின் அளவு சரியாகக் கணிக்கப்படவில்லையானால், அதன் அடிப்படையில் வழங்கப்படும் கடன் தொகை வாராக் கடனாக மாறிவிட அதிக வாய்ப்புள்ளது. வங்கிகள் தங்கள் கடன் ஆய்வுத் திறமைகளை வளர்த்துக் கொண்டால்தான், இந்த மாதிரி அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும்.
கடன் வழங்குவதோடு மட்டும் வங்கிகளின் கடமை முடிந்து விடுவதில்லை. வழங்கப்பட்ட கடன் தொகை, குறிப்பிடப்பட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். கடன் தொகை வேறு நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டால் (Diversion of funds) அதுவே, வாராக் கடனாக மாறுவதற்கு வழிவகுக்கும்.
அரசு வங்கிகளில் பல நிலைகளில் திறமையும், அனுபவமும் நிறைந்த அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். பல நிலைகளில், காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. கணினிமயம் என்ற பெயரில், அதிக அளவில் ஆள்குறைப்புகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்படும் சி.ஏ., எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள், அரசு வங்கிகளின் சில பழமையான பணிக் கொள்கைகளால் நீண்ட காலம் வங்கிப் பணியில் நீடிப்பதில்லை. போதுமான பணியாளர்களின் பற்றாக்குறை வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை பாதித்து, வாராக் கடன்களை அதிகரிக்கின்றன என்பது துறை சார்ந்தவர்களின் கருத்தாகும்.
வாராக் கடன்களின் பெருக்கத்துக்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமான வங்கிகள் என்ற ஆலமரத்தின் அடிவேர் வரை பழுதுபார்த்து குறைகளை உடனடியாக மத்திய அரசு நிவர்த்தி செய்வது ஒன்றுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.