மாமனார் விருப்பத்தினால், அவருடைய மகளைக் கட்டிய மாப்பிள்ளை, பின்னொரு காலத்தில் அந்த மாமனார் பிடிக்காமல் போய்விட்டால், அவருடைய மகளைத் திரும்ப ஒப்படைப்பது இல்லை. வழக்கமாகத் தூய்மையான பாலைக் கறந்து கொண்டுபோகும் இடையர், ஒரு நாள் அப்பசு கன்றீன்ற பிறகு சீம்பாலைத் தந்துவிட்டது என்ற காரணத்துக்காக வெறுப்புற்று, முன்பு கறந்த பாலை அதனிடம் கொண்டுவந்து ஒப்படைப்பதில்லை.
ஆனால், இன்று ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழ்நிலையை முன்னிட்டு, வேறுவேறு காலங்களில் வேறுவேறு அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள் வழங்கிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் திரும்ப ஒப்படைக்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இராவ்பகதூர், திவான்பகதூர், ராய் பகதூர், ஸர் போன்ற பட்டங்கள் இந்துக்களுக்கும், கான்சாகிப், ஜங் பகதூர் போன்ற பட்டங்கள் இசுலாமியர்களுக்கும் வழங்கப்பட்டன. ஸர் பட்டம் வாங்குவோர் இங்கிலாந்து அரசர் முன் மண்டியிட்டு நிற்க வேண்டும்.
மண்டியிட்டவர்களை அரசர் தம்முடைய உடைவாளால் இரண்டு பக்கத் தோள்களையும் தொட்டு, "ஸர் அவர்களே! எழுந்திருங்கள்' என்பார். இங்கிலாந்து போய் அப்பட்டங்களை வாங்க முடியாதவர்களுக்கு, இந்தியாவிலேயே வைசிராய்கள் செய்து வைப்பர். பட்டங்களைப் பெற்றவர்கள், அரசு விரோத செயல்களில் ஈடுபட்டால், அப்பட்டங்கள் பறிக்கப்படும்.
மேற்படி பட்டங்களைத் துறக்க வேண்டும் என்று காந்தியடிகள் கேட்டுக் கொண்ட பிறகும், பலர் இந்நாட்டில் அப்படிச் செய்யவில்லை. பஞ்சாப் படுகொலைக்குப் பிறகு ரவீந்திரநாத் தாகூர், தம்முடைய "ஸர்' பட்டத்தைத் துறந்தார். அதற்குப் பிறகு அவர் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பட்ட துன்பங்களை சி.எப். ஆண்ட்ரூஸினுடைய கடிதங்களைப் படித்தவர்களே அறிவர்.
தாகூர் தமக்குக் கிடைத்த நோபல் பரிசை வைத்துச் சாந்தி நிகேதனைத் தொடங்கிவிட்டார். பின்னர், அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் நிதி திரட்டச் சென்றார். வாக்களித்திருந்த ஆங்கிலேயர்கள், "எங்களது பட்டத்தைத் துறந்த உனக்கு ஒரு காசும் கிடையாது போ' என்று அனுப்பிவிட்டனர். கதை, கவிதை எழுதுபவர்கள் உணர்ச்சிவயப்பட்டு, படைப்புகளைப் படைக்கலாம். ஆனால், வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்கும்போது, அறிவு வயப்பட்டே எடுக்க வேண்டும்.
சாகித்ய அகாதெமி 1955-ஆம் ஆண்டு பண்டித ஜவாஹர்லால் நேருவினுடைய பெருமுயற்சியாலும், மௌலானா அபுல்கலாம் ஆசாத்தினுடைய தூண்டுதலாலும் உருவாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம்.
ஆட்சி, அதிகாரம் பெரும்பாலும் நுழைய முடியாத நிறுவனம். அதனுடைய தலைவர் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவே ஆவார். அகாதெமியின் தலைவர் என்ற முறையில், "இந்த நாட்டின் பிரதமரேகூட, அகாதெமியின் உரிமைகளில் தலையிட முடியாது' என்றார் நேரு. அவரும் ஓர் எழுத்தாளர் அல்லவா!
கருத்துச் சுதந்திரத்தின் காரணமாக, அநியாய மரணமுற்றவர்களுக்காக இன்று 61 படைப்பாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளைத் திரும்ப அனுப்பியுள்ளனர். திருப்பியளித்தவர்களில் மிகமிக முக்கியமானவர்களில் ஒருவர், விஜயலட்சுமி பண்டிட்டினுடைய மகள் நயன்தாரா செகல். தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற சத்தீஸ்கர் எழுத்தாளர் உதய்பிரகாஷ் என்ற இந்திக் கவிஞர்.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய "தி கேர்ள் வித் தி கோல்டன் பாரசொல்' எனும் புத்தகத்தை யேல் நகரில் அச்சிட்டு, அவர்களே அத்தனைப் பிரதிகளையும் வாங்கிக் கொள்கின்றனர். சாரா ஜோசப் என்ற மலையாள எழுத்தாளரும், அசோக் வாஜ்பாயி என்ற இந்தி எழுத்தாளரும் மறுதலித்தவர்களில் முக்கியமானவர்கள்.
பிற துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் சாகித்ய அகாதெமி எழுத்தாளர்களைப் பின்பற்றியுள்ளனர். பிரபல சாரோட் இசைக் கலைஞர் அம்ஜத் அலிகானும் மத்திய அரசின் விருதைத் திரும்ப அனுப்பியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆவணப் படத் தயாரிப்பாளர் ஆனந்த பட்வர்தனும் தாம் பெற்ற தேசிய விருதைத் திரும்ப அனுப்பியுள்ளார்.
என்றாலும், கேரளத்தைச் சேர்ந்த பால் சக்கரையா, எம். முகுந்தன் போன்ற படைப்பாளிகள் விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பது சரியான வழியன்று என்பதற்குத் தர்க்க ரீதியான காரணங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். புகழ்வாய்ந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று எம். முகுந்தனைப் பேட்டி கண்டு, அவர் ஏன் 61 படைப்பாளிகளைப்போல் நடந்து கொள்ளவில்லை என்று கேட்டார்கள்.
அதற்கு முகுந்தன், "எனக்கு விருதுகளை வழங்கியவர்கள் இன்றைக்கு அசாதாரண நிலையை உருவாக்கியிருக்கும் மூர்க்கர்கள் அன்று; எழுத்துத் துறையில் மிகவும் மூத்த, முதிர்ச்சியுள்ள எழுத்தாளர்கள். இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள். எனவே, மூத்த எழுத்தாளர்களையோ, இந்தச் சமூகத்தையோ மறுப்பதற்கு நான் தயார் இல்லை.
சாகித்ய அகாதெமி என்பது ஒரு மக்களாட்சி அமைப்பு. அதன் தலைவர், செயலாளர்கள், எழுத்தாளர்களாகிய பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மூன்று எழுத்தாளர்கள் - சிந்தனையாளர்கள் கொலை செய்யப்பட்டதை எதிர்க்கும் வண்ணமாக, அகாதெமியிலுள்ள நிதித் துறையைச் சார்ந்தவர்கள் ராஜிநாமா செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது நல்லதன்று; அரசு உள்ளே நுழைவதற்கு வாசல்களைத் திறப்பது போலாகும்; என்றாலும் தன்னிச்சையாக விருதுகளைத் திரும்பித் தந்த நாற்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளின் பேருள்ளத்தைப் பாராட்டுகிறேன்' என்று மதிநுட்பத்தோடு பதிலிறுத்திருக்கிறார்.
விருதுகளைத் திரும்பத் தருதல் சரியான அணுகுமுறையன்று என்பதற்கு வேறு சில காரணங்களும் உள. இன்றைக்குத் திரும்பத் தருகின்றவர்கள் அனைவரும் இப்போது இருக்கும் மத்திய, மாநில நிர்வாகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர்.
அக்காலத்தில் இருந்தவர்களால் வழங்கப்பட்டதை, இன்றைக்கு இருப்பவர்களிடம் திரும்பத் தருதலில் என்ன நியாயம் இருக்க முடியும்? மேலும், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்கும், உயிர்க் கொலைக்கும் காரணமானவர்கள் வருந்தி, திருந்தி, "இனி அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவோம்' எனக் கூறி, அதைச் செய்தும் விடுவார்களேயானால் திரும்பக் கொடுத்த விருதுகளைத் திரும்பக் கேட்க முடியுமா?
எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, பெற்ற விருதுகளைத் திரும்பத் தருதலைவிட, வேறு சில வீரியமிக்க அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். விடுதலைப் போராட்டக் காலத்தில் அல்லாமா இக்பால், ஆங்கில அரசை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் என்று உட்கார்ந்தார். அதைக் கேட்டு அப்பொழுது வைசிராயாக இருந்த கர்சான் அலறி விட்டார்.
ரவீந்திரநாத் தாகூரை அழைத்து, அந்த உண்ணாவிரதத்தை இக்பால் கைவிடும்படிச் செய்யுமாறு வேண்டினார். "இக்பால் உண்ணாவிரதம் இருக்கும்போது, நான் ஒரு ரொட்டித் துண்டை எடுத்து வாயில் வைக்கப் போனால்; அவர் உண்ணாவிரதம் நினைவுக்கு வந்துவிடுகிறது; அதனால், என்னால் சாப்பிட முடியவில்லை' என்றார் வைசிராய்.
இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு எழுந்திருக்கும் கலவரச் சூழ்நிலையை மனத்தில்கொண்டு, அகில உலக எழுத்தாளர்கள் அமைப்பு, (பென்-இன்டர்நேஷனல்) கனடாவில் இருக்கும் க்யூபெக் நகரில் கூடி, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கண்டித்து, ஒரு கடுமையான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை நம்முடைய மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. அதைப் பார்த்த மத்திய அரசும் நிதானத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.
விருது என்பதற்குப் "பாராட்டுதலின் அடையாளம்' என்பது மட்டும் பொருளன்று; விரயம் என்று உரு பொருளும் இருக்கிறது. விருதா என்றால், வீண் அல்லது விரயம் என்று பொருள்.
அருணகிரிநாதரும் "விருதா அலைந்து உழலும் அடியேன்' (திருப்புகழ்: 102) என்று பாடுகிறார். விருதைத் திரும்பத் தருபவர்கள் இப்படியொரு பொருள் இருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சிசிலிக் கவிஞன் பாப்லோ நெருடா தாம் பெற்ற நோபல் பரிசின் ஒரு பகுதியை "இலத்தீன் - அமெரிக்க மக்களின்' பசி - பட்டினியைப் போக்குவதற்குச் செலவழித்தார்; மறுபாதியைத் திருத்தமுறாத அரக்கானி மொழியில் (தாய்மொழி) திருத்துவதற்காகவும், அம்மொழியைப் படிக்காத மக்களைப் படிக்க வைப்பதற்காகவும் செலவிட்டார்.
இப்பொழுது விருதைத் திரும்பத் தந்திருப்பவரின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்தால், இவ்விருதுகள் அவர்களுக்குத் தகுதி அடிப்படையிலே கிடைத்திருப்பதைத் தெரிவிக்கின்றன. "வருதா விருது; வருதா விருது' என்று நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தாமாக வந்த விருதுகளை உதறுபவர்களைப் பார்த்தால் விசனப்படத்தானே வேண்டியிருக்கிறது.
"ஓராயிரம் படை வீரர்கள் திரண்டு வருவதைக் கண்டு பயப்படாத நான், ஒரு பத்திரிகையின் தலையங்கத்துக்குப் பயப்படுகின்றேன்' என்றார் மாவீரன் நெப்போலியன். 61 விருதுகளையும் திருப்பியனுப்புவதற்குச் செலவழித்த நேரத்தை, 61 பத்திரிகைகளில் இந்தப் படைப்பாளிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கலாமே!
எழுத்தாளர்களில் பிரான்சின் விக்டர் ஹியூகோ பட்ட இடிபாடுகளை வேறு யாரும் பட்டிருக்க முடியாது. ஆதிக்க வர்க்கத்தால் சிறை பிடிக்கப்பட்டார்; பின்னர், நாடு கடத்தப்பட்டார். அந்த விக்டர் ஹியூகோ சிறைக்குள்ளிருந்து சொன்னார்: "என்னைச் சிறைப் பிடித்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்னுடைய புத்தகங்கள் பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு வீட்டு அலமாரியிலும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தீப்பந்தம் தெரியுமா?' என்றார்!
எழுத்துகள் ஏவுகணைகளைக் காட்டிலும் விரைந்து பாயக் கூடியவை; சயனைடைக் காட்டிலும் வேகமாக ஊடுருவக் கூடியவை. எழுத்தாளனின் பேனாமுனை, ஆதிக்க வர்க்கத்தின் கிரீடங்களைக் கழற்றக்கூடியது; ஆட்சி பீடத்தின் செங்கோலை முறிக்கக் கூடியது.
எழுத்தாளர்களைச் சித்திரவதை செய்த ஹிட்லரின் பெயரில் நிலைத்து நிற்பது, அவர் எழுதிய "மெயின் காம்ப்' என்று எழுத்துகளின் மூலந்தான்; எனவே எழுத்தாளர்களே! அம்புகளைத் தீட்டுங்கள்; வாள்களை ஏந்துங்கள்; கவசத்தைத் திருப்பிக் கொடுக்காதீர்கள்!
கட்டுரையாளர்: பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.