நம்பிக்கையோடு காத்திருக்கும் மீனவர்கள்!

நம்பிக்கை, மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களுள் மிகவும் முக்கியமானது. காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர்,
Updated on
2 min read

நம்பிக்கை, மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களுள் மிகவும் முக்கியமானது. காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், டாக்டர் அப்துல் கலாம், ஆங் சான் சூ கி, ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரை உலகிற்கு எடுத்துக்காட்டிய ஒளிக்கீற்று.
 வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தோமென்றால் நம்பிக்கையை இழந்தவர்கள் சாம்ராஜ்யத்தையே இழந்த நிகழ்வுகளையும், நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிநடை போட்டதையும் அறிகிறோம்.
 நம்பிக்கைக்குப் பல நிலைகள். பெற்றோரின் மீது குழந்தைக்கு இருக்கும் நம்பிக்கை, மாணவனின் மீதான ஆசிரியரின் நம்பிக்கை, அதே வகையில்... அரசின் கடைக்கண் பார்வைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் மீனவர்கள்.
 மீனவர்களின் வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கமிருந்தாலும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய நியாயமான கோரிக்கைகளும் உள்ளன. சமீபத்தில் பெய்த அடைமழை காரணமாக உயிர்நீத்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் நான்கு லட்சம் அறிவித்துள்ளது அரசு. மெச்சப்பட வேண்டியதுதான்.
 இதேபோல, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டையே சுழன்றடித்த "பியான்' சூறாவளியில் எட்டு மீனவர்கள் மாயமானார்கள். இவர்களது பலகோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் ஆழ்கடலிலே மூழ்கடிக்கப்பட்டன.
 அதிவேக படகுகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் அப்போது தேடியும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இம்மீனவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
 கரையில் ஏற்படும் மழை, புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசிடம், ஆழ்கடலில் ஏற்பட்ட புயலினால் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோருவது நியாயம் தானே?
 இதைப்போன்று, ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தங்கள் விசைப்படகுகள் கடலில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும் அரசின் உதவிக்காக காத்திருக்கின்றன.
 பல லட்சங்கள் செலவு செய்து மீனவர்கள் விசைப் படகுகளைத் தயார் செய்கிறார்கள். இவர்கள் எங்கே சென்று மீன்பிடிப்பது? எந்தக் கடலில் இவர்கள் தங்கள் படகுகளை செலுத்துவார்கள்?
 இவர்கள் இந்தியப் பிரஜைகள், மீனவர்கள் என்று அடையாள அட்டையில் இருந்தாலும், நமக்குத்தான் இந்தியக் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதியில்லையே!
 தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு மாவட்டத்து மீனவர், இன்னொரு மாவட்டத்துக்குச் சென்று மீன்பிடிக்க முடியவில்லை. உதாரணமாக, குமரி மாவட்டத்திலுள்ள மேற்குக் கடற்கரையைச் சார்ந்த மீனவர், தனது படகை சென்னைக்குக் கொண்டு சென்று சுதந்திரமாக மீன்பிடிக்க முடியவில்லை.
 இவர் சென்னையில் மீன்பிடிக்க வேண்டுமென்றால், இவரது படகை சென்னையைச் சார்ந்த ஒருவரின் பெயருக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். இல்லாவிடில், அங்கே மீன்பிடிக்க முடியாது.
 அதேபோல, பருவநிலைக்கு ஏற்றவாறு இவர்கள் ஆந்திரத்திற்கோ, ஒடிஸாவிற்கோ, கொல்கத்தாவிற்கோ, புதுச்சேரிக்கோ சென்றாலும் நிலைமை அதுதான்.
 இவர்கள் விசைப் படகை இன்னொருவருடைய பெயருக்கு எழுதிக்கொடுத்தால் இவர்களது உரிமை இவர்தம் கையை விட்டு போய்விட்டது என்றுதானே அர்த்தம்? அதாவது, இது ஒருவகையான கொத்தடிமைத்தனம். இம்முறை நீடித்தால், மீனவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்படுவர். மீனவர்களின் நலன்கருதி இம்முறை ஒழிக்கப்படவேண்டும்.
 இதுமட்டுமல்ல, இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பிடித்துவரும் மீன்களுக்கு அங்குள்ளவர்கள் வைத்தது தான் விலை. மீறி எதுவும் பேசமுடியாது.
 சுழன்றடிக்கும் சூறாவளியிலும், கடுங்குளிரிலும், சுடும் வெயிலிலும், பொழியும் மழையிலும் ஆழ்கடலையே வீடாகக்கொண்டு பல நாள்கள் தங்கியிருந்து, பல்லாயிரக்கணக்கிலான அன்னியச் செலாவணியை அதிகமாக ஈட்டித் தருகிற மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, இவர்கள் அவசரத் தேவைகளுக்காக கரை ஒதுங்கவும் நிறைய கட்டுப்பாடுகள். இதனால், பல நேரங்களிலும் மீனவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகிறார்கள்.
 அடிக்கடி நடைபெறும் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் இம்மக்களின் வாழ்வுக்கு எதிராக உள்ளன. தமிழக மீனவர்கள் இந்தியாவின் எப்பகுதியிலும் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கவும், தாங்கள் பிடித்த மீன்களை விற்கவும், அவசரத் தேவைகளுக்கு பிற மாநிலத்திலுள்ள துறைமுகங்களில் கரையொதுங்கவும் உரிமை வேண்டும்.
 இவர்கள் வாழ்வு வளம்பெற, புதியதோர் தேசிய ஒருங்கிணைந்த மீன்பிடிக் கொள்கை தேவை. இதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய, தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். இது மீனவர்களின் நம்பிக்கை கலந்த கோரிக்கை.
 ஆழ்கடலில் வைத்து இறப்பது, மாயமாவது, விசைப் படகுகள் கடலில் மூழ்குவது, பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைவது போன்ற காரணங்களால் வாழ வழியில்லாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மீனவ குடும்பங்களின் துயர் துடைக்க, தமிழக முதல்வர் ஒரு சிறப்பு அரசாணை வெளியிட்டு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்க வேண்டுகிறார்கள் மீனவர்கள்.
 மத்திய அரசில் மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம், மீனவர்களுக்கான சர்வதேச அடையாள அட்டை, கடலோர நாடுகளுடன் நல்லிணக்க ஒப்பந்தம் என மீனவர்களின் வாழ்வு அரசின் மீதான நம்பிக்கையுடன் நகர்கிறது.
 
 (இன்று மீனவர் தினம்)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com