மகா மெளனம் கலைக்கப்பட வேண்டுமா?

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாதெமி வழங்குவது.
Updated on
3 min read

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாதெமி வழங்குவது. ஆனால், அது நேரடியாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதில்லை. எழுத்தாளர்கள் பங்கு பெறும் சாகித்ய அகாதெமியால் கொடுக்கப்படுகிறது.
 சாகித்ய அகாதெமி விருது என்பது விண்ணப்பம் போட்டு, புத்தகங்கள் அனுப்பிப் பெறுவதில்லை. அது சாகித்ய அகாதெமியாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதன் காரணமாக மதிப்பு பெறுகிறது.
 சில நேரங்களில் அதிகாரிகள், தகுதியற்ற பேராசிரியர்கள், சமூக பிரமுகர்கள், போலி எழுத்தாளர்கள் விருதைத் தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள் என்று குற்றம் சொல்லப்படுகிறது. அதற்குத் தமிழர்கள் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், கா. அப்பாதுரை, அண்ணாதுரை, மு. கருணாநிதி, விந்தன், சுந்தர ராமசாமி, நடுவன் சாகித்ய விருது பெறாததைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதுபோல இருபத்து நான்கு மொழி எழுத்தாளர்களிடமும் பட்டியல் இருக்கிறது.
 சாகித்ய அகாதெமி மீது எத்தனைதான் விமர்சனம் வைத்தாலும் அது அசலான எழுத்தாளர்களைப் பெரும்பாலும் அங்கீகாரம் செய்வதிலும், அவர்கள் படைப்புக்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதிலும், இந்திய நவீன இலக்கியத்தைக் கொண்டு போவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
 கவிஞர்கள், படைப்பு எழுத்தாளர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்றாலும், எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சுய சிந்தனையும், சுய மரியாதையும் கொண்டு எல்லா மக்களின் நல்வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுவே அதிகார மையத்தை எதிர்க்க வைக்கிறது. அவர்களின் தன்னல மறுப்பும், அறச் சீற்றமுமே சமூகப் பண்பாக இருந்து வருகிறது.
 கொடுங்கோல் மன்னர்கள், சர்வாதிகாரிகள் நாடுகளில் வாழ விரும்பாமல் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டவர்கள் எழுத்தாளர்களில் பலர் இருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள், மௌன விரதம் இருந்தவர்கள், தீயிட்டு எரித்துக் கொண்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று பலரும் சரித்திரத்தில் இருக்கிறார்கள்.
 அதற்கு தமிழ் இலக்கியத்தில் கவி சக்கரவர்த்தி கம்பர் ஓர் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எதிர்ப்பு இலக்கியம் பாடியவர் அவர் என்பது மட்டுமல்ல, கொடுங்கோல் மன்னன் நாட்டில் நல்ல குடிமகனாகிய தான் வாழ முடியாதென்று தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டவர். வளமான சோழ நாட்டை விட்டுப் போகும்போது அவர் சும்மா போகவில்லை. என்றும் சுதந்திரம் விரும்பிகள் சொல்லத்தக்கச் சொற்களைக் கொண்டு ஒரு கவிதைச் சொல்லி விட்டுப் போனார்.
 நேர்மையான, உண்மையான கவிஞர்களை, எழுத்தாளர்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது. எவ்வளவு பெரும் படை கொண்டு போனாலும் உயிரைப் பறித்து விடுவோம் என்று பயமுறுத்தினாலும் அவர்கள் பணிந்து போவதில்லை. அவர்கள் பலம் என்பது எண்ணிக்கை இல்லை. தான் உண்மையாக நம்பும் கருத்துகள். அவற்றைச் சொல்லும் பேச்சு, எழுதும் எழுத்து. அதற்காகத் தன் உயிர் உட்பட எல்லாவற்றையும் இழப்பதற்குச் சித்தமாக இருக்கிறார்கள்.
 அவர்கள் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு மொழியில் எழுதினாலும், ஒரு நாட்டின் கடவுச் சீட்டு வைத்துக் கொண்டு இருந்தாலும் - அவர்கள் ஒரு நாட்டிற்கு உரியவர்கள் இல்லை. பூமியின் பெரும் பரப்பு முழுவதும் அவர்களுக்கானது. உள்ளூர் மக்களின் வாழ்க்கையை எழுதி உலக இலக்கியமாக மாற்றியவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். எனவேதான் "யாதும் ஊரே' என்று சொல்லத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
 அவர்கள் எழுதுவதால் இறுமாப்புக் கொள்வது கிடையாது. தங்களை மகத்தான சாதனையாளர்களாக ஒருபொழுதும் பிரகடனப்படுத்திக் கொள்வதுமில்லை. காலம் காலமாக எல்லோரும் இன்புற்று இருக்க எளிய முறையில் அறிந்ததையும் - அறியாததையும் அறிந்து கொள்ளும் விதமாக எழுதி வருகிறவர்கள். அவர்களின் எழுத்து நாணயமே அவர்களின் ஜீவிதம்.
 எந்த ஆட்சியாக இருந்தாலும், அதில் இருக்கும் சமூக அவலங்கள், எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவது பற்றி இடித்துரைத்து எழுதக் கூடியவர்கள். சமூக விரோதிகளின் வன்முறைகளைப் பற்றி எழுதுவது போல அரசுகளின் வன்முறைகளையும் துணிந்து எழுதக் கூடியவர்கள்.
 அவர்கள் பின்பற்றும் சமயத்திற்கும், வாழும் நாட்டிற்கும் கூட சம்பந்தம் இருப்பதில்லை. அவர்கள் வாழும் நாடு ஒன்றாகவும் - அவர்கள் வேறாகவும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தால் சனாதனவாதிகளைப் பாதிப்பது போல - ஆட்சியாளர்களையும் வெறுப்படையச் செய்கிறது.
 தங்களின் அதிகாரத்தைக் கொண்டு சமயக் குரவலர்களும், சர்வாதிகாரிகளும் ஜனநாயகவாதிகளான கவிஞர்கள், எழுத்தாளர்களுக்குப் பாடம் புகட்டுவதாக எண்ணிக் கொண்டு அராஜகமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
 எனவேதான், மக்களும் அவர்களை ஆளும் ஆட்சியாளர்களும் ஒன்றில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்ட அரசாங்கத்தை சர்வாதிகாரிகள் பிடித்துக் கொண்டு சமூகங்களுக்கிடையில் மோதல்களையும், வெறுப்பையும் ஏற்படுத்தி மக்களை அமைதியற்ற - நெருக்கடியாக வாழ்க்கை வாழ வைக்கிறார்கள். அது அவர்களின் அதிகார வேட்கை; சுயநலம் சார்ந்தது.
 சரித்திரத்தில் இருந்து மனிதர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் சரித்திரம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. அதனைப் புறந்தள்ளவே ஒவ்வொரு தலைமுறையிலும் தத்துவ ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் முழுமனத்தோடு சமூக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
 போராட்டம் என்பது மனித குலத்தின் எதிர்ப்புக் குரல். உண்ணாவிரதம், தற்கொலை, தீக்குளித்தல், மெளனவிரதம், அரசு தரும் பட்டம் பதவிகளை ஏற்க மறுத்தல், பெற்ற விருதுகளைத் திருப்பித் தருதல் - என்பன எல்லாம் எதிர்ப்பு என்பதில் தான் அடங்குகின்றன. எதிர்ப்பு என்பதுதான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
 1954-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் சாகித்ய அகாதெமி நாட்டின் அரசியல், சமூக, கலாசார பிரச்னைகளில் கருத்து எதுவும் சொல்வதில்லை. அதற்கு யாரும் அந்த உரிமையை வழங்கவில்லை. தனக்கு அந்த மகத்தான பொறுப்பும், கடமையும் இருப்பதாக அது கருதி செயல்படவும் இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் பூரண சுதந்திரத்தோடு எழுதுவதைப் பாராட்டி ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
 எழுத்தாளர்கள் தங்களுக்கு உவப்பான அரசியல் கட்சிகளில் சேர்ந்து கொள்வதையோ, பேரணி நடத்துவதையோ, ஆர்ப்பாட்டம் செய்வதையோ தடுக்க முற்பட்டது இல்லை. விருது பெற, கருத்தரங்கங்களில் கலந்து கொள்ள எழுத்தாளர்களின் அரசியல் சார்பை பாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டது கிடையாது.
 சாகித்ய அகாதெமி முதல் தலைவராக பிரதமர் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அவர் கடைசி வரையில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது இல்லை. சாகித்ய அகாதெமி தலைவராகிறவர்கள், பதவி காலத்தில் விருது வாங்கிக் கொள்ளக் கூடாதென்ற மரபை ஏற்படுத்தி வைத்தார். அது தொடர்ந்து வருகிறது. இன்னொன்று அதன் மகா மெளனம்.
 பிரதமர் இந்திரா காந்தி அவசர சட்டம் போட்டார். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது. சாகித்ய அகாதெமி எதிர்த்து ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை. தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
 போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரைப் பறித்தது. குஜராத்தில் கோத்ராவில் ஓடும் ரயில் எரிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். மும்பை குண்டு வெடிப்பில் பல அப்பாவிகள் மரணமடைந்தார்கள். தங்கள் சொந்த வனங்களைக் காக்கக் கிளர்ந்தெழுந்த ஆதி பழங்குடி மக்கள் நக்ஸல்பாரிகள் என்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
 மலைப் பகுதிகளிலும் வனப் பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்த அனுப்பப்பட்ட ராணுவத்தினர் கண்ணிவெடியில் சிக்கி உயிர்நீத்தார்கள். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைப் பின் நின்று இந்தியா நடத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.
 சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்கள், மதிப்புமிக்க அதன் உறுப்பினர்கள், அறிவுஜீவிகள் சாகித்ய அகாதெமி சமூகத் தீமைகள், வாழ்வு சிதைவுகள் ஏற்படுவது பற்றி எல்லாம் பேச வேண்டும். அதன் மகா மெளனம் கலைய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. தான் பெற்ற விருதை அதன் மூஞ்சியில் வீசியடிக்கவில்லை. சாகித்ய அகாதெமி போல அவர்களும் மகா மெளனம் கொண்டிருந்தார்கள்.
 அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதனைப் பொறுக்க முடியாது. சாகித்ய அகாதெமி அதற்காகப் போராட முன்வர வேண்டும். அது தாங்கிக் கொண்டு இருக்கக் கூடாது என்று சில எழுத்தாளர்கள் கிளர்ந்து எழுந்து வந்திருக்கிறார்கள்.
 அது நல்லதுதான்.
 எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள் உயிர்போல ஏழை எளிய குடியானவர்கள் உயிரும் மேலானதுதான். அவர்கள் கடன்பட்டு, மானமிழந்து வாழ வழியில்லை என்று தற்கொலை செய்து கொண்டபோது, நெசவாளர்கள் செய்யத் தொழிலும், தின்னச் சோறும் இன்றி தெருக்களில் அலைந்தபோது, தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றவர்கள் என்று பட்டம் பெற்றபோது அவர்களுக்காக சாகித்ய அகாதெமி பெருங்குரலில் கூவ வேண்டுமென்று ஏன் ஒருவரும் கேட்கவில்லை?
 எழுத்தாளர்கள் சாதி, சமய, இன, மொழி அபிமானிகள் போல ஒருபொழுதும் பேசுவதோ, எழுதுவதோ இல்லை. அவர்கள் தன்னுயிர்போல பூமியில் வாழும் மனிதர்களையும், மற்ற ஜீவராசிகளையும் பாவிக்கிறவர்கள். அவற்றின் நல்வாழ்விற்காகவே எழுதுகிறவர்கள். அதன் பொருட்டு வரும் இடர்பாடுகளை தைரியமாக எதிர்கொள்கிறவர்கள்.
 உயிர் இழப்பது பற்றியும் கவலை கொள்ளாதவர்கள். தன் பொருட்டு கூவி கூட்டம் சேர்க்க விரும்பாதவர்கள். அதுதான் சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமாக படைப்பு எழுத்தாளர்களின் சரித்திரம். சாகித்ய அகாதெமி மகா மெளனத்தின் பொருளும் அதுதான்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com