காவலுக்கு மரியாதை

நமது நாட்டில் எல்லாமே ஆர அமரதான் நடக்கும், எல்லா நிலையிலும் பார்க்கலாம். பேசிப் பேசியே காலம் விரயமாகும், காரியம் நடக்காது. மக்களை மையப்படுத்தும் நிர்வாகம் என்ற
காவலுக்கு மரியாதை
Updated on
3 min read

நமது நாட்டில் எல்லாமே ஆர அமரதான் நடக்கும், எல்லா நிலையிலும் பார்க்கலாம். பேசிப் பேசியே காலம் விரயமாகும், காரியம் நடக்காது. மக்களை மையப்படுத்தும் நிர்வாகம் என்ற தலைப்பில் சமீபத்தில் தில்லியில் நடந்த கருத்தரங்கில் நிதியமைச்சர் எல்லா துறைகளிலும் மாற்றமும் சீர்திருத்தமும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக தொடர்புடைய காவல் போன்ற துறைகளில் உடனடி மாற்றங்களும் சீர்திருத்தமும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

எங்கு சீர்திருத்தம் உடனடி தேவை என்றால் அது காவல் துறை பொதுமக்கள் சார்ந்த நல்லிணக்கத்தில்தான் என்று சந்தேகமின்றி சொல்லிவிடலாம். இதைப்பற்றி 1902ல் அமைக்கப்பட்ட முதல் இந்திய போலீஸ் கமிஷனிலிருந்து பல கமிஷன்கள் கூறியுள்ளன. 1977-இல் தர்ம வீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய போலீஸ் கமிஷன் தனது பரிந்துரையில் காவல் துறை நேர்மையாகவும் சட்டத்திற்கு உள்பட்டும் இயங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஆணித்தரமான செயல்படுத்தக் கூடிய கூறுகளை முன் வைத்துள்ளது. ஆனால் அவை கிடப்பில் போடப்பட்டன.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் அந்த மாநில ஆளுகையின் கீழ் காவல் துறை இயங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய காவல் துறையில் ஒழுங்குமுறையும், ஒரே மாதிரியான காவல் ஆளுமையும் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் 1861}ஆம் ஆண்ஜ்டு காவல் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. மாற்றத்திற்கு ஒவ்வாத, பொதுமக்கள் நலம் கருதாத, அதிகாரத்துவம் நிறைந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு துணைபோன சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. அந்தப் பழியை காவல் துறை சுமந்து வந்தது.

தர்மவீரா காவல் சீர்திருத்த கமிஷன் அளித்த பரிந்துரைகளில் முக்கியமானது இந்திய அளவில் சமச்சீர் காவல் சட்டம். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்மட்ட பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் காவல் நிர்வாகம் செம்மையாக செயல்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரை பல மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை.

இது தவிர, காவல் துறை சுதந்திரமாக செயல்பட பல கருத்துகளை தர்ம வீரா கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த கமிஷனுக்கு செயலராக திறம்பட பல அறிவுரைகளை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் சி.வி. நரசிம்மன் ஐபிஎஸ் பணி ஓய்வு பெற்ற பிறகும் காவல் துறைச் சீர்திருத்தத்துக்குப் பாடுபட்டார்.

1996-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் காவல் துறை அதிகாரிகள் பிரகாஷ் சிங் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் காவல் துறை சீர்திருத்தத்துக்கும், தர்ம வீரா கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றவும் பொது நல வழக்குத் தொடர்ந்தனர். பத்து ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு, 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கியமான சில ஆணைகளைப் பிறப்பித்தது.

காவல் துறைத் தலைவர் நியமனம் ஒழுக்கம் மற்றும் திறமை அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட டிஜிபி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிவதற்கு வழி செய்ய வேண்டும். அதே போல், களத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் பதவியில் உள்ள அதிகாரிகள் துணைக் காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர், காவல் நிலைய அலுவலர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மாற்றம் இல்லாது பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்ற ஆறு கட்டளைகளைப் பிறப்பித்தது. இது தவிர, காவல் நிலைய அளவில் புலனாய்வுப் பிரிவு தனியாக இயங்க வேண்டும், அப்போதுதான் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற முடியும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு அதனை ஏற்று நிறைவேற்ற வேண்டும் எனவும், எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதைக் கண்காணிக்க நீதியரசர் கே.டி. தாமஸ் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோரப்ஜி, மாதிரி காவல் சட்டம் தயாரித்து அளித்ததை மாநிலங்களுக்கு அனுப்பி அதே வகையில் காவல் சட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு செப்டம்பர் 22, 2006-இல் அளிக்கப்பட்டது. அந்த நாள் காவல் துறைச் சீர்திருத்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியல் சாசனம் பொருள் 141, 142 படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டம் என்ற அடிப்படையில் நிறைவேற்றி செயல்படுத்தப்பட வேண்டும். நடைமுறைப்படுத்தலை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தாமஸ் கமிட்டி, பல மாநிலங்கள் செயல் படுத்தத் தவறிவிட்டன என்ற அறிக்கை அளித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த மனுதாரர்களும் விடவில்லை. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கை ஏற்பு மனு தாக்கல் செய்ததால், உச்ச நீதிமன்றம் பல மாநிலங்களுக்கு கண்டனமும் நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கையும் விட நேர்ந்தது.

அதன் பிறகு தான் பல மாநிலங்கள் காவல் சட்டம் நிறைவேற்றின. ஆனால், அதில் உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் முழுமையாக இடம் பெறவில்லை. மத்திய அரசும் மாதிரி காவல் சட்டத்தை இயற்றவில்லை, அதற்கான மாதிரி படிவம் சட்ட நிபுணர் சோலி சோரப்ஜியால் அளிக்கப்பட்ட நிலையிலும் நிறைவேற்றியிருந்தால் ஒரே மாதிரியாக அனைத்து மாநிலங்களிலும் சமமான காவல் சட்டம் அமலுக்கு வந்திருக்கும்.

உ.பி.யில் ஒரு நிகழ்வு. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தம்பதி காவல் நிலையம் முன் தங்கள் உடைகளை களைந்து போலீசுக்கு எதிராகப் போராட்டம் செய்தனர். காவல்துறையினர்தான் ஆடையை அவிழ்த்தனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தங்கள் பொருட்களை உயர் ஜாதியினர் களவாடினர் என்ற புகாரை போலீஸ் பதிவு செய்ய மறுத்ததால் இந்த நிலைக்கு அந்த ஏழை மக்கள் தள்ளப்பட்டனர்.

சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் கழித்தும் ஏழை மக்களுக்கு அதிகாரவர்க்கத்தின் கொடுமையிலிருந்து விடுதலை இல்லை. இம்மாதிரியான இழிவான நிலையைச் சரிசெய்ய உச்சநீதிமன்ற ஆணை தேவையில்லை. காவல் மேலிடத்தின் மெத்தனம் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் தொடரக் காரணம்.

இதுபோல, காவல் துறை சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் மக்கள் மேடைக்கு வந்து விடுகிறது. விளைவுகளை உடனுக்குடன் சமாளிக்க வேண்டிய கூருணர்வுடைய துறை சீர்திருத்தமின்றி பழிச்சொல்லுக்கு ஆளாகி எவ்வளவு காலம் தான் சிலுவையைச் சுமப்பது?

தமிழகத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நன்றாக பின்பற்றப்பட்டு அதற்குரிய காவல் சட்டமும் 2013-இல் நிறைவேற்றப்பட்டுள்ளது. திறமை அடிப்படையில் பதவிக்குரிய உயர் அதிகாரிகள் பட்டியல் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டு, தேர்வாணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை இயக்குனர் நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு பதவிக் காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர்கள் சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அவையும் காலப்போக்கில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நீரின்றி அமையாது உலகம், பாதுகாப்பின்றி வளர்ச்சி, முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியாது. காவல் பணி மிக சிரமமான பணி. அழுத்தம் நிறைந்தது. பணிச்சுமை காரணமாக உடல் ரீதியான பல நோய்கள் தாக்குகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இல்லாத காவல்துறையினர் வெகுசிலரே.

பணியில் வீர தீர செயல்களில் உயிர் துறக்கும் காவலர் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் ஆயிரம். இது ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்பை விட அதிகம். ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை காவலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. காவலரது தியாகம் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

மக்களோடு இணைந்து பணி செய்து சமுதாயத்தை வஞ்சிப்பவரை இனம் கண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சாமானியமல்ல. ஆனால், சாமானிய அணுகுமுறையோடு சாமர்த்தியமாக பணி புரிந்து சமுதாயத்தைப் பாதுகாக்கும் சமர்த்தர் நமது காவலர்.

அக்டோபர் 18 வீரப்பன் வதம் செய்யப்பட்ட தினம். அந்த கொடூரன் 124 உயிர்களைக் கொன்றான், அதில் 34 காவல் அதிகாரிகளும் அடங்குவர். காவல் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நாள் அக்டோபர் 21. அன்று தான் 1959-ஆம் ஆண்டு சீன எல்லையில் பாதுகாப்புக்காகப் பணியில் இருந்த 11 காவலர்கள் உயிரிழந்தனர். சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தற்போது தில்லி தலை நகரில் பணியில் உயிர் நீத்த காவல் துறையினருக்கு நினைவிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் எதிர்காலத்துக்காக தனது காலத்தை அர்ப்பணித்த காவலருக்கு உண்மையான அஞ்சலி முழுமையான காவல்துறை சீர்திருத்தம் மூலமாகத் தான் நிறைவேறும். தன்னலமின்றி பணி செய்யும் காவலருக்கு அதுவே மரியாதை.

ஆர். நடராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com