தேசபக்தத் துறவி!

ஹிந்து தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றவரும்,
 சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி தயானந்த சரஸ்வதி
Updated on
3 min read

ஹிந்து தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றவரும், சிறந்த ஞானியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி இன்று நம்மிடையே இல்லை.
 ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். "கடவுள் ஒருவர் அல்ல. கடவுளே எல்லாம்" என்று வலியுறுத்தியவர். வேத, தர்ம சாஸ்திரங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பலருக்கு ஆசானாக விளங்கினார்.
 இவரிடம் வேத சாஸ்திரங்களைப் பயின்ற ஆயிரக்கணக்கானோர் இன்று மரபு வழியில் வந்த ஹிந்து கலாசார, பண்பாடுகளைத் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.
 ஹிந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்த "தர்ம ஆச்சார்ய சபா' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஹிந்து மதத்தின் மாண்புகளை எடுத்துக் கூறி, அத்வைத கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தையும் முன்வைத்தார்.
 மதப் பிரசாரம் மூலம் மத மாற்றம் செய்வது எங்கள் உரிமை என்று கூறி வந்தவர்களிடம் அது தவறு என்று நிரூபித்துக் காட்டியதுடன் மத மாற்றமும் ஒருவகையில் வன்முறைதான் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டார். மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களைப் போல சிறந்த தேசபக்தராக விளங்கியவர்.
 சிறந்த கல்வித் திறன் பெற்றிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, தாம் கற்ற வேத சாஸ்திரங்களையும், ஹிந்து மதக் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மக்களுக்குப் போதிப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்.
 ஹிந்து கலாசாரப் பண்பாடுகளைக் கட்டிக்காப்பதில் அவர் பெரும்பங்காற்றியதால்தான் இந்தியா இன்றளவும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லையெனில், எப்போதோ மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் வேரூன்றி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்திருக்கும்.
 ஹிந்துக்களின் தேசிய அடையாளம் வேத சாஸ்திரங்களைக் கற்று கலாசார மரபுகளைப் பின்பற்றுவதுதான். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பார்வையில், வேதாந்தம் என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல, இந்திய வாழ்வியல் தர்மத்துடன் ஒன்றிணைந்தது.
 இசை, இலக்கியம், சிற்பம், சமூகம், குடும்பம், இந்திய வழக்கப்படி முதியோர்கள், ஆசிரியர்கள், பெண்களை மதிப்பதை உள்ளடக்கியது. இந்தியா புனிதமான நாடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 வேதாந்த தத்துவங்களைப் பரப்புவதற்காக பல்வேறு பள்ளிகளை நிறுவி செயலாற்றி வந்த சுவாமி சின்மயானந்தரின் மாணவராகச் சேர்ந்து வேத தர்ம சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து பின்னர் அவரின் சீடராகவும் இருந்தார்.
 ஹிந்து தர்மத்தின் முக்கியத்துவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சமூகப் பணியாற்றி வந்த அவர், இதற்கென ஓர் இயக்கத்தை தோற்றுவித்து வேதங்களைப் பயிற்றுவித்து ஏராளமான ஆசிரியர்களை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள் உலகெங்கும் ஹிந்து தர்மத்தைப் போதித்து, கலாசார, பண்பாடுகளைக் கட்டிக்காத்து வருகின்றனர்.
 1990-களில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு சென்னையில் தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
 இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் துறவிகள், ஆன்மிகவாதிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பேச்சு மறக்க முடியாததாக இருந்தது.
 மத மாற்றம் என்பதே வன்முறைதான் என்ற புதிய கருத்தை முன்வைத்தார். மத மாற்றம் என்பது ஆன்மிகம், மனோநிலை, கலாசாரத்தின் மீதான வன்முறையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
 காந்திய வழியைப் பின்பற்றாத மதச்சார்பின்மையினர், அதுவரை மத மாற்றம் என்பது ஒருவரின் உரிமை என்றே கூறி வந்தனர். அதாவது, ஒருவர் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அந்த மதத்துக்கு மாறுவது தவறு இல்லை என்ற எண்ணமே அதுவரை இருந்து வந்தது. மத மாற்ற விவகாரத்தில் காந்திஜி அலட்சியம் காட்டியதால் மதச்சார்பின்மையினர், மத மாற்றமும் மதச்சார்பின்மையை உள்ளடக்கியதுதான் என்று கூறி அவரிடம் ஆதரவு தேட முயன்றனர்.
 மத மாற்றம் என்பது ஒருவகையில் மத வன்முறைதான் என்று சுவாமி தயானந்த சரஸ்வதி கொடுத்த விளக்கம் புதிய சிந்தனையை ஏற்படுத்தியதுடன், மத மாற்றத்தின் உண்மையான முகத்திரையை வெட்டவெளிச்சமாக்கியது. 1999-ஆம் ஆண்டு அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி, பல்வேறு மதத் தலைவர்கள், அறிவுஜீவிகளுடன் சென்று போப்பை வரவேற்றார்.
 அவரிடம், "அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன், நம்பிக்கை வைத்திருக்கிறேன், அனைத்து மதத்தினரையும் மதிக்கும் இந்தியாவுக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்' என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், போப் அதற்கு உடன்படவில்லை. ஆனால், தைரியமும் திறமையும் ஒருங்கே கொண்டிருந்த தயானந்த சரஸ்வதி, மத மாற்றத்துக்கு எதிரான தனது போராட்டத்தை உலக அரங்குக்கு கொண்டு சென்றார்.
 ஐக்கிய நாடுகள் சபையில் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் பேசிய தயானந்த சரஸ்வதி மத நம்பிக்கைகளில் சுயக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும் என்றும், ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை தூஷிக்கக் கூடாது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்கள் மதத்தில் சேருமாறு யாரையும் தூண்டக் கூடாது என்றும், தங்களது மத நம்பிக்கையை வலுக்கட்டாயமாக மற்றொரு மதத்தினரிடம் திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மாநாட்டில் அவரது கருத்தை பலரும் வரவேற்றபோதிலும், அவரது மத நல்லிணக்கத் தீர்மானம் நிறைவேறவில்லை.
 ஆனால், தமது கோரிக்கையின் அவசியத்தை உலக மதத் தலைவர்களிடம் எடுத்துரைத்து இணங்கவைக்க அவருக்கு மேலும் எட்டு வருடங்கள் ஆனது.
 2008 டிசம்பர் 10-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 60-ஆவது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட உலக அளவிலான மதத் தலைவர்கள், சுவாமி தயானந்த சரஸ்வதியின் புதிய அணுகுமுறையை ஏற்க முன்
 வந்தனர்.
 அதாவது, ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரை மதிக்க வேண்டும்; ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை அவதூறாகவோ அல்லது தூஷிக்கும் வகையிலோ பேசக் கூடாது; அவர்களின் மத நம்பிக்கையையும், மதச் சின்னங்களையும் இழிவுபடுத்தக் கூடாது; வேறு மதத்தினரை தங்கள் மதத்துக்கு இழுக்கத் தூண்டும் வகையிலோ அல்லது கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரகடனமாக வெளியிடப்பட்டது.
 ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே பிரதமர் நரேந்திர மோடி தமது அணுகுமுறையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இதே கருத்தையே புனிதர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை சுவாமி தயானந்த சரஸ்வதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது ஹிந்து தர்ம ஆச்சார்ய சபையை அவர் நிறுவியது. இது இந்திய கலாசாரத்துக்கு அவர் ஆற்றிய சாதனையாகும்.
 ஹிந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினர் ஒன்றுபடாமல் இருந்தநிலையில், மத மாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சுவாமி தயானந்த சரஸ்வதி தனது பெரு முயற்சி மூலம் ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தினார்.
 அவரது மற்றொரு முயற்சி அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றுபடுத்துவது. இதிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. அனைத்து மதமும் புனிதமானது. அனைத்து மதமும் மதிக்கப்பட வேண்டியது. எந்த ஒரு மதமும் மற்றொன்றைவிட உயர்ந்தது என்று யாரும் பேச அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
 ஒரு சில மதங்கள்தான் உண்மையானவை, மற்றவை போலியானவை என்ற எண்ணம் கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். மத துவேஷமும், மோதல்களும் ஏற்படுவதற்கு அதுதான் முக்கியக் காரணம் என்றார்.
 சுவாமி தயானந்த சரஸ்வதியை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்திய கலாசார, பண்பாடுகளை கட்டிக்காக்கவும், வேத தர்ம சாஸ்திரங்கள் தழைத்தோங்கவும் அரும்பணியாற்றி அதில் அவர் வெற்றி கண்டது ஒரு சிலருக்குத்தான் தெரியும்.
 மகரிஷி அரவிந்தர் ஒரு முறை, "பெரிய மனிதர்களின் அரிய சாதனைகள் சில சமயங்களில் பேசப்படாமல் இருக்கும்" என்று சொன்னார். இது சுவாமி தயானந்த சரஸ்வதிக்கும் பொருந்தும்.
 சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவின் மூலம் ஹிந்து மதம் ஒரு தலை சிறந்த துறவியை, மதக் காவலரை இழந்துவிட்டது. நாடு ஒரு சிறந்த தேசபக்தி மிக்க துறவியை இழந்துவிட்டது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com