அதிசய மனிதர் அம்பேத்கர்

அம்பேத்கரின் வளர்ச்சியும், வாழ்வும் மகத்தானது. இந்திய தேச வரலாற்றில் அவரது பணியும், பங்களிப்பும் வியக்கத்தக்கது.

அம்பேத்கரின் வளர்ச்சியும், வாழ்வும் மகத்தானது. இந்திய தேச வரலாற்றில் அவரது பணியும், பங்களிப்பும் வியக்கத்தக்கது.
 ஒடுக்கப்பட்ட (தலித்) சமுதாயத்தின் ஏழைப் பெற்றோருக்கு 14-ஆவது மகனாகப் பிறந்த குழந்தை, படிப்பு வாசனையே நுகராத சமூகத்தைச் சேர்ந்த குழந்தை, ஏழ்மை, தீண்டாமை, புறக்கணிப்பு ஆகிய கொடுமைகளுக்கு உள்ளான ஓர் இளம் ஜீவன், அனைத்து வசதிகளும் பெற்ற உயர்ஜாதி மாணவர்களைவிட, பள்ளியிலும் கல்லூரியிலும் முன் நிற்க முடிந்ததே எப்படி?
 மும்பை எல்பின்ஸ்ட்ன் கல்லூரியில் பட்டப் படிப்பு, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேல்பட்டப் படிப்பு, லண்டன் கிரேஸ்-இன் சட்டக் கல்லூரியில் பார்-அட்-லா படிப்பு, கொலம்பியா பல்கலைக்கழகமும், லண்டன் பல்கலைக் கழகமும் பாராட்டுரைகளுடன் வழங்கிய டாக்டர் பட்டங்கள், அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகிய மூன்று துறைகளிலும் தான் பெற்ற கல்வியால் கிடைத்த மேதைத் தன்மை - இத்தகைய ஒட்டு மொத்த உயர்வை, கல்வியில் இவரைத் தவிர எவரும் பெற்றதாகத் தெரியவில்லையே எப்படி?
 புகழ்பெற்ற சைடன்ஹாம் கல்லூரியில் பேராசிரியர், மும்பை அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர், லண்டன் மாநகர நீதிமன்றத்தில் வழக்கறிஞர். இப்படி அவர் தொட்ட பணி எல்லாம் பட்டாகப் பிரகாசித்ததே எப்படி முடிந்தது? அவர் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் இயற்கையாகவே அமைந்த கூர்மையான அறிவும், சுயமரியாதைச் சிந்தனையும், உலகளாவிய பார்வையும் அவரது பேச்சிலும் எழுத்திலும் பிரதிபலித்தன. அவை மாற்றுக் கருத்துடையோரின் மனங்களைக்கூட மயங்க வைத்தனவே!
 எழுத்தாற்றல் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. இந்தியாவில் ஜாதிகள், பண்டைக்கால இந்திய வணிகம், ரூபாயின் பிரச்னை, பொறுப்பான அரசின் கடமைகள் - என்று பல தலைப்புகளில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும், அறிஞர்கள் மற்றும் அரசியல் மேதைகளால் பெரிதும் பாராட்டப்பட்டனவே!
 சாதாரண மனிதனால் இது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவராக அண்ணல் காந்தியின் பரிந்துரையின்படி, பிரதமர் நேருஜியால் நியமிக்கப்பட்டு, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக அமைப்புக்கும் அடித்தளம் அமைத்துத் தந்தார். ஒடுக்கப்பட்ட இன மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த அவர், இந்தியாவின் அனைத்து இன மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு தேசியக் கட்டுமானத்தை உருவாக்கும் தலைவராக உயர்ந்தாரே! அம்பேத்கரைத் தவிர வேறு எவரால் முடிந்தது?
 பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து, அடிமையாக வாழ்ந்த ஓர் இனத்தின் பிரதிநிதி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அமரும் தகுதியும், திறமையும், வாய்ப்பும் பெற்றாரே எப்படி நிகழ்ந்தது இது? 1891-ஆம் ஆண்டில் பிறந்த அவர், 1956-இல் மறைந்தார். அவர் வாழ்ந்தது 65 ஆண்டுகளே. அதற்குள் அவர் ஏற்றுக்கொண்டிருந்த லட்சியத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பது உண்மையே. ÷ஆனால், அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும், பெருமையும், சிறப்பும் தானாகவே வந்தடைந்தன, வாழும் காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய பாரத ரத்னா விருது மட்டும் அவர் மறைவுக்குப்பின் 1990-இல் தான் வழங்கபட்டது.
 அம்பேத்கர் மீது மூன்று குறைகள் அல்லது குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்துவது உண்டு. இந்தியர்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன், பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயச் சூழலில் இந்தியர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறாரே என்பது முதல் குற்றச் சாட்டு.
 அதற்கு அம்பேத்கரே சொன்ன பதில்: இந்திய விடுதலையா? என் பட்டியல் இன மக்களின் விடுதலையா? என என்னிடம் கேட்டால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தான் எனக்கு முதன்மையானது என்பேன். உங்கள் சகோதரனுக்கு முதலில் உரிமையும், சுதந்திரமும் கொடுங்கள், அதன் பின்பல்லவா நீங்கள் அன்னியனிடமிருந்து, ஆங்கிலேயரிடமிருந்து உரிமையும், சுதந்திரமும் கேட்க வேண்டும்? என்ற கேள்வியின் மூலம் அதற்கும் பதில் தந்தார்.
 ஆங்கிலேய அரசு அங்கீகாரமும், பதவியும் அளித்த போது அம்பேத்தகர் அவற்றை ஏற்றுக் கொண்டார். அதேபோல், சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அரசு அங்கீகாரமும், பதவியும் அளித்த போதும் அதனையும் ஏற்றுக் கொண்டார் அம்பேத்கர். ஆகவே, அம்பேத்கர் பதவி தருபவர் பக்கமே இருந்தார் -என்பது இரண்டாவது குற்றச்சாட்டு.
 எந்தப் பதவியையும் பதவி சுகத்திற்காக அவர் ஏற்கவில்லை. அப்பதவிகளால் பாவப்பட்ட ஜென்மங்களான தன் மக்களுக்கு, தன் காலத்தில் ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அப்பதவிகளை ஏற்றார். இந்து சமயச் சட்டத்தை நேருஜி தலைமையிலான இந்திய அரசால் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்தவுடன், இந்து மதத்தின் ஜாதிப் பாகுபாடுகளை ஒழிக்க முடியாது எனத் தெரிந்தவுடன், நொடி நேரம் கூடத் தாமதிக்காமல் அமைச்சர் பதவியைத் துறந்தவர் அல்லவா அம்பேத்கர்? இந்த ஆதாரம் ஒன்று போதாதா, அம்பேத்கர் என்றும் பதவியை மதிக்கவில்லை, மாறாக தன் மக்களுக்கு வாழ்வளிப்பதற்கு, அப்பதவிகளை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தப் பார்த்தார் என்பதற்கு.
 மேல் நாட்டுக் கல்விகற்று, மேல் நாட்டு உடை அணிந்து வந்த அண்ணல் காந்தி, தாயகம் திரும்பிய பின்பு ஏழை விவசாயியைப் போல் எளிமையான உடை அணிந்து, தன்னை உண்மையான இந்தியர்களில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அம்பேத்கரோ தன் அரிஜன சகோதரர்களைப் போல் அரைகுறை ஆடை அணியாமல், மேல்நாட்டு உடை அணிந்து தன்னை ஏன், தலித் மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொண்டார் என்பது அம்பேத்கர் மீது விமர்சனம் செய்பவர்கள் எழுப்பும் மூன்றாவது குற்றச்சாட்டு.
 "என் மக்கள் தோளில் துண்டு போடக் கூடாது. எங்கள் மகளிர் மானம் காக்கும் வகையில் மேலாடை அணியக் கூடாது' எனத் தடுத்தீர்களே.. இதோ பாருங்கள். நான் மேல் நாட்டு உடை அணிகிறேன், மிடுக்காக நடக்கிறேன். என்னை நீங்கள் என்ன செய்து விட முடியும்?' என்று உயர்ஜாதி இந்துக்களுக்குச் சவால் விடுத்தார். அதனை அவர் சொல்லாமல் சொன்னார்; செய்து காட்டினார் என்பது தான் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு ஆய்வாளர்கள் தரும் பதிலாக அமையும்.
 குறைகளை ஊதிப் பெரிதாக்கும் அம்பேத்கர் எதிர்ப்பாளர்கள், அம்பேத்கரின் நிறைகளை, அவரால் இந்திய தேசத்திற்குக் கிடைத்த இரண்டு அரிய பங்களிப்பை, வரப்பிரசாதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். ஒன்று அவர் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டம்.
 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆங்கிலேயே அரசும் அதனை ஏற்றது. ஆனால், காந்திஜி, "என் மக்களை ஜாதி அடிப்படையில் இரு பிரிவாக்கும் சதியை நான் ஏற்க மாட்டேன். ஆங்கிலேய அரசின் அந்தத் தீர்ப்பை எதிர்ப்பேன். அதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன்' என்று உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
 அண்ணலின் உடல்நிலை தளர்ந்தது. தேசமே அதிர்ச்சியில் ஆழ்ந்து தவித்தது. அதுசமயம், மரணத்தின் மடியிலிருந்து மகாத்மாவைக் காப்பதா அல்லது தலித் மக்களின் உரிமைக்காக, தன் உயரிய இலட்சியத்தின் (இரட்டை வாக்குரிமை) பக்கம் நிற்பதா? என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார் அம்பேத்கர்.
 அப்பொழுது, காந்திஜி அம்பேத்கரிடம் "நீங்களோ பிறப்பால் தீண்டப்படாதவர். நானோ விரும்பி ஏற்றுக் கொண்ட கொள்கையால் தீண்டப்படாதவன். நாம் இருவரும் இணைய வேண்டும். இந்து சமூகத்தில் நிலவும் பிரிவினையை அகற்ற வேண்டும்' என்று உருக்கமாகக் சொன்னார்.
 கொள்கைப் பிடிப்புக்கும், பிடிவாதத்திற்கும் பெயர் போன அம்பேத்கர் தன் லட்சியத்தைச் சிறிது தள்ளிவைத்தார். காந்திஜியின் உயிரைக் காப்பதே தன் முதல் கடமை என உணர்ந்தார். பூனா ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தந்தார்.
 அம்பேத்கரின் இந்தப் பெருந்தன்மைக்கும், பேராண்மைமிக்க முடிவுக்கும் இந்திய மக்கள் என்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவர்கள் ஆவர். தேசத் தலைவர்களின் கணிப்பில் அம்பேத்கர் எவ்வளவு உயர்ந்து சிறந்து நிற்கிறார் என்பதை நாம் காண வேண்டும்.
 "என் அமைச்சரவையில் ஒளிவீசும் மாணிக்கம் இவர்' என்று அம்பேத்கரை அறிமுகம் செய்தார் ஜவாஹர்லால். "அரசியல் சட்டத்தின் சிற்பி: அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக தீண்டப்படாதோருக்கு அவர் ஆற்றிய திருத்தொண்டு ஈடு இணையற்றது என்றார் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்.
 "அம்பேத்கர் வாய்மை பிறழாதவர்: எதற்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம் கொண்டவர்; கல்வியில் கடல் போன்றவர், நல்லெண்ணத்தோடு பழகும்போது நட்பு பாராட்டுபவர்,' எனப் பாராட்டுகிறார் ராஜாஜி.
 "அம்பேத்கர் அறிவார்ந்த, நேர்மையான, ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மக்கள் தலைவர். அவர் மிக முக்கியமான அரசியல் சமூகச் சிந்தனையாளர். அவர் சில நேரங்களில் கடுமையான வாசகங்களால், பிறரைத் தாக்கும் நேரங்களில், உயர் ஜாதியினர் அவர் ஜாதி மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, அப்படித் தாக்குவதற்கான தார்மீக அருகதை அவருக்கு உண்டு என்று நான் கருதுகிறேன்' என்றார் காந்தி அடிகள்.
 காந்திஜியும், அம்பேத்கரும் லட்சியவாதிகள், தேசபக்தர்கள். இருவரும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடியவர்கள்; வேண்டுமானால் அவர்களது அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கலாம். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒப்புமையையும், உறவையும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
 காந்திஜி அம்பேத்கரை ஒரு போதும் நிராகரிக்கவில்லை. அவரை முழுமையாக அங்கீகரித்தார். காந்திஜியின் இதயத்தில் அம்பேத்கருக்கு ஒரு தனி இடம் இருந்தது. தலித் சுதந்திரப் போராட்டம் என்பது நீண்டது, நெடியது, இன்னும் தொடர்வது. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்களுக்கு இடம் உண்டு. காந்தியும், அம்பேத்கரும் அதில் தொடக்க காலக் கதாநாயகர்கள் என்கிறார் அரசியல், சமூக, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.
 அதிசய மனிதர் அம்பேத்கரை முழுமையாகக் கணிக்க வேண்டிய கடமை இன்றைய வருங்கால சந்ததியினருக்கு உண்டு.
 
 இன்று அம்பேத்கரின்
 125-ஆம் ஆண்டு பிறந்தநாள்.
 
 கட்டுரையாளர்:
 முனைவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com