நாட்டு நலன் காக்கப்பட வேண்டிய காலம்

எரிபொருள் இல்லாமலேயே தேர்தல் களம் பற்றி எரிகிறது. வானம் மேலே இருந்து சுட்டெரிக்கின்றது.
Updated on
3 min read

எரிபொருள் இல்லாமலேயே தேர்தல் களம் பற்றி எரிகிறது. வானம் மேலே இருந்து சுட்டெரிக்கின்றது. பதவி மோகம் மண்ணிலிருந்தே வேக வைக்கின்றது. ஏலக்கடைக்காரர்கள் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று சொல்லி, வந்த விலைக்கு விற்பதுபோல் இங்குத் தொகுதிகள் தூக்கி எறியப்படுகின்றன.
 சம்பாதித்ததைச் செலவு செய்தே ஆக வேண்டும் எனத் துடிக்கின்றவர்களும், செலவழித்ததைச் சம்பாதித்தே தீர வேண்டும் என வெகுண்டு நிற்கின்றவர்களும் சேர்ந்து ஆடுகின்ற களம், தேர்தல்களம். காலம் : தேர்தல் காலம்.
 மனித உடலிலே தலை சரியாக அமையாவிட்டால், உடம்பிலுள்ள மற்ற பாகங்கள் சரியாக அமையாதன போல, ஆட்சிக்கலை மாட்சிமை பெற்றிருக்காவிட்டால், நாட்டிலுள்ள மற்ற மற்ற துறைகள் சரியாகச் செயல்படா. அதனால், நம் மண்ணின் மைந்தர்கள் காலங்கள் தோறும் ஆட்சிக் கலையின் கரைகளைச் செம்மைப்படுத்தி வந்திருக்கின்றனர்.
 கர்மவீரர் காமராசர் சோவியத் நாட்டிற்குச் சென்று திரும்பி வரும்போது, அவரைச் சந்தித்த பத்திரிகை நிருபர்கள் சோவியத் நாட்டின் வெகுவான முன்னேற்றத்திற்கு என்ன காரணம் எனக் கேட்டனர். அதற்கு அவர், அந்த நாட்டிலே தகுதியான இடங்களில் தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பதில், நம்முடைய தேக்க நிலைமைக்குரிய காரணமாகவும் அமைந்தது.
 ஒரு கற்பனைச் செய்தியைச் சொன்னால் இங்குப் பொருத்தமாக இருக்கும். டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை. அன்றைக்குப் பலரும் கர்த்தரை வேண்டுவார்கள்.
 ஒரு மோடி மஸ்தானிடம் ஒரு பாம்பும், ஒரு கீரிப்பிள்ளையும் தொழிலுக்காக இருந்தன. மோடி மஸ்தான் பாம்பைப் பார்த்து, நீ ஆண்டவரிடம் என்ன வேண்டப் போகிறாய் எனக் கேட்டார். பாம்பு, நான் இந்த நாட்டின் முதல்வராக வேண்டும் என வேண்டப் போவதாகக் கூறியது. அடுத்து, கீரிப்பிள்ளையைப் பார்த்து, நீ என்ன வேண்டப் போகிறாய் எனக் கேட்டார். அதற்குக் கீரி, நான் இந்த நாட்டின் ஆளுநராக ஆக வேண்டும் என வேண்டப் போவதாகக் கூறியது.
 உடன் பாம்பும், கீரியும் சேர்ந்து மஸ்தானிடம், நீ என்ன வேண்டப் போகிறாய் எனக் கேட்டன. அதற்கு மஸ்தான், ஆண்டவரே என்னை இரண்டு கண்களும் பார்வையற்றவனாகப் படைத்துவிடு என வேண்டப் போவதாகக் கூறினார்.
 அதற்கு இரண்டும் ஏன் அப்படி வேண்டப் போகிறாய் எனக் காரணம் கேட்டன. அதற்கு மஸ்தான், பாம்பாகிய நீ முதல்வராக, கீரியாகிய நீ ஆளுநராகி நடத்துகின்ற அலங்கோல ஆட்சியைப் பார்க்க வேண்டாம் என்று தான் அப்படி வேண்டப் போவதாகக் கூறினார்.
 யதார்த்த நிலையை யோசித்துப் பார்த்தால், இந்தக் கற்பனையில் கொஞ்சம் சாராம்சம் இருப்பது தெரியவரும்.
 மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் காவலனாக இருந்ததோடு பாவலனாகவும் இருந்திருக்கிறார். தகுதியான இடத்திற்குத் தகுதியானவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதை, ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோனாறே அரசும் செல்லும் (புறநானூறு 183-வது பாடல்) என்று அன்றைக்கே பாடியிருக்கிறார்.
 இதே கருத்தை ஜுலியஸ் சீசர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர், நீதிதேவதையே உன்னுடைய ஆட்சிக்கலை இப்பொழுது மனிதர்கள் வாழும் நாட்டிலே இல்லை. கொடிய விலங்குகள் வாழும் காட்டிற்கு ஓடிவிட்டது. ஏன் தெரியுமா?
 ரோம் நாட்டில் மக்கள் பகுத்தறிவை இழந்துவிட்டார்கள். நியாயத்தலங்களில் அடிமைகளும் கொத்தடிமைகளுமே நியாயவான்களாக அமர்ந்திருக்கிறார்கள் என மார்க் ஆண்டனி எனும் பாத்திரத்தின் மூலம் பேச வைப்பார்.
 சிலப்பதிகார காலத்தில் மதுரையிலே நல்லாட்சி நடந்ததைக் கவுந்தியடிகள், கொல்லுதலில் வல்ல கரடிகள் கூடக் கரையான்கள் வாழும் புற்றைத் தோண்டுவதில்லை, வேங்கைகள் மான்கள் கூட்டத்தோடு பகைத்துக் கொள்வதில்லை. பாம்பும், முதலையும், சிறு தெய்வங்களும், இடியும் தம்மைச் சேர்ந்தவர்களுக்குத் துன்பங்களை விளைவிப்பதில்லை.
 ஏனென்றால், இது செங்கோல் வழுவாது தென்னவன் காக்கும் நாடு எனக் கோவலன் - கண்ணகியரை ஆற்றுப்படுத்துவார். மதுரையில் வேதங்களின் ஒலி முழக்கம் கேட்குமே தவிர, ஆராய்ச்சி மணி ஒலித்ததே இல்லை என்பார் இளங்கோவடிகள்.
 ஆட்சிக்கலையின் மாட்சியினைக் கம்பரைப் போல் எடுத்துச் சொன்னவர் இல்லை எனலாம். தசரதன் அயோத்தி மக்களுக்கு நல்லதொரு ஆட்சியாளராகத் திகழ்ந்ததை, "எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவதில் தாயைப் போலிருந்தான், நல்லனவற்றைச் செய்து தருவதில் தவத்தைப் போலிருந்தான், மக்கள் பேறு இல்லாதவர்களுக்கு ஒரு புதல்வன் போலிருந்து கடமையாற்றினான், தீய வழியில் செல்பவர்கள் நோய் போலிருந்தால், அவர்களைக் கருணையால் குணப்படுத்தும் மருந்து போலிருந்தான், நுணுக்கமான கேள்வியாளர்களுக்கு அவன் ஓர் அறிவுஜீவியாக இருந்தான்' என்பார் கம்பர்.
 மேலும், நடுநிலைமையோடும் மனத்திடத்தோடும் அரசாள்வது என்பது, கூரிய வாளின்மேல் நின்று இயற்றுகின்ற தவத்தைப் போன்றது என வசிட்டன் பாத்திரத்தின் மூலம் விளக்குவார். அதிகாரம் என்பது, இரண்டு பக்கமும் கூர்மையுள்ள ஒரு கத்தி என்றொரு பொன்மொழியும் ஆங்கிலத்தில் உண்டு.
 இதை மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும், ஆட்சிப்பீடம் என்பது நெருப்பாற்றில் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மயிர்ப்பாலத்தின்மீது நடப்பது போன்றது என எச்சரிப்பார். கரணம் தவறினால் மரணம் என்பது சர்க்கசுக்கு மட்டுமன்று சர்க்காருக்கும் பொருந்தும்.
 யுலிசீயஸ் என்ற மன்னன் அந்நாட்டு மக்களுக்கு அரும்பெரும் சட்டங்களை எல்லாம் எழுதிக்கொடுத்தான். தன்னுடைய தீவை ஓர் இலட்சியத் தீவாக ஆக்க வேண்டும் என்பது அவனது திட்டம். ஆனால், அவனுடைய நாட்டு மக்கள் தற்குறி மக்கள் - அறியாமை நிரம்பிய அப்பாவி மக்கள்.
 எனவே, இப்படிப்பட்ட மக்களுக்கு மன்னனாக இருப்பதைக் காட்டிலும், திரும்பியே வருவதில்லை என்ற திட்டத்தோடு ஒரு கடற்பயணத்தை மேற்கொள்கிறான். இதனால், ஒரு நல்லாட்சி அமைவதற்கு அடிப்படை, அந்நாட்டு மக்கள் விழிப்புணர்வோடு திகழ்வதே!
 மக்களாட்சியில் அமைச்சர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை ஓர் ஆட்சிக்கலை வல்லுநரைப் போல எடுத்தியம்புகிறார் கம்பர். தசரதனுக்கு வாய்த்த அமைச்சர்கள், அரிமா நோக்குடையவர்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது? நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது? என்பதை வைத்து எதிர்காலத்தைக் கணக்கிடக்கூடியவர்கள்.
 விதி வசத்தால் எது நேரயிருந்தாலும், அதனை மாற்றிக் காட்டக்கூடிய பெற்றியர். வினை செய்வதற்குரிய காலத்தையும், இடத்தையும், அதற்கான துணைக் கருவிகளையும் தேர்ந்தெடுக்கும் மதிநுட்பம் வாய்ந்தவர்கள்.
 தம்முயிர்க்கு இறுதி நேரினும், அரசர்க்கரசன் வெகுண்ட போதும் துணிச்சலோடு எடுத்துக்கூறும் வீராதிவீரர்கள் ஒருமித்த கருத்துடையோர். நோயாளி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உள்ளதை உள்ளவாறே எடுத்துச் சொல்லும் மருத்துவர்களைப் போன்றவர்கள் என ஆஸ்டின், லைக்கர்சைப் போன்ற அரசமைப்பு நிபுணர்கள், சென்ற நூற்றாண்டில் சொன்னவற்றை எல்லாம் கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே சிந்தித்திருப்பது வியப்புக்குரியது அல்லவா?
 வாக்காளர்கள் அறியா சனங்களாக இருந்தால், அரியாசனத்துக்கு வருகின்றவர்களும் அறியா சனங்களாகத்தான் இருப்பார்கள். வாக்காளர்கள் ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறை வருவதை இழப்பானேன் என்றிருந்தால், வேட்பாளர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதானே இழக்கப்போகிறோம் என்று நினைப்பதைத் தவிர்க்க முடியாது.
 மக்களாட்சியில் தலைகளின் எண்ணிக்கைதான் கருத்தே தவிர, தலைகளுக்கு உள்ளிருப்பது கருத்தாக இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஈ.வெ. ராமசாமியார் கூறியிருப்பதை இப்பொழுது வாக்காளப் பெருமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 ஞானபீட விருது பெற்ற நாவலாசிரியர் அகிலன், இந்தச் சமூகத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவை எதிர்த்து, ஒரு வசீகர நடிகை தேர்தலில் போட்டியிட்டால் நேரு பெருமான் தோற்றுப் போய்விடுவார் என்று கூறியிருப்பதையும் வாக்காளப் பெருமக்கள் மனம்கொள்ள வேண்டும்.
 சென்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தந்த தேர்தல் அறிக்கைகளில் எதை எதைச் செய்திருக்கிறார்கள், எதை எதைத் தவற விட்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி, கேள்வி கேட்பவர்களாக வாக்காளப் பெருமக்கள் திகழ வேண்டும்.
 இயற்கையில் நேரும் பேரிடர்களை மூன்று மாதங்களில் சரி செய்து விடலாம். தேர்விலே ஒரு மாணவனுக்கு ஏற்படும் தோல்வியை, அடுத்த ஆறு மாதங்களில் நிவர்த்தி செய்து விடலாம். ஆனால், தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் எடுக்கும் தவறான முடிவால், ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, ஒரு தலைமுறையே பாதிக்கப்படும்.
 நிகழ்காலச் சூழலை நினைத்தால், கவியரசர் கண்ணதாசன் பாடிய பாடல்தான் நினைவிற்கு வருகிறது. அறிவுடைய மனிதர்களும், அகந்தையெனும் தேரேறி, ஆதிக்கம் செய்யும் நேரம், ... தருமநெறி பொய்த்ததெனத் தாயார்குலம் வாடுவது, தாளாது பொங்கும் நேரம், தடியுடைய முரடர்களும் படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம், கருமவினை பொய்யாகிக் காலநெறி தவறாகிக் கருணை பறி போகும் நேரம், கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும், கலியுகம் முடியும் நேரம் எனும் பாடலைக் கற்பனையாகவே போகச் செய்வது வாக்காளர்களின் கையிலிருக்கும் துருப்புச்சீட்டினாலே ஆகும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com