

மத்திய பா.ஜ.க. அரசால் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட அமைக்கப்பட்டுள்ள குழு ஒருவருட கால அவகாசத்தில் மொத்தம் 72,000 பேரிடம் ஆலோசனை பெற்று புதிய கல்விக் கொள்கைகளுக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் ஆலோசனைகளை மத்திய அரசு அப்படியே நடைமுறை படுத்தப் போவது கிடையாது. ஏற்கெனவே பல தரப்பினரிடமும் கருத்துக் கேட்ட பிறகு கால அவகாசம் போதவில்லை என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது. அதனை ஏற்று உடனடியாக மேலும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகளும், ஆலோசனைகளும் தெரிவிப்பவர்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் மூலம் இப்போதும் பதிவு செய்யமுடியும். தயாரிக்கப்பட்டு இருப்பது தேசிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கைதான். இது மாறுதலுக்குட்பட்டடது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்த பின்பும் இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டங்களும் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் தொடர்கின்றன.
புதிய கல்விக் கொள்கை குறித்து கம்யூனிச, திராவிட இயக்க சிந்தனையாளர்கள் பல்வேறு ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இது கல்வியை காவியமயமாக்கும் செயல் என்றும் சமஸ்கிருத திணிப்பு, இந்து சமய திணிப்பு, இந்தி திணிப்பு ஆகியவை புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ளன என்றும், கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்றும், தொழிற்கல்வி பரிந்துரைகளை குலக்கல்வி திட்டம் என்றும் சாதிய வர்ணாசிரம பார்ப்பணிய திணிப்பு என்றும் வாய்க்கு வந்தபடி பேசுவதோடு போராட்டங்களையும் நடத்தத் துவங்கியுள்ளனர்.
1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து புதிய தேசிய கல்விக் கொள்கைத்திட்டத்தை உருவாக்கியது. அதேபோல தற்போது மத்திய அரசு காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கைத் திட்ட பரிந்துரைகளில் அப்படி என்ன சொல்லி இருக்கிறார்கள்? பிராந்திய மொழிகள் அதாவது உள்ளூர் மொழி, குறிப்பாக அவரவர் தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கல்வியில் தாய் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும்.
தற்போது தமிழகத்தில் உள்ள முறையில் மழலையர் கல்வியிலேயே தாய் மொழி அழிக்கப்படுகிறது. அம்மா, அப்பா என்பது மம்மி, டாடி என மாற்றப்படுகிறது. எனவே தாய்மொழிக்கல்வி தமிழகத்திற்கு மிகவும் தேவை. குறிப்பாக, மழலையர் கல்வி, ஆரம்பக்கல்வி ஆகியவற்றில் தமிழ் மொழி மட்டுமே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும். ஆங்கிலத் திணிப்பு தடை செய்யப்படவேண்டும். தற்போது ஆங்கில வழிக்கல்வி என்பது தமிழகத்தில் முழுமையாக வணிகமயமாகிவிட்டது.
மேலும், புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளில் கட்டாயக் கல்வியை அமல் படுத்தி அனைவருக்கும் கல்வி எனும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றிட பரிந்துரை செய்யபட்டு உள்ளது. பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க கடைப்பிடிக்கப்படும் மும்மொழிக் கல்விக் கொள்கை வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் காரணமாக இருமொழிக்கல்விக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
கேரளத்தில் இந்தி படித்ததால் மலையாள மொழி அழிந்துவிடவில்லை. கர்நாடகத்தில் இந்தி படிப்பதால் கன்னட மொழி அழிந்துவிடவில்லை. ஆந்திரத்தில் இந்திபடிப்பதால் தெலுங்கு மொழி அழியவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும் என்று கூறி, இரு மொழி கல்விக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், அதே நேரத்தில் உருது, அரபு, ஆங்கில மொழிகளைப் படிக்க உரிய ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து தருகிறது.
விரும்புகிறவர் இந்தி மற்றும் சமஸ்கிருதம் படிக்க தமிழக அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய பாடத்திட்டத்தின்படி இயங்கும் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் ஆகியவற்றின் பயன்களை இருமொழிக்கல்விக் கொள்கை காரணமாக தமிழகம் இதுவரை அனுபவிக்க முடியவில்லை.
மேலும், புதிய கல்விக்கொள்கை சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்று சிலர் கற்பனை செய்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜெர்மன் மொழிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இவர்கள் ஏன் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறார்கள் என்பது புரியவில்லை.
சம்ஸ்கிருதம் என்பது நமது பாரத நாட்டை இனைத்து வைத்துள்ள அற்புதமான மொழி. தமிழும் சமஸ்கிருதமும் நமது பாரத பண்பாட்டின் இரு கண்களாகும்.
மேலும், இந்துத்துவாவை திணிக்கிறார்கள், குருகுலக் கல்வி முறை, இந்து சமய வேத ஆகம கல்வி முறையை திணிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நாடு முழுக்க சிறுபான்மை அந்தஸ்து பெற்று மத்திய, மாநில அரசாங்கத்தின் பெருமளவு நிதி உதவியை பெற்று கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் பைபிள் கல்வி புகட்டுகின்றன. இஸ்லாமிய மதரஸா கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய கல்வி புகட்டுகிறது.
நாட்டில் பெரும்பான்மையான இந்து சமய மாணவர்களுக்கு இந்து சமய கல்வி கிடைப்பது இல்லை. அரசு கல்வி நிறுவனங்களில் இந்து சமய கல்வி கற்க வாய்ப்பே கிடையாது. மதசார்பற்ற நாடு என காரணம் காட்டி அரசு கல்விக்கூடங்களில் இந்து சமயக் கல்விக்கு தடை விதிக்கப்படுகிறது. பெளத்த நாடான இலங்கையில்கூட இந்து தமிழர்களுக்கு சைவ சமயம் ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முன்பெல்லாம் நீதி போதனை வகுப்புக்கள் இருந்தன, நன்னெறி வகுப்பு அதாவது ஒழுக்கக் கல்வி ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது அந்த வகுப்புகள் இல்லை.
மேலும், கைத்தொழில் கற்றுக் கொள்ள தச்சு வகுப்பு, ஓவிய வகுப்பு, தோட்டம் அமைக்க விவசாய வகுப்பு என்றெல்லம் இருந்தன. தற்போது தொழில் வகுப்புகள் இல்லை. மனப்பாடக் கல்வி முறை மட்டுமே உள்ளது. மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றப்படுகின்றனர். விளையாட்டு வகுப்புக்கள்கூட இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
தொழிற்கல்வி என்று சொன்னதுமே குலக்கல்வி என சாதிச்சாயம் பூசுகின்றனர். தீண்டாமையை ஒழித்த மூதறிஞர் ராஜாஜி கொண்டு வந்த தொழிற்கல்வி முறையை அதாவது பகுதிநேர படிப்பு, பகுதிநேர வேலை என்கிற முறையை சாதி சாயம் பூசி குலக்கல்வி எனப் பெயர் சூட்டி போராட்டம் நடத்தி தமிழக மாணவர்களுக்கான தொழிற்கல்விக்கு முற்றப்புள்ளி வைத்தார்கள்.
தற்போது மீண்டும் அதே அவதூறு பிரசாரத்தை துவக்கியுள்ளனர். விரும்புகின்ற மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பு காலத்திலேயே ஏதாவது தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறினால் பாடத்திட்டங்களும், பாடப் புத்தகங்களும் மாறும் சூழல் உள்ளது. யார் ஆளும்கட்சியாக வருகிறார்களோ அவர்களின் புகழ் பாடும் பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தங்கள் கட்சியின் கொள்கைகளை பாடத்திட்டங்களில் திணிப்பது என்பது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய அரசியல் திணிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வகுப்பறைகள் கணினி மயமாகவும் நவீன முறையில் பாடங்களை போதிக்கவும், கல்வி நிறுவனங்களில் நல்ல கல்விச்சூழலை உருவாக்கவும் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி என்பது ஐந்தாம் வகுப்போடு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது கல்வியின் தரத்தை குறைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்தை விதிமுறைகள் குறித்த பரிந்துரைகள் அதாவது பள்ளி நேரத்தில் செல்லிடப்பேசி பயன்பாட்டிற்கு தடை, மாணவர்களுக்கான சீருடை, ஆசிரியர்களுக்கான கண்ணியமான உடைகள் ஆகியவை வலியுறுத்தப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கும் பத்தாண்டிற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி - இப்படி பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
கல்வி அதிகாரம் மாநில பட்டியலில் இருக்க வேண்டும் தற்போதைய பரிந்துரைகளில் மத்திய அரசிடம் கல்வி அதிகாரம் சென்று விடும் என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெளிவு படுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு நிறுவனங்களைக் கல்வியில் தலையிட அனுமதிப்பது குறித்தும் எதிர்ப்பு வந்துள்ளது. இதுவும் மாறுதலுக்குட்பட்டதே.
பிரதமர் மோடி எதை செய்தாலும் அதை சிறுபான்மையினருக்கு எதிராக சித்தரிக்கும் இத்தகைய அவதூறு பிரசாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லுவோம்.
இன்றைய மாணவர்களே நாளைய பாரதம். எனவே நல்லவிதமான தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட நமது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் உடனே பதிவு செய்வோம்.
கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
அர்ஜுன் சம்பத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.