கடல் சூழல் காப்போம்

உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% சதவீதம் கடல் நீராகும். குடிப்பதற்கு உகந்த தன்மையற்ற போதிலும், கடல் நீரில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல் மார்க்கமாக பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதும், சரக்குகளை அனுப்புவதும் பெருமளவில் நடந்து வருகிறது.
Updated on
2 min read

உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% சதவீதம் கடல் நீராகும். குடிப்பதற்கு உகந்த தன்மையற்ற போதிலும், கடல் நீரில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல் மார்க்கமாக பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதும், சரக்குகளை அனுப்புவதும் பெருமளவில் நடந்து வருகிறது.

கடல் பகுதியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ள நிலையில், அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகியுள்ளது.

ஆனால் கடல் மற்றும் கடலோரச் சூழல் மாசடைவது அதிகரித்துள்ளது. பூமியின் குப்பைத் தொட்டிபோல் கடல் பயன்படுத்தப்படுகிறது.

கடலில் ஏராளமான கழிவு நீர் கலக்கின்றது. கடலோர நகரங்களில் வசிக்கும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ரசாயனத் தன்மை மற்றும் நச்சுத் தன்மை கொண்ட கழிவு நீர் போன்றவை கடலில் கலக்கும்படி விடப்படுகின்றன.

கடலுக்கு விடப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், வாய்க்கால்கள் வழியே செல்லும்போது அவற்றில் வீசப்படும் குப்பைகளும் கடலை சென்றடைகின்றன. இவ்வாறு சேரும் குப்பைகள் கடல் முழுவதும் பரவுகின்றன.

குறிப்பாக, பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்கள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இவை காற்றில் பறந்து சென்று கடலில் சேருகின்றன. இதுபோன்ற குப்பைகளை கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன.

இதில் பாதிப்படையும் மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும், வேறு சில அரிய வகை உயிரினங்களும் இறக்கின்றன.

ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று மட்டும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் பல டன் அளவுக்கு குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதுபோன்ற குப்பைகளும் கடலில் சென்று கடலை மாசடையச் செய்கின்றன.

சரக்குக் கப்பல் போக்குவரத்தின் போது அவற்றில் இருந்து கசியும் நச்சுப் பொருள்களாலும் கடல் சூழல் மாசடைகிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் இருந்து அவை கடலில் கொட்டியபடி செல்வதும், கசிவதும் நிகழ்கின்றது. இவற்றால் கடல் நீர் அதிகளவில் மாசடைகிறது.

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 706 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கலப்பதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் 50% கரைகளில் ஒதுங்குகிறது.

முதலில் கடலின் மேல் மட்டத்தில் பரவும் எண்ணெய் படலம், சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு பரவி, கடல்நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது.

கடலில் பரவும் எண்ணெய் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறது. ரசாயனத் தன்மை கொண்ட எண்ணெய் படலம், கடலில் கலக்கும்போது அதன் விஷத்தன்மை பல்வேறு கடல்வாழ் உயிரினங்களைத் தாக்குகிறது.

இந்த எண்ணெய்ப் படலம் அலைகள், நீரோட்டம், காற்று வீசும் திசை ஆகியவற்றைப் பொருத்து பரவுகின்றது. கரையில் ஒதுங்கும் எண்ணெய் படலத்தால் அங்கு வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் கடற்கரையில் உள்ள மணல் பாறை, தாவரங்கள் போன்றவற்றில் இந்த எண்ணெய் படலங்கள் உறைந்து போவதால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என சூழலியல் வல்லுநர்கள்

கூறுகின்றனர்.

கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய் மற்றும் ரசாயன திரவங்களால் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், சில உயிரினங்கள் அழியவும் நேரிடுகிறது.

கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் துரப்பண பணியின்போதும் மாசு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கச்சா எண்ணெய் துரப்பண பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

பல நாள்களுக்குத் தொடர்ந்த இந்த எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்த வல்லுநர்கள் கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறக்கவும், நோயுறவும் நேரிட்டது என்பது நினைவுகூறத்தக்கது.

அதுபோல் கடல் பகுதியில் பவளப்பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிலப்பகுதியில் மரங்களை வெட்டினால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதோ, அதுபோல் பவளப் பாறைகளை வெட்டியெடுக்கப்படுவதால் கடல் பகுதியில் சூழல் பாதிக்கப்படுகின்றது.

ஆழம் குறைந்த கடல் பகுதியின் அடிப்பாகத்தில் இருந்து பல லட்சம் பாலிப் உயிரிகள் ஒன்றிணைந்து பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. பவளப்பாறைகளைச் சார்ந்து கடலில் 4,000 வகையான மீன்கள், ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்ûஸடை உட்கிரகித்து கால்சியம் கார்பனேட்டாக மாற்றுவதால், உலகின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பவளப்பாறைகளுக்கும் பெரும் பங்கு உள்ளது.

இந்தியாவில் சுண்ணாம்பு தயாரிப்புக்காக ஆண்டுதோறும் 25,000 டன் பவளப்பாறைகள் சட்ட விரோதமாக வெட்டியெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கழிவு நீர் கலப்பு, பருவநிலை மாற்றம், கடலில் வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களாலும் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.

இந்நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெருமளவு பவளப்பாறைகள் அழிந்து விடும் என கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே கடலில் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்துவது, பவளப் பாறைகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் கூட்டாக நடவடிக்கை எடுப்பது மட்டுமே கடல் சூழல் பாதுக்காப்புக்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com