

நர்சிங் யாதவ் என்னும் இந்திய மல்யுத்த வீரர் ரியோ ஒலிம்பிக்கில் 74 கிலோ எடை பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தார். அவரிடம் கடந்த ஜூன் மாதம் 25- ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நர்சிங் யாதவ், தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
எனவே, அது குறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நர்சிங் யாதவை ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. இதனால், அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த தடை நீங்கியது. இந்தியப் பிரதமரும் அவரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
ஒரு நர்சிங் யாதவ் இத்தகைய குற்றச்சாட்டிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், இன்னும் எத்தனையோ வீரர்கள் ஊக்கமருந்து குற்றச்சாட்டால் தங்கள் எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். தடகளப் போட்டிகளிலும், விளையாட்டுகளிலும் வீரதீரத்தோடு ஓடிஆடி தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் கொண்டு வந்து குவிக்க வேண்டிய இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் அனபாலிக், ஸ்டெராய்டு போன்ற ஊக்க மருந்துகளை உண்டுவிட்டு, பந்தயங்களுக்கு வெளியே நிற்கின்றனர்.
இந்தியாவின் பெருமையை இமயத்தில் பொறிக்க வேண்டியவர்கள், ஊக்க மருந்து சோதனைகளுக்கு உள்ளாகி, இமயத்தின் அடிவாரத்திற்கு உருட்டி விடப்பட்டிருப்பது, இந்நாட்டிற்கு ஏற்பட்ட அவலமல்லவா?
இந்தர்ஜீத் சிங், 28 வயது பஞ்சாபி, பிரேசிலில் - ரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்பதற்காக, ஒலிம்பிக் நிர்வாகிகளால் தெரிவு செய்யப்பட்ட இந்திய இளைஞன். இதுவரையில் நிகழ்த்தப்பட்ட 21 மீட்டர் சாதனையை முறியடிக்கக்கூடிய வீரன் இந்தர்ஜீத் சிங் என இந்திய அரசு தீர்மானித்து, அவரை பெனிசில்வேனியாவுக்கு நுட்பமான பயிற்சிக்கு அனுப்பி வைத்தது.
பயிற்சிக்குப்பிறகு இந்தியாவிற்குத் திரும்பிய அவருக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகளில் ஊக்க மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்திருக்கிறார் என்பது நிரூபணமாயிற்று.
2014- இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர், இன்று ஒலிம்பிக் போட்டிக்கு வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். இந்தர்ஜீத் சிங் என்ற தேக்குமரத்தை ஊக்க மருந்து எனும் கறையான் தின்றிருப்பது தேசிய அவமானம் அல்லவா?
ஊக்கமருந்துகளைச் சோதிப்பதற்காக நான்கு வகைச் சோதனைகள் நடத்தப்படும். சந்தேகத்திற்குள்ளானவர்களின் உமிழ்நீர், வியர்வை, இரத்தம், சிறுநீர் ஆகியவற்றைச் சோதனை செய்து உண்மையைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
போட்டியாளர்கள் நான்கு காரணங்களுக்காக ஊக்கமருந்தை எடுத்துக் கொள்கிறார்களாம். முதலாவது, தசைநார்களை அடர்த்தியாக்குவதற்கு. இரண்டாவது, எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு. மூன்றாவது, திசுக்கள் பிராண வாயுவை வெகுநேரம் காத்து வெளியிடுவதற்கு. நான்காவது, உடல் உறுப்புகளை அதிவேகமாகச் செயல்படுத்துவதற்கு.
இதற்கு முன்னர் ஆறு வீராங்கனைகளும், ஹரிகிருஷ்ணன் எனும் ஆடவரும் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டமைக்காக இரண்டு ஆண்டுகள் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அஸ்வினி அக்குன்ஜி, மந்தீப் கெளரி, சினி ஜோஜ், ஜானா முர்மு, தியானா மேரி, பரியங்கா பன்வார் ஆகிய அறுவரும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் (ரிலே - ரேஸ்) காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்தவர்கள்.
ஏன் இப்படி குறுக்கு வழியைத் தேடுகிறார்கள் என்று ஆராய்ந்தபோது, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் எனும் வெறி, தங்கப் பதக்கத்தைத் தவிர வேறு வழிகளிலும் பணம் பெற வாய்ப்பு, நட்சத்திர வீரர் - வீராங்கனை என்று ஆகிவிட்டால் பொருளும் புகழும் பெறலாம், விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது அதற்கும் பணம் ஈட்டலாம் என்பனவே காரணங்களாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட விபரீத எண்ணங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஒலிம்பிக் பந்தயம் ஏதென்சில் - ஒலிம்பிக் எனும் இடத்தில் தொடங்கப்பட்டபொழுது, வெற்றியாளர்களுக்கு ஆலிவ் இலைகளால் பின்னப்பட்ட கிரீடத்தைத் தரித்து கையில் உணவு தானியங்களைக் கொடுத்து அனுப்பினார்கள் போலும்.
கிரேக்கத்தில் ஆதியில் ஷீயஸ் எனும் கடவுளுக்கு ஆராதனை செய்வதற்காக, விலங்குகளைக் கொன்று படையல் போட்டார்கள். இதனைக் கண்டு அருவருத்த ஷீயஸ் எனும் தெய்வத்தின் மகன் ஹெர்குலிப், விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி இறை வழிபாட்டைச் செய்தான். இவ்விளையாட்டு ஒரு காலத்தோடு நின்று போயிற்று.
1896-ஆம் ஆண்டு பேரன் பெரீ டி கெளபெர்டின் எனும் பிரெஞ்சுக்காரர் ஒலிம்பிக் பந்தயத்திற்கு முழு வடிவம் கொடுத்து, ஏதென்சில் நிகழ்த்தினார். அதைத் தொடங்கி வைத்த பாதிரியார் டைடன், ஓர் அறிவுப்பூர்வமான சொற்பொழிவை நிகழ்த்தினார்.
அந்தச் சொற்பொழிவை மையமாக வைத்து, கெளபர்டின் மிக அதிக வேகம், மிக அதிக வலிமை, மிக அதிக உயரம் எனும் மூன்று வாசகங்களை ஒலிம்பிக்கின் நோக்கமாக வரையறுத்தார். ஒலிம்பிக்கில் ஏற்றப்படும் தீப்பந்தத்தின் உட்பொருளாக, ஞானம், மகிழ்ச்சி, சமாதானம், வாழ்நாள் என்பன கருதப்பட்டன.
பின்னர் வந்த பேராயர் எதல்பர்ட் டால்போட் என்பவர், ஒலிம்பிக்கிற்கு ஒரு குறியீட்டையும் தந்தார். அக்குறியீட்டைச் சில போட்டியாளர்களும், சில பயிற்சியாளர்களும் இதுவரை படிக்கவில்லை என்றாலும், இனிமேலாவது படிக்க வேண்டும். ஒலிம்பிக்கின் இலட்சியம், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதன்று. போட்டிகளில் பங்கேற்பதே முக்கியம்.
ஒருமுறை உலக ஒலிம்பிக் போட்டியில் தலைவராக இருந்த ஜேக்குஸ் ரோஜ்ஜி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிரந்தரமாக ஒரு சாசனத்தையே வரைந்து கொடுத்திருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகள் என்பன வாழ்க்கையின் தத்துவம். இது ஒருவனின் மனத்திலும், உடலிலும் நிலையான உயர்வை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். இலட்சியத்திற்கேற்ற உறுதியான உள்ளத்தை உருவாக்க வேண்டும். ஒருவருடைய கல்வி, கலாசாரம் இரண்டையும் ஒருசேர வளர்க்க வேண்டும். இது ஒரு விவேகமான வாழ்க்கையைச் சொல்லித் தருவதாகும்.
போட்டியாளர்கள் ஊக்க மருந்தை உட்கொள்வதற்கு ஒரு வகையில் பயிற்சியாளர்களே காரணகர்த்தாவாக இருக்கின்றனர். 2011-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுத் தடகளப்போட்டிகள் நிகழ்ந்தபோது, தடைவிதிக்கப்பட்ட ஆறு பெண்களுக்கும், யூரி ஒகோரோடின்க் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.
தொடர் ஓட்டப் போட்டிக்குப் பயிற்சி தருவதில் இவர் வல்லுநர் என்பதால், மத்திய அரசே இவரை உக்ரேனிலிருந்து வரவழைத்தது. ஆனால், இவர் சீனாவிலிருந்து நான்கு பாட்டில்கள் ஜெயின்சென்ங் எனும் ஊக்கமருந்தை வாங்கிவந்து பயிற்சியாளர்களுக்குத் தந்திருக்கிறார்.
போட்டியாளர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி தருவதற்கென்றே, பாட்டியாலாவில் தேசிய தடகள - விளையாட்டுப் போட்டிப் பயிற்சி நிறுவனம் ஒன்று, மத்திய அரசின் நேரடிப்பார்வையில் செம்மையாகச் செயல்பட்டு வருகிறது.
பயிற்சியாளர்களுக்கு உணவு, உடை, சத்துணவு மாத்திரைகள், வாரம் இரண்டு முறை தக்க மருத்துவர்களால் உடற்பரிசோதனை ஆகிய வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இத்தனைக்குப்பிறகும் ஆறு பெண் போட்டியாளர்களும், ஹரி கிருஷ்ணன் எனும் நீளத்தாண்டுதல் வீரரும் ஊக்கமருந்து அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டு, நிறுவனத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையில் வைத்திருந்த மற்ற மருந்துப்பொருட்களும், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உயர்ந்த நோக்கத்தோடும், இலட்சியத்தோடும் பங்கேற்க வேண்டிய போட்டியாளர்களில் சிலர், தாற்காலிக வெற்றிகளுக்காக ஊக்கமருந்துகளையும், கிரியா ஊக்கிகளையும் உட்கொள்வதால், அவர்கள் வாழ்க்கைப் பாழாகிறது. அவர்களுடைய நரம்பு மண்டலம் முற்றிலுமே தளர்ச்சியடைந்து விடுகிறது. துரிதகதியில் செயல்படுவதால், அவர்களுடைய சுரப்பிகள் நாளடைவில் செயல் இழந்துவிடும்.
மேலும், ஒருமுறை ஊக்கமருந்து எடுத்தவர்களால், அடுத்த எந்தப் போட்டியிலும் ஊக்கமருந்து எடுக்காமல் பங்கேற்க முடியாது. அவர்கள் ஊக்கமருந்துகளுக்கு அடிமை ஆகிவிடுவார்கள்.
"உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர். திருக்கோயிலாகத் திகழும் உடலைப், பாழடைந்த கோயில் ஆக்கலாமா? "எதிர்கால இந்தியாவிற்குத் தேவை பகவத் கீதை அன்று கால்பந்து விளையாட்டே' எனப் புகன்றாரே சுவாமி விவேகானந்தர், அவருக்கு விளையாட்டு வீரர்கள் செலுத்தும் வணக்கம் இதுதானா?
திருக்கோயிலின் வாசலாக வேண்டிய தேக்குமரத்தை கறையான்களா தின்பது? சிற்பங்கள் ஆக வேண்டிய சந்தனமரத்தை, ஊக்க மருந்துகளா உட்கொள்வது? சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டால், சீற்றம் குறையாது என்பது உண்மை. ஆனால், ஆற்றல் குறையுமே. தோற்றம் குலையுமே. அதனால் யாகாவாராயினும் பெற்ற உடம்பையாவது பேணுக!
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தி. இராசகோபாலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.