நவீன தொழில்நுட்ப தாண்டவம்

இன்றைய நவீன உலகின் அரிய கண்டுபிடிப்பு செல்லிடப்பேசி. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனமாக,

இன்றைய நவீன உலகின் அரிய கண்டுபிடிப்பு செல்லிடப்பேசி. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனமாக, பல்வேறு பயன் உள்ள சாதனங்களின் ஒருங்கிணைப்பு சாதனமாகவும் அதை உருவாக்கி உள்ளனர்.
 செய்திகளை அனுப்பவும், சேமிக்கவும், பெறவும், வசதி உள்ளது. கடிகாரம், கால்குலேட்டர், கேமரா, இணையதள இணைப்பு, அலாரம், நினைவூட்டல் என பல்வேறு தனித்தனி பயன் உள்ள சாதனங்களின் பயனை செல்லிடப்பேசியின் மூலம் பெறலாம். கைக்கு அடக்கமான இந்தக் கருவி கணக்கில்லா பயன்களைத் தருகிறது.
 மனித குலம், குறிப்பாக இளைய சமுதாயம் இந்த அரிய கண்டுபிடிப்பின் பயனை முழுமையாக பயன் உள்ள வகையில் பயன்படுத்துகிறார்களா என்றால் முற்றிலும் உண்மையாக இருக்காது.
 பள்ளிப் பருவத்தில் பெற்றோர்கள் தமது மகன், மகள் விரும்புகிறார்கள் என்பதற்காக தம் பிள்ளைகளுக்கு செல்லிடப்பேசி வாங்கி தருகிறார்கள். ஆனால், அவர்கள் செல்லிடப்பேசியில் நண்பர்களிடம், தோழியிடம் பேசத் தொடங்கி, சினிமா, நடிகர், நடிகை பற்றிய பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பேசி, பொழுதை வீணாக்குகிறார்கள்; படிப்பில் கவனம் சிதைகிறது.
 பருவ வயது இளம் பெண்கள், வாலிப வயது ஆண்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செல்லிடப்பேசியை பயன் உள்ள முறையில் பயன்படுத்துகிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல சற்றுத் தயக்கமாக இருக்கிறது.
 ஏனெனில், இவர்கள் செல்லிடப்பேசியில் பேசும் பொழுது சுற்றுச்சூழலை மறந்து கனவு உலகில் சஞ்சரிப்பது போல் பேசுகிறார்கள். சாலையில் செல்லும் பொழுதும், வாகனத்தில் பயணிக்கும் பொழுதும் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே செல்கிறார்கள்.
 செல்லிடப்பேசியில் வரும் எண்ணை தொடர்பு கொண்டு, நகைச்சுவை பேச்சுகள், முகம் தெரியாத நண்பர்களின் தொடர்பில் பேசுவது எனத் தொடங்கி, பாலியல் நகைச்சுவை செய்திகள் என இவர்களின் வயதுக்கு ஏற்றவாறு செய்திகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.
 இதன் விளைவாக முகம் தெரியாத ஆண், பெண் நண்பர்களிடம் உரையாடுவது காலப்போக்கில் காதல் வலையில் விழுந்துவிட தூண்டுகிறது. இதன் விளைவாக தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் என உறவுகளையும் மறந்துவிடுகிறார்கள்.
 பாலியல் உணர்வைத் தூண்டுகிற விதமாக இணையதளம், முகநூல், செல்லிடப்பேசியில் இவர்கள் பார்க்கிற காட்சிகளின் தூண்டுதலால் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற காரணமாகி விடுகிறது. நவீன கண்டுபிடிப்புகள் நம் இளைய சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றன.
 இந்திய தண்டனை சட்டத்தில் "சைபர் கிரைம்' என்ற புதிய சட்டப் பிரிவை ஏற்படுத்த காரணமாக இருந்தது செல்லிடப்பேசி, இணையதளம், முகநூல் போன்ற நவீன கண்டுபிடிப்புகளே.
 அந்தரங்க வாழ்வை செல்லிடப்பேசியில் படம்பிடிப்பது, இணையதளத்தில் வெளியிடுவது, முகநூலில் தகவல் தருவது என்ற வன்மமான, குரூர மனம் நம் இளைய சமுதாயத்தில் சிலரிடம் புரையோடிப் போய்விட்டது.
 நவீன கண்டுபிடிப்பான செல்லிடப்பேசி, இணையதளம், முகநூல் போன்றவற்றை, தமது அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தும் வகையில் பயன்படுத்த இளைஞர்கள் முன் வர வேண்டும். கல்வி அறிவு இல்லாதவர்கள் தவறு செய்தால் கற்றவர்கள் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.
 கல்வி அறிவில் மேம்பட்ட பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? அளவுக்கு அதிகமான ஆசை, ஆடம்பரம், உல்லாசம், சொகுசு வாழ்க்கை என தனது வருமானத்திற்கு அதிகமாக செலவிடுதல் போன்ற காரணங்களே ஆகும்.
 பணத் தேவை அதிகரிக்க, வயதும் ஆசையும் அறிவை மழுங்கடித்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கிறது. தமது திட்டத்திற்கு நவீன கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
 திருமண வயது ஆண், பெண் இருபாலரும் (பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் அல்லது காதல் திருமணம் செய்வோர் ஆகிய இரு பிரிவினரும்) திருமணம் உறுதியானதும் செல்லிடப்பேசி எண்ணை ஒருவருக்கு ஒருவர் பெற்றுக் கொண்டு திருமணத்திற்கு முன் இரவு, பகல் என எந்த நேரமும் செல்லிடப்பேசியில் பேசத் தொடங்கி விடுகின்றனர்.
 ஒருவர் மனதில் உள்ளதை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு பேசத் தொடங்கினாலும், இதனால் திருமணத்திற்குப் பின் எதிர்பாராமல் கிடைக்கக்கூடிய சின்ன சின்ன சந்தோஷங்கள், எதிர்பார்ப்புகள், அதாவது "த்ரில்' காணாமல் போய்விடுகிறது.
 இதனால், திருமணம் ஆனவுடன் ஏற்கெனவே ஒன்று, இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த உணர்வில் தமது இல்லறத்தைத் துவக்குகிறார்கள்.
 மணமேடை ஏறும் முன்னே மனமுறிவு ஏற்பட்டு, திருமணம் நடைபெறாமல் போய்விடுகிற அவலமும் நேரிடுகிறது. இரு குடும்பங்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றன.
 இதெல்லாம் நவீன கண்டுபிடிப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதின் சீரழிவுகளாகும்.
 நம் இளைஞர்கள் தாம் பிறந்து வளர்ந்து தம்மை ஆளாக்கிய பெற்றோரை, உடன்பிறந்த உறவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் போதும்; ஆக்கபூர்வமான, அறிவு வளர்க்க, ஆற்றலைப் பெருக்க மட்டுமே நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளான செல்லிடப்பேசி, இணையதளம், முகநூல் பயன்படுத்துவேன் என்று உறுதி ஏற்க வேண்டும்.
 தமது குடும்பமும், நாடும் நம்மை நம்பி இருக்கிறது என்ற உணர்வோடு சிந்தித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் நம்மால் முயன்ற வரை உழைத்து பயன்தர வேண்டும் என முடிவுடன் செயல்பட்டால் நவீன தொழில்நுட்பத்தின் கோரத் தாண்டவம் முற்றுபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com