கொடியாரை வேந்துஒறுத்தல்

குற்றங்கள் நிறைந்த உலகத்தில் வாழ்க்கையை நொந்துகொள்வதில் பயனில்லை. வாழ்க்கை என்பது நல்லது கெட்டது நடக்கும் ஒரு களம்.
Updated on
4 min read

குற்றங்கள் நிறைந்த உலகத்தில் வாழ்க்கையை நொந்துகொள்வதில் பயனில்லை. வாழ்க்கை என்பது நல்லது கெட்டது நடக்கும் ஒரு களம். அதேசமயம், சூழலை சமன் செய்து குற்றங்கள் நடப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து மாற்று வழி வகுத்தால் தீயவற்றின் தாக்கம் குறையும்.
 புவி மாறவில்லை, ஆனால் மனிதன் மாறிவிட்டான்; எதற்கெடுத்தாலும் வன்முறையில் இறங்கிவிட்டான். இல்லையென்றால், உலகில் வன்முறை கலாசாரம் இந்த அளவிற்கு வளர முடியுமா? அதுவும் தன்னை சேர்ந்தவர்களையே, நண்பர்கள், உறவினர், மனைவி, மக்கள் என்ற பாகுபாடின்றி கொலை செய்கிறார்களே, அது எதனால்?
 காவல் துறையில் பிரதான கொடுங்குற்றமாக கருதப்படுவது கொலைக்குற்றம். பல காரணங்களுக்காக கொலை நிகழலாம். ஆதாய கொலை, சொத்து தகராறு, கணவன்-மனைவி சண்டை, நிலத் தகராறு, ரௌடிகளிடையே வன்முறை போன்ற பல காரணங்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கொலை சமுதாயத்தில் பீதியைக் கிளப்புகிறது. ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 கணவன் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்துகிறான், கொலை விழுகிறது. கணவன் மீது வன்மம் பாராட்டும் மனைவியே கைக்கூலிகள் துணையோடு கணவனை கொல்கிறாள். சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே தந்தையைக் கொல்கிறான். நண்பர்களுக்கிடையே சிறு தகராறில் ஒருத்தரை ஒருத்தர் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார்கள்.
 வன்புணர்ச்சியில் ஈடுபடும் கொடூரன் அபலைப்பெண்ணின் உயிரை மாய்க்கிறான். ஒருதலைக் காதலில் மயங்கும் காதலன் இணங்காத காதலியை அழிக்கிறான். சாதியை கடந்து அன்பு செலுத்தும் இளசுகளை ஊர் பெரியவர்களே தூக்கிலிடுகிறார்கள். சிறு குழந்தைகள் விளையாட்டில் ஏற்படும் சண்டையில் பெரியவர்கள் தலையிட்டுப் பகையை வளர்ப்பது கொலையில் முடிகிறது. பேசித்தீர்க்க வேண்டியது பிரச்னையில் சிக்கி வளர்கிறது.
 புத்தாயிரம் பிறந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த 15 ஆண்டுகளில் உலகில் சுமார் 80 லட்சம் கொலைகள் தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக நிகழ்ந்துள்ளன. நாடுகளிடையே போர்களாலும் ஏன் பயங்கரவாத வன்முறையாலும் ஏற்படும் உயிரிழப்பை விட முன் விரோத கொலைகளால் ஏற்படும் உயிரிழப்பு பன் மடங்கு அதிகம். இந்த கொலைகளில் பாதிக்கு மேல் 23 நாடுகளில் மட்டும் நிகழ்கின்றன. இதற்கு இந்த நாடுகளில் அரசு இயந்திரம் சரியாக இயங்காதது, நீதி நிலை நாட்டாததுதான் முக்கிய காரணம்.
 சட்ட ஆளுமை, நியாயமான சட்ட அமலாக்கம், பாதிக்கப்பட்டவர்க்கு பாதுகாப்பு, விரைவான நடுவுநிலை பிறழாத நீதி அளிப்பு, திருந்தி வாழ வகை செய்யும் சிறை நிர்வாகம் இவற்றின் ஒருங்கிணைப்புதான் வன்முறை கலாசாரத்தைத் தணிக்க உதவும்.
 கொலைக் குற்றங்களை எவ்வாறு குறைப்பது என்று பல நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சீர்திருத்தங்கள் வரையப்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
 நடைபெற்ற தனிநபர் கொலைகளை ஆராய்ந்தால் சுமார் 95% ஆண்கள் தான் கொலை குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஐந்து சதவிகிதம் பெண்கள் ஈடுபடும் கொலைகளில் பாதிக்கப்படுவது அவர்களது பச்சிளம் குழந்தைகள் அல்லது தற்காப்பிற்காக வன்முறையில் இறங்க வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் நிகழ்வுகள். அதே சமயம், உயிரிழப்பவர்களும் 79% ஆண்கள். எங்கு மொத்த கொலை விகிதம் அதிகம் உள்ளதோ, அங்கு ஆண்கள் உயிரிழப்பும் அதிகம்.
 பெண்கள் பாதிக்கப்படும் கொலைகள் அவர்களது இல்லங்கள் அல்லது நெருங்கிய தொடர்புடைய தளங்களில் ஏற்படுவது வேதனைக்குரியது. பரிச்சயமான இடங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், பொது இடங்களில் உள்ள பாதுகாப்பை என்ன சொல்வது? பெரும்பாலான ஆண்கள் தாக்கப்படுவது பொது இடங்களில்; அதுவும் தெரிந்தவர்களால் அல்லது முன் விரோதம் காரணமாக ஆயுதம் தாங்கிய கூலிப்படையினரால்.
 உலகில் நடக்கும் நான்கிலொரு கொலை பிரேசில், கொலம்பியா, மெக்ஸிகோ, வெனிசூலா என்ற நான்கு நாடுகளில் மட்டும் நிகழ்கிறது. அதிக வன்முறை நிறைந்த நகரம் ஹோண்டருஸ் நாட்டின் சான் பெத்ரோ சூலா என்ற நகரம். இது கொலைகளுக்குத் தலை நகரம். அங்கு நாள் ஒன்றுக்கு சராசரி மூன்று கொலைகள்.
 வன்முறையின் அளவுகோல் ஒரு நகரில் நிகழும் கொலைகளின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சான் பெட்ரோவில் ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 187 கொலைகள். அதே விகிதத்தில் 148 கொலைகள் நடைபெறும் மெக்ஸிகோ நகரம் ஜிவார்ஸ், 120 கொலைகளைப் பதிவு செய்யும் வெனிசுலா நாட்டின் காரகாஸ் போன்ற நகரங்களை மிஞ்சிவிட்டது.
 இந்த நகரங்களிலிருந்து போதைப் பொருள்கள் கடத்தல் அதிகமாக உள்ளதுதான் இத்தகைய கொலைகளுக்குக் காரணம். ஆயுதங்கள் கடத்தும் கயவர்களிடையே ஏற்படும் மோதல்களின் முடிவு கொலை. ஆயுத கலாசார வளர்ச்சியால் 83 சதவீத கொலைகள் இயந்திரத் துப்பாக்கிகளால் ஏற்படுகின்றன.
 நமது நாட்டில் 2014-ஆம் ஆண்டில் மொத்த வன்முறை குற்றங்கள் 3.3 லட்சம், அதில் கொலைகள் 33,981. முந்தைய ஆண்டைவிட 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகமாக உத்தரப் பிரதேசத்திலும் (5,150 வழக்குகள்), பிகாரிலும் (3,403 வழக்குகள்) நிகழ்ந்துள்ளன.
 மக்கள் தொகை கணக்குப்படி ஒரு லட்சத்திற்கு 2.7% வழக்குகள். மிகவும் வன்முறை நிறைந்த தெற்கு அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் 2014-ஆ ம் ஆண்டு 1,805 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டு 2013-ஐ (1936 வழக்குகள்) விட சற்று குறைவு.
 இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மெகா சிட்டி - பெரு நகரங்களாக கருதப்படுகின்றன. 2011 மக்கள் தொகை கணக்குப்படி 53 பெரு நகரங்கள் உள்ளன. 2014-ஆம் வருடம் 3,538 கொலைகள் இந்நகரங்களில் நடந்தன, 2013-ஆம் வருடத்தை விட 2.3% அதிகம். தில்லியில் அதிகமாக 472 கொலைகள், பெங்களூரில் 241, பாட்னாவில் 205, சென்னையில் 161, மும்பையில் 183.
 நமது நகரங்களில் சராசரியாக இரண்டு கொலைகள் - ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு என்ற கணக்கு, வெளிநாடுகளை ஒப்பிடுகையில் குறைவு என்று ஆறுதல் அடைய முடியாது. கொலை சம்பவங்கள் ஏழை மக்களைப் பாதிக்கின்றன. மத்திய குற்ற ஆவண பெட்டகத்தின் அறிக்கைபடி கொலைகளுக்குக் காரணம் சொத்து தகறாறு, கணவன் - மனைவி சண்டை, காதல் தோல்வியில் நிகழும் கொலைகள் மற்றும் ஆதாயக்கொலை. மண், பெண், பொன் என ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிடுகிறது.
 கணவன் - மனைவி தகராறில் மனைவி கொலையாகிறாள். கணவன் சிறைக்குச் செல்கிறான். அவர்களது குழந்தைகள் அனாதையாகிவிடுகிறார்கள். அந்தக் குழந்தைகள் கவனிப்பார் இன்றி குற்றவலையில் சிக்குவதிலிருந்து மீள முடியாது. சமுதாயம் இவர்களுக்குக் கை கொடுக்கவேண்டும்.
 அடுத்த 30 ஆண்டுகளில் கொலை போன்ற வன்முறை சம்பவங்களை ஐம்பது சதவீதம் எவ்வாறு குறைக்க முடியும் என்ற ஆராய்ச்சியை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் மேற்கொண்டது. சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பெருகி வரும் நகரமயமாக்கல், விலைவாசி உயர்வு, வேண்டிய பொருள் உடனடி கிட்டாமல் போவது மட்டும் கொலைகளுக்கு காரணமாகாது.
 ஏனெனில், அமெரிக்காவில் 1960-களில் அதிக பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம், ஏழ்மைக் குறைவு மறுபுறம் இருந்தும் கூட, கொலைகளின் எண்ணிக்கை கூடியது. 2008-இல் பொருளாதாரச் சரிவு, வேலையின்மை ஏற்பட்டபோது வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை.
 மக்களின் சராசரி வயதும் கொலைகளுக்கு ஒரு காரணம். ஏனெனில், 16 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள இளைஞர்கள் தான் அதிகம் கொலைக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படும் போதும் அதிக கொலைகள் விழுகின்றன. கிழக்கு ஜெர்மனியில் ரஷ்ய கம்யூனிச கட்டுப்பாடு முறிந்த போது அங்கு கொலைகள் அதிகமாயின. பல ஆண்டுகள் கழிந்து சம நிலை ஏற்பட்டது.
 எப்போது வன்முறை சம்பவங்கள் குறையும்? அதற்கு முக்கியமானவை நல்லாட்சி, சட்ட ஆளுமை, அரசு அதிகாரிகள் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடாத நிர்வாகம், எல்லா சமுதாய அமைப்புகளையும் அரவணைத்து வழி நடத்தும் அரசு. இவை எந்த நாடுகளில், நகரங்களில் குறைவாக உள்ளனவோ அங்கு வன்முறை தலைதூக்கும். மேற்கத்திய நாடுகளில் தொழில் நுட்பம் அடிப்படையில் பார்வையில் படாத காமிராக்கள், அபாய ஒலி விசைகள் போன்ற பாதுகாப்பு கருவிகள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளது.
 சட்ட அமலாக்கத்தில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும், நீதிமன்றங்களில் சட்ட ஆளுமை சரிவர செயல்படாத நிலையிலும் கயவர்கள் பயமின்றி கடுங்குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்பது தெற்கு அமெரிக்க நாடுகள், இந்தியாவில் உ.பி., பிகார் போன்ற மாநிலங்கள் சான்று.
 உதாரணமாக, குற்றங்கள் நிறைந்த தெற்கு அமெரிக்க நாடுகளில் கொலையின் விலை சராசரி சிறை வாசம் மூன்று மாதம். முதல் கைதான பிறகு மூன்று மாதத்தில் வெளி வருகிறார்கள், வழக்கு முடிவதில்லை.
 நமது நாட்டில் பதிவான வழக்குகளில் 86% குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், 38 சதவீத வழக்குகள் தான் தண்டனையில் முடிகின்றன. அமெரிக்காவில் 51%, இங்கிலாந்தில் 79% வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படுகின்றன.
 வன்முறை குறைய வேண்டும் என்றால் வலிமையான கூட்டணி தேவை. ஆம்! நேர்மையான அரசு அதிகாரிகள், அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள், நல்லியல்புகளை திறம்பட பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கூட்டணி நல்லவை நிலைக்கவும், பிறர்க்கு இன்னாசெய்யாமையின் சிறப்பை இயம்பவும் பாடுபட வேண்டும்.

'நல்லாட்சி, சட்ட ஆளுமை, அரசு அதிகாரிகள் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடாத நிர்வாகம், எல்லா சமுதாய அமைப்புகளையும் அரவணைத்து வழி நடத்தும் அரசு, இவை எந்த நாடுகளில், நகரங்களில் குறைவாக உள்ளனவோ அங்கு வன்முறை தலைதூக்கும்.'
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com