வருங்காலத் தூண்கள்

பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. பள்ளி முடித்தவுடன் பகுதி நேரமாக வேலைக்கு செல்கின்றவர்களும், தங்களது பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றவர்களும் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள்.
வருங்காலத் தூண்கள்
Updated on
2 min read

பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. பள்ளி முடித்தவுடன் பகுதி நேரமாக வேலைக்கு செல்கின்றவர்களும், தங்களது பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றவர்களும் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள்.

ஆனால், கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலைக்கு ஈடுபடுத்துவது குற்றம் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

உலகில் 25 கோடி குழந்தைத் தொழிலாளர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 10 கோடி பேர் பாதுகாப்பற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறது "யுனிசெப்' அறிக்கை.

புத்தகம் சுமக்க வேண்டிய பருவத்தில் கருங்கற்களையும் செங்கற்ளையும் சுமப்பதன் மூலம் குடும்ப பாரத்தைச் சுமக்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள் பிஞ்சுகளையும் காண்கிறோம். வகுப்பறைகளில் இருக்க வேண்டியவர்கள் பீடி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உருகுகின்றனர். ஆம், கரும்புகை ஆலைகளில் பாரதத்தின் வருங்காலத் தூண்கள்.

அதேசமயம் ஒருகாலத்தில் பல கோடியாக இருந்த சிறார் தொழிலாளர்களின் எண்ணிககை சில கோடிகளாகக் குறைந்திருப்பது சற்றுஆறுதலாக உள்ளது.

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1981-இல் 9.76 லட்சம். இது 2001-இல் 4.2 லட்சமாக குறைந்தது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான நடவடிக்கையே முழுக்காரணம் என்றாலும் சிறார் தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தில் அரசுகள் மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது.

14 வயதுக்குக்கீழ் உள்ள சிறார்களை எக்காரணத்தை முன்னிட்டும் வேலையில் அமர்த்தக்கூடாதென அரசியல் அமைப்புச் சட்டமும், அனைத்து துறைகளின் சட்டமும் எச்சரிக்கின்றன.

சிறார் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 1987-இல் தேசியசிறார் தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட்டது. அதே ஆண்டு சிறார் தொழிலாளர் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. 1996-இல் சிறார் தொழிலாளர் பிரச்னை தொடர்பான எம்.சி. மேத்தா வழக்கில் உச்சநீதிமன்றம் சிறார் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு காண சிலவழிகாட்டுதல்களை அளித்தது.

நாடு முழுவதும் உள்ள சிறார் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கவும், சிறார் தொழிலாளர்கள் குறித்து கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கவும், சிறார் தொழிலாளர் மறுவாழ்வைக் கருத்தில்கொண்டு தனி நிதியத்தை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சிறார் தொழிலாளர் மறுவாழ்வு நிதியம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் சிறார்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் இருந்து ரூ.20,000 அபராதம் பெற்று, அதனுடன் அரசு பங்களிப்பாக ரூ.5,000 சேர்த்து மொத்தம் ரூ.25,000 சிறார் தொழிலாளர்களின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியைச் சம்பந்தப்பட்ட சிறுவர் தனது கல்வி உள்ளிட்ட எதிர்கால நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 2003-இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயல்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் அபாயகரமான தொழில்களில் சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது

தமிழகத்தில் தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட 405 சிறப்புப் பள்ளிகளில் 16,830 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கு "யுனிசெப்'பின் நிதியுதவியுடன் சிறப்புப் பயிற்சிஅளிக்கப்படுகிறது. இங்கு பல மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளில் சேர்ந்து படித்து வருவதைப் பார்க்கும்போது மத்திய, மாநில அரசுகளை மனதாரப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

1979-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குருபாதசாமி கமிட்டி, பிரச்னையை ஆய்வு செய்து, நீண்ட காலம் பயனளிக்கக்கூடிய சில பரிந்துரைகளை செய்தது. வறுமை நிலை என்பது நீடிக்கும் வரை குழந்தை தொழிலாளர் முறையை நீக்குவது என்பது கடினம்.

ஆகவே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் பிரச்னையை தீர்க்க நினைப்பது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனையல்ல என்பது இந்த கமிட்டியின் கருத்து.

எனவே, உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடைசெய்ய வேண்டும் என்றும், மற்ற இடங்களில் முறையான கட்டுப்பாடுகளை விதித்து, வேலை செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

1986-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் தொழிலாளர் (தடை - சீரமைப்பு) சட்டமானது, உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கக் கூடிய தொழில்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற தடைவிதித்தும் மற்ற தொழில்களில், பணிச்சூழ்நிலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி குழந்தை தொழிலாளர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் உருவாக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குழந்தை தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கையின்படி, உடல் நலத்திற்குக் கேடுவிளைவிக்கக் கூடிய பணிகளில் மற்றும் ஆபத்தான செயல்முறைகளில் வேலை செய்யக் கூடிய குழந்தை தொழிலாளர்களை விடுவித்து, மறுவாழ்வளிப்பது பற்றி வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

வறுமையை அகற்றிவிட்டாலே 99 சதவீதம் சிறார் தொழிலாளர் முறையை ஒழித்துவிடலாம். சிறார் தொழிலாளர் முறையை ஒழிப்பது அரசுக்கு மட்டுமே உள்ள பொறுப்பல்ல. பொதுவாழ்வில் உள்ள ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com