இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் பெற்றவுடன் வாக்குரிமை அளித்த நாடு என்ற பெருமை பெற்றது நம் நாடு. பொதுத் தேர்தல் "ஜனநாயகத்தின் அற்புத நடனம்' என்று வர்ணிக்கப்படுகிறது. எவ்வளவோவிதமான கருத்துக்கணிப்புகளுக்கு இடையே தமிழக வாக்காளர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளிப்பார்கள் என்ற உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளர் அரசியல் களத்தில் கரடுமுரடான பாதையை கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது மிகப்பெரிய சவால்.
அரசியல் கட்சியிலிருந்து ஒரு வேட்பாளர் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் துவங்குகின்றன. விருப்பு மனு கொடுத்தவர்களில் ஒருவரைத்தான் வேட்பாளராக அறிவிக்க முடியும். ஆகவே, அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அவருடைய கட்சிக்காரர்களால் மட்டுமல்ல பொதுமக்களாலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறார். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் சில நாட்கள் கத்தி முனையில் நடப்பதுபோல மிகக் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் விமர்சிக்கப்படும். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். முக்கியஸ்தர்கள், சாமானியர்கள் என்ற பாகுபாடின்றி யாவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும். ஒரு சிறு தவறுகூட பெரிதாக்கப்படும், தீ போல் பரவி இவர் இப்படிப்பட்டவர் என்று முத்திரை குத்தப்படும்.
அரசியல் கட்சிகளின் சம்பிரதாயங்களில் ஒன்று எல்லா வட்டங்களிலும் உள்ள கட்சி பொறுப்பில் உள்ளவர்களைப் பார்த்து மரியாதை செலுத்துவது, சால்வை அணிவிப்பது, பூங்கொத்து அளிப்பது, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது என்பது. இது நல்ல ஏற்பாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வாய்ப்பு. அதற்குப்பிறகு எதிர் மரியாதை என்று பல தரப்பட்ட உறுப்பினர்கள் நேரில் வந்து உரிமையோடு நீண்ட கால உறவு போல வெகுளியாக உரையாடுவது ஒரு புதிய அனுபவம்.
போட்டியிடும் எல்லாக் கட்சிகளும் அந்தந்த தொகுதியில் பிரசாரத்திற்கு ஒரு இடத்தை தெரிவு செய்து அலுவலகம் அமைத்து கட்சிப் பணி துவங்கப்படும். நேரம், காலம், ராசியான இடம் பார்த்துதான் எல்லாம் நடக்கும், முடிவு செய்யப்படும். வாக்கு சேகரிக்க எங்கு சென்றாலும் அங்கு மக்கள் வழிபடும் வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை என்பது கட்டாயம்.இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.
பிரசார அலுவலகம் திறப்பு விழா முதல் நிகழ்ச்சி. நடக்கவிருக்கும் பணிகள் தங்கு தடையின்றி தொய்வின்றி நடை பெற வேண்டுதல் விடுத்து கட்சி களப்பணியார்களை ஊக்குவிக்கும் வகையில் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் முழக்கமிட நிகழ்ச்சி களை கட்டுகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் வருகை தந்து ஆசியளிப்பது ஒரு சம்பிரதாயம்.
வாக்கு சேகரிப்பது பற்றிய செய்தியை ஊடகங்களில் படித்ததுண்டு, ஆனால் களத்தில் இறங்கி வாக்கு கேட்பது என்பதை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. எல்லாவற்றையும் மறந்து இயல்பாக மக்களிடம் ஒன்றிவிட வேண்டும். சாதாரண மக்கள் விவரமாக இருக்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். ஆனால், முழுமனதோடு வரவேற்கிறார்கள்.
அந்தந்த இடங்களில் உள்ள அன்றாட பிரச்னைகள் பற்றி எடுத்து கூறுகிறார்கள். சிலர் வெறுப்போடு திட்டுகிறார்கள், சண்டையிடுகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட கஷ்டமோ பிரச்னையோயிருந்தால்கூட ஏதோ ஒரு விதத்தில் அரசியல்வாதிகள்தான் பொறுப்பு என எண்ணுகிறார்கள். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று இதற்காகத்தான் சொல்லப்பட்டதோ?
ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி மக்களை பார்த்து "திட்டுங்க எங்களை அடிங்க பட்டுக்கிறோம். ஆனால், எங்களுக்கு மறக்காம ஓட்டுப்போடுங்க' என்று உரிமையோடு கூறியது ரசிக்கும் படியாக இருந்தது.
அது ஒரு தனி உலகம். நதிக்கரையில் குடியிருப்பு என்பது எல்லோரும் விரும்பும் கனவுலக காணி நிலம். ஆனால் பக்கிங்காம் கால்வாய் குப்பைகள் நிறைந்த இடம். கழிவு நீர் பெருகும் இடம். ஆயினும் அங்கு ஒரு சிறு இடத்திற்குக்கூட போட்டா போட்டி. நெரிசல், போராட்டங்கள் நிறைந்த கஷ்ட ஜீவனம் இதுதான் குடிசை வாழ் மக்களின் நிலை. மாநகருக்கு பிழைப்பதற்காக கனவுகளோடு வரும் மக்களுக்கு வந்த பிறகுதான் கிராமத்து வாழ்க்கையின் சுகம் தெரிகிறது.
சென்னையில்தான் அதிகமான குடிசைப் பகுதிகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்குக் காரணம் அடையாறு, கூவம், கொசஸ்தலை என்ற மூன்று ஆறுகள் நகரில் பின்னிப்பிணைந்து சென்று கடலில் கலக்கிறது. இம்மூன்று ஆறுகளை இணைக்கும் பக்கிங்காம் ஓடை. பிழைக்க வந்த ஏழை மக்களுக்கு இந்த ஓடை, ஆற்றின் கரையோரம்தான் புகலிடம்.
குடிசை மாற்று வாரியம் நிரந்தரக் குடியிருப்பு கட்டியும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆதலால் நெரிசல், கால்வாய் அடைப்பு, தண்ணீர் தட்டுப்பாடு, குப்பை மேடு எல்லாம் தொடர் கதையாக உள்ளது.
ஒரே வீட்டில் பல குடித்தனங்கள், பண்ட பாத்திரங்கள் வைக்க இடமில்லை. ஒரே அறையில் இருக்க, சமைக்க, துணி துவைக்க, படுக்க என்ற நிலை, வாசக்கால் பக்கவாட்டில் பூஜையறை. ஆனால் குழந்தைகளுக்குக் குறைவில்லை.
வாக்கு சேகரிக்க குடிசை பகுதிகளுக்கு காலையிலேயே சென்றுவிட வேண்டும், தாரை தப்பட்டை புடைசூழ கட்டியம் கூற மேளம் மிக அவசியம். இல்லாவிட்டால் யாரும் வெளியே வர மாட்டார்கள். பல நூறு குடித்தனம் கொண்ட முட்டுச் சந்து விழாக்கோலம் பூண்டு விடும். குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்கள்.
மாலை நேரம் என்றால் குடிமகன்களும் சேர்ந்து கொள்வார்கள். வாஞ்சையோடு ஆரத்தி எடுப்பார்கள். மறந்தும் காசு பணம் போட்டுவிடக் கூடாது, கண்கொத்தி பாம்புபோல கவனித்துக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் படம் பிடித்து ஓலை அனுப்பிவிடும்
ஏழைகளுக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா. "அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வர்ரீங்க திரும்பி வருவீங்களா' என்று நக்கலடிப்பார்கள். "எங்க வீட்ல அஞ்சு ஓட்டு மூணு உங்களுக்கு ரெண்டு மத்தவங்களுக்கு' என்று கணக்கு சொல்வார்கள். "எங்களோடு ரெண்டு நாள் தங்கி பாருங்கைய்யா எங்க கஷ்டம் புரியும்' என்று முறையிடுவார்கள். ஓர் இளம் குடும்ப பெண் "இலவசமா ஏசி கொடுப்பீங்களா' என்று தனது ஆசையை பட்டவர்த்தனமாக தெரிவித்தார்.
மாடிவீடுகள், நடுத்தர பணக்கார குடியிருப்புகளில் ஏழைகள் கொடுக்கும் வரவேற்பு இல்லை. வாக்கு சேகரிக்க வருபவர்களை அனுமதிப்பதில்லை. பிரசார நோட்டீசும் வாங்குவதில்லை. சிபாரிசு பிடித்து வீடுகளை அணுக வேண்டும். சிலரது முக சுளிப்பை சகித்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கு அரசியலில் இண்ட்ரஸ்ட் இல்லை என்று பெருமையாக சிலர் கூறுவது வேதனை அளித்தது.
ஆனால் பல குடியிருப்பு நல சங்கங்கள் வரவேற்று பிரச்னைகளை விவாதித்தது நம்பிக்கை அளித்தது. ஏழைக் குடியிருப்புகளில் வயதானவர்களைப் பாதுகாக்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அத்தகைய காட்சிகள் மேலோர் வீடுகளில் இல்லை. இளசுகள் இருந்தால் பெரியவர்கள் இல்லை, ஒட்டாத தனி வாழ்க்கை என்பது வருத்தமளிக்கும் உண்மை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிவ்ரே என்ற கிராமம். அங்கு விளைச்சல் இல்லை. வானம் பார்த்த பூமி. மழை பொய்த்ததால் வறட்சி. பஞ்சம் பிழைக்க நகரங்களுக்குச் செல்ல வேண்டும். பலர் சாராயம் காய்ச்சுவது, போதை பொருள் விற்பது போன்ற இழி செயல்களில் ஈடுபட துவங்கினர். அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு முடிவெடுத்தனர்.
ஊழலில் திளைத்த நிர்வாகத்தை மாற்றியமைக்க கிராம அதிகாரி (ஸர்பஞ்ச்) தேர்தலில் போட்டியிட்டனர். பட்டப் படிப்பு படித்த இளைஞர் பாவார் என்பவரை களத்தில் இறக்கினர். கிராம மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றிபெற்றால் எந்த ஒரு முடிவும் கிராம மக்கள் ஒப்புதலுடனே எடுக்கப்படும் என்ற உறுதியளித்தனர்.
மக்களும் நம்பி வாக்களித்தனர். வாக்குறுதி அளித்ததுபோலவே கிராம சபையை கூட்டி, கிராம வளர்ச்சிக்கு உடனடி தேவை என்ன என்பதை விவாதித்தனர்.
பள்ளிக்கூடம் நிறுவுவது முதல் தேவை என்பது தெரிவிக்கப்பட்டது. அந்த கிராமத்தில் காலியாக இருந்த ஒரு வீட்டில் படித்த ஒருவரை ஆசிரியராக நியமித்து உடனடியாக பள்ளி துவக்கப்பட்டது. அதேபோல் அடுத்த நடவடிக்கையாக கள்ளச்சாராய பழக்கத்தை மக்கள் ஒத்துழைப்போடு முறியடித்தனர்.
மகாராஷ்டிர அரசின் கவனமும் ஹிவ்ரே கிராமம் பக்கம் திரும்பியது. நலத்திட்டங்கள் கிராம மக்கள் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டன. ஹிவ்ரே தற்போது மாதிரி கிராமமாக மாறியுள்ளது.
பல அரசு நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மக்களின் தேவைகளை உணர்ந்து உடனடி தீர்வு அளித்தால் பயன் ஏற்படும், காலம் விரயமாகாது. அரசு களப்பணியில் எல்லோரும் முனைப்பாக செயல்பட்டால் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிறைவு ஏற்படும்.
ஹிவ்ரே கிராமம்போல எல்லா இடங்களிலும் மக்கள் ஒன்றுபட்டு ஆக்கப்பூர்வமாக உழைத்தால் முன்னேற்றம் நிச்சயம்.
கட்டுரையாளர்: சட்டப் பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.