வாழ்க்கை வாசனைகளால் ஆனது. வாசனை என்றாலே பூக்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். வாசனைகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவையாக எவ்வளவோ வாசனைகள் இருக்கின்றன.
பல ஆண்டுகள் கடும் பயிற்சிக்குப் பிறகே கைகூடும் திறமைகளை ஒரு குழந்தை சிறுவயதிலேயே பெற்று விடுமானால் அதை "பூர்வ ஜன்ம வாசனை' என்று சொல்லுகிறோம். இப்படி போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையோ என்பதற்கு வாசனை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது நயம்.
பள்ளிக்கூட பாடப் புத்தகங்களை வாங்கிய கையோடு அவற்றைப் புரட்டி முகர்ந்து பார்க்காத குழந்தைகள் உண்டா? இதைத்தான் எழுத்து வாசனை என்பதோ?
மளிகைக் கடையில் பலவிதமான மளிகைச் சாமான்களின் வாசனையும் கலந்து ஒரு கலந்துகட்டியான வாசனை இருக்கும். மாவு மெஷினில் மிளகாய் அரைக்கும்போது அந்த நெடியையும் மீறி நாசியை நெருடும் வாசனையை அநுபவித்திருக்கிறீர்களா?
"நட்சத்திரங்களுக்கும் நறுமணம் உண்டு' என்று ஒரு கதையில் காண்டேகர் சொல்லியிருப்பார். நட்சத்திரங்கள் வானத்தில் மலரும் பூக்களாம்!
பென்சில், பேனா, நோட்டுப் புத்தகம், பலூன் இவையெல்லாம் விற்கும் கடைகளை அந்தக் காலத்தில் "ஷாப்புக் கடை' என்பார்கள். அதற்கென்று ஒரு பிரத்யேக வாசனை உண்டு.
நான் படித்த பள்ளிக்கூடத்தில் நாகலிங்கப் பூக்கள் கொட்டிக் கிடக்கும். பல பள்ளிக்கூடங்களில் நாகலிங்க மரம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் நாகலிங்கப் பூக்களின் நறுமணம் பள்ளி நினைவுகளைத் தூண்டுகிறது. மனோரஞ்சிப் பூவை முகரும்போது எந்தப் பூவை நினைத்துக் கொள்கிறீர்களோ அந்தப் பூவின் வாசனை வீசுமாம். இது வாசனை அல்ல; வசியம்!
பாண்ட்ஸ் பவுடர் வாசனை அம்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. குளித்து விட்டு வந்த பிறகு அம்மா பாண்ட்ஸ் பவுடரில் ஒரு முறை குளிப்பார். தஞ்சாவூர் அய்யங் கடைத் தெருவில் கோடைப் பந்தல் வேய்ந்து குளுமையாக சேர்ந்து பூஜை சாமான்கள், ஜவ்வாது, அத்தர் முதலான வாசனையும் கலந்து அந்த இடமே நடந்து போக ஆனந்தமாக இருக்கும்.
குழந்தையை உச்சி மோந்தல் என்பார்கள். குழந்தையின் உச்சந்தலைக்கென்ற ஒரு வாசனை இருக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி, பவுடர் பூசி மை திருஷ்டிய பொட்டு வைத்து கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். அப்போது வருகிற வாசனை அலாதியாக இருக்கும். ஜனனத்தின் வாசனை அது!
விரல்களில் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும்போது கிடைக்கிற வாசனை மனசைப் பரவசப்படுத்தும்.
அது என்ன மாயமோ, என் அப்பா காலையில் பள்ளிக்கூடத்திற்கு போட்டுச் செல்லும் சட்டை மாலைவரை கசங்காமல் இருக்கும். சட்டையில் வீசும் சலவை வாசனையும் கசங்காமல் இருக்கும்!
வயதான முதியவர்களின் உடலுக்கென்று ஒரு தனியான வாசனை உண்டு. அந்த வாசனையோடு வெற்றிலை பாக்கு புகையிலை வாசனையும் சேர்ந்து ஒரு ரம்யமான வாசனை கிடைக்கும்.
அந்தக் காலத்தில் குதிரை வண்டிகளில் வைக்கோல் திணித்த விரிப்பில் உட்கார்ந்தபடி பயணம் செய்யும்போது வண்டிக்குள் ஒரு வாசனை வீசும் பாருங்கள். குதிரை வாசனையும் சேர்ந்த தனி வாசனை அது.
நறுமண மருத்துவம் என்று சிகிச்சை முறையே உள்ளது. வாசனைகளின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எலுமிச்சம் பழ வாசனையை நுகர்ந்தால் வாந்தி எடுக்கும் உணர்வு நின்றுவிடும்! மல்லிகைப்பூ வாசனை தூக்கத்தை வரவழைக்கும்! ஆப்பிள் வாசனை ஆரோக்கியம் தருவது! சந்தன வாசனை ரத்த ஓட்டத்தை சீராக்கும்!
எந்த ஒரு சுவையான பதார்த்தத்தை சாப்பிடும் முன்னதாக அதன் வாசனையை முதலில் சாப்பிடுகிறோம்.
நெருப்புக்கும் வாசனை உண்டு என்கிறான் பாரதி. எனக்கு "நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்!' என்று பாடுகிறான். நெஞ்சில் கனல் "மணக்கிறதாம்!' உலகில் எந்த ஒரு கவிஞனுக்கும் தோன்றாத கற்பனை இது! கற்பனையல்ல, கவிதைச் சன்னதம்!
சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுப் பெரியவர் ஒருவர் திவ்யப்பிரபந்தப் பாராயணம் செய்து கொண்டிருப்பார். பழுப்பேறிய அந்தப் புத்தகத்தைப் புரட்டினால் தாழம்பூ வாசனை வீசும். "பல வருஷங்களுக்கு முன்னால் தாழம்பூ மடல் ஒரு சிறு கீற்று அடையாளத்துக்காக வைத்தது; இன்னும் மணக்கிறது' என்று சிரிப்பார் பெரியவர். தாழம்பூ வாசனை அவர் சிரிப்பாகவும் மலர்ந்தது போல இருக்கும்!
பசுஞ் சாணம் மெழுகிய குடிசை வீட்டுத் திண்ணையின் வாசனைக்கு ஈடாக வைத்துப் பார்க்க எதுவுமே இல்லை.
வீட்டுக்குள் வைத்திருக்கும் மாயவரம் பாதிரி மாம்பழ வாசனையும் பண்ருட்டி பலாப்பழ வாசனையும் தெரு முனையில் வருபவருக்கும் தெரிந்துவிடும். தீபாவளியின் பட்சண வாசனையையும் பட்டாசு வாசனையையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் புதிதாகத் தைத்த சட்டையின் இனம் புரியா வாசனை.
ஒருவருக்கு வாசனை இன்னொருவருக்கு துர்நாற்றம் என்பதற்கு கதை ஒன்று சொல்வது உண்டு. பூக்காரி வீட்டுத் திண்ணையில் மழைக்கு ஒதுங்கிய மீன்காரி பூ "நாற்றம்' தாங்காமல் மீன்கூடையை தலையில் கவிழ்த்துக் கொண்டு தூங்கினாளாம்!
இப்படி, ஒருவருக்குப் பிடித்த வாசனை மற்றொருவருக்குப் பிடிக்காத வாசனையாக ஆவதும் உண்டு.
உலகில் எல்லாருக்கும் பிடித்த வாசனை என்று ஏதாவதொன்று இருக்க முடியுமா என்று யோசித்தபோது தோன்றியது ஒரே ஒரு வாசனைதான்.
அது, நாம் வங்கியிலிருந்து வாங்கியவுடன் விரல்களால் புரட்டியபடி முகர்ந்து பார்க்கும் புத்தம் புதிய கரன்ஸி நோட்டுக்களின் வாசனைதான்.
என்ன என் ஊகம் சரிதானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.