சமுதாயம் அன்றும், இன்றும்

மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும்.
Updated on
2 min read

மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும்.

"ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'

-என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக முன்நிற்கிறது.

துறவிகள் யாவர்?

இல்லற வாழ்வினும் உலகப் பற்றுகளை அறவே துறந்து தனியே ஒதுங்கி வாழ்வதே உய்யும் வழி என்ற காலம் இருந்தது. திருவள்ளுவரும் இல்லறத்தின் சிறப்பை எடுத்தோதி,

"தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்' (குறள் 348)

என்று துறவிகளைக் குறிப்பிடுகிறார். அதாவது, முற்றுந் துறந்தவரே வீட்டுலகம் அடைவார். அங்ஙனம் துறவாதவர் பிறப்பு வலையில் மயங்கி வீழ்வர் என்பதாம். சமுதாயத்தில் துறவிகளுக்குப் பெருமதிப்பு இருந்து வந்தது.

ஆழ்வார், நாயன்மார் காலத்தில் இந்நிலைமையில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. இல்லறத்தாரேயாயினும் இறைவனிடம் பக்தி பூண்டொழுகிய அடியவர்களுக்கே மதிப்பு ஏற்பட்டது. துறவிகளும் உலகை வெறுக்காமல், அவர்களுடன் இணைந்து கோயில் வழிபாடு ஆற்றிவந்தனர். இன்றோ, நிலைமை மாறிவிட்டது.

துறவிகளும் தமக்கென அமைப்பும், மடங்களும் நிறுவி, பொன்னும், பொருளும் சேர்த்து, விருந்தோம்பல், ஆன்மிக வல்லுநர்களைப் போற்றுதல் போன்ற பற்பல அறங்கள் நடத்தி வருகின்றனர்.

சமுதாய மாற்றம்: அக்காலத்தில் பொருள் சேர்த்து வைத்துச் செல்வராய் விளங்கிய சிலருக்கு அடங்கி, உழைத்து, அந்த உழைப்பின் கூலியைச் செல்வரின் அருளுதவி என மதித்து நன்றியுணர்வோடு வாழ்ந்தனர். ஆனால், இன்றோ அதை உதவியாக எண்ணாமல் உழைப்பின் உரிமை என்று எண்ணுமாறு அரசு பல சட்டங்கள் இயற்றி வருகிறது.

கல்வி முறை அன்றும் இன்றும்: மாணாக்கர் என்பார் அக்காலத்தில் வைகறைப் பொழுதில் எழுந்து ஆசான் இல்லம் சென்று வழிபட்டு அவரைவிட்டு நீங்காதவனாகி, அன்பு உள்ளத்தனாய் சித்திரத்தில் எழுதப்பட்ட பாவைபோல் அசையாதவனாய் அவர் உரைத்தவை எல்லாம் மனத்தில் பொருந்த கேட்பவராய் இருந்தனர்.

அவ்வாறே ஆசிரியரும் மாணவர்களை தம் பிள்ளைகளாகவே நடத்தி, கற்பிக்கும் முன்னர் தாம் வழிபடும் கடவுளை மனத்தில் இருத்தி, உரைக்கப்படும் பாடத்தை உள்ளத்தில் அமைத்துக் கொண்டு மாணாக்கர் உள்ளம் கொள்ளுமாறு கற்றுக் கொடுத்தனர்.

ஆசிரியர்-மாணவர் உறவு அன்றுபோல் இன்று இல்லை. இன்று மாணவர் கவனத்தைத் திசை திருப்ப ஊடகங்கள், தொலைக்காட்சிகள் போன்றவை நூல்கள் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிட்டன.

ஆசிரியர் எங்ஙனம் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்குப் பயிற்சிக் கல்லூரிகள் நாடு முழுவதும் இன்று உள்ளன. இத்தகு பயிற்சி இல்லாமலேயே கற்பிக்கும் திறமை அக்காலத்தில் இருந்ததைச் சங்க நூல்களால் உய்த்து உணர முடிகிறது.

குழந்தை வளர்ப்பு முறை: குழந்தை வளர்ப்பு முறை பற்றி குறளில் யாங்கணும் குறிப்பிடப்படவில்லை. பழங்கால வளர்ப்பு முறைவேறு. இக்காலத்து உளநூலார் அறிவுறுத்தும் முறைவேறு. திருவள்ளுவர் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் உரைத்துள்ள கருத்துகளோ இன்று மட்டும் அல்லாமல், என்றும் போற்றத் தக்கக் கருத்துகளாக உள்ளன.

சான்றாக ஒரு குறள்:

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது' (குறள் 68).

இக்குறட்பாவில் தம்மை விடத் தம் மக்கள் அறிவுடையராக இருத்தல், உலகத்து உயிர்களுக்கெல்லாம், தம்மினும் இனியதாகும் என்கிறார் திருவள்ளுவர்.

தம் மகனைச் சான்றோன் என உலகம் சொல்லக் கேட்ட தாய், ஈன்ற பொழுதினும் பெரிதும் உவப்பாள் என்றும் இவ்வறிவார்ந்த மகனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று யாவரும் சொல்லக் கேட்டு தந்தை இன்புறுவார் என்றும் திருவள்ளுவர் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார். இக் கருத்தாக்கம் இன்றைக்கும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

தம் இளம் பருவத்தில் தமக்கு ஏற்ற வசதி வாய்ப்புகள் இன்மையாலும் பொருளாதாரப் பயன்பாட்டில் பின்தங்கிய நிலையில் இருந்தமையாலும், போதிய இயற்கை அறிவு இருந்தும் உயர் கல்வி பெற இயலவில்லையே என்ற ஏக்கம் பெற்றோர்களுக்கு இருந்துவருகிறது. அக்குறையைப் போக்க, பல்லாற்றான் உழைத்து தம் மக்கட்கு உயர் கல்வி கொடுத்து மகிழ்ச்சியுறுகின்றனர்.

அன்று முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு இருந்ததாக யாண்டும் காணப்படவில்லை. இன்று, உடலும் உள்ளமும் நலிந்து முதியோர் இல்லத்தில் அல்லலுற்று கண் கலங்க, பிள்ளைகளோ எல்லா நலங்களும் பெற்று இனிய சூழ்நிலையில் தன் பெற்றோரை மறந்து வாழ்ந்து வருகின்றனர். தம் உடலை வருத்தி உழைத்து ஆளாக்கிய தம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் தவிக்கவிட்டு நல்வாழ்வு வாழ்ந்திடும் இப் பிள்ளைகளைப் பெறுதற்கு இவர் பெற்றோர் நற்றவம் ஏதும் செய்யவில்லையோ - என்னும் சொல்லை உண்டாக்குகின்றனர்.

நன்றி மறக்கும் இந்நிலையை மாற்றி முதியோர் இல்லங்கள் உருவாக்குதற்கு இடந்தராமல் அவர்களைக் போற்றுதல் இன்றைய இளைஞர்களின் தலையாய கடமை. இத்தகு செயற்பாடு நம் வருங்கால தலைமுறையினருக்கும் ஒருசிறந்த பாடமாக அமையும்.

புலவர் தி. வே. விஜயலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com