

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல சீர்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், உள்ளாட்சி பொறுப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்றமிகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட், பிகார், ஒடிஸா போன்ற பின் தங்கிய மாநிலங்களில் அன்றாட வாழ்வுக்கே போராட்டம். கல்வி அறிவு குறைவு, முற்போக்கு சிந்தனைகளுக்கு இடமில்லை; ஆண் ஆதிக்கம், அடக்குமுறை அதிகமாக இருக்கும். பெண்கள் ஒடுக்கப்பட்டே இருப்பார்கள். கிராமப்புரங்களில் கேட்கவே வேண்டாம்.
அரசியல் சாசனம் 73-ஆவது சட்டத் திருத்தம் பஞ்சாயத்து நிர்வாக அமைப்பிற்கு வழிவகை செய்து, மக்களுக்கு உள்ளாட்சியில் பங்கு கொடுத்துள்ளது. பெண்களுக்கும் ஆட்சியில் இடமளித்து சுதந்திர சுவாசம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் கொணர்ந்து பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை ஐம்பது சதவீதம் உயர்த்தியது மிகப்பெரிய சாதனை.
ஆண் ஆதிக்கம் நிறைந்த பொறுப்புகளில், பெண்கள் அதிகமாக தலை எடுத்தால் தான் உண்மையான பெண்ணுரிமை நிலைக்கும். இன்னும் நமது சமுதாயத்தில் பெண் செய்யக்கூடாதவை பட்டியல் தான் அதிகம். அவள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை.
ஏன் சுற்றவேண்டும்? என்ற தலைப்பில் மும்பையில் ஓர் இயக்கம் நடத்தி வருகிறார் நேஹா சிங் என்ற பெண். அவள் வைக்கும் கேள்வி ஒன்று தான் - ஏன் பொது இடங்களில், இரவு நேரங்களில் பெண்கள் செல்லக்கூடாது? அதற்கு ஏன் சமுதாயம் மறைமுகமாகத் தடை விதிக்கிறது? அகால இரவு வேளையில் பெண் தென்பட்டால் ரோந்து காவலர் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை எப்போது மாறும்? மாறிவரும் காலகட்டத்தில் இரவு நேரத்தில் பெண்கள் ஏன் ஆண்களைப் போல் சுதந்திரமாக சுற்றக்கூடாது?
உண்மைதான். சமுதாயத்தின் பார்வையும் தெளிவடைய வேண்டும். காந்தி மகான் சொன்னாரே "எப்போது ஒரு பெண் நகை அணிந்து இரவு நேரத்தில் பயமின்றி செல்ல முடிகிறதோ, அப்போது தான் நிலையான சுதந்திரம் அடைந்தோம்' என்று. இன்று அதன் கருத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு செல்வதற்கு பாதுகாப்பை பலப்படுத்தாது தடை விதிக்கும் அணுகுமுறை எவ்வளவு தவறானது? பெண்களைப் பொத்தி வைக்கும் பாகிஸ்தானிலும் ஆண்கள் புழங்கும் கேளிக்கை விடுதிகளுக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்று கேட்கத் துவங்கி விட்டார்கள்.
சமுதாய எண்ணங்கள் மாறும் பொழுது அதற்கேற்றவாறு நிவாரணங்களும் தேவை. உள்ளாட்சிப் பொறுப்பில் பெண்கள் இருப்பது இத்தகைய மாற்றங்களை எதிர்கொண்டு சுதந்திரத்தை தடைசெய்யாமல் ஒழுங்குபடுத்த முடியும்.
தில்லியில் நடந்த நிர்பயா தாக்குதலுக்குப் பிறகு வன்புணர்ச்சி சட்டம் வலிமையாக்கப்பட்டது. காவல் துறையினரால் பதிவு செய்யப்படும் வன்புணர்ச்சி குற்றங்களும் அதிகமாயின. 2014-ஆம் ஆண்டு 37,413 குற்றங்கள் நாடெங்கிலும் பதிவாயின.
பெண் சிசுக்கொலை பல மாநிலங்களில் பெரும் பிரச்னையாக உள்ளது. மக்கள் தொகை கணக்குப்படி, ஆறு வயதிற்குள்பட்ட குழந்தைகளில், 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்பது சராசரி விகிதம். ஆனால், அதுவே 106 ஆண் குழந்தை என்ற எண்ணிக்கையைக் கடந்தால் பெண் சிசுக்கள் வதைக்கப்படுகின்றன என்று அனுமானிக்கலாம்.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நூறு பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகள் எண்ணிக்கை விகிதம் 120-ஐ எட்டிவிட்டது. மகாராஷ்ட்ரம், குஜராத்தில் 112, உத்தரப் பிரதேசத்தில் 111. தென் மாநிலங்களில் சராசரி 106. வரம்புக்குள் இருப்பது, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அதிக விழிப்புணர்வை குறிக்கிறது. அதுவும் தமிழகத்தில் தொட்டில் குழந்தை திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான பெண் சிசுவதைகளைத் தடுத்ததோடு மட்டுமன்றி பெண் குழந்தை பாதுகாப்பு, பராமரிப்பும் மேன்மையடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, உலகில் 25 நகரங்களைத் தெரிவு செய்து அந்நகரங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்துவது பற்றி திட்டம் வரைந்துள்ளது. அதில் தில்லியும் ஒரு நகரம். இருண்ட பகுதிகளைக் கண்டறிந்து தெரு விளக்குகள் அதிகப்படுத்துவது, பாழடைந்த இடங்களைச் சீரமைப்பது, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவது, குற்றம் நிகழும் இடங்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துவது இத்திட்டத்தில் அடங்கும். பெண்களுக்கு உதவி மையங்கள், தொல்லைதரும் நபர்கள் மீது துரித நடவடிக்கை, நம்பிக்கையை வளர்க்கும்.
அச்சிட்டாற்போல் பெண்களுக்கென்று சில பணிகள் என்ற நிலை மாறி, எல்லா பணிகளையும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக செய்யமுடியும் என்ற அளவில் சமுதாய மதிப்பீடுகள் முன்னேறினால் தான் பாலியல் குற்றங்கள் குறையும், பாதுகாப்பும் பலமாகும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் அதிகமாக பெண்களின் பங்களிப்பு இருத்தல் அவசியம். பெண்களுக்குரிய பிரச்னைகளை அவர்களால் தான் உணர்ந்து தீர்வு காணமுடியும்.
ஐ.சி.டி.எஸ். என்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை 1975-இல் துவங்கப்பட்டு கைக்குழந்தையிலிருந்து ஆறு வயதிலான குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது, தடுப்பூசி போடுதல், விளையாட்டுவழி கல்வி அளித்தல் போன்ற பல சேவைகள் அங்கன்வாடிகள் மூலம் ஏழை மக்களுக்கு அளித்து வருகிறது.
ஆரோக்கியமான குழந்தைகள் நாட்டின் செல்வங்கள். உள்ளாட்சி பொறுப்பில் மகளிர் இருந்து தாயுள்ளத்தோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இப்பின்னணியில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒரு புரட்சிகரமான முடிவு. இத்தகைய ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள மற்ற 16 மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு சட்டத்தின் சிறப்பு அம்சம் இந்த இடஒதுக்கீடு பஞ்சாயத்துகளில் மட்டுமின்றி பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் மற்ற மாநிலங்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சுழற்சி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். ஆனால், தமிழகத்தில் சுழற்சி பத்து வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படும். உதாரணமாக, ஓர் உள்ளாட்சி அமைப்பு பெண்களுக்கு என்று தெரிவு செய்யப்பட்டால் அது பத்து ஆண்டுகளுக்கு அவ்வாறே இருக்கும். பத்து ஆண்டுகளுக்கு ஓர் உள்ளாட்சி அமைப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களது ஆளுமை வளர்வதற்கு உதவும். பல பெண் தலைவர்கள் உருவாக வழி வகுக்கும்.
தமிழ் நாட்டில் பல பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் அபரிதமான பணி செய்து மக்கள் பாராட்டைப் பெற்றுள்ளனர். இராமநாதபுரம் மைக்கேல் பட்டினம் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஜேசு மேரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகாய மேரி, ஜாம்ருத் பீவி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் தலைவர்கள் வெகு சிறப்பாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் பெண்களுக்கு அதிகாரமளிப்பு மேம்படுத்தும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான சிறப்பாக பணி செய்தமைக்காக இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா குமாரி, ஒடிஸா மாநிலம் தபஸ்வினி நாயக் கொளரவிக்கப்பட்டனர்.
பிரியங்கா முதுகலை பட்டதாரி. கட்காமட் கிராம பஞ்சாயத்தில் பெண்குழந்தைகளுக்குக் கல்வி, கைக்குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து, எல்லோருக்கும் குடி நீர்,குழந்தை திருமணம் தடுப்பு, மது ஒழிப்பு போன்ற பல சமூக பிரச்னைகளைத் திறமையாகக் கையாண்டு சாதனை படைத்துள்ளார்.
ஒடிஸா மாநிலம் பாக்பட் சந்திரபூர் பஞ்சாயத்து தலைவி தபஸ்வினி, இளம் பருவ கஷ்ட ஜீவன நிலையை வென்று தனது கிராமம் மேம்பாடடைய பொறுப்பினை ஏற்று, சமுதாய கழிப்பறைகள் அமைப்பு, குழாய் மூலம் வீடுகளுக்குக் குடிநீர், முதியோர் தொகை சுமார் 600 பயனாளிகளுக்கு அளிப்பு என்று பல நலத் திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்றினார். இதில் முக்கிய சிறப்பு ஊழலில்லா நிர்வாகம்.
ஆயினும், பெண்களுக்கான சில உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்கள் பின்புலமாக செயல்படுவது கசப்பான உண்மை. இதையும் பெண்கள் அச்சமின்றி தகர்த்தெறிய வேண்டும்.
பெண் குழந்தைக்கு உதவித் தொகை, கல்வித்தொகை, திருமண நிதி உதவியோடு தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதி உதவி, மகளிர் சுகாதார வளாகங்கள், விலையில்லா "சானிடரி நாப்கின்', பெண்களின் சுய உதவிக் குழுக்கள், அவர்களுக்கு விலையில்லா செல்லிடப்பேசி, 200 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என்று பல பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகத்திற்குப் பெருமை.
பெண்கள் தேர்வில் சிறப்பாக வெற்றியடைவதால் ஐம்பது சதவீதத்திற்கும் மேலான பதவிகளைப் பெறுகிறார்கள்.
2030-ஆம் ஆண்டிற்குள் எல்லா நாடுகளிலும் மகளிருக்கு வாய்ப்பில் சரிபாதி அடையவேண்டும். அதற்கு எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும் என்று ஐ.நா. சபை இந்த ஆண்டு மகளிர் தினத்தின் முக்கிய குறிக்கோளாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதற்கும் மேலான உயர்வினை 2016-லேயே அடைந்து கொண்டிருக்கிறோம் என்று கர்வப்படலாம்.
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற பத்தாம் பசலித்தனம் மறைந்து உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு என்ற புதினம் இன்றைய புதுமைப் பெண்ணை அலங்கரிக்கிறது. அவளது நிமிர்ந்த நன்னடைக்கு பாதையில் உள்ள தடைக் கற்களை அகற்றுவது நல்லோரின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.