பாருக்குள்ளே நல்ல நாடு எனில்...

வாழ்கின்ற மண்ணுக்கு ஏற்றவாறுதான், மனிதர்களின் குணம் அமையும். பாலைவனத்தில் வாழ்பவர்கள், வழிப்பறி செய்துதான் வாழ முடியும்.
Published on
Updated on
4 min read

வாழ்கின்ற மண்ணுக்கு ஏற்றவாறுதான், மனிதர்களின் குணம் அமையும். பாலைவனத்தில் வாழ்பவர்கள், வழிப்பறி செய்துதான் வாழ முடியும். பனிப் பிரதேசத்தில் வாழ்பவர்கள், வேட்டையாடித்தான் வாழ முடியும். ஆனால், தமிழ்த் திருநாடு எல்லாரும் நல்லவராக வாழ்வதற்கு வகை செய்திருப்பதால், "தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா' என மகாகவி பாரதியார் பாடினார்.
 அத்தகைய நாட்டில் இன்று நடக்கின்ற ஆர்ப்பாட்டங்கள், அமளிதுமளிகள், பேரணிகள், நல்லவர்கள் மனத்தை நோகச் செய்கின்றன். பாரதியார் காலத்திலும், ஆச்சரியமான கொடுங்கோலங்கள், அவன் மனத்தைக் குத்திக் கிழித்திருக்கின்றன.
 பாரதி பாரத நாட்டின் பெருமை எதுவென்று சொல்ல வந்தவிடத்து, தந்தைக்காகவும் நாட்டு நலத்திற்காகவும், அரசாட்சியையும் பெண்ணின்பத்தையும் துறந்தாரே சந்தனு மகாராசனுடைய மகன் பீஷ்மர், அவருடைய வேண்டாமை எனும் தியாகம்தான் என்றார். பீஷ்மர் என்ற சொல்லுக்கே பயங்கரமான விரதத்தை உடையவர் என்று பொருள். எதிலும் பற்றற்று வாழ்ந்த மகாமனிதர்களின் பெருமைதான், பாரத நாட்டின் பெருமையாக நேற்றுவரை இருந்தது.
 ஒரு கல்லூரியின் முதல்வர் பதவியைக் கூடத் தகுதி அடிப்படையில் மட்டுமே பெற முடியும் என்பதை நிரூபித்த நாடு, நம் நாடு. சி.எப். ஆண்ட்ரூஸ் இங்கிலாந்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, பின்னர் இந்தியாவையே தாயகமாகக் கொண்டவர். அவர் தில்லியிலிருக்கும் ஸ்டீபன் கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
 அடுத்த சில நாள்களில் அக்கல்லூரிக்கு ஒரு முதல்வர் தேவைப்பட்டு, சி.எப். ஆண்ட்ரூசுக்கு வழங்க முன்வந்தனர். ஆனால், அங்கு ஏற்கெனவே முதல்வர் பதவிக்கு முழுத் தகுதி பெற்ற பேராசிரியராகச் சுசில்குமார் ருத்ரா எனும் இந்தியர் இருந்தார்.
 கிறித்தவ மதத்தினர் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் தாங்கள் நடத்தும் கல்லூரிகளில், முதல்வர் பதவியையும் நிதியாளர் பதவியையும் கிறித்தவர்களுக்கே வழங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், சி.எப். ஆண்ட்ரூஸ் முழுத் தகுதி பெற்ற சுசில்குமார் ருத்ரா இருக்கும்போது, தாம் பதவியைப் பெற முடியாது என்று மறுத்துவிட்டார்.
 மேலும், ருத்ராவுக்கு அப்பதவியை வழங்காவிட்டால், தம்முடைய விரிவுரையாளர் பதவியை ராஜிநாமா செய்வதோடு, களத்திலே இறங்கிப் போராடப் போவதாகவும் அறிவித்தார். நிர்வாகம் ருத்ராவை முதல்வர் ஆக்கியது. அவருக்குக் கீழ் மனநிறைவோடு ஆண்ட்ரூஸ் பணியாற்றினார்.
 ஒரு கல்லூரி முதல்வர் பதவி கூட, தகுதி அடிப்படையிலேயேதான் தரப்பட வேண்டும் என ஒரு காலத்தில் எண்ணிய நாடு நம் நாடு. ஆனால், இன்று சில முதல்வர் பதவி வேட்பாளர்கள், கனவிலேயாவது பதவியேற்பு விழா நடக்காதா எனத் தூங்காமலேயே திரிகிறார்கள். திருவிழாக் கூட்டத்திலே சிறுபிள்ளைகள் பலூனுக்கு அழுவதுபோல், இன்று சில அரைவேக்காடுகள் முதல்வர் பதவிக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்பதவியின் கண்ணியத்தைக் காத்த பெருமக்களும் இந்நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்.
 1947-ஆம் ஆண்டு ஆந்திரகேசரி பிரகாசம், முதல்வர் பணியில் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது காமராஜரும், ராஜாஜியும் வல்லபபாய் பட்டேலும், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை முதல்வர் பொறுப்பேற்கும்படி வற்புறுத்துகின்றனர். பிரகாசம் அமைச்சரவையில் ஓமந்தூரார் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியது, அவருக்குரிய தகுதியாகிற்று.
 ஓமந்தூரார் தமக்கு ஆங்கிலத்தில் பேச மட்டுமே முடியும், எழுத்துப் பிழையின்றி எழுத முடியாது என்பதால், அப்பதவியை ஏற்க மறுக்கிறார். காமராஜரும் வல்லபபாய் பட்டேலும் நெருக்கி வற்புறுத்தவே, ஓமந்தூரார் மூன்று மாதம் அவகாசம் கேட்கிறார். மூன்று மாத முடிவில் திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு முதல்வர் பதவியை ஏற்கிறார். முதல்வர் பதவியை ஏற்றவுடன், தம்மைப் போன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவரும், கதர்த் துணிகளைத் தலையில் சுமந்து விற்றவருமான கல்கி. கிருஷ்ணமூர்த்தியை அமைச்சரவையில் இடம்பெற அழைக்கிறார்.
 அழைப்பைப் பெற்ற கல்கி, ரசிகமணி டி.கே.சி.யிடம் ஆலோசனை கேட்கிறார். அதற்கு ரசிகமணி, "அமைச்சர் பதவி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்கும். நீங்கள் இப்போது வகிக்கும் வார இதழ் ஆசிரியர் பதவி உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும். எது சிறந்தது? என்பதைத் தாங்களே தேர்வு செய்யுங்கள்' எனக் கூறிவிட்டார். கல்கி தம்முடைய விருப்பமின்மையை ஓமந்தூராருக்குத் தெரிவிக்கவே, ஓமந்தூரார் கல்கிக்கு கீழ்வருமாறு ஒரு மடல் எழுதுகின்றார்.
 "அன்பார்ந்த கல்கி அவர்கட்கு, எனக்குப் பல ஆண்டுகளாகத் தங்களிடம் பெருமதிப்பு உண்டு. மந்திரி வேலை கொடு என்று என்னைப் பலர் தொந்தரவு செய்கிறார்கள். சில பேர் மந்திரி உத்தியோகம் கிடைக்காவிட்டால், கடலிலே விழுந்துவிடுவார்கள் போல் தெரிகிறது. நீங்கள் என்னவென்றால் நானாகக் கொடுக்கின்ற மந்திரிப் பதவியைக் கூட வேண்டாம் என மறுத்துவிட்டீர்கள். ஆகையினாலே உங்கள்மீது உள்ள மதிப்பு எனக்கு இன்னும் அதிகமாகிறது. தமிழ் வளர்ச்சிக்காகச் சில காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற உங்கள் யோசனைகளை எதிர்பார்க்கின்றேன். மந்திரியாக இல்லாவிட்டாலும், யோசனைகளைத் தாராளமாகத் தாங்கள் என்னிடம் வந்து சொல்லலாம்' என்பதே அம்மடல்.
 இந்த விவகாரம் எப்படியோ சில நேயர்களுக்குத் தெரிந்துவிடவே, ஒரு வாசகர் கல்கிப் பத்திரிகைக்கு எழுதி, அமைச்சர் பதவியை மறுத்தமைக்குக் காரணம் கேட்கிறார். அப்பொழுது ஆசிரியர் கல்கி, கல்கிப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருப்பதைக்காட்டிலும், அமைச்சர் பதவி பெரிதா எனத் தமக்கே உரிய நையாண்டியோடு பதில் தருகிறார்.
 "கொள் என ஒருவர் கொடுப்பது உயர்ந்தது; அதனை வாங்க மாட்டேன் என்பது அதனினும் சிறந்தது' என்றான் புறநானூற்றுப் புலவன் (கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று - புறம், 204-வது பாடல்). புறநானூற்றுப் புலவர் கண்ட கனவு, ஓமந்தூரார் வடிவிலும் அமரர் கல்கி வடிவிலும் சரித்திரச் சாட்சி ஆகியிருக்கின்றது.
 1964-ஆம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஓமந்தூரார்க்கு ஆளுநர் பதவி தர முடிவு செய்து, அதனை டி.டி. கிருஷ்ணமாச்சாரி மூலம் தெரிவிக்கச் சொல்கிறார். அதற்கும் ஓமந்தூரார் "தொடர்ந்து ஒருவரே பதவியில் அமர்வது ஆரோக்கியமான அரசியலன்று' எனச் சொல்லி மறுத்துவிடுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமுறை இருந்த ஓமந்தூராரை இரண்டாம் முறையும் அப்பதவியில் இருக்குமாறு முத்துரங்க முதலியார், காமராஜர், ராஜாஜி, உபயதுல்லா போன்றோர் வற்புறுத்துகின்றனர். என்றாலும், ஓமந்தூரார் அவ்வழைப்பை மறுக்கிறார்.
 ஆட்சிப் பொறுப்பில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பது நல்லது இல்லை என்பதைக் கம்பன் ஓர் எழிலோவியமாகத் தீட்டிக் காட்டுகிறான். கன்னத்தில் ஒருநரை முடியைக் கண்ட தசரதன் அதற்குமேல் பதவியில் நீடிக்கக்கூடாதென முடிவெடுத்து, அதனை வசிட்ட மாமுனியிடம் தெரிவிக்கின்றான். ஆனால், வசிட்டர் தசரதனே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
 அப்பொழுது தசரதன், இந்தப் பதவியை இனிமையானது என்று இனியும் எண்ணலாமா? பட்டத்து யானையின்மேல் வெண்கொற்றக்குடைக்கீழ் இருந்து ஆளும் ஆட்சி நிரந்தரமானது அன்று. மேலும், நெடுங்காலமாக உண்டு வந்த எச்சிலைத் தொடர்ந்து உண்ணுவது இன்பம் தராது என்பான் (இனியது போலும் இவ்வரசை எண்ணுமோ ... நெடிது நாள் உண்ட எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ: பாடல்கள்: அயோத்தியா காண்டம்: 1335, 1338). கம்பன் படைத்துக் காட்டிய லட்சிய சமுதாயத்துக்கு, ஓமந்தூரார் உதாரணமாகின்றார்.
 அன்றைக்கிருந்த நாகரிகமான அரசியலை எண்ணிப் பார்த்தால், இன்றைய நிலைமை அருவருக்கத்தக்கதாக இருக்கிறது. காமராஜர், குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதிக்காக நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆகிறார். அவரே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று தலைவர்கள் வற்புறுத்துகின்றனர். என்றாலும், காமராஜர் முதல்வர் பொறுப்பின் கனத்தை உணர்ந்து, "அப்பதவிக்கு டாக்டர் சுப்பராயன்தான் பொருத்தமானவர்; நான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டுமானால் இருந்து விடுகிறேன்' என்றார்.
 அன்றைக்கு இருந்த இந்தக் கண்ணியம், இன்றைக்குக் கிள்ளிப் பார்த்தாலும் கிடைக்கவில்லையே! விமானத்தில் பலபேர் உட்கார்ந்து பயணம் செய்யலாம். இருப்பினும், பயிற்சி பெற்றவர்கள் தாம் விமானத்தை ஓட்ட முடியும். ஆனால், இன்றைக்குப் பயணம் செய்து பழக்கப்பட்ட சில பேர்வழிகள், தாங்களே விமானத்தை ஓட்ட வேண்டும் என்று துடியாய்த் தடிக்கின்றனர்.
 1967-இல் தமிழகத்தின் முதல்வராக வந்த அண்ணாவிடம் மகத்தான கண்ணியம் இருந்தது. நெற்கதிர்கள் நன்றாக முற்றுவதற்கு முன் அறுவடை செய்யப்பட்டுவிட்டதாக உணர்ந்தார். அதனால், என்னைப் பதவியில் உட்கார வைத்துவிட்டதால் என் தம்பிகள் நிமிர்ந்து நடக்கின்றார்கள். ஆனால், நான் பதவியின் கனம் தெரிந்து குனிந்து நடக்கின்றேன் என்றார். அத்தகைய நல்லுயிர்கள் நீண்ட காலம் வாழ முடியாமல் போனதுதான், இந்நாட்டின் ஊழ்வினை ஆகும்.
 ஆட்சிக்கலை ஓர் அபூர்வமான கலை. இரண்டாவது உலகப் போரின்போது, உலகத்தைக் காப்பாற்றியவர் எனக் கொண்டாடப்பட்ட வின்சென்ட் சர்ச்சில், அடுத்த தேர்தலின்போது, வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அது குறித்துக் கேட்கப்பட்டதற்கு அங்குள்ள மக்கள், போர்க் காலத்திற்குத் தான் சர்ச்சில் தகுதியான பிரதமர். அமைதிக் காலத்துக்கு அட்லிதான் தகுதியானவர் எனக் கூறிவிட்டனர்.
 ஆட்சிக் கலையின் மகிமையைத் தெய்வச் சேக்கிழார் அற்புதமாகச் சொல்வார். ஆட்சித் தலைவனாக இருப்பவரால் மண்ணுயிர்க்குத் தீங்கு வரக்கூடாது. அவருடைய உறவினர்களால் மக்களுக்குத் தீங்கு நேரக்கூடாது. பகைவர்களால் தீங்கு வராமல் காக்க வேண்டும். கள்வர்களால் தீங்கு வராமல் காக்க வேண்டும். கொடிய விலங்குகளால் தீங்கு வராமல் காக்க வேண்டும் (திருநகரச் சிறப்பு, பாடல் 36) என்பார்.
 ஆனால், இன்று சிலம்பைத் திருடியவனே, பாண்டியனுடைய சிம்மாசனத்தில் உட்கார ஆசைப்படுகிறான். மாரீசனே, மனுநீதிச் சோழனுடைய ஆட்சிக் கட்டிலில் அமர ஆசைப்படுகிறான். வேடனே சிபிச் சக்கரவர்த்தியின் தராசாக இருக்க விழைகின்றான்.
 ரெம்மி ஆடுபவர்கள் ஐந்து பேர்களாக இருந்தால், இரண்டு கட்டுகள் போட்டு ஆடுவார்கள். ஆறு பேர்களாக அமர்ந்தால் மூன்று கட்டுகள் போட்டு ஆடுவார்கள். அதுபோன்று தன் கட்சி பலமிழந்திருக்கும்போது கூட்டணியைக் கூட்டுகிறார்கள். அப்பொழுதுதான் ஜோக்கர்கள் அதிகமாக வரும்.
 சீட்டை இழுக்கின்ற ஒவ்வொருவரும் ஜோக்கர் வராதா, ஜோக்கர் வராதா என்றே சீட்டை இழுப்பார்கள். அதுபோல, இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கின்ற காரணத்தாலேயே, முதல்வர் ஆகிவிடலாம் எனும் நப்பாசையில் திரிகின்றனர். ஜோக்கர்களே ஜோக்கர்களை எதிர்பார்த்து இழுக்கிறார்கள். இரண்டு கட்டுகள், மூன்று கட்டுகள் ஆவதுபோல், இரண்டுக் கட்சிகள் மூன்றாவது கட்சியோடு கூட்டணி அமைக்க அலைகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com