திருக்குறளில் வணிகம்

வாணிகம் என்ற அமைப்பு ஒரு சமுதாயத்துக்கு ஏற்றன செய்வதாகும். எனவே, சமுதாயத்துக்கு ஏற்றன செய்பவர் வாணிகர் ஆவர்.
திருக்குறளில் வணிகம்
Published on
Updated on
2 min read

வாணிகம் என்ற அமைப்பு ஒரு சமுதாயத்துக்கு ஏற்றன செய்வதாகும். எனவே, சமுதாயத்துக்கு ஏற்றன செய்பவர் வாணிகர் ஆவர்.

வாணிகர் எத்தகைப் பண்பு நலன் உடையவராக இருத்தல் வேண்டும் என்று நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. 1. தனிமையாற்றல், 2. முனிவிலன் ஆதல், 3. இடன் அறிந்து ஒழுகல் 4. பொழுதொடு புணர்தல் (காலத்தையொட்டி செயல்படுதல்),

5. உறுவது தெரிதல், 6. இறுவது அஞ்சாமை, 7. ஈட்டல், 8. பகுத்தல் என்னும் எண் குணங்களும் வாணிகர்க்கு உரியனவாம்.

தனிமை ஆற்றல் என்பதன் விளக்கமாகத் தனித்துவமாகச் செயல் ஆற்றல் என்பதனையும் சிறப்பாந் தன்மை அறிந்திருத்தல் என்பதனையும் முதன்மைப்படுத்திச் சொல்வர்.

தன்னையும், தான் விற்பனைக்கு விடுக்கும் பொருளின் தன்மையையும் அறிந்து செயல்படுபவனாக அவன் இருக்க வேண்டும்.

சரக்கு முறுக்கா, செட்டியார் முறுக்கா என்ற சொலவடை கேட்டிருக்கலாம். சரக்கும் முறுக்காக இருக்க வேண்டும்; சரக்கை விற்கும் செட்டியாரும் முறுக்காக இருக்க வேண்டும். இந்நிலை இருப்பதற்காக எழுந்த சொல்லே அது. இரண்டிலும் உயர்ச்சி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகின்றது. இவை பற்றிய சிந்தனைகளைக் கருதிப் பார்ப்போம்.

வீட்டுக்குச் சோறாக்க அரிசி வாங்க எண்ணுகிறோம். எத்தகைய அரிசியாக அது இருக்க வேண்டும்? நல்ல சன்னமான அரிசியே சாப்பாட்டுக்குச் சுவை கூட்டும். எனவே, அத்தகைய அரிசியையே நாட வேண்டும். அது விலை கூடுதலாக இருந்தாலும் சோறாக்கும் போது மிகுந்து விளங்கும். மேலும், வாங்கும் அரிசி, சில்லுகள்(குருணை) இல்லாமல் இருக்க வேண்டும். கல்லுகள், பழுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்; மணக்கும் அரிசியாக இருக்க வேண்டும். பச்சரிசியானால் வெண்மையாக இருக்க வேண்டும். புழுங்கலரிசியானால் வயிற்று வெள்ளையின்றி நன்கு புழுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக அவ்வரிசி பழைய அரிசியாக இருக்க வேண்டும். பழைய அரிசி என்பது நெல்லை அவித்து 6 மாத காலம் கழித்து அரிசியாக்கி அனுப்பப்படுவதாகும். ஈரப் பதமற்று, ஒண்டல்(புழு) விழாததாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கவனித்து வாங்குவதே தனித்துவமாகும். இத்தகைய அரிசிச் சோறு குழையாமல், மணமாக இருக்கும்.

ஆனால், இட்டலிக்கு, ஏற்ற அரிசி, மோட்டா அரிசியே அன்றிச் சன்ன அரிசி ஏற்றது அன்று.

மேலும், உளுந்து புத்தம் புதியதாக வந்துள்ளதே இட்டலிக்கு நயமாகும். பழைய உளுந்து, மாவு நிலையில் பொங்கி வராது. பொங்கி நிற்கச் செய்யும் புது உளுந்தே இட்டலிக்கு ஏற்றதாகும்.

அதுவே நயம் ஆரஞ்சுப் பழம் வாங்க வேண்டும் என்றால் அது எடையுள்ளதாக இருக்க வேண்டும். அதுவே சாறுவளம் மிக்கதாகும். ஆனால், ஆப்பிள் பழம் வாங்க வேண்டும் என்றால் அது எடை குறைவாக இருக்க வேண்டும். அதுதான் கனிந்து சுவையாக இருக்கும். இவ்வாறு இரண்டு பழங்களுக்கும் உள்ள எதிர் எதிரான நிலையினை அறிகிறான் வணிகன்.

தேங்காய் ஒன்று வாங்கினேன். எடை கூடியதாக இருந்தது. மேலும் குலுங்கவே இல்லை. அம்மா அதனைப் பெற்று ஆய்ந்துரைத்தாள். அடே.. தண்ணீர்தானே இதில் இருக்கிறது என்றாள். அதன்படிதான் கிடைத்தது. நிறைகுடம் குலுங்குமோ? தண்ணீர் முழுமையாக இருந்தது. அதனால் குலுங்கவும் இல்லை, எடை கூடியதாகவும் எனக்குக் காட்டி என்னை ஏமாற்றியது. பருப்புத் திண்ணமாக இல்லையே. எனவே பொருள் தேருதல் என்பது ஒப்பற்ற கலையாகும்.

வெந்து கெட்டது மீனு, வேகாது கெட்டது கறி - இப் பழமொழி வழங்குகிறதே. இதன் பொருள் என்ன? முற்றிய மீன்கள் நயமானவை. இள மீன்களோ, வெந்து நொச நொசத்துப் போய்விடும்.

இதற்கு நேர் எதிர்மாறாகக் கிழட்டு விலங்குகளின் கறி (இறைச்சி) வேகவே வேகாது. அதனால் சுவையற்றதாகும். எனவே தான் வேகாது கெட்டது கறி என்கிறோம். இளம் விலங்குக் கறியே மேன்மையானதாகும். அந்தக் கறியே வேகக் கூடியதாகும்.

எனவே, தனித்தும் அறிந்து, உயர்வான பொருள்களையே நாம் நம் வீட்டுக்கு வாங்குவது போல வணிகனும் தம் வாடிக்கையாளருக்கும் தம போல் வாங்கி விற்பனைக்கு விடுப்பானேயாகில், வணிகம் சிறக்கும், அவனும் சிறப்பான். எனவேதான், வான்புகழ் வள்ளுவன் கூறுகிறான் :

வாணிகம் செய்வார்க்கு வாணிகம்பேணிப்

பிறவும் தமபோல் செயின்

- அதிகாரம் 12 நடுவுநிலைமை குறள்(120).

இக்குறள் நடுவுநிலைமை என்னும் அதிகாரத்துக் கடைசிக் குறள். தம் வாடிக்கையாளர்களைத் தம போல் கருதி, உயர்ந்த பொருளைக் கொடுத்தாக வேண்டும்.

தமக்குப் போல் செயின் என்ற சமத்துவ நெறி, தராசின் வழி இரு பக்கத்தவரையும் சமமாகக் காணும் நடுநிலைமை இங்குச் சுட்டிக் காட்டப்பட்டு- அந் நன்னெறி நிறுவப்பட்டுச் சிறப்படைகின்றது, இக் குறள்மூலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com