தடைக் கற்களாக இருப்பது யார்?

நமது நாட்டில் 127 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால், நம் நாட்டில் 30 விழுக்காடு மக்கள் இரவு சாப்பாட்டிற்கு உணவு இன்றி பட்டினியுடன்

நமது நாட்டில் 127 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால், நம் நாட்டில் 30 விழுக்காடு மக்கள் இரவு சாப்பாட்டிற்கு உணவு இன்றி பட்டினியுடன் இரவை கழிக்கிறார்கள் என புள்ளி விபரம் கூறுகிறது.
 நமது நாடு கிராமங்கள் நிறைந்த நாடு, விவசாயம் மக்களின் முக்கிய தொழில், நாட்டின் நெற்களஞ்சியம் பஞ்சாப் மாநிலமாகும். தென்னகத்தின் நெற்களஞ்சியம் தமிழ்நாடு. கோதுமை, அரிசி நம் மக்களின் உணவாகும்.
 ஆலைகள், கல்விச் சாலைகள் என பல்வேறு திறன்களைக் கொண்ட பூமியில், பட்டினியுடன் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குத் தீர்வு காண வேண்டாமா? ஒளவையாரின் கூற்றுபடி, "ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண்' என்ற வைர வரிகள் எத்துணை உண்மையானது என்பதை உணர்ந்து பசியோடு வாழும் மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அரிசி, வீட்டு உபயோகப் பொருள்களை இலவசம் என்ற பெயரில் வழங்கி இல்லாதாரை மனம் நோகச் செய்யாமல் விலையில்லா பொருள்கள் வழங்கிடும் ஓர் உன்னத திட்டத்தை தமிழக அரசு மக்களுக்காக வழங்கி வருகிறது.
 மேலும் பல்வேறு மாநிலங்கள் உணவுப் பொருளை ஏழை எளியோர் பசிபோக்கிட வழங்கி வருகிறது. தற்பொழுது மைய அரசும் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்தியாவில் இனி பட்டினிச் சாவு நிகழாமல் இருக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
 அதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு பொது வினியோகத் திட்டத்தில், மக்களுக்கு மலிவு விலை அரிசி எனத் தொடங்கி, விலையில்லா அரிசி என திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
 நாட்டின் கணிசமான வருவாய் பெற்று வரும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், வங்கி, ரயில்வே போன்ற மாநில அரசு மற்றும் மைய அரசு பொதுத் துறையில் பணியாற்றும் நிரந்தர வருவாய் பெற்று வருவோர், அரசு வழங்கிடும் விலையில்லா அரிசி தங்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலைக்கு வருவார்கள் என்றால் அவர்களுக்கான உணவு பொருள் வினியோகத்திற்கான செலவுத் தொகை கணிசமாக மிச்சமாகும்.
 மாநில அரசும், மைய அரசும் பல்வேறு மானியங்களை மக்களுக்கு வழங்குகிறது. எரிவாயு, பெட்ரோல், டீசல், விவசாய மானியங்கள், முதியோர் ஓய்வூதியம், விதவைக்கான மானியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என பல்வேறு வகையில் மானியமாக வழங்குகிறது. இது போன்ற மானிய உதவிகளை விரிவாக செயல்படுத்தலாம். குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர இன்னும் கூடுதலாக உதவிடலாம்.
 ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசியல் கட்சிகளை வழிநடத்தும் தலைவர்கள், ஒழுக்கம் உள்ளவர்களாகவும், மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களாகவும், மக்களுடன் மக்களாக, எளிய வாழ்க்கை வாழ்பவராகவும் இருக்க வேண்டும். தன் சுயநலத்திற்காக தன் குடும்பம், தனது வாரிசுகளின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் மேம்பட மக்களை சுரண்டுபவர்களாக இருக்கக் கூடாது.
 பெருந்தலைவர் காமராஜ் தான் ஆட்சியில் இருந்த பொழுதும், ஆட்சியில் இல்லாத போதும் மிக மிக எளிமையாகவே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தான் சாகும் வரை, சாதாரண மக்கள் பயன்படுத்தும் அரிசியைத் தான் உண்டார். ஒருமுறை, அவர் உதவியாளர் உணவு பரிமாறும் பொழுது காமராஜர் சாப்பிடும் சோறு ஒரு வகையான துர்நாற்றம் அடித்தது. முகம் சுழித்துக் கொண்டு காமராஜரைப் பார்த்து உதவியாளர் கேட்டார். "நீங்கள் சாப்பிடும் அரிசி சமைத்தால் நாற்றம் அடிக்கிறது. நீங்கள் அனுமதி அளித்தால் வேறு அரிசி வாங்கி சமைக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட காமராஜர், "இந்த அரிசியைத் தானே நம் ஏழை மக்கள் சாப்பிடுகிறார்கள். நானும் ஏழை தான். இதுவே போதும். இந்த அரிசியை விட விலை மலிவாக கிடைத்தால் வாங்கி சமைத்து வை' என்று சொல்லி இருக்கிறார்.
 அமைச்சராக இருந்த கக்கன் தமது அமைச்சர் பொறுப்புகளை உரியவரிடம் ஒப்படைத்து தமக்குச் சேர வேண்டிய 66 ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு தலைமைச் செயலகத்தில் இருந்து தமது வீட்டுக்குப் பேருந்து ஏறி சென்றார். இது வரலாற்று உண்மைகள்.
 காமராஜரைப் போல், கக்கனைப் போல் நம் அரசியல்வாதிகளும் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன், எளிமையுடன் செயல்பட வேண்டும்.
 உலக அரங்கில் இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள். தன்னிறைவுப் பெற்ற நாடாக மாற தடைக்கல்லாக இருப்பது யார்? ஆட்சியாளரும் அதிகார வர்க்கத்தினரும், நாட்டைச் சுரண்டும் ஏகபோக முதலாளி வர்க்கமும் தான்.
 ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சாதாரண மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொள்கை முடிவு எடுப்பவர்களுக்கு சூரிய வெப்பத்தில் வியர்வைச் சிந்தி உழைப்பவர்களின் துயரம் எப்படி புரியும்? நாடு சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளாகின்றன. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்னும் அடிப்படைத் தேவைகளை நம் மக்கள் பெற்று விட்டார்களா?
 நம் இளைய சமூகத்திற்கு சுதந்திரம் பெற்ற வரலாற்றை சொல்லாமல் விட்டு விட்டோம்.÷கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி மட்டும் போராடவில்லை; பகத்சிங் போன்ற வீர மறவர்கள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு பெற்றது தான் சுதந்திரம். அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என அடிப்படை உரிமைகள் பெற்றுத் தந்தால் மட்டும் போதுமா?
 பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து விட்டது. ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி விட்டோம். தொழில் வளர்ச்சி கூடி விட்டது. உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரித்துவிட்டோம் என்று புள்ளி விவரங்கள் சொன்னால் போதுமா?
 சமதர்ம சமூகத்தை, ஜாதி ஒழிந்த சமூகத்தை, மதமாச்சரியம் இல்லாத மக்கள் மனதை, மன நல்லிணக்கத்தை உருவாக்கிட, ஆட்சியாளரும் அதிகாரவர்க்கமும் அரசியல் கட்சியை வழிநடத்தும் தலைவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
 வீடு, நாடு முன்னேற இளைய சமூகத்தினர் தமது பங்களிப்பைச் செலுத்திட வேண்டும். காலம் கனிந்துவிட்டது. களம் இறங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒவ்வொரு தனி மனிதனும் தத்தமது பங்களிப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
 உலக அரங்கில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு, சமாதானம், மனிதநேயம், குடும்ப உறவுகளைப் போற்றும் நாடு என்ற உன்னத நிலையை அடைந்து உலகுக்கு வழிகாட்டுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com