சாரைசாரையாகச் சென்று கொண்டிருக்கும் எறும்பு வரிசையிலே, தலைப்பிலே இருந்த எறும்பு, ஏதாவதொரு ஆபத்தால் சாக நேர்ந்தால், தொடர்ந்து வரும் எறும்புகள் ஆபத்தை உணர்ந்து, வந்த திசையிலேயே திரும்பிச் செல்லும். தலையை வெளியே நீட்டிக்கொண்டு ஊர்ந்து செல்லும் ஆமை, ஏதாவதொரு ஆபத்தை உணர்ந்தால், தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக்கொண்டு, அப்படியே கிடந்துவிடும். இடையூறுகள் நீங்கிய பின்தான், தன் பயணத்தைத் தொடங்கும்.
ஆனால், ஆறறிவு படைத்த நம் மண்ணின் மைந்தர்கள், முன்னெச்சரிக்கை இல்லாமையினாலே பட்டுப்பட்டுப் பட்டுப்போவார்களே தவிர, பாடம் கற்க மாட்டார்கள்.
1984-ஆம் ஆண்டு, டிசம்பர், 2 - 3 தேதிகளில் போபாலில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால், 23,000 பேர் ஒரே இரவில் மாண்டு போனார்கள். ஒரு கோடியே ஐம்பதினாயிரம் பேர்கள் இன்னும் முழு ஆரோக்கியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விஷ வாயுக் கசிவு யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்டால், அதனைத் தடுப்பதற்கு நான்கு அடைப்பான்கள் உண்டு. ஒன்று வேலை செய்யாவிட்டால், இரண்டாவது அடைப்பான் தானே அப்பணியைச் செய்யத் தொடங்கும். அப்படியே நான்கு அடைப்பான்களும். ஆனால், போபாலில் தோன்றிய நாள்தொட்டு, அந்த அடைப்பான்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால், ஒரு மிகப்பெரிய பேரிடரை இந்தத் தேசம் சந்திக்க நேர்ந்தது.
1952 சபரிமலைத் திருவிழாவின்போது ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தியதில், 68 பேர்கள் விபத்தில் மாண்டு போனார்கள். 1984-ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தில், கந்தாஷங்கடவு மாதா கோயிலில் ஒரு பெரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தியதில், 20 பேர் பரலோக சாம்ராஜ்ஜியத்தைச் சென்றடைந்தனர். 1990-இல் மாலாநடா பெருவிருத்தி கோயிலில் மாபெரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தியதில், 33 பேர் சிவலோக பதவி அடைந்தார்கள். இவைகளையெல்லாம் நாம் படித்தோமே தவிர, பாடம் கற்கவில்லை.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு, கோட்டயத்திலுள்ள பரவூரில் வீற்றிருக்கும் புற்றிங்கல் கோவில் திருவிழாவில் ஒரு வாணவேடிக்கை மாநாடே நடத்தி, ஓர் எரிமலை வெடிப்பதைப்போல், ரசாயன வாணங்களை வெடித்து, 113 பேர் இறப்பதற்கும், 350 பேர் படுகாயம் அடைவதற்கும், 500 பேர் தீக்காயங்கள் அடைவதற்கும் வழிவகுத்துவிட்டனர்.
80 வயதுடைய பங்கஜாட்சி ஆனந்தன் என்ற பெருமாட்டி மாவட்ட ஆட்சியர் ஏ. ஷைனாமுல்லிடம், வருடா வருடம் நடக்கின்ற வாண வேடிக்கைகளால், தான் வாழுகின்ற வீடு ஆட்டம் காணுவதாகவும், தான் ஓர் இதய நோயாளி என்றும் கூறி வாணவேடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியிருக்கிறார். பெண்ணுள்ளத்தைப் புரிந்துகொண்ட பெண்ணாகிய மாவட்ட ஆட்சியரும் அனுமதியை மறுத்தார். கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜே.கே. பிள்ளை அனுமதி கேட்டு விண்ணப்பித்தாரே தவிர, அனுமதி வழங்கப்படவில்லை.
மாவட்டக் காவல் துறையினரும் அனுமதி வழங்கவில்லை. தொலைபேசியில் யாரோ தெரிவித்ததைக் கோயிலார் அனுமதி என்று எடுத்துக் கொண்டனர். இந்த வாணவேடிக்கை, காசு வைத்து ஆடாத சூதாட்டம் போன்றது.
வாணம் தயாரிப்போரிடம் ஏற்பட்ட போட்டி - பொறாமை, கடற்படையும் வான்படையும் வருகின்ற அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. கால்பந்தாட்டப் போட்டியில் கால்வட்டம், அரைவட்டத்தில் இருக்கும் first leg, second leg போன்று, மூன்றாவது வட்டப் போட்டியின்போது பைப் லைன் வெடிகளை வைத்து வெடித்தனர். கபடிப் போட்டியிலே எதிரும் புதிருமாக வருவதுபோல், வேட்டுகளை வெடித்தனர்.
காவல் துறையினரின் அறிக்கைப்படி, 1 மெட்ரிக் டன் அளவுக்கு ரசாயன வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு வெடி மருந்து உற்பத்தியாளர் 10 லட்சம் மதிப்புள்ள வெடி மருந்தைத் தேக்கி வைத்திருந்தார்.
மற்றொருவர் 100 கிலோ எடையுள்ள வெடிமருந்தை ஒரு கான்கிரீட் கட்டடத்தில் தேக்கி வைத்திருந்தார். நடு இரவு 2.00 மணிக்கு அந்த ஊரே, இருள் மயமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரி நடு இரவு 2.16 மணித் துளிகளுக்குப் போதும் நிறுத்துங்கள் என்று பலமுறை எச்சரித்தும், ஆவேசக்கூட்டம் அடங்க மறுத்தது.
நள்ளிரவு 3.11 மணிக்கு மூன்றாங்கால் போட்டியின்போது 100 கிலோ வெடிமருந்து தேக்கி வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கட்டடத்தில், ஒரு ஸ்பிலிண்டர் வாணம் விழுந்து வெடித்ததில், அக்கட்டடமே நொறுங்கி விழுந்ததை மனோரமா பத்திரிகை நிருபர் பார்த்து, நொந்து போயிருக்கிறார். அந்த வெடிச் சத்தம் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கேட்டதாம். அவ்வூரில் நிறுவப்பட்டிருந்த ஸ்ரீ நாராயண குருவின் திருவுருவத்திலிருந்து, தலை மட்டும் துண்டிக்கப்பட்டுத் தனியே கிடக்கிறது.
நாற்பது ஆண்டுகளாக வாணவெடி தயாரித்து, வானத்தில் ஏவுவதில் ஜாம்பவானான பரவூர் கிருஷ்ணன் குட்டி முதல் பலியாகியிருக்கிறார். கோயில் நிர்வாகத்தினர் 15 பேர்களும் தலைமறைவு ஆயினர். இப்பொழுது ஏழு பேர் காவல்துறையினரிடம் சரணடைந்திருக்கின்றனர். பக்தி என்றால் இதுவா பக்தி? பக்தியை இந்த நாடு சொல்லிக் கொடுத்தது போல் எந்த நாடும் சொல்லிக் கொடுக்கவில்லையே? அது மென்மையான இழை ஆயிற்றே!
குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்கும் மகாத்மா காந்தியடிகளுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் பக்தியின் ஆழ அகலத்தைப் புலப்படுத்தும். காலையில் எழுந்தவுடன் சாந்திநிகேதனத்தில் தாகூர் நந்தவனத்துக்குள் உலாப் போனார். திரும்பி வரும்போது பார்த்தால் காந்தியடிகள் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த குருதேவர், மகாத்மாஜி, உங்களுக்கு ரசனையே கிடையாதா? காலையில் மேகக் கீற்றுகளுக்கு இடையிலிருந்து கதிரவன் வெடித்து வருவதை உங்களுக்குப் பார்க்கப் பிடிக்காதா? அதன் செங்கிரணங்களைப் பார்த்து உங்களுடைய இதயம் ஆனந்தம் அடையாதா?
காலை நேரத்துக் குயில்களும், வானம்பாடிகளும் தேவ கீதத்தை இசைக்கும்போது, அதைக் கேட்டு உங்களுடைய இதயம் துள்ளாதா? அதிகாலையில் ரோஜா மொட்டுகள் தங்களுடைய இதழ்களை விரித்து மலர்ச்சியைக் காட்டும்போது, உங்களுடைய மனசு பரவசம் அடையாதா என காந்திஜியிடம் கேட்டார்.
அதற்குக் காந்தியடிகள், குருதேவரே, நான் ஊமையன்று. உணர்ச்சியில்லாதவனும் அல்லன். மலரின் மலர்ச்சியைப் பார்த்தும், குயிலின் குரலைக் கேட்டும் இதயம் துள்ளாதவன் இல்லை. ஆனால், என்னுடைய ஒரே ஆசை, ஒரே கவலை, ஒரே நோக்கம் அரைகுறை ஆடையோடு, பசி, பட்டினியோடு திரிகின்ற தரித்திரநாராயணர்களின் முகத்தில் ரோஜா போன்ற மலர்ச்சியைக் காண வேண்டும் என்பதுதான்.
குயில்களும், வானம்பாடிகளும் அந்த ஏழைகளின் பெருமூச்சையும், ஏக்கத்தையும் என்று பாடுகின்றனவோ, அன்று கேட்பேன். அந்தக் கானம் பாடும் வானம்பாடிகள் போல் என்றைக்கு எந்நாட்டு ஏழை மக்களின் குரல் ஒலிக்கின்றதோ, அன்றைக்குக் கேட்பேன். சூரிய உதயத்தின் மலர்ச்சி, என்றைக்குப் பாமர மக்களின் முகங்களில் தென்படுகிறதோ, அன்றைக்குத் தரிசிப்பேன் என்றாராம்.
தரித்திரர்களைக்கூடத் தரித்திர நாராயணர்களாகப் பார்ப்பதுதானே பக்தி? கொல்லத்துப் புற்றிங்கல் கோயிலில் வீற்றிருப்பவள் பராசக்தி. அவள் வாண வேடிக்கைகளை விரும்பமாட்டாள். சல்பர் போன்ற ரசாயன வெடிமருந்துப் பொருட்களைப் போற்ற மாட்டாள்.
அவள் எதை விரும்புவாள் என்பதை மகாகவி பாரதி அற்புதமாகப் பாடியிருக்கிறான். பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி, பசிபிணிகள் இல்லாமல் காக்கச் சொல்லி, உத்தமநன் னெறிகளில் சேர்க்கச் சொல்லி, உலகளந்த நாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே என பாரதி, பக்தியின் பரிணாமத்தைப் பகுத்துரைக்கின்றார்.
வாணவேடிக்கை என்று வானத்தையும், மண்ணையும் அசுத்தப்படுத்துகின்ற மனிதர்களைப் பார்த்துப் பாரதியார் தானே ஒரு வான வேடிக்கையைப் படைக்கின்றார். வானத்தில் இல்லாத பூத்திரிகளையா, வானத்தில் இல்லாத பூக்களையா, வானத்தில் இல்லாத மின்னல்களையா, வானத்தில் இல்லாத வண்ணங்களையா, வானத்தில் இல்லாத நட்சத்திரங்களையா அவர்கள் காட்டப் போகிறார்கள்? என்று பாஞ்சாலி சபதத்தில் ஓர் உயிரோவியத்தையே தீட்டிக் காட்டுகிறார் அந்த மகாகவி.
இந்திரப்பிரத்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு புறப்படுகின்றனர். அப்போது கதிரவன் மறையும் நேரமாயிற்று. வானத்தை எவ்வாறு மானுடம் ஆராதிக்க வேண்டும் என்பதை அர்ச்சுனன் மூலம் பாரதி, நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றார்.
அர்ச்சுனன் பாஞ்சாலிக்குச் சொல்லுவதுபோல் அந்த மாலை நேரத்து வருணனை, அமைந்திருக்கிறது.
பாரடியோ வானத்திற் புதுமை எல்லாம்
பண்மொழீ கணந்தோறும் மாறி மாறி
ஓரடி மற்றோர் அடியோடு ஒத்தலின்றி
உவகையுற நவநவமாய்த் தோன்றும் காட்சி
யாரடி இங்கு இவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியாற் பழவேத முனிவர் போற்றும்
செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்
பார் சுடர்ப்பரிதியைச் சூழவே
படர்முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன ஓகோ
என்னடி இந்த வன்னத்து இயல்புகள்
எத்தனை வடிவம் எத்தனை கலவை
தீயின் குழம்புகள் செம்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் பாரடீ
நீலப்பொய்கைகள் அடடா நீல
வன்னமொன்றில் எத்தனை வகையடீ
எத்தனை செம்மை பசுமையும்
கருமையும்
..............................................
ஒளித்திரள் ஒளித்திரள் வண்ணக் களஞ்சியம் - எனப் பாரதியும் ஒரு வான வேடிக்கைக் காட்டுகிறான்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.