அன்னை என்றோர் ஆலயம்

தாய் என்பவள் புனிதமானவள், பெருமதிப்பு உடையவள். மாத்ரு தேவோ பவ (அன்னை என்பவள் தெய்வீகமானவள்) என்னும் சொல் மிகப்பொருத்தமானது (இந்து மதம்).
Updated on
2 min read

தாய் என்பவள் புனிதமானவள், பெருமதிப்பு உடையவள். மாத்ரு தேவோ பவ (அன்னை என்பவள் தெய்வீகமானவள்) என்னும் சொல் மிகப்பொருத்தமானது (இந்து மதம்).
 அன்னையாக இருப்பது ஒரு பெண்ணுடைய வாழ்வின் மிகப்பெரிய பங்களிப்பு. அது இறைவன் ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் மிகப்பெரிய வரம் (கிறிஸ்தவம்). இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு வெளிப்பாட்டின் சக்தியாக இருப்பது அன்னை. அரும்பாடுபட்டு உன்னை ஈன்ற அன்னையை மதிக்க மறவாதிருப்பாயாக (சுவாமி விவேகானந்தர்).
 நாம் பெண்ணின் கருவறையில் உற்பத்தியாகிறோம். பெண்ணை மணக்கிறோம். பரம்பரையை மகத்துவப்படுத்துவதில் பெண் முக்கியப் பங்கு வகிக்கிறாள். மாபெரும் அரசர்களையும் உருவாக்கியவர் பெண்களே. பின் நாம் ஏன் பெண்களை மதிக்க தவறுகிறோம்? (சீக்கியம்).
 மனிதனுக்கு இறைவன் இந்த அவனியில் அளித்த அர்ப்பணிப்பு மிகுந்த ஓர் அற்புத உறவு தாய். இத்தரணியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்க்கும் உள்ள புனிதமான பந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமோ?
 ஒரு குழந்தை பிறந்தது முதல் அதற்கு பாலூட்டி பூச்சூடி அழகு செய்து பள்ளிக்கூடம் அனுப்பி, வீடு திரும்பும்வரை காத்திருந்து பார்த்துப் பார்த்து செய்யக்கூடிய ஒரு தாயின் தியாகம் ஒப்பற்றது.
 வீட்டின் பெயரோ அன்னை இல்லம், ஆனால், அந்த அன்னை இருப்பதோ அனாதை இல்லம். பத்துமாதம் சுமந்து பெற்று சீராட்டி, தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிட்டு, நடமாடுகிற பாதகர்களால் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய வயோதிக காலம் என்கிறது இஸ்லாம்.
 இப்படிப்பட்ட பலவித சூழல்களில் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறோம். அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் பின்னணியாக சில புராணக் கதைகள் கூறப்பட்டாலும், நவீனக் காலத்தில் அன்னையர் தினம் உருவான வரலாறு இவ்வாறே அமைந்தது.
 அமெரிக்காவில் ஜார்விஸ் என்ற பெண்மணி ஒரு போரின்போது பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்டு தனது இறுதிக் காலக்கட்டம் வரை சமூக சேவகியாக வாழ்ந்தவர்.
 அவருடைய மகளான அன்னா ஜார்விஸ் முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக 1908-ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரிலிலுள்ள ஆலயத்தில் மே மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினாராம். அன்று முதல் உலகில் முதன் முதலில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார் அன்னா ஜார்விஸ்.
 சமூக நலனில் அக்கறை கொண்ட அன்னா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்றப் பணியையும் நினைத்து அவளை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
 இவரது கோரிக்கையை ஏற்று பென்சில்வேனியா மாநில அரசு 1913-ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்தது. இத்தோடு அன்னா திருப்தியடையவில்லை. அவர் பல தன்னார்வ குழுக்களுக்கும், வியாபார அமைப்புகளுக்கும் அன்னையர் தினம் கொண்டாடுவதைப் பற்றி கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
 இவரின் வேண்டுகோளையும், நியாயத் தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் 1914-ஆம் ஆண்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும்,அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, கனடா உள்ளிட்ட 46 நாடுகள் அன்னையர் தினத்தை ஏற்றுக்கொண்டன.
 யார் அன்னையர் தினத்தை துவக்கி வைத்தாரோ அவரே அதன் எதிர்ப்பாளாராகவும் மாறினார். ஆம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் மாறிவிட்ட காரணத்தினால் 1948-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தியதால் அமைதியை சீர்குலைத்தார் எனக்கூறி கைதுச் செய்யப்பட்டார் ஜார்விஸ்.
 "இதுபோல் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் நான் இந்த நாளை துவங்கியிருக்க மாட்டேன். ஏனெனில், அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது' என்று கடைசியாக கூறினாராம் ஜார்விஸ்.
 வாடகைத் தாய் என்ற பெயரில் அன்னிய ஆண்களின் உயிரணுக்களைச் சுமந்து தனது புனிதமான கருவறையை "கார்ப்பரேட்' அறைகளாக மாற்றி வருகின்றனர் சில பெண்மணிகள். இவர்கள் தாய்மையையும் பெண்மையையும் காசுக்காக சீரழிக்கும் வெட்கங்கெட்ட பெண்மணிகளாவர்.
 நம் வாழ்வு சிறக்க மெழுகுத் திரியாக ஒளிர்ந்து, தியாகக் கொழுந்துகளக பிரகாசிக்கின்ற அன்னையர்க்கு சிறப்பு செய்ய வருடத்துக்கு ஒருமுறை அல்ல, வருடம் முழுதுமே அன்னையர் தினமாகட்டும்.
 
 நாளை உலக அன்னையர் தினம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com