உலகத்தில் பெரும்பான்மையான நாடுகளில் பெரும் பிரச்னையாக இருப்பது அரசியல் ஊழல், லஞ்சம். அது அரசின் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவரிலிருந்து, பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள், ராணுவ தளபதிகள், அரசு உயரதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரையில் பத்திரிகைகள், ஊழலுக்கு எதிரான அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
ஒரு நாட்டின் அரசியல் ஊழல், லஞ்சம் ஏழைகளைப் பரம ஏழைகளாக்குகிறது, தேசத்தின் நற்பெயரை அடியோடு கெடுக்கிறது, மக்கள் மாண்புகளைக் குலைக்கிறது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கிறது என்றெல்லாம் சொல்லியுங்கூட ஒவ்வொரு நாட்டிலும் ஊழல், லஞ்சம் பெருகியபடியே இருக்கிறது. அதனை ஒழிக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றி வருகிறார்கள்.
அதோடு ஊழல், லஞ்சம் என்பதற்கு எதிரான மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்த விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தி வருகிறார்கள். திறமையான வழக்குரைஞர்களும், அனுபவம் மிகுந்த கணக்குத் தணிக்கையாளர்களும் (ஆடிட்டர்) ஊழல், லஞ்சம் வாங்கும் நபர்களோடு வைத்திருக்கும் உறவை உடைக்க முயற்சி செய்கிறார்கள்.
ஊழல், லஞ்சம் என்பது சமூகத்தில் பல காலமாக இருந்து வருகிறது. 2300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கெளடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் அதுபற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அவர் தண்ணீருக்குள் இருக்கும் மீன் தண்ணீரை எப்படி குடிக்கிறது என்பது தெரியாதோ, அதுபோலவே அரசு ஊழியர்கள் பணத்தைக் களவாடுவதையும் கண்டுபிடிக்க முடியாது - என்று சொல்கிறார்.
அதுதான் அரசு அதிகாரிகளாகிவிட்ட பெரும்பான்மையானவர்களின் சாமர்த்தியம். அவர்களோடு நவீன காலத்தில் அரசியல்வாதிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், இடைத்தரகர்கள் என்று பலரும் சேர்ந்து கொண்டுவிட்டார்கள்.
ஒரு நாட்டில் ஊழல் செய்து லஞ்சமாக வாங்கிய பணத்தைப் பாதுகாத்துக் கொடுக்க சின்னஞ்சிறிய நாடுகளைக் கண்டறிந்து இருக்கிறார்கள். உலகத்தில் என்ன பிரச்னைகள், போராட்டங்கள் ஏற்பட்டாலும் ஊழல் பணத்தைப் பாதுகாக்கும் நாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
உலகத்தைப் பாடாய்படுத்தும் பணம் என்பதே மனித அறிவின் கண்டுபிடிப்பு. அந்த அறிவால் மதிப்பு தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் பணம் என்பதற்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஒரு பொருளுக்கு ஏற்றப்பட்டு இன்னொரு பொருளோடு ஒப்பிடப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உப்பு, மிளகு, தானியங்கள், மூலிகைகள், ஆடைகள், விலங்குகளின் மென்முடிகள், ஆயுதங்கள் பணமாக இருந்தன. ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாற்றிக் கொண்டார்கள். கிரேக்க நாட்டில் இருந்து கடல் வழியாக நாவாய்களில் தங்கத்தைக் கொண்டுவந்து தமிழகத்தில் சேர நாட்டு பெரியாற்றில் முன்துறையான முசிறியில் மிளகுக்கு மாற்றிக்கொண்டுச் சென்றார்கள். அது அகநானூற்றில், "பொன்னொடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி' என்று பாடப்பட்டுள்ளது.
பலவிதமான பொருள்கள் பணம்போல பயன்பாட்டில் இருந்தாலும் தங்கம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. அது நிலக்கரி, இரும்புத்தாது போல சமூகத்திற்குப் பயன்படும் பொருள் இல்லை. அது குறைவாகக் கிடைப்பதாலும் நிறம் மங்காமல் ஒளிர்வதாலும், ஆபரணங்கள் செய்ய இலகுத்தன்மை கொண்டிருப்பதாலும், அணிந்து கொண்டால் அழகு, வசீகரம் கூடுகிறது என்பதாலும் உலோகங்களிலேயே முதல் இடத்திற்கு வந்துவிட்டது.
ஊழல் செய்து லஞ்சம் வாங்குகிறவர்களின் முதல் இலக்கு தங்கமாகவே இருக்கிறது. மனிதர்கள் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பல ஞானிகள் நூற்றாண்டுகளாகக் கேட்டுவருகிறார்கள். ஆடம்பரமாக வாழ்வதற்கு, பொருள்கள் சேர்த்துக் கொண்டால் புத்திசாலி, திறமை கொண்டவர், தன்னால் மற்றவர்களால் முடியாத ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்பதை நிலைநாட்ட செய்கிறார்கள் என்று சொல்லிவிடலாம். எத்தனைச் சொன்னாலும் மனிதர்களின் பேராசை, நேர்மையின்மையே ஊழல், லஞ்சத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் ஊழல், லஞ்சம் என்பது பெருமளவில் இருக்கிறது. குடிமக்களில் 85 சதவீதத்தினர் லஞ்சம் கொடுத்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அது விரும்பி செய்து கொண்டது கிடையாது; நெருக்கடியால் லஞ்சம் கொடுக்கிறார்கள். 175 நாடுகளில் ஊழல், லஞ்சம் எப்படி இருக்கிறது என்று ஒரு பட்டியல் தயாரித்தார்கள். அதில் 76-ஆவது இடம் இந்தியாவிற்குக் கிடைத்தது. பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பர்மா, இலங்கையைவிட இந்தியாவில் லஞ்சம் அதிகம்.
பணத்தை சேர்த்துவிட்டால் சகல காரியங்களையும் எளிதாகச் செய்து கொண்டுவிடலாம் என்று நம்புகிறார்கள். மக்களின் கடைசி புகலிடம் என்று சொல்லப்படும் நீதிமன்றங்களில்கூட லஞ்சம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அரசின் பெரிய அணை கட்டுகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் நிர்மாணித்தல், ராணுவ தளவாடங்கள் கொள்முதல், உயிர் காக்கும் மருந்து வகைகள் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது போன்றவற்றில் பெரும் பணம் கைமாறுகிறது. ரகசியமாக நடைபெறும் பேரங்களில் கோடிக்கணக்கானப் பணம் புரள்கிறது. ஆயிரத்திற்கு ஒன்று வெளியில் தெரியவரும்போது மக்கள் திகைத்துப் போய்விடுகிறார்கள். இவ்வளவு பணம் வாங்கி என்ன செய்யப்போகிறார்கள் என்று அப்பாவித்தனமாக கேட்கிறார்கள்.
உலகத்தில் பணத்தால் அடைய முடியாததோ, வாங்க முடியாததோ எதுவும் இல்லை. எனவே, பணம் சம்பாதிப்பதை விமர்சிக்கக் கூடாது; பணமே மனிதன் இல்லை என்பதெல்லாம் யதார்த்தம் கிடையாது என்று சொல்லி பணத்தால் ஆன காரியங்களைப் பட்டியல் இடுகிறார்கள். அவற்றில் சில தவறான காரியங்கள் இருப்பதுபோல, பல நல்ல காரியங்களும் இருக்கின்றன. நல்ல காரியங்களை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்ற குறையும் சொல்லப்படுகிறது.
ஊழல், லஞ்சத்தில் ஈட்டிய பெரும் பணம்தான் நவீன மருத்துவமனைகள், உலகத்தரமான பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அகாதெமிகள், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சினிமா படங்கள், நவீன மால்கள், புனித யாத்திரை விடுதிகள் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பணம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பது முக்கியம் இல்லை. அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சமூக ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், லஞ்சத்திற்கு ஆதரவாக எந்தவொரு மதமும் இல்லை. எல்லா மதங்களும் ஊழல் செய்யாதே; லஞ்சம் வாங்காதே என்றுதான் சொல்லி வருகின்றன. அதோடு உழைத்து நேர்மையான முறையில் ஈட்டிய பொருளில் இருந்து ஏழை, எளிய மக்களுக்குத் தானம் செய்யுங்கள். அதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குகிறது என்று கூறுகின்றன.
அரசியல் ஊழல், லஞ்சம் என்பது அரசு அதிகாரத்தைச் சொந்தமான ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது என்று வரையறை செய்து இருக்கிறார்கள்.
உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களில் ஒருவராக சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூர் பிரதமரும் இருக்கிறார். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு நாணயமாக நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. எனவே, அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் செய்யவும், அதன் வழியாக லஞ்சம் வாங்கவும் பயப்படுகிறார்கள்.
இந்திரா காந்தி ஒருமுறை குறிப்பிட்டார். "சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பணம் வாங்கிக் கொண்டுகூட காரியமும் செய்ய மாட்டார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்' என்று. அது அமைச்சர்களுக்குத்தான் சொல்லப்பட்டது என்பது இல்லை. அதிகாரத்தை வைத்துக் கொண்டிருக்கும் எல்லோரைப் பற்றியும் சொன்னதுதான்.
ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் ஊழல், லஞ்சம் என்பதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள். மக்களிடம் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று பரிந்துரைக்கிறார்கள். ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி மக்களை வஞ்சிக்காதீர்கள். வழக்குகளில் சிக்கிக்கொண்டு சிறைக்குப் போகாதீர்கள். சட்டத்திற்கு உள்பட்டே அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள்.
இதெல்லாம் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாடுகளில் பெரும்பலன் கொடுக்கவில்லை. அரசியல்வாதிகள், பெரும்பான்மையான அதிகாரிகள் கூட்டாக சேர்ந்துகொண்டு ஊழல் புரிந்து லஞ்சம் வாங்குவதில் முனைப்புடன் இருக்கிறார்கள். தங்களின் படிப்பு, திறமை, அனுபவம் என்பதையெல்லாம் அதற்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்பொழுதாவது ஊழல், லஞ்சம் வாங்கியது வழக்காகி நீதிமன்றம் சென்றால் திறமைசாலிகளான வழக்குரைஞர்களை வைத்துக்கொண்டு வாய்தா வாங்கியே வழக்கை நீர்த்துப்போகடித்து விடுகிறார்கள். நீதிமன்றங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனை மக்களின் தோல்வி என்றோ, ஜனநாயகத்தின் இயலாமை என்றோ சொல்லிவிட முடியாது.
அரசு, மக்கள் லட்சியம் என்பதே பரவலாக்கப்பட்ட அதிகார மையங்கள், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என்பதுதான். அதுவே அரசியல் ஊழல், லஞ்சம் என்பதை ஒழிக்கும், ஒழித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டி மக்களை நம்பிக்கைக் கொள்ள ஊழல், லஞ்ச எதிர்ப்பு இயக்கங்கள் இடைவிடாது பாடுபட்டு வருகின்றன. அது அரசியல் சமூகப் பிரச்னை. மனிதர்கள் சம்பந்தப்பட்டது.
எனவே, தீர்வு காண முடியாது என்பதில்லை. மனிதர்களே உண்டாக்கிக் கொண்டதை அவர்களேதான் தீர்வு காண வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் உலகத்தில் பல நாடுகளில் ஊழல், லஞ்சம் என்பதை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள். அது ஒவ்வொரு நாட்டினரையும் நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது. தங்கள் நாட்டில் முடியுமென்று மக்கள் நம்புகிறார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.