பழையது நல்லது!

தாகத்தையும் வெப்பத்தையும் தணித்துக் கொள்ள செயற்கையான பழ ரசங்களும், குளிர்பானங்களும் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
பழையது நல்லது!

கோடை வெயில் கொளுத்துகிறது. வெப்பம் தாங்காது மக்கள் தவித்துப் போகிறார்கள்.
 தாகத்தையும் வெப்பத்தையும் தணித்துக் கொள்ள செயற்கையான பழ ரசங்களும், குளிர்பானங்களும் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
 கோடையில் வீடுகளில் நீர்மோரும் பானகமும் கோலோச்சிய காலம் போய்விட்டது. ஏலக்காய் மணக்கும் இனிப்பான பானகத்துக்கு ஈடுஇணை உண்டா? நீர்மோர் பருகப் பருக உடல் முழுவதும் குளிர்ச்சி பரவுவதை உணர முடியும்.
 காலைச் சிற்றுண்டியாக சாப்பிடும் "பழையது' இருக்கிறதே.. அப்படியே உடலின் சூட்டைத் தணித்து நம்மை ஆனந்தமாக உணரச் செய்யும் ஆகாரம் அது.
 பழைய சோறு, பழையது, பழைய சாதம், பழசு, பழையமுது என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கிராமத்துக் காலை உணவு இன்னமும் கிராமப்புறங்களில் இருக்கிறது.
 ஆனால், நகர்ப்புறத்தில் இல்லை. "பழையதா?' ஐயே! என்று முகம் சுளித்துப் பழையது சாப்பிடுவதை கெளரவக் குறைச்சலாகக் கருதுவோரும் உண்டு. நகர்மயமாதலில் நாம் தொலைத்த உன்னதங்களில் பழையதும் ஒன்று.
 பழையமுது என்று இதைக் குறிப்பிடுவது வைணவர்கள் வழக்கம். நல்ல பழையது மாம்பழ வாசனை வீசும் என்று என் பாட்டி சொல்வார். அதற்கு உரம் போடாத அரிசிதான் காரணம்.
 பழையதுக்கு வாழைப் பழத்தைச் சேர்த்து சாப்பிடுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன். பழையதோடு மாம்பழம் சாப்பிடுவதும் உண்டு. பக்கத்து வீட்டுத் தாத்தா அத்திக்காயை முதல் நாள் ஊறவைத்து மறுநாள் பழையதோடு சேர்த்துச் சாப்பிடுவார்.
 பச்சை வெங்காயத்தை (சின்ன வெங்காயம்) முழுசு முழுசாக உரித்துப் போட்டுக் கொண்டு பழையது சாப்பிடுவதற்கு இணையே கிடையாது.
 பச்சை மிளகாயை உப்பில் தொட்டு பழையதோடு கண்ணீர் வர சாப்பிடுகிறவர்கள் உண்டு. உப்பு நார்த்தங்காய் பழையதுக்கு அருமையான பக்கவாத்தியம்.
 "தங்கரேக்காக மின்னும் ஊழைச்சருகை விரித்து அதில் பழைய சாதத்தைப் பிழிந்துபோட்டு தயிரையும் ஊற்றி தொட்டுக் கொள்ள வடுமாங்காய் அல்லது மோர்மிளகாய் வற்றலும் இருந்துவிட்டால் ஆஹா!' என்று சொல்லிட ரசிப்பார் ஒரு பழையது பிரியர்.
 புதுச்சேரி பிரெஞ்சு துரையிடம் அரசியல் ஆலோசகராகப் பணிபுரிந்த ஆனந்த ரங்கம் பிள்ளை தனது "சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பில்' (நாள்குறிப்பில்) தினந்தோறும் துரையைப் பார்க்க அலுவலகத்துக்குப் போகிறதை "இற்றைநாள் காலமே எழுந்து குளித்து பழையது சாப்பிட்டுவிட்டு துரையவர்களைக் காணப் போனேன்' என்று எழுதியிருப்பார்.
 பழையது பெரிய மனிதர்கள் சாப்பிடும் ஆகாரமாக ஒரு காலத்தில் விளங்கியது இதிலிருந்து புலனாகும்.
 கூம்பா என்று ஒரு பாத்திரம். இது பழையதுக்கு என்றே தயாரிக்கப்பட்டது எனத் தோன்றும். பள பளவென்று துலக்கப்பெற்ற அந்தப் பித்தளையிலான பெரிய "பவுல்' பழையதுக்கு என்றே ஜென்மம் எடுத்திருக்க வேண்டும்.
 தஞ்சாவூர் பிராமணர்கள் வீட்டில் பழையது செய்யும் முறையை ஒரு மாயவரத்துப் பெண்மணி இப்படி விவரித்தார்:
 "முதல் நாள் தண்ணீர் விட்டு வைத்த சாதத்தில் கடுகு, ஓமம் கால் கரண்டி அளவு, 5 அல்லது 6 கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கல்லுப்பு சேர்த்து, ரெண்டு கப் தயிர்விட்டு அரைக்கரண்டி பால் சேர்த்து சாப்பிட்டால் தேவாம்ருதமாக இருக்கும்!'
 பழையதில் கடுகும் கறிவேப்பிலையும் தாளித்து சாப்பிடுவது உண்டு. அது ஒரு தனி ருசி.
 காலையில் எழுந்ததும் நீராகாரம் மட்டும் (இதை நீச்சுத்தண்ணி என்று சொல்வதும் உண்டு), ஒரு கல் உப்புப்போட்டு குடித்துவிட்டு வயல் வேலைக்குச் செல்வது விவசாயிகளின் வழக்கம்.
 பிற்பாடு காலைப் பலகாரம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
 பண்டைக் காலம் தொட்டு விவசாயக் குடும்பங்களில் ஒரு வேளைதான் சோறு சமைப்பார்கள். அதை ராத்திரி சாப்பிட்டதுபோக மிஞ்சுவதில் தண்ணீர்விட்டு வைப்பார்கள். அது காலையில் பழச்சோறாக, பழையதாகி இருக்கும்.
 கடலோர மீனவர்களிடம் ஒரு வழக்கமுண்டு. சோற்றில் தண்ணீர் விட்டு ஒரு பானையில் போட்டு மூடி மணலில் புதைத்து வைத்து விடுவார்கள்.
 சில நாள்கள் கழித்து அந்த சோற்றை எடுத்து சாப்பிட்டால் கள்ளின் சுவையும் போதையும் கொண்டதாக இருக்குமாம். இதை "சுண்டிசோறு' என்பார்கள். இதைப்பற்றி பட்டினப்பாலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.
 பல ஆண்டுகளுக்கு முன்னால் தேவார திருவாசகப் பாடல்களைப் பாடியபடி எங்கள் வீட்டுக்கு ஒரு பெரியவர் வருவார். வயது 90-க்கு மேல். அவரைப் "பழையது சாமி' என்போம்.
 என்ன சாப்பிடுகிறீர்கள் என்று எப்போது கேட்டாலும் "பழையது' என்பார். சாப்பிடும் பழைய சாதத்தைத்தான் பழையது என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு என் மனைவி ஒரு பாத்திரத்தில் பழையது கொண்டு வந்து வைத்தார்.
 பழையது தாத்தா இடி இடி என்று சிரித்தார்.
 அம்மா! உங்க வீட்டில் பழைய புத்தகங்கள் இருந்தால் கொண்டுவந்து வையுங்கள் என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்...
 இலக்கியமாக இருந்தால் என்ன? இல்லமாக இருந்தால் என்ன?
 பழையதுக்குத் தனிச்சுவை உண்டு என்பதை மறுப்பார் யார்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com