வாடகைத்தாய் மசோதா: ஒரு பார்வை
நவீன உத்தியைப் பயன்படுத்தி வாடகைத் தாயின் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் முறைக்கு, சில கட்டுப்பாடுகளை விதிக்க வழிசெய்யும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல்


நவீன உத்தியைப் பயன்படுத்தி வாடகைத் தாயின் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் முறைக்கு, சில கட்டுப்பாடுகளை விதிக்க வழிசெய்யும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
வாடகைத் தாயின் மூலம் வணிக ரீதியாக குழந்தை பெறுவதைத் தடுத்து, அப்பாவி ஏழைப் பெண்களை மோசடியிலிருந்து காப்பாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மசோதா, தற்பொழுது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒரு பெண்ணின் கருப்பைக்கு குழந்தையை பத்து மாதங்கள் சுமப்பதற்கான சக்தி இல்லாமல் இருந்தால்,அல்லது வேறு ஏதாவது மருத்துவச் சிக்கல் இருந்தால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, அவள் மூலம் குழந்தையைப் பெற முடியும் என்ற கண்டுபிடிப்பே வாடகைத் தாய் என்ற கருத்திற்கு வித்திட்டது.
இந்தியாவில், 2001-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் இந்திய தம்பதியருக்காக வாடகைத் தாய் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் வாடகைத் தாய் மையங்கள் அதி வேகமாக வளர்ந்துள்ளன.
ஐக்கிய நாட்டு நிறுவனமான மசஊடஅ-யின் ஆதரவுடன் 2012- ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் சுமார் 3,000 கருத்தரிப்பு மையங்கள் இயங்குகின்றன என்று கணித்துள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு, வாடகைத் தாய் தொழிலில் ஆண்டொன்றிற்கு சுமார் 15,600 கோடி ரூபாய் புழங்குகிறது என்று கணித்துள்ளது. இப்படி கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்த வாடகைத் தாய் வணிகம், தில்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் பல சிறிய ஊர்களிலும்கூட நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தைப் பேறு கிட்டாத இந்திய தம்பதியரும் வாடகைத் தாய்களின் சேவையை நாடுகிறார்கள் என்றாலும், வாடகைத் தாயின் சேவையை நாடி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், அயல் நாட்டவர்களும் வாடகைத் தாயைத் தேடி இந்தியாவிற்கு வருவதற்கான காரணம் என்ன?
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், வர்த்தக ரீதியாக வேறு ஒரு பெண் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவதை சட்டம் தடை செய்கிறது.
அது மட்டுமல்ல, மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், நமது நாட்டில் பணத்திற்காக தங்கள் சினை முட்டைகளை தானம் செய்யவும், கருப்பையை வாடகைக்கு விடவும் பல ஏழைப் பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
நாட்டில் ஏனைய சுற்றுலா போன்று வாடகைத் தாய் சுற்றுலாவும் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பது இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், குழந்தை இல்லாத தம்பதியருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த மசோதாவின்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தையைப் பெற அனுமதி கிடையாது. திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லாத, மருத்துவ ரீதியாக குழந்தையை பெற்றுக்கொள்ள தகுதியில்லாதவர் என்று நிரூபிக்கப்பட்ட இந்தியாவில் வாழும் தம்பதியர் மட்டுமே வேறொருவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இவர்களும்கூட வர்த்தக ரீதியாக அல்லாது, நெருங்கிய உறவினர் மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். மற்றொருவருக்காக குழந்தையைச் சுமக்கும் அந்தப் பெண் திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்க வேண்டும், ஒருவர் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாய் முறையில் குழந்தையைப் பெற்றுத் தர முடியும் போன்ற பல நிபந்தனைகளை இந்த மசோதா விதிக்கிறது.
மேலும் இந்த மசோதாவின்படி ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், மனைவி அல்லது கணவன் இன்றி தனித்து வாழ்பவர்கள் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை கடினமாக்குவதும், இந்த முறையை கடைசி பட்சமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே இந்த மசோதாவின் நோக்கம். ஏற்கெனவே தங்களுக்கென்று குழந்தைகள் இருந்தும், சிலர் தங்கள் மனைவியை பத்து மாதங்கள் குழந்தையைச் சுமப்பது, பிரசவ வேதனையை அனுபவிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுவிக்க வாடகைத் தாயை நாடியுள்ள உதாரணத்தை மேலும் பலர் பின்பற்றுவதைத் தடுப்பதும் இந்த மசோதாவின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது.
ஓராண்டிற்கு முன்பு, வெளிநாட்டவர் நமது நாட்டிற்கு வந்து வாடகைத் தாயின் சேவையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்தே, பல வாடகைத் தாய் மையங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது பகிங்கரமாக நடந்து கொண்டிருக்கும் இந்தத் தொழில் ரகசியமாகத் தொடரக் கூடிய அபாயமும் உள்ளது. அப்படி ரகசியமாக செயல்படும் வாடகைத் தாய் தொழிலில், தனது கருப்பையை வாடகைக்கு விடும் பெண்கள் இன்னும் மோசமாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பணத்திற்கு ஆசைப்பட்டு தனது கருப்பையை மீண்டும் மீண்டும் வாடகைக்கு விடுவதன் மூலம் ஏழைப் பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அப்பெண்களுக்கு முழு விவரமும் அளிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.
வாடகைத் தாயாக சேவை செய்யும் பெண்களோ, தாங்கள் நியாயமாக பணம் சம்பாதிப்பதை அரசு ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். குழந்தையைச் சுமக்கும் காலத்தில் மாதம் 2,000 ரூபாயும், பிரசவத்திற்குப் பிறகு மூன்றிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் வரையிலும் வாடகைத் தாய்கள் பணம் ஈட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெரும் தொகை அவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் கடனை அடைக்க, வீடு வாங்க, சிறு தொழில் துவங்க, பிள்ளைகளை படிக்க வைக்க உதவுகிறது. இந்த வரும்படி இல்லையெனில் இவர்கள் ஏழ்மை நிலையிலேயே இருந்திருப்பார்கள்.
மகப்பேறு இன்மை பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணிற்கும், பணத்திற்காக குழந்தையைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பு பெண்களும் பயனடைகிறார்களே, இதில் என்ன தவறு என்றும் கேட்கிறார்கள்.
தங்கள் உடல் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தை அரசு எப்படி பறிக்க முடியும் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் மக்களின் உடல் நலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று அரசு வலியுறுத்துகிறது.
வணிக ரீதியாக அல்லாமல், உறவினர் மூலம் மட்டுமே குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமா? இதிலும், ஒரு மாமியார் தனது மருமகளை தனது மகளுக்காக குழந்தை பெற்றுத் தரும்படி கட்டாயப் படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
மேலும் குடும்பத்திலிருந்து ஒருவர் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் அதை ரகசியமாக வைத்திருக்க முடியுமா? குழந்தைக்கு தன்னை பெற்றெடுத்த தாய் வேறு, சட்ட ரீதியானத் தாய் வேறு என்று தெரிய வந்தால் அந்தக் குழந்தை உள ரீதியாகப் பாதிக்கப்படலாம், குடும்பத்தில் பிரச்னைகள் உருவாகலாம்.
உறவினர்களுக்கிடையேயும் பணம் கொடுக்கல் வாங்கல் இல்லை என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? ஒரு ஆதாயமும் இல்லாமல் யார் பத்து மாதம் பிள்ளையைச் சுமந்து, பிரசவ வேதனையை அனுபவிக்கத் தயாராக இருப்பார்கள்?
வெளிநாட்டவர்களுக்கு, குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இங்கு வந்து வாடகைத் தாய் முறையில் பிள்ளை பெறுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் முதலீடு மட்டும் நமக்குத் தேவை, ஆனால் அவர்களுக்கு இங்கு வந்து வாடகைத் தாய் முறையில் பிள்ளை பெறுவதற்கு மறுப்பு என்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை.
ஓரின சேர்க்கையாளர்களுக்கும், தனியாக வாழும் ஆண் அல்லது பெண்ணுக்கும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்காப்படாதது மிகவும் பிற்போக்கான நோக்கு என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இடைத் தரகர்களும், மருத்துவர்களும் அப்பாவி ஏழைப் பெண்களை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள் என்றால், அப்படி அவர்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியாமல், தங்களுடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவது நியாயமா என்று கேட்கிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்.
இப்படி பல கேள்விகளை எழுப்பியுள்ள இந்த மசோதா, சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களை கலந்தாலோசித்து தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே சமூக சிந்தனையாளர்களின் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...