நாடு நமதே; மக்களும் நம்மவர்களே!

கவேரர் என்ற மகரிஷிக்கு லோபாமுத்திரை என்ற பெண்ணை பிரம்மன் அருளினார். முனிவர் அகத்தியர்க்கு மணம் செய்வித்தார்.
நாடு நமதே; மக்களும் நம்மவர்களே!
Updated on
3 min read

கவேரர் என்ற மகரிஷிக்கு லோபாமுத்திரை என்ற பெண்ணை பிரம்மன் அருளினார். முனிவர் அகத்தியர்க்கு மணம் செய்வித்தார். லோபாமுத்திரை மகாவிஷ்ணுவின் மாயையின் அம்சம். அவளே தன்னை இரு உருவங்களாக வரித்துக் கொண்டாள். ஒரு பெண் லோபாமுத்திரை. இன்னொரு பெண்தான் காவேரி.
காவேரி புனித நீராக அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் காகம் ஒன்று கமண்டலத்தை கவிழ்த்துவிட நீர் கீழே ஓடத் தொடங்கியது. இதுதான் காவிரி. இது சமயப் பெளராணிகர்கள் சொல்லும் புராணக் கதை.
"கோள் நிலை திரிந்து கோடை நீடினும், தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை' - மணிமேகலை. "வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலை இய கடற்காவிரி' - பட்டினப்பாலை. "அருவி மாமலை நிழத்தவு மற்றக் கருவி வானம் கடற்கோள் பிறப்பவும்' - பொருநராற்றுப் படை. "குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப நோனாச் செருவின் நெடுங் கடை' - மலைபடுகடாம். "இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த அறலென நெறித்த கூந்தல்' - அகநானூறு. "குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிர்க் கயவாய் நெரிக்கும் காவிரி' - சிலப்பதிகாரம் - இப்படி பற்பல சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் காவிரி புகழ் பாடும்.
கவிச்சக்ரவர்த்தி கம்பன் தன் பங்கிற்கு தான் யாத்த இராம காதையில் கோசல நாட்டின் வளத்தை புனையும்போது "காவிரி நாடன்ன கழனி நாடு' என்பான்.
இப்படி பொங்கு மாகடலென ஓடி வந்த காவிரியை சற்றே தடுத்து நிறுத்தி மானுடம் உயிர் வாழ உணவு உற்பத்தியை பெருக்கும் முகமாக கரிகால் பெரு வளத்தான் கட்டிய கல்லணைதான் உலகின் முதல் நீரிணை. சுமார் 1800 ஆண்டுகட்கும் மேலாக காலத்தின் சாட்சியாக இன்றும் அது காட்சி அளிக்கிறது.
1080 அடி நீளம், 40 அடி முதல் 60 அடி அகலம் கொண்டது. நிலத்தில் ஓடி வரும் நீரைத் தேக்கி பயிர் பாசனம் செய்த முதல் இனம் தமிழ் இனம் என்பது வெள்ளிடை மலை.
17-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி இவ்வணையின் பெருமையை வெளிப்படுத்தும். எகிப்து நாட்டைச் சார்ந்த அரசு பிரதிநிதிகள் சிலர் தில்லிக்கு வந்து அப்போதைய மொகலாய மன்னரிடம் "உங்கள் நாட்டில் உள்ள பெரிய அணை ஒன்றை பார்வையிட அனுமதி தாருங்கள்' என்று கேட்டபோது சோழ நாட்டில் உள்ள காவிரியில் இருக்கும் கல்லணையைப் பார்க்க பரிந்துரை செய்தான் என்பது வரலாற்றுச் செய்தி.
1836-இல் கொள்ளிடம் பிரியும் இடத்தில் மேலணையைக் கட்டிய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பாரும் கல்லணையை பார்த்து வியந்து பாராட்டி விட்டு "இதைக் கட்டிய மன்னனை நான் தலை வணங்கி போற்றுகிறேன்' என்றார்.
1853-இல் கங்கை கால்வாய் திட்ட அதிகாரியாக இருந்த 'ஆஅஐதஈ நஙஐபஏ' என்ற ஆங்கிலேயர் கல்லணையின் ஓரிடத்தில் பரிசோதனைக்காக 12 அடி ஆழம் மண்ணைத் தோண்டியபோது அவர் வியப்பில் உறைந்து போனார். காரணம் கருங்கல்லும் களிமண்ணும் தவிர வேறு எந்த பொருளும் கட்டுமானத்தில் இல்லை என்பதுதான்.
தனது சோதனை அறிக்கையொன்றில் "நவீன பொறியியல் சாதனங்கள் கொண்டிராத அக்காலத்தில் இத்தகைய உறுதியான அணையை கட்டியது அரிய சாதனை. இந்த பொறியியல் உன்னதத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகிறேன்' என்று குறிப்பிடுகிறார்.
குடகில் பிறந்த காவிரிக்கு தமிழ்நாட்டின் முதல் அணை கல்லணைக்குப் பிறகு 1911-இல் கர்நாடகாவில் கண்ணம்பாடி - கிருஷ்ணராஜ சாகரம் பொறியாளர் சர் விஸ்வேஸ்வரய்யாவால் தொடங்கப்பட்டு 1931-இல் நிறைவு பெற்றது. இத்திட்டம் தொடங்கிய நாளில் இருந்தே தண்ணீர் பிரச்னை தலையெடுக்கத் தொடங்கியது.
இந்த தண்ணீர் பிரச்னை மேலும் தொடராதிருக்க இரு மகாண அரசுகளும் 1924-இல் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. பின்னர் 1925-இல் மேட்டூரில் சென்னை மாகாண கவர்னர் கோஷன் பிரபுவால் தொடங்கப்பட்டது.
1934-இல் அணை கட்டி முடிக்கப்பட்டபோது அப்போது கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் ஸ்டான்லி பெயரால் ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டது.
இந்த மேட்டூர் அணையும் 1924-இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் கீழ்தான் கட்டப்பட்டது. 1924-இல் இரு அரசுகளும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.
இது 1974-இல் காலாவதி ஆனபோது, அப்போதைய தமிழ்நாடு அரசும், (துணை நிற்க) நடுவண் அரசும் புதுப்பிக்கத் தவறின. இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடகா கிருஷ்ணராஜ சாகர் அணையைத் தவிர மேலும் மூன்று அணைகளை (ஹேமாவதி, கபினி, ஹேரங்கி) கட்டியது.
இப்படி கர்நாடகாவில் தற்போது உள்ள நான்கு அணைகளும் நிரம்பிய பின் தான் தமிழ்நாட்டிற்கு நீர் தருவேன் என்பது ஒரு ஈவு இரக்கமற்ற கொடுஞ்செயல். சகோதர இனத்தை கொல்ல நினைக்கும் மகா பாதகம்.
1924-இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மிக முக்கியமான சில அம்சங்கள்.
"காவிரியின் போக்கில் மைசூரு ராஜ்யத்தில் ஆரம்ப கட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்த திட்டத்தினாலும் பாதிக்கப்படாமல் தமிழ்நாட்டிற்கு போதிய தண்ணீர் பாயும் வசதி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 3,01,000 ஏக்கர் நிலப் பகுதிக்கு பாசனத்திற்காக 9,350 கோடி கன அடி நீர் கொள்ளும் நீர்த்தேக்கம் (மேட்டூரில்) அமைத்துக் கொள்ளலாம். 1,25,000 ஏக்கர் நிலப் பகுதிக்கு பாசன வசதி கொடுப்பதற்காக 4,500 கோடி கன அடி நீர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தை கண்ணம்பாடியில் மைசூரு அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் 1,10,000 ஏக்கர் நிலப் பகுதிக்குப் பாசனம் அளிக்க மொத்தம் 4,500 கோடி கன அடி நீர் கொள்ளக்கூடிய நீர்த்தேக்கங்களை மைசூரு அரசு அமைத்துக் கொள்ளலாம்.
ஆனால், தமிழ்நாட்டின் தேவைகளுக்குப் போதிய தண்ணீர் பாய்ச்சப்படும் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர்தான் மைசூரு ராஜ்ய அணைக்கட்டுகளில் மேற்கண்டவாறு தண்ணீரைத் தேக்கலாம். மைசூரு அரசு தனது மாநிலத்தில் பின்னர் மேற்கொள்ளப்படும் எந்தத் திட்டமும் தமிழ்நாட்டுக்கு உரிய அளவு தண்ணீர் பாய்வதை பாதிக்கும் முறையில் செயல்படக் கூடாது.
1974-இல் கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழ்நாடு தவறியது மிகப்பெரிய தவறு. இதனால் மைசூரு ராஜ்யத்தில் விரைவாக மூன்று நீர்த்தேக்கங்களை கட்டிய பிறகும் இப்போது மேகேதாட்டு என்னுமிடத்தில் மற்றொரு புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.
1974-இல் மூத்த பத்திரிகையாளர் ஏ.என். சிவராமன் எழுதினார். "ஒரு தரிசு நிலத்தை நன்செய் பூமியாக மாற்ற முன்பே இருக்கிற நன்செய் பூமியை தரிசு நிலமாக மாற்றக் கூடாது'.
காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்தறியாத, அரசியல் தலைவர்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக பேசி மக்களை, குறிப்பாக விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.
இரு பிரதேசங்களிலும் மொழி உணர்வுக்குப் பதிலாக மொழி வெறியூட்டப்பட்டு, இன உணர்வுக்குப் பதிலாக இனவெறி எழுப்பப்பட்டு அப்பாவி மக்களும், விலை மதிப்பற்ற பொருள்களும், மனித உழைப்பு நேரமும் நாசமாக்கப்படுகின்றன.
எல்லையில் நிலத்திற்காக சிறு, சிறு போர் நடக்கிறது. உள்நாட்டில் சகோதரர்களிடத்தில் அறிவையும் முந்திக் கொண்டு உணர்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் போக்கு காணப்படுகிறது.
இல்லையெனில் கேவலம் ஒரு நூறு ரூபாய்க்கும் ஒரு சிறிய பிரியாணி பொட்டலத்திற்கும் ஆசைப்பட்டு கர்நாடகாவில் நாற்பது சொகுசு பேருந்துகளை எரியூட்டுவாளா ஒரு பெண்? இங்கே எழுச்சியூட்டும் ஒரு தலைவரின் வெறியூட்டும் உரையை செவி மடுத்த தமிழின இளைஞன் ஒருவன் தீ நாக்குக்கு தன்னை பலியாக்கிக் கொள்வானா?
அரசியல், ஆர்ப்பாட்டம் அடங்கி, அகவை முதிர்ந்த இரு மாநிலச் சான்றோர், வேளாண் குடிமக்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, நாடு நமதே, மக்களும் நம்மவர்களே, அனைவர்க்கும் உணவு அளிக்கும் பொறுப்பில் இருக்கும் நாம் கட்டியாக இருப்பதை கரைத்து குடிப்போம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் என்று சிந்தித்து செயல்பட இரு அரசுகளும் தத்தம் அரசியல் சுய நலங்களை தவிர்த்து ஒத்துழைக்குமானால்
"வாவியிற் பொலி நாடு வளம் தரக்
காவேரிப் புனல் கால் பரந் தோங்குமால்' என்ற சேக்கிழார் வாக்கு உண்மையாகும்.
"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற் கண் விழித்தொல்கி
நடந்தாய், வாழி காவேரி'
-என்ற இளங்கோவடிகளின் வாக்கும் மெய்யாகும்.
இனிய நமது தஞ்சை மாவட்டத்து விவசாயிகளும் இஸ்ரேல் நாட்டு நீர் மேலாண்மைத் திட்டத்தையும், மாற்றுப் பயிர் விவசாயி முறைகளையும் கைக்கொள்ள இதுவே நல்ல தருணம்.
வெறும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், தொடர் முழக்கங்கள், நுணுக்கமான, அறிவார்ந்த எதிர்கால வழிமுறைகளை பின்னுக்கு தள்ளி மக்களுக்கிடையே விரோத மனப்பான்மையை வளர்த்து விடும். இதனால் நாட்டுக்கே இழப்பு உண்டாகும்.

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com