சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எப்போது வெல்வோம் எய்ட்ஸ் நோயை?

எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கவும், அந்த நோயின் பாதிப்பினால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :30 நவம்பர் 2016, 7:54 pm

ரமாமணி சுந்தா்

எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கவும், அந்த நோயின் பாதிப்பினால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஹெச்ஐவி நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபரைக் கண்டுபிடித்த பெருமை டாக்டர் சுனிதி சாலமனைச் சாரும்.
சென்னை பொது மருத்துவமனையில் நோய்க் கிருமிகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இவர், 1986 ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்.
அதற்கு அடுத்த ஆண்டு பாலியல் தொழிலில் உள்ள மேலும் 135 பெண்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 14 பெண்கள் எய்ட்ஸ் நோய் எனும் நிலையை அடைந்து விட்டிருந்தார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி நமது நாட்டில் எண்பதுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஹெச்ஐவி எனும் கொடிய நோய்க் கிருமி, அதிவேகமாக மக்களிடையே பரவியது.
1990-ஆம் ஆண்டில் இரண்டு லட்சமாக இருந்த ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2005-ஆம் ஆண்டின் இறுதியில் 52 லட்சமாக உயர்ந்தது. பாலியல் தொழிலில் உள்ளவர்கள், ஊசியின் மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொள்பவர்கள், லாரி ஓட்டுனர்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், புலம் பெயர் தொழிலாளிகள் போன்ற அதிக ஆபத்திற்குரியவர்கள்(High-risk groups)  என்று கருத்தப்பட்டவர்கள் மட்டுமே ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயின் பாதிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்த நிலைமை மாறி, பொதுமக்களிடையேயும் இந்த நோய் பரவத் தொடங்கியது.
இந்த நோய்க் கிருமியின் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பவர்களை கண்டுபிடிப்பதும், இந்த நோய்க் கிருமி எந்தெந்த வழிகளில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ வாய்ப்புள்ளது, எந்தெந்த வழிகளில் பரவ வாய்ப்பில்லை போன்ற விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் தலையாயக் கடமையாகியது.
மேலும், தவறான தகவல்களின் காரணமாக ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்பால் துவேஷம் பாராட்டுவது, அவர்களை சமூகத்தில், பணியிடங்களில் ஒதுக்கிவைப்பது போன்ற செயல்களை கட்டுப்படுத்துவது அவசியமாகியது.
சமூகத்தில் அவர்களின்பால் உள்ள வெறுப்பை நீக்கினாலொழிய பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான சோதனைக்கும், ஆலோசனைகளுக்கும், சிகிச்சைக்கும் முன் வரமாட்டார்கள் என்பது தெளிவாகியது.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு, 1992-ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பை (National AIDS Control Organization)   உருவாக்கியது.
மாநில அளவில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு கழகங்களும் (State AIDS Control Societies) பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகங்களும் தொடங்கப்பட்டன. ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயின் பாதிப்பிற்கு உள்ளானவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன், ஹெச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள்(HIV testing and Counseling Centers)  திறக்கப்பட்டன.
இந்த மையங்கள் இரத்த தானம் செய்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் இரத்ததைப் சோதனை செய்வதுடன், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்க வழி செய்கின்றன. 1997 ஆம் ஆண்டில் 67 ஆக இருந்த இந்த மையங்களின் எண்ணிக்கை தற்பொழுது 15,000 ஆக உயர்ந்துள்ளது.
ஹெச்ஐவி நோய்க் கிருமி பரவாமல் தடுக்கும் முயற்சியாக, பாதுகாப்பில்லாத உடலுறவு, ஹெச்ஐவி கிருமி கலந்த இரத்தம்ஊசி, கர்ப்ப சமயத்தில், பேறுகாலத்தில் அல்லது குழந்தைக்குப் பாலூட்டும் காலத்தில் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய் போன்ற வழிகளினால் மட்டுமே இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது போன்ற உண்மைகளைக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக கவனிப்பு மற்றும் ஆதரவு விடுதிகள் தொடங்கப்பட்டன. பாலியல் தொழில் நடக்கும் சோனாகாச்சி, காமத்திபுர போன்ற பல இடங்களில் ஆணுறைகள் விநியோகம் செய்வது, பாலியல் தொழிலில் உள்ளவர்களுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவ வசதிகள் அளிப்பது போன்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் திட்டங்களை அமல்படுத்துவதில் தன்னார்வ நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
UNAIDS, UNDP, UNFPA, UNICEF  போன்ற ஐக்கிய நாட்டு நிறுவனங்களும், உலக வங்கி, மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, அவகான் திட்டம், கிளின்டன் சுகாதார முயற்சி, DFID , உலக சுகாதார அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாவட்டங்களிலும் கூட பாதிக்கப்பட்டவர்களின் குழுமங்கள்(Network  of  positive  people) உருவாகி, எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் போராடி வருகின்றன.
ஹெச்ஐவியின் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு (அதாவது CD4 எண்ணிக்கை அதிகமாக உள்ளவர்களுக்கு) 2004 ஆம் ஆண்டிலிருந்து நமது அரசு ஆன்டி -ரெட்ரோ வைரஸ் (anti- retrovirus)   மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த சிகிச்சை, ஹெச்ஐவிஎய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. அதே போன்று, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு இந்தக் கிருமி பரவுவதை தடுக்க வழிசெய்யும் மருந்துகளின் கண்டுபிடிப்பு, குழந்தைகளை, ஹெச்ஐவி கிருமியின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
உலக அளவில் கடந்த 15 ஆண்டுகளில், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த ஹெச்ஐவிஎய்ட்ஸ் எனும் கொடிய நோயை அறவே ஒழித்து விட UNAIDS  எனும் ஐக்கிய நாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நமது நாட்டிலும் புதிதாக அடையாளம் காணப்படும் ஹெச்ஐவி பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கையும், எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட மரணங்களும் குறைந்து கொண்டு வருகின்றன என்றாலும், 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை முற்றிலும் இல்லாமல் ஆக்குவது என்பது சாத்தியமா என்று தெரியவில்லை.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2015 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் தொடர்புடைய காரணங்களினால் 68,000 பேர்கள் உயிரிழந்துள்ளனர். ஹெச்ஐவி பாதிப்புக்கு ஆளான 86,000 புதிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது. தற்பொழுது ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 21 லட்சம் பேர் நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் நமது நாட்டில் 15 - 49 வயதுடையவர்களில் ஹெச்ஐவி எய்ட்ஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் விகிதம் 24 சதம் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றம் பரவலாக எல்லா மாநிலங்களிலும் காணப்படவில்லை. இருந்தாலும் திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இந்த விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அருணாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஹரியாணா, தில்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினர் மகளிர் என்பது மற்றொரு கவலைக்கிடமளிக்கும் செய்தி. பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் மட்டுமல்லாது, குடும்பப் பெண்களிடையும் ஹெச்ஐவியின் பாதிப்பு பரவியுள்ளது.
ஹெச்ஐவியின் பாதிப்பிற்கு ஆளான பல ஆண்கள் தங்களது நிலைமை தெரியாமலோ அல்லது தங்களது நோயை மறைத்தோ திருமணம் செய்து கொண்டு தங்கள் மனைவியையும் ஹெச்ஐவியின் பாதிப்பிற்கு ஆளாக்குகிறார்கள்.
பெரும்பாலும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட கணவனிடமிருந்தே இந்த நோயை மகளிர் பெற்றாலும், மகளிரே பழிக்கு ஆளாகிறார்கள். குடும்பத்தினராலும், சமூகத்தினாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். திருமணமாகி ஒரு சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துவிடும் இந்த ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட விதவைகள் பொருளாதார ரீதியாக இன்னல்படுவதுடன், குடும்பத்திலும், சமூகத்திலும் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
பெண்களின் சமூக அந்தஸ்து அதிகரித்தாலொழிய, அவர்களால் பாதுக்காப்பான உடலுறவுக்காக போராட முடியாது எந்த விதமான பரிசோதனைக்கோ, சிகிச்சைக்கோ வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.
2030-ஆம் ஆண்டிற்குள் ஹெச்ஐவிஎய்ட்ஸ் நோயை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், அதிக ஆபத்தானவர்களின்பால் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக போதை மருந்தை ஊசியினால் செலுத்திக்கொள்பவர்களிடையே ஹெச்ஐவியின் பாதிப்பு விகிதம் 2007-ஆம் ஆண்டிலிருந்து அதே ஏழு விழுக்காடாக உள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களிடையே இந்த விகிதம் இரு மடங்காக உள்ளது. வட மேற்கு மாநிலங்களில் இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம்.
அதேபோன்று அதிக ஆபத்திற்குள்ளானவர்களாகக் கருதப்படும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை, சமூகத்தினரின் வெறுப்பு காரணமாகவும், நமது நாட்டில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்பதாலும், சமூக ஆர்வலர்களாலும், அரசுப் பணியாளர்களாலும் அணுகுவது கடினமாக உள்ளது.

(இன்று உலக எய்ட்ஸ் தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.