தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நன்றும் உண்டு; தீதும் உண்டு!

இவ்வுலகின் மாபெரும் சாதனைகள் எதுவாயினும் சரி ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும் உபயோகிக்கப்படும் தன்மையன. அணுவும் இவ்விதிக்கு விலக்கானதல்ல.

News image
Updated On :6 அக்டோபர் 2016, 8:59 pm

சுப. உதயகுமாரன்

இவ்வுலகின் மாபெரும் சாதனைகள் எதுவாயினும் சரி ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும் உபயோகிக்கப்படும் தன்மையன. அணுவும் இவ்விதிக்கு விலக்கானதல்ல.
அணு என்பது என்ன? அனைத்துப் பொருட்களும் அளவற்ற அணுக்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று கிரேக்க தத்துவஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தாலும், பத்தொன்பதாவது நுற்றாண்டு விஞ்ஞானிகளால்தான் இது நிரூபிக்கப்பட்டது. மனித உடல் திசுக்களால் உருவாக்கப்பட்டிருப்பதுபோல, ஒவ்வொரு பொருளும் எண்ணிறந்த அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சரி, இந்த அணுவுக்குள் என்ன இருக்கிறது? லார்ட் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் (Lord Ernest Rutherford)  சொன்ன ஓர் உதாரணம் இதனை ஆழமாக விளக்குகிறது. சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியனை மையமாகக் கொண்டு பல்வேறு கிரகங்களும் வான்வெளியில் வளைய வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூரியனை நியூக்ளியஸ் (Nucleus)  அதாவது அணுமையம் என்று கொள்ளுங்கள், சுற்றி வரும் கிரகங்கள் அனைத்தும் எலக்ட்ரான்கள். இன்னும் எளிதான ஓர் உதாரணம். நம்மூர் மாதுளம்பழம் போன்றது இந்த நியூக்ளியஸ், அணு மையம். அதனுள்ளே உள்ள வித்துக்கள் புரோட்டான்கள் என்றால், சதைப்பகுதி நியூட்ரான்கள். பழத்தின் வெளியே மொய்த்துச் சுழலும் ஈக்கள் கூட்டம் எலக்ட்ரான்கள்.
இந்த புரோட்டான்களும், நியூட்ரான்களும் மிக நுண்ணிய பாகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நுண்ணிய துகள்களை குவார்க்ஸ் என அழைக்கிறோம். நுண்ணோக்குக் கருவி எனும் மைக்ரோஸ்கோப்பின் உதவியோடுகூட இந்த குவார்க்ஸையோ, புரோட்டான், நியூட்ரானையோ நீங்கள் பார்க்க முடியாது. காரணம் இவை மிக மிக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த குவார்க்ஸ், பிரியோன்ஸ் (Preons) அல்லது ரிஷோன்ஸ்(Rishons) எனும் பன்மடங்கு நுண்ணியத் துகள்களால் உருவானவையாக இருக்கலாம்.
இந்த புரோட்டான், நியூட்ரானுக்கு எடை உண்டு. ஒவ்வொன்றும் ஓர் அணு எடை கொண்டது. அணு சக்தியின் முக்கியமான மூலப்பொருட்களுள் ஒன்றான யுரேனியம் அணுவின் அணு மையத்தினை எடுத்துக் கொண்டால், அதில் 92 புரோட்டான்களும், 143 நியூட்ரான்களும் உள்ளன. எனவே இதன் அணு எடை 235.
1895-ம் ஆண்டு ரோஞ்சன் (Roentgen) X-கதிர்களைக் கண்டுபிடித்தார். X-கதிரின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து பிரெஞ்சு அறிவியலறிஞர் ஹென்றி பெக்கொரல்(Henry Becquerel) என்பார் யுரேனியம் உள்ளடக்கிய கனிவளத் துகள்களை ஆராய்ந்தார்.
அவற்றினின்றும் ஒருவிதக் கதிர்கள் எழுந்து கருப்புத்தாளையோ அல்லது ஒளி புகமுடியாதப் பரப்பினையோ எளிதாக ஊடுருவிச் செல்வதனைக் கண்டார். கனல்கக்கும் வெயிலை கதிரவன் வீசுவது போல, மனங்கவர் மணத்தை மலர்கள் வீசுவது போல, இந்த யுரேனியம் கதிர்களை வீசுவதைக் கண்டார் பெக்கொரல். ரேடியேஷன்(Radiation)  அல்லது கதிர்வீச்சு எனும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிற்று.
இந்த கதிர்வீச்சுக்குப் பின்னால் ஒரு கதையுண்டு. உயர்கல்வி பெறுவதற்காக போலந்து நாட்டைச் சார்ந்த இருபத்தாறு வயது இளம்பெண் ஒருவர் பிரான்சுக்கு வந்தார். அவர் பெயர் மான்யா. முழுமன முயற்சியால் முதுகலைப்பட்டம் பெற்றதும் ஓர் அறிவியல் நிறுவனத்திற்காய் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டிற்று.
காந்தவியல் குறித்து ஆய்வு செய்ய ஓர் இடம் தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு போலந்து நாட்டவர் தனது பிரெஞ்சு நண்பர் பற்றி அவரிடம் சொன்னார். முப்பத்தைந்து வயது கொண்ட அந்த பிரெஞ்சு நண்பரை, தான் அறிமுகம் செய்து வைப்பதாகவும், அவர் உறுதியாய் உதவிடுவாரென்றும் அவர் சொன்னார்.
அவரது ஏற்பாட்டின் பேரில் மான்யாவும் அந்த பிரெஞ்சு அறிவியலறிஞரும் சந்தித்தனர். மான்யாவின் எளிய உடை, இனிய இயல்பு, மென்மையான கண்கள் - பெளதிக அறிஞர் பூரணமாய்த் தன்னை இழந்தார். ஒப்பற்ற மன உறுதியும், ஒருமைப்பாடும் கொண்ட மான்யாவும் அவரது இயல்புகட்கு முன் மண்டியிட்டார்.
கண்கள் கலந்து, காதலிதயங்கள் ஒன்றி, கருத்தொருமித்து, கரங்கள் இணைந்தபோது பியர் கியூரி (Pierre Curie), , மேரி கியூரி(Marie Curie)   எனும் ஓர் உன்னதத் தம்பதியை உலகம் பெற்றது.
பெக்கொரல் கண்ட அறிவியற் குழந்தைக்கு ரேடியோஆக்டிவிட்டி (Radioactivity)   அதாவது கதிர்வீச்சு எனப் பெயர் சூட்டினார் கியூரி அம்மையார். இதர உலோகங்களிலும் இக்கதிர்வீச்சு நிகழலாம் என எண்ணி ஆய்வுகள் நடத்தினர் கியூரி தம்பதி.
1898-ஆம் ஆண்டு பொலோனியம்(Polonium), , ரேடியம்(Radium)  எனும் உலோகங்களைக் கண்டுபிடித்தனர். ஒரு மில்லி கிராம் எடையுள்ள ரேடியம் குளோரைடின் கதிர்வீச்சு யுரேனியத்தைவிட மூன்று மில்லியன் மடங்கு அதிகம் எனக் கண்டார் திருமதி கியூரி.
மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயற்கைக் கதிர்வீச்சு ஆராயப்பட்டது. இயற்கையாகவே கதிர்வீச்சுத் தன்மையுள்ள அணுக்களில் நிகழ்வது இயற்கை கதிர்வீச்சு.
எடுத்துக்காட்டாக, 238 அணு எடை கொண்ட யுரேனியம் அணு ஆல்ஃபா (Alpha) கதிரினை வீசி 234 அணு எடை கொண்ட தோரியம் அணுவாக மாறும். இந்தத் தோரியம் அணு பீட்டா (Beta) கதிர்களை வீசி புரோட்டாக்டினியம் (Protactinium)  அணுவாக மாறும்.
இந்த புரோட்டாக்டினியம் அணு மீண்டும் கதிர்வீச்சுக்குள்ளாகி 234 அணு எடை கொண்ட யுரேனியம் அணுவாகும். இந்த அணுவில் எழும் ஆல்ஃபா கதிர்வீச்சின் விளைவாக 214 அணு எடை கொண்ட ஈய (Lead) அணுவாக மாறி, 206 அணு எடை கொண்ட நிரந்தர ஈய அணுவாகும்.
கதிர்வீச்சு இயல்புள்ள பொருட்கள் மூன்றுவிதக் கதிர்களை வீசுவதாக கண்டறியப்பட்டது. 1899-இல் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்ஃபா, பீட்டா என இருவகை இருப்பதாகக் கண்டார். வில்லார்ட் எனும் பிரெஞ்சு அறிஞர் காமா (Gamma)   என்று மூன்றாவதாக ஒன்றும் இருப்பதாய் சொன்னார்.
ஆல்ஃபா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் ஹீலியம் அணுக்களின் அணுமையங்கள். தோலின் மேற்பரப்பை ஊடுருவும் சக்தி வாய்ந்த இதனை ஒரு தாள் கொண்டு நிறுத்திவிடலாம். சுவாசிக்கும் போதோ, உணவு அல்லது தண்ணீருடனோ ஆல்ஃபா கதிர்வீசும் பொருட்களை உட்கொண்டுவிட்டால் உடலுள் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு ஆபத்து நேரலாம்.
பீட்டா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் எலக்ட்ரான்கள். ஆல்ஃபா கதிர்களைவிட ஆழமாக ஊடுருவும் தன்மையது என்றாலும் ஒரு அலுமினியத் தகட்டினால் இதனை தடுத்துவிட முடியும். கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கதிர் போன்ற ஃபோட்டோன்களின்(Photon) அணிவகுப்பு காமா கதிர்வீச்சு.
காமா கதிர்களால் மனித உடலை ஊடுருவிச் செல்ல இயலுமென்றாலும், ஒரு மீட்டர் பருமனுள்ள கான்கிரீட்டின் வழி புகுந்து செல்லும்போது அது முழுவதுமாக கிரகிக்கப்பட்டுவிடும்.
ஆல்ஃபா, பீட்டா, காமா போன்று நியூட்ரான் கதிர்வீச்சு எனவும் ஒன்று உண்டு. ஹைட்ரஜன் அணுக்களைவிட கனமான அனைத்து அணுக்களின் அணு மையங்களிலும் இந்த நியூட்ரான் உள்ளது. தான் மோதும் எந்த ஒரு அணுவையும் மின்னணுவாக(Ion)  மாற்றும் இந்நியூட்ரான்களால் உடல்திசுக்களைத் தாக்கி அழிக்க முடியும்.
அணுமின் நிலையங்களில் யுரேனியம் அணுக்கள் பிளக்கப்படும்போது நியூட்ரான்கள் வெளியிடப்படுகின்றன. மிக அதிக அளவில் ஊடுருவும் தன்மை வாய்ந்த இவற்றை தண்ணீரினால் தடுத்து நிறுத்த முடியும். சில அணுசக்தி ஆய்வு நிலையங்களில் விசேடமாக உருவாக்கப்பட்ட உயர்சக்தி இயந்திரங்களின் உதவியுடன் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும் மின்னல் வேகத்தில் எதிரெதிராக மோதவிடப்படுகின்றன.
இம்மோதலின்போது பல கதிர்கள் கலந்த ஒரு கதிர்வீச்சுக் கலவை வெளியாகிறது. இதனை ஸிங்கோட்ரான் (Synchotron)   கதிர்வீச்சு என அழைக்கிறோம்.
இரண்டு வழிகளில் நாம் இயற்கை கதிர்வீச்சுக்கு ஆளாகிறோம். ஒன்று உடலின் வெளிப்புறமுள்ள இயற்கையாகத் தோன்றும் கதிர்வீச்சுப் பொருட்களிலிருந்தும், விண்வெளிக் கதிர்களிலிருந்தும் எழும் கதிர்வீச்சு.
இன்னொன்று உணவு, நீர், காற்று என்பவற்றிலுள்ள கதிர்வீச்சுப் பொருட்களால் உடலின் உட்புறம் எழும் கதிர்வீச்சு. இவை அனைத்தையும் சேர்த்து வருடம் ஒன்றுக்கு சுமார் 2 மில்லி சீவெர்ட் அளவு, அதாவது 10 ல-ரே படம் எடுக்குமளவு, நாம் கதிர்வீச்சுக்கு ஆளாகிறோம். இந்த அளவு நாம் வாழும் இடம், வாழும் வகையைப் பொருத்து வேறுபடும்.
குறுகிய கால ஆபத்து, நீண்ட கால ஆபத்து என இருவகை ஆபத்துக்கள் உள்ளன கதிர்வீச்சில். கடுமையான கதிர்வீச்சுக்குள்ளாக நேரிட்டால் உடலின் உயிருள்ள செல்கள் எரித்து அழிக்கப்பட்டு தீப்புண்கள் ஏற்படலாம் அல்லது உயிரிழக்க நேரிடலாம்.
கதிர்வீச்சின் அளவுக் குறைவாக இருந்தாலும், நீண்ட நாட்களாக இதற்கு ஆளாக நேரிட்டால், லுகேமியா எனும் இரத்தத்தில் அளவுக்கதிகமான வெள்ளை அணுக்கள் எழும் நோய் தாக்கும்.
சரியான இடத்தில் சரியான அளவு உபயோகிக்கப்பட்டால், கதிர்வீச்சு அற்புதங்களை நிகழ்த்தும் வல்லமை பெற்றது. அணுவை, அணுப் பிளவை (Fission), , அணுச் சேர்க்கையை (Fusion) , அவற்றில் வெளிவரும் அளப்பரிய சக்தியை, கதிர்வீச்சை எல்லாம் ஆக்க சக்திகளாகவும், அழிவு சக்திகளாகவும் பயன்படுத்தலாம்.
அணு உலைகள், அணுக் கழிவுகள், அணு குண்டுகள், ஆயுதப் போட்டி, ஒட்டுமொத்த அழிவு எனச் சென்றுகொண்டிருக்கும் நமது இப்போதையப் பயணம் ஏற்புடையதல்ல.
அழகான ஒரு பூ கல்யாண வீட்டில் ஏற்றம் பெறுவதும், மரண வீட்டில் துர்நாற்றமுறுவதும் அந்தப் பூவின் தன்மையிலில்லை; அது உபயோகிக்கப்படும் விதத்தில் இருக்கிறது.
நாம் பெற்றிருக்கும் மாண்பு நிறை மனப்பூவை அன்பு எனும் அறப்பூவால் அலங்கரிப்போம். சிரிப்பு, உவப்பு, சிறப்பு என ஒரு நூறு பூ பூத்து பூரிப்பு பெறும் நம் உலகு.

கட்டுரையாளர்:
ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.
சுப. உதயகுமாரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.