தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திறமையற்றவரை திரும்ப அழைப்போம்!

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, சரியாக செயல்படாத எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை திரும்பப் பெற வழிவகை செய்யும் தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 8:02 pm

சுப. உதயகுமாரன்

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, சரியாக செயல்படாத எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை திரும்பப் பெற வழிவகை செய்யும் தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க அருமையான முயற்சி. இந்த மசோதாவை நாம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடெங்கும் விவாதித்தாக வேண்டும்.
முதலில் தனிநபர் மசோதா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். அமைச்சராகப் பணியாற்றாத எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிநபர் என்றழைக்கிறோம். அவர்கள் அரசு சார்பாக மசோதாக்களை தாக்கல் செய்ய முடியாது என்றாலும், தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ ஒரு மசோதாவை தாக்கல் செய்து அதனை சட்டமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தை கேட்டுக் கொள்ளலாம்.
இம்மாதிரியான தனிநபர் மசோதாக்களுக்கு குறைந்த நேரமும், சிறிதளவு முக்கியத்துவமுமே கொடுக்கப்படுவதால் பெரும்பாலானவை சட்டம் ஆவதில்லை. ஆனால் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால், ஒரு தனிநபர் மசோதாவை விரிவாக விவாதித்து, உரிய மாற்றங்கள் செய்து அதனை சட்டமாக்க முடியும்.
இன்றைய நிலையில் கடுமையான குற்றச்சாட்டுக்கு, வாக்காளர்களின் அதிருப்திக்கு, மக்களின் கோபத்துக்கு உள்ளாகும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வதைத் தவிர வாக்காளர்களாகிய நமக்கு வேறு வழியில்லை.
திறம்பட செயல்படாத மக்கள் பிரதிநிதியை திரும்பப் பெற இயலாது. தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ இதற்கு இடமில்லை.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் மட்டும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திருப்பி அழைத்துக் கொள்ளும் அமைப்பு இருக்கிறது. அதேபோல, பிலிப்பைன்ஸ், வெனிசுலா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, தைவான், அர்ஜென்டினா போன்ற நாடுகளும், அமெரிக்காவின் சில மாநிலங்களும் திறமையாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குகின்றன. ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.
இன்றைய நமது தேர்தல் அமைப்பில் நாம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான தனிமனிதர்களுக்குத்தான் வாக்களிக்கிறோம். வெற்றி பெறுகிறவர்களில் பலர் காணாமல் போய்விடுகின்றனர். அடுத்தத் தேர்தலில் மீண்டும் வாக்கு கேட்கத்தான் அவர்கள் வருகிறார்கள்.
பலர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மாறாக லஞ்சம், ஊழல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சக்தி வாய்ந்தவர்களோடு கைகோத்து, தொகுதி மக்களுக்கு எதிரான வேலைகளில்கூட ஈடுபடுகிறார்கள் சிலர். அவர்களை ஐந்து ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையில் வாக்காளர்கள் செய்வதறியாது தவிக்கிறோம்.
வருண் காந்தியின் மசோதாவின்படி குறிப்பிட்டத் தொகுதியின் வாக்காளர் ஒருவர், அந்தத் தொகுதியின் 25 விழுக்காடு வாக்காளர்களின் கையொப்பத்தைப் பெற்று, சபாநாயகரிடம் ஒரு புகார் மனுவை சமர்ப்பித்து, அவர்களின் மக்கள் பிரதிநிதியை திருப்பி அழைக்கும் வழிமுறைகளைத் தொடங்கலாம். அந்த மனுவின் உண்மைத் தன்மையை பரிசீலித்தபிறகு, சபாநாயகர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வாக்காளர்களின் கையொப்பத்தைப் பரிசோதிக்கச் செய்வார்.
பின்னர் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் பத்து இடங்களில் வாக்கெடுப்பு நடத்தும். வேட்பாளருக்கு முன்பு கிடைத்த வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு வாக்கு அவரைத் திருப்பி அழைப்பதற்கு ஆதரவாக இருந்தால், அந்த உறுப்பினர் பதவி இழப்பார். முடிவு வந்த 24 மணி நேரத்துக்குள், சபாநாயகர் முடிவை மக்களுக்குத் தெரிவிப்பார். பின்னர் தேர்தல் ஆணையம் அங்கே இடைத்தேர்தல் நடத்தும்.
இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் பல வாதங்களை முன்வைக்கின்றனர். மக்களுக்கு தேர்வு செய்யும் உரிமை இருந்தால், திருப்பி அழைக்கும் உரிமையும் இருந்தாக வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பொறுப்புணர்வை ஏற்படுத்தும், வெளிப்படைத் தன்மையை உருவாக்கும், சனநாயகத்தை பலப்படுத்தும் என்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இதனை ஆதரிக்க மறுக்கிறார்கள். 'ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதே கடந்த முறை வென்றவர்கள் சரியில்லை என்றால் அவர்களைத் தோற்கடிப்பதற்குத்தானே? அதுவும் ஒருவகையில் திருப்பி அழைப்பது போன்றதுதானே? திருப்பி அழைக்கும் தேவை ஏற்படாத அளவுக்கு நல்ல வேட்பாளர்களை முதலிலேயேத் தேர்வு செய்ய வேண்டியதுதானே?' என்று கேட்கிறார்கள்.
அதேபோல, 'பொதுத்தேர்தலிலேயே வாக்களிக்காத மக்கள் எப்படி மறுதேர்தலில் உற்சாகமாக பங்கேற்பார்கள்? இந்த திருப்பி அழைக்கும் திட்டமே ஊழலைக் கொண்டு வருமே, மக்கள் பிரதிநிதிகள் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்குமே, எதிர்க்கட்சிகள் இதனை தவறாக பயன்படுத்துவார்களே - இவ்வாறானக் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்தப் பிரச்னையில் பல அணுகுமுறைகளை நாம் மேற்கொள்ளலாம். புலன் விசாரணை செய்து, தண்டனை கொடுத்து, தகுதியற்றவரை பொது வாழ்வில் இருந்து விரட்டுவது என்பது முதல் அணுகுமுறை.
சாதி மத வெறுப்பைத் தூண்டுபவர்கள், ஊழல் செய்வோர், தீண்டாமையை ஆதரிப்போர், பெண்களை இழிவு படுத்துவோர், இன்னபிற சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பதவி இழக்கச் செய்யலாம். கொலை, ஆள் கடத்தல் போன்ற வழக்குகளில் தண்டனை பெறுபவர்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்யலாம்.
மக்கள் பிரதிநிதி ஒருவர் தவறு செய்தால், அவரைத் தண்டிப்பதற்கு சட்டங்கள், நீதிமன்றங்கள், காவல்துறை, சிறைத்துறை போன்றவை இருக்கின்றன. ஆனால் வழக்குகளை நடத்தி முடிப்பதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. வழக்கு, விசாரணை, தீர்ப்பு, மேல் முறையீடு என மக்கள் பணம் இன்னும் கூடுதலாக விரயமாக்கப்படுகிறது. எனவே தண்டிக்க விழைவதைவிட தவறுகள் நடக்காமல் இருக்கச் செய்வதே சிறப்பு.
வேட்பாளர் தேர்வில் கட்சிகள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கலாம். குற்றம் செய்தவர்களை
எப்போதுமே தேர்தலில் நிற்க விடாமல் செய்யலாம்.
இரண்டாவது அணுகுமுறை, பதவியில் இருப்பவருக்கு தனது பதவி நிலையானதல்ல, அது எந்நேரமும் பறிக்கப்படலாம் என்கிற பயம் வருகிற நிலைமையை உருவாக்குவது. அதற்கு பிரச்னைக்குரிய உறுப்பினர்களின் சபை பங்கேற்பு விவரங்கள், அவர் கேட்கும் கேள்விகள், எடுக்கும் நடவடிக்கைகள், அமல்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றை பரிசீலிக்கலாம். அவர்களின் வருமானம், சொத்துக்கள் போன்றவற்றை கண்காணிக்கலாம், கணக்கெடுக்கலாம்.
மக்கள் பிரதிநிதி ஒருவர் அவரது தொகுதி மக்கள் விரும்பாத ஒரு முடிவை எடுத்தால், அல்லது பெரும்பான்மை வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இயங்குவது நிரூபிக்கப்பட்டால் அவர் திருப்பி அழைக்கப்படலாம்.
அதாவது, தங்கள் பிரதிநிதி தங்களின் எண்ணங்கள், ஈடுபாடுகள், உணர்வுகள், தேவைகள் போன்றவற்றை சரிவர பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று வாக்காளர்கள் உணரும்போது, வேறொருவரைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கலாம்.
ஒருவரை திரும்ப அழைக்கப் போகிறோம் (recall), அல்லது பதவியிலிருந்து விரட்டப் போகிறோம் என்று எதிர்மறையாகப் பார்க்காமல், இன்னொருவரை பிரதியீடு (replace)  செய்யப் போகிறோம் என்று உடன்பாடாக அணுகுவது சிறப்பாக இருக்கும்.
மூன்றாவது அணுகுமுறை மக்கள் பிரதிநிதிகள் முக்கியப் பிரச்னைகளில் தங்கள் தொகுதி வாக்காளர்களின் எண்ணங்களை அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது. முகநூல், குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக வாக்காளர் எண்ணங்களை மக்கள் பிரதிநிதிகள் கேட்டறியலாம்.
நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பால்தான் மக்கள் பிரதிநிதிகள் திருப்பி அழைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வீண் குழப்பங்களும், பெரும் பிரச்சினைகளும் வந்து சேரும். பணத்தைக் கொடுத்து அல்லது வேறு குறுக்கு வழிகளில் ஒருவரை பதவிநீக்கம் செய்ய முடியாது என்கிற நிலை வேண்டும்.
திருப்பி அழைக்கும் நடவடிக்கைகளில் மக்கள் பிரதிநிதிகளை மட்டுமல்ல, உயர் அரசு அதிகாரிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், மக்கள் பிரதிநிதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தூக்கி எறியலாம். ஆனால் உயர் அதிகாரிகள், அவரவர் பதவிகளில் பல ஆண்டுகள் நிலைத்து நின்று, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எடுபிடிகளாகி, பெரும் குற்றங்கள் செய்கின்றனர். அரசியல்வாதிகளைப்போல அவர்கள் மக்களை சந்திக்க வேண்டியதில்லை. அரசுகள்போல நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவும் தேவையில்லை. எனவே குறிப்பிட்ட முக்கியமான உயர் அதிகாரிகளையும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும்.

கட்டுரையாளர்:
ஒருங்கிணைப்பாளர்,
பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.