பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புத்துரம் நல்கும் சுற்றுலா

தமிழகம் காண வருவோரைப் பயணிகளாக வரவேற்றுப் பாசம் மிகுந்த நண்பராக வழியனுப்புவோம் என்பது தமிழக அரசின் குறிக்கோளாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1968-இல் ஆரம்பிக்கப்பெற்றது.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 7:51 pm

தி. வே. விஜயலட்சுமி

தமிழகம் காண வருவோரைப் பயணிகளாக வரவேற்றுப் பாசம் மிகுந்த நண்பராக வழியனுப்புவோம் என்பது தமிழக அரசின் குறிக்கோளாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1968-இல் ஆரம்பிக்கப்பெற்றது. தமிழகக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், ஒரு சிறு பகுதி பள்ளிகளிலும் பாடமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு இவை சிறந்த சான்றாயினும், கோடை விடுமுறையை இன்பமாகக் கழிக்க இளஞ்சிறார்கள், மாணவர்கள் பெரிதும் விரும்பினும், அதைச் செயற்படுத்த முடியாமல் பெற்றோர்கள் இடர்ப்படுவதைக் காண்கிறோம்.
பள்ளிகளில் பாடவழி சுற்றுலாத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், பிள்ளைகள் ஆசிரியர்களுடன் செல்வதால் சில கட்டுப்பாட்டுகளுடன் இருக்க வேண்டியுள்ளதால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அவர்கள் பெற்றோருடன் இன்பச் சுற்றுலா செல்ல விடுமுறை நாட்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கல்விக் கூடங்களில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. பத்து மாதங்கட்கு மேல் பாடநூல்களைச் சுமந்து காலை உணவை உண்ண நேரமின்றி சிற்றுண்டியைச்சிறிதே உண்டு, பேருந்துகள், மிதிவண்டி, பள்ளிப் பேருந்துகள் என இவற்றில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் கற்பிப்பதைக் கேட்டு, எழுதி, அதுவும் போதாமல் தனிப்பட்ட முறையில் பயிற்சியும் எடுத்துக்கொண்டு விளையாட நேரமின்றி, பம்பரமாய்ச் சுழன்ற மாணவர்கட்கு பெருமூச்சு விடுவதற்கு கோடையில்தான் நேரம் கிடைக்கிறது.
விளையாட நேரம் உள்ளது. ஆனால் இடமில்லை. வசதியுள்ளவர்கள் மடிக்கணினி, செல்லிடப்பேசி போன்ற தொழில்நுட்பக் கருவிகளில் மூழ்கி, நேரத்தைக் கழித்து வேண்டா நோய்களைத் தேடிக் கொள்வர்.
சில ஆண்டுகட்கு முன்னர்வரை விடுமுறையில் உறவினர் இல்லங்கட்குச் சென்று நாம் மகிழ்ந்து பொழுதுபோக்கித் திரும்புவோம். உறவுமுறை அன்று உறுதியாக இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில், உறவு என்ற மூன்றெழுத்து முற்றிலும் மறந்தநிலை ஏற்பட்டுவிட்டது. நட்பும் அருகி வருகிறது.
இந்நிலையில் பெற்றோர் உடன் பிறந்தோருடன் பிள்ளைகள் பல்வேறு புது இடங்கட்குச் சுற்றுலா செல்வதை ஊக்குவித்தல் தலையாய கடமையாக உள்ளது. நூல்களால் படித்தறிவதைவிடக் கேட்டறிவது சிறந்தது. கேட்டறிவதினும் நேரில் கண்டறிவது மிகமிகச் சிறந்தது.
ஒன்றின் இயல்பை உண்மையாக அறிதற்குக் காட்சியளவை, கருத்தல் அளவை, நூல் அளவை என்னும் மூன்று அளவைகளும் தேவையானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்குகள், காடுகள், ஊர்கள், இயற்கைக் காட்சிகள், இயந்திரங்கள், பொருட்காட்சிகள், கோவில்கள் ஆகியவற்றைக் கண்டு அறிவதைப்போலப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்ள முடியாது.
சுற்றுலாவினால் பல புதிய அனுபவங்கள் ஏற்படுகின்றன. தெரியாத உண்மைகள் தெரிகின்றன. மனம் மகிழும் அறிவு வளரும். புதிய இடங்களைக் காணச் செல்லும்போது இடையில் துன்பங்கள் தோன்றினும் இன்பச் செலவு என்றே கூறுகிறோம்.
வாஸ்கோடகாமா, மார்க்கோபோலோ, கொலம்பஸ், காப்டன் ஜேம்ஸ்குக் என்போர் நீர் வழிப் பயணத்தை மேற்கொண்டு புதிய பல நாடுகளையும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிந்திருந்தனர்.
யுவான்சுவாங், பாகியான், தலாமி போன்ற வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகள் தாம் அக்கால வரலாற்றை நாம் அறிய அடிப்படையாக இருக்கின்றன. சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளுடன் மலைவளம் காணச் சென்ற நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரம் சித்திரித்துக் காட்டுகின்றது.
இவ்வாறே இன்றும் உதகமண்டலம், கொடைக்கானல், டார்ஜிலிங், சிம்லா முதலிய மலைப் பகுதிகளுக்குச் சென்று பலர் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். திருவிழாக்களை முன்னிட்டும், புண்ணியம் அடைதலை விரும்பியும், புண்ணியத் தலங்களுக்கு மக்கள் சென்று வரும் வழக்கம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.
கற்றற்குரிய நூல்களை மக்கள் கற்றிருந்தாலும் உலகியலோடு ஒட்டியொழுகுதலை அறியாதவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்பார் வள்ளுவர்.
கிணற்றில் இருக்கும் தவளை வேறொன்றையும் அறியாமையால் அதையே உலகமாகவும் உயர்ந்ததாகவும் கருதிக் கொண்டிருக்கிறது. இவ்வாறே, பிற ஊர்களை நேரில் பார்த்து அறியாத குழந்தைகள் சிறுவர்கள் தம் ஊரைப்பற்றி மட்டுமே அறிந்துள்ளனர்.
உலகியலை அறிவதற்கு ஆண்டுக்கொரு முறை மனைவி மக்களுடன் பிற ஊர்கட்குச் சென்று புத்தறிவு பெற வேண்டும். இதனால் பிள்ளைகளும் புத்துணர்வு அடைந்து, புதுப்பொலிவு பெறுவர்.
நடுத்தரப் பிரிவைச் சார்ந்தோர் சுற்றுலா செல்வதற்காக இயன்ற தொகையைச் சேர்த்துவைத்து, கோடை விடுமுறையைக் குழந்தைகளுடன் காண வேண்டிய இடங்கட்குச் சென்று வருவதைக் கடனாகக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இயற்கைக் காட்சிகளையும் பிற மக்களையும், உயிர்களையும் கண்டுகளித்து, உள்ளத்திலும், உடலிலும் வலுவேற்றிக் கொண்ட, தம் ஊர் திரும்பும் பெற்றோர்களும் பிள்ளைகளும் புத்துரம் பெறுவது உறுதி.
பள்ளிக் குழந்தைகளுக்கென விடுமுறை நாட்களில் பலவகை கலைகளையும் கற்றறிய ஆங்காங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒரு மணி நேரம் இத்தகு வகுப்புகட்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம்.
பல ஊர்களைக் கண்ணாறக் கண்டு தாமும் சுவைத்து, தம் மக்களையும் சுவைக்கச் செய்தல், இக்கோடை விடுமுறையில் பெற்றோர்கள் மனங்கொள்ள வேண்டியவொன்று.
நம் நாட்டின் மீது உண்மையான பற்று ஏற்பட, சுற்றுலா பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் சுற்றுலா வாரியங்களும் தக்க வகையில் உதவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.