வாசிக்கும் பழக்கமும் நேசிக்கும் வழக்கமும்

உலக மக்கள் வணங்கி வழிபடும் தெய்வத்தை மையமாக வைத்து நாடெங்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆண்டு முழுவதும் பாடுபடும் உழைப்பாளி மக்களுக்கு ஒரு கொண்டாட்டம் தேவைப்படுகிறது.
வாசிக்கும் பழக்கமும் நேசிக்கும் வழக்கமும்
Updated on
3 min read

உலக மக்கள் வணங்கி வழிபடும் தெய்வத்தை மையமாக வைத்து நாடெங்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆண்டு முழுவதும் பாடுபடும் உழைப்பாளி மக்களுக்கு ஒரு கொண்டாட்டம் தேவைப்படுகிறது. பட்ட பாடுகள் மறக்கவும், புதிய உற்சாகம் பிறக்கவும் பயன்படுகிறது. இது கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை நடைபெறுகின்றன.
விழாக்களில் சமயம் சார்ந்த விழாக்களும் உண்டு. சமயம் சார்ந்த சமூக விழாக்களும் உண்டு. என்றாலும் எல்லோரும் ஒத்த கருத்தோடும், உணர்வோடும் செயல்படும் போதுதான் ஊரில் அமைதியும், உள்ளத்தில் அமைதியும் இருக்கும். மக்கள் கூட்டமும், ஆட்ட பாட்டமும் குறையாமல் இருக்கும்.
இதன் தொடர்ச்சியாகவே இப்போது புத்தக விழாக்களும் ஊர்தோறும் பரவி வருகின்றன. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி முறையாகும். ஒரே கூரையின் கீழ் அறிவுக் கருவூலங்களைக் காணவும், வாங்கவும், அறிவார்ந்த மக்களைக் கண்டு அளவளாவி மகிழவும் ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது.
இந்த உலகம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகக் காலத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது. அதற்கு எவ்வளவு காலத்தை எடுத்துக் கொண்டது என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அறிவார்ந்த சமுதாயத்தின் வளர்ச்சியே நாகரிக வளர்ச்சியாகும். அந்த நாகரிகங்களின் அடையாளமே சிறந்த இலக்கியங்களாகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மனிதனாக இருந்த மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவன் இயற்கைத் தன்மையை சூறையாடி விடும். 'பல பேர் நடந்து செல்லக் கூடிய பாதையில் செடியை நட்டு வளரவிட்டால், அது வளராமல் அழிந்து விடும். கல்வியில்லாத மனிதனும் அடிபட்டுத்தான் போவான்' என்று சிந்தனையாளர் ரூசோ கூறியுள்ளார்.
மனிதனை மனிதனாக மாற்றுகின்ற கல்விக்கான கருவியே புத்தகங்களாகும். புத்தகங்களின் வளர்ச்சியும், கல்வியின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது; தனித்து நிற்க இயலாதது, பிரிக்கவும் முடியாதது.
இந்த பூமி ஞானம் பிறந்த பூமி; அறிவார்ந்த முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த மண்; இங்கே கல்விக்கும், குருமார்களுக்கும் குறைவில்லை. குடிசைகளிலே பிறந்த குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளியாக முளைத்தது. தெருவெங்கும் கிளை பரப்பியது.
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
பலவித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
என்று பாடினான் பாரதி.
தமிழர்களின் கல்விக்கும், பண்பாட்டிற்கும் ஆதாரமாக மிகச் சிறந்த தமிழ் தாய்மொழியாக அமைந்தது. உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகவும், உயிரோடு இப்போது இருக்கும் வல்லமை பொருந்தியதுமான தமிழ்மொழி தமிழர்களுக்கு படைபலமாகும்.
இந்தத் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுவதற்குச் சங்க இலக்கியங்களே போதுமானதாக உள்ளது என்று மொழியாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
'சங்க தொகுதியில் இடம்பெறும் 26,350 வரிகள் உலகின் ஒப்புயர்வற்ற செவ்வியல் மொழி தமிழ் என்பதை நிலைநிறுத்த போதுமான சான்று' என்று செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.
இவ்வாறு உலக நாகரிகங்களுக்கும், மொழிகளுக்கும் இலக்கியங்களே சான்றுகளாக இருக்கின்றன. அவையே ஒவ்வொரு நாட்டுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவை பண்பாட்டின் சின்னங்களாகத் திகழ்வதை வரலாறுகளில் காணலாம்.
மிகச் சிறந்த வீரர் என்று வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்படும் அலெக்சாண்டர் கூறுவதைக் கேட்டால் அது நம்மை சிந்திக்கத் தூண்டும். கத்தியின் வலிமையாலும், ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தையே வெற்றி கொள்வேன்.
வாளின் வலிமையை விடவும் எழுதுகோலின் வலிமையே உயர்வானது என்பதை அறிவுலகம் நிறுவிக் காட்டியது. இலக்கியங்களின் ஆற்றலும் அப்படிப்பட்டதுதான்.
உலகில் மிகச்சிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் சுமேரிய நாகரிகம் கி.மு.2700க்கு முற்பட்டது. அந்த நாகரிகத்துக்குப் பெருமை, முதல் இலக்கியம் அக்காலத்தில் தோற்றம் கண்டது என்பதுதான்.
அந்தக் காலத்திலேயே அங்கு நூலகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு நூலகத்தில் 30 ஆயிரம் மண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள் முதலியன எழுதப்பட்டுள்ளன.
கிரேக்க நாகரிகத்தின் பெருமைக்குரியவர் பெருங்கவிஞர் ஹோமர். அவர் எழுதிய ஒடிசி, இலியட் ஆகிய காவியங்கள் மூலம் அக்கால வரலாற்றை அறிய முடிகிறது. அக்கால கிரேக்கர்களின் பண்பாட்டையும், வீரத்தையும், வெற்றியையும், ஆட்சியில் அலங்கோலங்களையும்கூட அறிய முடிகிறது.
கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அழிவுற்ற பிறகு டாலமி மன்னர்களின் ஆதிக்கம் பரவியது. அவர்களால் ஆளப்பட்ட அலெக்சாந்திரியா நகருக்குப் பெருமை நெடிதுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அங்கு ஒரு நூலகம் சிறந்து விளங்கியது என்பதும்தான். அதில் ஏழு லட்சம் நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.
நைல் நதி நாகரிகம் என்று போற்றப்படும் எகிப்து நாகரிகத்துக்குப் பெருமை இலக்கியம் கண்டதுதான் என்று வரலாறுகள் கூறுகின்றன.
சிந்துவெளி நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களே சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு இலக்கியங்களே நாகரிகத்தின் சின்னங்களாகவும், அடையாளங்களாகவும் உள்ளன.
'எமது குடியேற்ற நாடுகளை வேண்டுமானால் இழப்போமே தவிர, ஷேக்ஸ்பியர் இலக்கியங்களை ஒருபோதும் இழக்க மாட்டோம்' என்று பிரிட்டனைக் கூற வைத்தது எது? இலக்கியங்களின் இன்றியமையாமையில்லையா?
'நாம் எழுத்தால், புத்தகத்தால் சண்டையிடுகிறோம்' என்று ஷேக்ஸ்பியர் கூறியதும் அதனால்தான்.
உலகத்தையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோல்களாக அமைந்தவை வால்டேர், ரூசோ என்னும் இரண்டு சிந்தனையாளர்களின் படைப்புகளாகும். அவற்றைப் பார்த்தால் சின்னஞ்சிறு காகிதங்களாகத் தெரிந்தன. ஆனால் அவை அநீதியை எதிர்க்கும் ஆயுதங்களாகும் என்பதை காலம் நமக்குக் காட்டி விட்டது.
'சொற்களாலும், பேனாவினாலும் மக்களைச் சீர்திருத்திவிடலாம்' என்று வால்டேர் கூறினார்.
'சுதந்திர மனிதனாகப் பிறந்த மனிதனுக்குச் சிந்திக்கவும், அதைச் சொல்லவும் உரிமையுண்டு' என்று முழங்கிய வால்டேர் மக்கள் அனைவரையும் நோக்கி 'நீங்கள் சுயமாகச் சிந்தியுங்கள்' என்று குரல் கொடுத்தார்.
ஒரு தேசம் அனைத்துத் துறைகளிலும் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற வால்டேரின் முழக்கம் மக்களைத் தட்டி எழுப்பியது. கொடுங்கோலர்களை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தைக் கொடுத்தது. மன்னர் ஆட்சியை இறக்கி மக்களாட்சியை நிலைநாட்டும் மகத்தான பிரெஞ்சுப் புரட்சியாகப் பிற்காலத்தில் உருவெடுத்தது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் அந்தப் புரட்சியின் புதுமை முழக்கம் உலகம் எங்கும் பரவியது. உலக நாடுகளில் பல இந்தக் கொள்கை முழக்கத்தையே அரசியல் சாசனமாக ஏற்றுக் கொண்டன.
வால்டேர் இறந்த பிறகுதான் பிரெஞ்சுப் புரட்சி கருக் கொண்டது. 1791ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் எரிமலை பொங்கி எழுந்தபோது, வால்டேரின் பூத வுடல் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு பாரிஸ்மா நகருக்குள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
கொடுங்கோன்மையின் சின்னமாக விளங்கிய பாஸ்டில் சிறை உடைக்கப்பட்டு அதன் அழிவுக் குவியல் மீது வால்டேரின் உடல் ஓர் இரவு முழுவதும் வெற்றிச் சின்னமாக வைக்கப்பட்டது. அவரது எழுத்துகள் நாடகங்களாகவும், கவிதைகளாகவும், கடிதங்களாகவும், கட்டுரைகளாகவும், அகராதிகளாகவும் இப்போதும் நமக்கு வழிகாட்டுகின்றன.
ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா என்று கேட்டார் காந்தியார். ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் கற்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன என்பதையே அவர் இப்படிக் கூறுகிறார்.
இதைத்தான், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று ஒளவைப் பாட்டி பாடி வைத்தார். இது மாணவ - மாணவிகளுக்காக மட்டும் பாடப்பட்டதல்ல, மனித குலத்துக்காகவே பாடப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த அறிஞர்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; கம்பர் காலம் வேறு; இளங்கோவடிகள் காலம் வேறு. இவர்கள் நூல்களாலேயே அறியப்படுகின்றனர்.
ஆயினும் காலத்தின் இந்தத் தடைகளைக் கடந்து ஆசிரியப் பெருமக்களுடன் உறவு கொள்வதற்கு நூல்கள் துணை செய்கின்றன. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம் என்று டாக்டர் மு.வ. கூறியிருப்பது எவ்வளவு பெரிய உண்மை!
மனிதர்களிலே நல்லவர்களும், தீயவர்களும் இருப்பது போலவே நூல்களிலும் நன்மை செய்வனவும் உள்ளன. தீமை செய்வனவும் உள்ளன. நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதே வாசகர்களின் கடமையாகும். பொல்லாதவற்றை வாங்கிப் படிப்பது பாவத்தைப் பணம் கொடுத்து வாங்குவது போன்றதாகும்.
நூல் நிலையத்திற்குள் பாம்பை நுழையவிட்டாலும் பரவாயில்லை. நமது பண்பாட்டை, ஒழுக்கத்தை, உணர்வை கெடுக்கிற நூல்களை நுழைய விடக் கூடாது என்று குன்றக்குடி அடிகளார் கூறிச் சென்றிருப்பதை கவனமுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசாங்கம் நல்ல நூல்களை வாங்கி பதிப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அறிவுக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.
வாழ்க்கை என்பது திட்டமிட்டு வாழ்வதுதான். என்றாலும் புத்தகங்களுக்காகச் செய்யும் செலவு செலவினங்கள் அல்ல. அவை மூலதனமாகும். இந்த மூலதனமே மனித குலத்தை முன்னேற்றும். வாசிக்கும் பழக்கமும், நேசிக்கும் வழக்கமும் மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com