நடைபாதை நம் அடிப்படை உரிமை

கடந்த ஜூன் மாதம் திருப்பூர் தனியார் கைத்தறி ஆலையில் பணியாற்றி வந்த 63 வயது பெரியவர் ஒருவர் நாகர்கோவிலுக்கு வந்தார்.
நடைபாதை நம் அடிப்படை உரிமை
Updated on
3 min read

கடந்த ஜூன் மாதம் திருப்பூர் தனியார் கைத்தறி ஆலையில் பணியாற்றி வந்த 63 வயது பெரியவர் ஒருவர் நாகர்கோவிலுக்கு வந்தார். கோட்டாறைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருந்த அவர், நிச்சயதார்த்த ஏற்பாடுகளை செய்வதற்காக வருகை தந்தபோது அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்தனர். அனைவருமாக நாகர்கோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்திருக்கிறவர்கள் எத்தனை பூரிப்போடும் மகிழ்ச்சியோடும் இருந்திருப்பார்கள்? தனது ஆசை மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஒரு தந்தையின் மனதில் எவ்வளவு எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும், கனவுகளும் இருந்திருக்கும்?
நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு சுமை ஆட்டோ நடந்து போய்க்கொண்டிருந்த சந்திரசேகர் குடும்பத்தினர் மீது பலமாக மோதியது. சந்திரசேகர் ஒரு டிப்பர் லாரி மீது தூக்கி வீசப்பட்டு, தலையில் அடிபட்டு அதே இடத்தில் அகால மரணமடைந்தார்.
அவருடன் நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று பெண்களும், ஓர் ஆணும் பலத்த காயமடைந்தனர். திருமணம் நடத்த வந்தவர்கள் மயான பூமிக்கும், மருத்துவமனைக்கும் சென்று சேர்ந்தனர்.
சந்திரசேகர் மரணத்தை ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது, கூடாது. இது மத்திய, மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புக்களும், குடிமைச் சமூகமும், நீங்களும், நானும் அனைவருமாக பங்கேற்று நடத்திய ஒரு சமூகக் கொலை.
இந்தச் சம்பவம் நான் வசிக்கும் பகுதியில் நடந்ததால், அது என்னை நேரடியாகவும் பலமாகவும் பாதித்தது. தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் தினமும் தாங்கள் செய்யாத தவறுகளுக்காக எத்தனையோ அப்பாவிகள் இப்படி கொடூரமாக தண்டிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் பெரும்பாலான சாலைகளில், பெரிய தெருக்களில் நடைபாதை என்ற ஒன்று அறவே கிடையாது. அமெரிக்காவில் நடைபாதை இல்லாத சாலைகளை, ஊர்களைப் பார்க்கவே முடியாது. அவை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள்கூட ஏறி இறங்கி, சுமுகமாக ஓடும் விதத்தில் அழகாக வடிவமைத்திருப்பார்கள்.
இஸ்ரேல் நாட்டின் சாலைகள் பல நம் நாட்டு சாலைகள் போல குறுகலானவையாக இருக்கும். ஆனாலும் சாலைகளின் இரு மருங்கிலும் உயர்த்திக் கட்டப்பட்ட நடைபாதைகள் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டு நிலைமை இவ்விரு நாடுகளிலிருந்தும் பெரிதும் வேறுபட்டிருக்கிறது.
நம் நாட்டில் சில சாலைகளில் நடைபாதைக்கென இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதனைக் கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். கடைப் பொருட்கள், விளம்பரத் தட்டிகள், அல்லது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நடைபாதைக்கான இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
அபூர்வமாக சில இடங்களில் முறையாக நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை மிகக் குறுகலானவையாக இருக்கின்றன. மேலைநாடுகளில் இருப்பதுபோல ஏற்ற இறக்கங்கள் இல்லாது, மேடு பள்ளங்கள் ஏதுமின்றி சமமாக இருக்காது.
அந்த நடைபாதைகளில் நடந்து செல்வது சர்க்கஸ்காரர்கள் நடத்தும் சாகசம் போன்றதாகவே இருக்கிறது. குண்டு குழிகள், திறந்த சாக்கடைத் துவாரங்கள், உறுதியற்ற மூடிகள், உடைந்த ஓடுகள், இடிந்த கரைகள் என நிலைமை மிக மோசமாகவே இருக்கிறது.
பல ஊர்களில் நடைபாதை இல்லாததாலோ அல்லது அதற்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலோ அல்லது நடைபாதை பொதுமக்கள் பயன்படுத்தும் அளவுக்குத் தரமின்றி இருப்பதாலோ, மக்கள் சாலைகளில் இறங்கி வாகனங்களோடு சேர்ந்து நடக்க வேண்டியிருக்கிறது.
இப்படி நடக்கும்போது பள்ளிக் குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், இன்னும் முக்கியமாக, வயது முதிர்ந்த பெரியவர்கள் பலர் வாகனங்களால் இடித்துத் தள்ளப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.
இந்தப் பிரச்னையில் அரசுகளின் மெத்தனப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு நான்கு வழி, ஆறு வழித் தடங்கள் அமைக்கும் அரசுகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஐந்தடி வீதியில் ஒரு நடைபாதை அமைக்கத் தவறுவதேன்? யாரும் இது குறித்து கேள்வி கேட்பதுமில்லை.
நடைபாதைகள் இருந்தாலும் அவற்றை பலரும் ஆக்கிரமித்து வைத்திருப்பதை காவல்துறையினரோ, போக்குவரத்து காவல்துறையினரோ, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோ, உள்ளாட்சித்துறை அலுவலர்களோ கண்டுகொள்வதில்லை.
சில இடங்களில் பெரிய வணிகர்களும், நடைபாதை வியாபாரிகளும், பிற பயனாளிகளும் தொடர்புடையவர்களுக்கு 'ஏதோ' கொடுத்து நடைபாதைகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றனர். சில பகுதிகளில் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் ரெளடிகளின் தலையீடுகளும் காரணமாய் அமைகின்றன.
பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட் போன்ற அமைப்புகள் தமக்கான வரிகளை வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மக்களின் போக்குவரத்துக்கும், பாதுகாப்புக்கும், கண்ணியத்துக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் நடைபாதைகள் அமைத்துக் கொடுப்பதைப் பற்றி கடுகளவும் கவலைப்படுவதில்லை. கவுன்சிலர் முதல் எந்தத் தலைவரும் சாலைகளில் நடப்பதில்லையே? நடந்தால்தானே தெரியும் மக்கள் படுகிற துன்பம்?
குடிமைச் சமூகமான நாமாவது நடைபாதை வேண்டும் என்று கேட்கிறோமா? பெரும்பான்மையான மக்கள் நடைபாதை இன்மையை ஒரு பிரச்னையாகவேக் கருதுவதில்லை. வளைந்து நெளிந்து குனிந்து ஒதுங்கி வாழப் பழகியவர்களாயிற்றே நாம்?
நமது சமூகத்தில், வாகனப் பயணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாதசாரிக்குக் கொடுக்கப்படுவதில்லை. மேலைநாடுகளில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் கட்டாயமாக நின்று அவர்கள் கடந்து செல்ல உதவிட வேண்டும் என்பது சட்டம். நம் நாட்டிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.
நடைபாதையின்மை ஒரு நகர்ப்புற பிரச்னை மட்டுமல்ல. வாகனப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிராமத்துத் தெருக்கள்கூட ஆபத்தானவையாகின்றன. சாலையைவிட சற்றே உயர்ந்த நடைபாதைகள் சாலை விபத்துக்களை கணிசமான அளவில் குறைக்கும்.
நடைபாதைகள் இருக்கும்போது, குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமே சாலைகளைக் கடக்க வேண்டும் என்கிற பழக்கம் உருவாகிறது. இதனால் விபத்துகள் கணிசமாகக் குறையும். விலை மதிப்பற்ற மனித உயிரை ஏன் அநியாயமாக சாலையில் இழக்க வேண்டும்?
குழந்தைகள் பள்ளிகளுக்கு பாதுகாப்பாகச் சென்று வரவும், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வெளியே போய் வரவும், வயோதிகர்கள் பிரச்னையின்றி நடமாடித் திரியவும், ஒட்டுமொத்தச் சமூகமும் பாதுகாப்பாக உணரவும் நடைபாதைகள் பெரிதும் உதவும்.
நடைபாதை பாதுகாப்பின் மூலம் ஏராளமான மக்களின் மனக்கவலைகள், அச்சங்கள், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை காணாமல் போகச் செய்யலாம்.
நடைபாதைகள் பாதுகாப்பை மேம்படுத்துவது போலவே, சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கும் உதவுகின்றன. தூய்மையும் அழகுணர்வும் கொண்ட சாலைகள் மற்றும் நடைபாதைகள் மக்கள் மத்தியில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஆங்காங்கே குப்பைகளைத் தூக்கி எறிவது, சிறுநீர் கழிப்பது, துப்புவது போன்ற பழக்கங்கள் மறையும். மக்கள் மாண்போடும், கண்ணியத்தோடும் வாழ முயற்சிப்பார்கள்.
நடைபாதைகளை ஓர் அடிப்படை உரிமையாக நாம் அனைவரும் பார்க்கத் தொடங்க வேண்டும். அந்த உரிமை இப்போது எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரிகளிடம் இருந்து சேகரிக்க வேண்டும்.
இவை கிடைத்ததும் பல்வேறு நிலைகளிலுள்ள அரசுகள், அரசுத் துறைகள் மேற்கண்ட உரிமையினை மதிக்கச் செய்ய பொதுநல வழக்குகள் தொடர வேண்டும்.
குடிமைக் சமூகமும் இந்த அரும்பணியில் தன் பங்கை ஆற்ற வேண்டும். சாலையோரக் கடைக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள்ளே வந்து நின்று பொருட்கள் வாங்குவது போன்று கடைகளை மாற்றியமைக்க வேண்டும்.
கடைக்காரர்களும், பொதுமக்களும் கண்ட இடங்களில் எல்லாம் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். சாலைகளின் விரிவான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
நடைபாதைகளை ஆக்கிரமிப்பதும், அவற்றின்மீது நடப்பதற்கு தடைகள் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரியக் குற்றங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.
இதற்குரிய சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளும், பெரிய தெருக்களும், ஊர்களும் இல்லை என்கிற நிலையை நம்நாடு அடைந்தாக வேண்டும்.

கட்டுரையாளர்:
தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com