புதிய பாடத் திட்டம் ஒரு பார்வை

இந்திய அளவில் நிகழும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தமிழகக் கல்வி முறை அமையவில்லை என்ற குற்றச்சாட்டு எங்கும் எழுந்தபோது தமிழ்நாடு அரசு அதனை
Updated on
3 min read

இந்திய அளவில் நிகழும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தமிழகக் கல்வி முறை அமையவில்லை என்ற குற்றச்சாட்டு எங்கும் எழுந்தபோது தமிழ்நாடு அரசு அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டது. கல்வியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், கல்வித்துறை செயலாளர் உதய சந்திரனும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டனர். புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் கல்வித்துறையை முடுக்கி விட்டனர்.
தமிழகப் பள்ளிகளில் இப்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்தி ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை கடந்த மே மாதம் அமைத்தது.
இந்தக் குழுவினர் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேம்பட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
மேலும் சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களையும் நடத்தினர். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து வகுப்பு, பாடவாரியாக வரைவுப் பாடத்திட்டம் தயாரித்தனர்.
அதனை முதலமைச்சர் கடந்த நவம்பர் 20 அன்று வெளியிட்டார். வரைவு பாடத் திட்டம், பாடவாரியாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 
வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும், அதன் அடிப்படையிலேயே புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
''அனைத்துத் துறைகளிலும் மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கவும், எதிர்காலத்தில் கற்கும் கல்வி பயனுள்ளதாக இருப்பதற்கும், பிளஸ் 2 முடிந்ததும் வேலை வாய்ப்பு உத்தரவாதம் தரும் கல்வியாகவும் வரைவு பாடத்திட்டம் அமையும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் பாடத்திட்டங்கள், என்சிஇஆர்டி பாடத்திட்டம் என 15 வகையான பாடத்திட்டங்களை ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை அடிப்படையாக வைத்துப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10, 12 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறமைகளை மாணவர்களுக்கு உண்டாக்கும் வகையில் இந்தப் பாடத் திட்டம் அமைந்திருக்கும். அன்றாட நிகழ்வுப் பாடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் அனைவரும் கூறிவிட இயலாது. கல்வித் தொடர்பு உடையவர்கள் மட்டுமே கூற முடியும். கலைத்திட்டம் என்றால் என்ன? பாடத் திட்டம் என்றால் என்ன? என்பதையறிந்தவர்களே கருத்து சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்களே கருத்துகளைச் சொல்லியும் வருகின்றனர்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தபோதே அது தரமற்றது என்று கூறி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நீதிமன்றத்துக்குப் போயின. தங்களது வணிகக் கல்விக்குக் குந்தகம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இவ்வாறு நடந்து கொண்டன. என்றாலும் உச்ச நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
'நீட்' தேர்வு வந்தபோதும் தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதன் காரண, காரியங்கள் பற்றி ஆராய யாரும் முன்வரவில்லை.
அப்போது நடத்தப்பட்ட 'நீட்' தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்ட வழியில் படித்தவர்களை விட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகமாகத் தேர்ச்சி பெற்றனர். காரணம் 'நீட்' தேர்வுக்கான வினாக்கள் எல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டதுதான்.
ஒரு நாட்டில் பல்வேறு பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்கள் படிக்கும்போது ஒரே ஒரு பாடத்திட்டத்திலிருந்து மட்டும் கேள்வி கேட்கப்படுவது என்ன நியாயம்? அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் கேள்விகள் வேறுபட்ட நிலையில் ஒரே மாதிரித் தேர்வு என்பது எப்படிச் சரியாகும்?
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளே இந்தக் கேள்விகளை எழுப்பி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடையும் விதித்தனர். இதனை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட வழியமைத்துக் கொடுத்தது.
முறையாகக் கல்வி கற்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் மரியாதையில்லாமல் போய்விட்டது. 'நீட்' என்னும் ஒற்றைத் தேர்வு மட்டுமே மாணவர்களின் ஆற்றலைத் தீர்மானிக்கும் என்பதைக் கல்வியுலகம் எப்படி ஏற்றுக் கொண்டது? இது பற்றி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதால் அமைதி கொண்டதா?
நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை முதலில் பாராட்ட வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டதைவிடவும் இது மேலானது என்று முதலமைச்சரும், கல்வியமைச்சரும் போகும் இடமெல்லாம் கூறி வருகின்றனர். 'நீட்' தேர்வை முன் வைத்தே இத்தகைய கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
கல்வி என்பது மாணவர்களின் முழு ஆளுமைகளையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்குத்தக்க பாடத்திட்டங்கள் அமைய வேண்டுமே தவிர, 'நீட்' தேர்வை மட்டுமே நோக்கமாகக் கொள்ளல் சரியாக அணுகுமுறை ஆகாது.
இலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும்போது, சில ஆயிரம் பேர்தான் மருத்துவக் கனவு காண்பவர்களாக உள்ளனர். மிகச் சிலருக்காக மிகப் பலரும் இந்த பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? மருத்துவம், பொறியியல் தவிர மற்ற துறைகள் எல்லாம் தேவையற்றவைதானா? அங்கு பணியாற்றுபவர்கள் எல்லாம் தகுதி குறைந்தவர்கள் என்று பொருளா? 
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். வகுத்திருக்கும் வரைவுப் பாடத்திட்டம் பாடப் புத்தகங்களில் முழுமையாக இடம் பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
'கல்விச் சாலை ஒன்றைத் திறப்பவன், சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான்' என்பார் அறிஞர் விக்டர் ஹியூகோ. ஆனால், இங்கே பள்ளிகளே சிறைச்சாலைகளாக உள்ளன. அவ்வாறு இருக்கக் கூடாது. 'எப்போது விடுமுறை விடுவார்கள்? எப்போது பள்ளி விடுவதற்கான மணியடிப்பார்கள்?' என்று எதிர்பார்க்கும் மனோபாவம் மாறும்படி பள்ளிகள் அமைய வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மன உளைச்சலும், தற்கொலையும் தடுக்கப்படும்.
மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் நூலகக் கல்வி, இசை, கைத்தொழில், குடிமைப் பயிற்சி இவற்றுடன் உடல் வளர்க்கும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற வெறியுடன் எல்லாப் பாட வேளைகளும் மனப்பாடம் செய்வதற்கே ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். 
''சிறுவர் சிறுமியரிடமிருந்து சிறந்ததை வெளிப்படுத்துவதற்கும், அவர்கள் பெற்றுவரும் பயிற்சியில் அவர்களுக்கு உண்மையான ஆர்வம் இருக்கும்படி செய்வதற்கும் உடற்பயிற்சி, கைத்தொழில், ஓவியம் வரைதல், இசை ஆகியவைகளில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்'' என்று காந்தியடிகள் கனவு கண்டார்.
கடந்த காலங்களில் இவையெல்லாம் பாடத்திட்டங்களில் இடம் பெற்று மாணவர்களை மனித நேயம் மிக்கவர்களாக வளர்த்தெடுத்தன. மனப்பாடக் கல்வி மூலமாக மதிப்பெண் எந்திரங்களாக மாணவர்கள் மாற்றப்பட்ட பிறகு கல்வியின் திசை மாறி விட்டது. பணம் பண்ணுவது மட்டுமே கல்வியின் நோக்கமாக இருக்கும் நிலைமாற வேண்டாமா?
'மாதா பிதா குரு தெய்வம்' என்பது பழைய பழமொழியாகப் போய்விட்டது. ஆசிரியர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்போது ஆசிரியர், மாணவர் உறவு முறை ஆரோக்கியமாக இல்லை. இதற்கு நன்னெறி வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்பட வேண்டும்.
பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, புதிய பாட நூல்கள் வெளிவந்தாலும் அவற்றை நடைமுறைப் படுத்தும் பள்ளிகளும், பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கூட்டுறவோடு செயல்பட வேண்டும். பணத்துக்காக நடத்தப்படும் பள்ளிகளில் இந்தச் சமூக உறவு மாறி, போராட்டக் களமாகி வருவதைக் காணலாம்.
கல்வித்துறை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் இதில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும். ஆட்சி மாறும் போதெல்லாம் கல்விக் கொள்கைகளை மாற்றிக் கொண்டே யிருப்பதால் குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
மாணவர்களை சிறந்த குடிமக்களாக ஆக்கித் தரும் பெரும்பணி கல்விக் கூடங்களுக்கான முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். அவர்களின் கல்விக்காக செலவழிக்கப்படும் பணம் தாய் நாட்டுக்குத் தொண்டு செய்வதற்காகவே தவிர, அயல்நாடுகளுக்குச் சேவை செய்வதற்காக அல்ல என்பதை அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற வாழ்வியல் கருத்துகளை எடுத்துக் கூறி, தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி, கவி தாகூர் போன்ற மேதைகளும், உலகக் கல்வியாளர்களும் தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் நமது கல்விக் கூடங்கள் தொடக்கக் கல்வி முதல் தாய்மொழிக் கல்வியை புறக்கணித்தே வந்துள்ளன. அரசுப் பள்ளிகளைத் தவிர, மற்ற தனியார் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே வளர்த்து வருகின்றன. இந்தப் பாடத் திட்டம் அதற்கு வழிகாண வேண்டும்.
'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது கிராம மக்களின் அனுபவப் பொன்மொழி. நமது கல்வி வானத்தை நோக்கிப் பறப்பதாக இல்லாமல் இந்த மண்ணுக்கான கல்வியாக மலர வேண்டும். ஏனென்றால் மண்ணும் மக்களும் பிரித்தாலும் பிரிக்க முடியாதவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com