தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நாட்டின் நரம்புகள்

மனித நாகரிகம் தோன்றியதே நதிக்கரை ஓரங்களில்தான். நதிகள் என்பது அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது.

Updated On :10 ஜூலை 2017, 8:25 pm

மனித நாகரிகம் தோன்றியதே நதிக்கரை ஓரங்களில்தான். நதிகள் என்பது அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. கனிம வளத்தை தன்னகத்தே கொண்டு, விவசாயத்திற்குத் தேவையான நீரையும் அள்ளித் தரும் அமுதசுரபியான நதிகளின் ஓட்டத்தில்தான் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை செழுமையுடன் அமைந்திருந்தது.
நதிகள், தாய் போன்றவை, புனிதமானவை, வணக்கத்திற்குரியவை. எனவேதான் நாம் நதிகளை பெண்களின் பெயரிட்டு அழைத்து மகிழ்கிறோம்.
தொன்றுத்தொட்டே நதிகளும், அவற்றின் கரைப் பகுதிகளும் மனித இனத்தின் குடியிருப்புகளாக இருந்து வருகின்றன. சென்னை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களை உதாரணமாகக் கூறலாம்.
பல தொழிற்சாலைகளும், வளர்ச்சித் திட்டங்களும் நதிகளை ஒட்டியே அமைந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நதிகளையே சார்ந்துள்ளது.
இன்று பெரிய நதிகள் யாவும் தூய்மைக் கேடு நிறைந்ததாக இருக்கின்றன. 14 பெரிய நதிகள், 55 சிறிய நதிகள், நூற்றுக்கணக்கான ஆறுகள், இவற்றின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றன. சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டைத் தவிர்க்க திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நதிகளில் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுப் பொருள்கள், தொழில் மற்றும் விவசாய சம்பந்தமான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் கடலில் கலக்கப்படுகின்றன என இந்திய தலைமை கணக்காயரின் அறிக்கை ஏற்கெனவே அரசுகளை எச்சரித்துள்ளது.
மிகப் புனிதமான நதியாகவும், முக்கிய நீராதாரமாக விளங்கும் கங்கை நதியில், ஒவ்வொரு நாளும் சுமார் 100 கோடி லிட்டர் கழிவுகள் கலக்கின்றன. இதனால் ஏராளமான மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. கங்கை நதி தூய்மை தொடர்பான பொதுநல வழக்கில் கங்கை, யமுனை வெறும் நதிகள் அல்ல; அவை உயிருள்ள மனிதர்கள் என உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நதிகள் மாசடைவதால் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும், ஏராளமான ஊர்வன விலங்குகளும், நதிக் கரையோரங்களில் வாழும் மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். பன்னாட்டு குளிர் பானங்கள் நதிக்கரையோரம் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து அங்கேயுள்ள நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சி, காட்மியம் நிறைந்த தங்களது ஆலைக் கழிவை நதிகளில் கலக்கச் செய்கிறது. இதனால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்னகத்தில் தாமிரவருணி நதியின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இந்நதியும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தன் சுவையையும், சுயரூபத்தையும் இழந்து வருகிறது. நதிகளை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதற்கு தாமிரவருணி நதியே சிறந்த உதாரணம்.
இன்று இந்தியாவில் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும், நீர் வளத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீடிக்கிறது.
இந்தியாவிலேயே கடலில் கலக்காத ஒரே நதி வைகைதான். தமிழ் இலக்கியங்களில் பெருமையாகப் பேசப்பட்ட வைகை நதியில் இன்று எவ்வித குற்றவுணர்வுமின்றி வீடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள், குப்பைகள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றைக் கொட்டி மாசுப்படுத்தியதால், இன்று அந்நதி கரையிழந்து, மணலழிந்து நீரோடிய தடமழிந்து பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டவனைப்போல் சூம்பிப் போய்விட்டது.
தமிழகத்தின் வாழ்வாதாரமான காவேரி நதியின் முக்கிய துணையாறு நொய்யல். பண்டைய தமிழ் இலக்கியங்களில் காஞ்சிமா நதி என வர்ணிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் வளமைக்கும், பசுமைக்கும் ஆதார சுருதியாக இருப்பது இந்த நொய்யலாறுதான்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரத்தில் வெள்ளியங்கிரி, பூண்டி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து, கரூர் மாவட்டம், நொய்யல் கிராமத்தில் காவேரியுடன் கலக்கிறது.
நொய்யல் நீர் தெளிவாகவும், சுவையாகவும் இருக்கும் என்பது பழங்கதை. அந்த ஆறு அருகிலுள்ள நகர்ப்புற கழிவுகளால் மாசடைந்தபோதுகூட நஞ்சாகவில்லை. ஆனால், சாயப்பட்டறைகளின் கழிவு நீர் நொய்யலை நஞ்சை சுமக்கும் நதியாக்கி விட்டது.
வேலூர் மாவட்டத்தில் 317 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்கிய பாலாற்றின் நிலையும் இதேதான். பாலாற்றுப் படுகையில் கட்டப்பட்டுள்ள சுமார் 100 சிறிய, பெரிய தோல் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் அந்த ஆற்றை நிரந்தரமாக மூடிவிட்டன. சென்னையில் கூவம், அடையாறு எனும் இரு நதிகள் கழிவு நீர் சுமந்து செல்லும் ஆறுகளாக மாறிவிட்டது.
நதியும், மழையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. சூரியனால் கடல் நீரானது ஆவியாகி, மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து, அவை நதிகளின் மூலம் ஊர் மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி, கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன. நதிகள் மாசடைந்த தங்களின் இயல்பை இழந்தால், நாட்டில் மழை வளமும் குறையும்.
நதிகளில் உள்ள மண் வளம் கொள்ளையடிக்கப்படுவதால், ஆற்றில் நீர் ஊற்றுக் குறைந்து மண்ணை மலடாக்குகிறது. நதிகளில் மணல் கள்ளத்தனமாக அள்ளப்படுவதால் நதிகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
ஆற்று நீரும், மணலும் வற்றியதால் சுற்றியிருக்கும் பகுதிகளும் வறட்சியாகி தண்ணீரைத் தேடி யானைகள் உட்பட பல உயிரினங்கள் ஊருக்குள் வந்து தண்ணீர் கிடைக்காமல் மாய்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் மழைக் காலங்களில் பொங்கி, கரை கொள்ளாமல் கடலை நோக்கி ஓடும் நதிகளை இனி எதிர்கால சந்ததியினர் வரைப்படமாகத்தான் காணமுடியும்.
நதிகள் வளமாகவும், தூய்மையாகவும் இருந்தால்தான் அதன் கரைகளில் வாழும் மக்களும், இதர உயிரினங்களும், ஆரோக்கியத்துடன் வாழ முடியும். நதி நசிந்தால் நாகரிகம், கலை, மனிதம் நசியும். ஓடி வரும் நதிகள் நாட்டின் நரம்புகள் என்றால், தவழ்ந்து வரும் ஆறுகள் நாட்டின் இரத்த நாளங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.