நாம் பண்படவில்லை
வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பவர்களின் வரிசை, ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க நிற்பவர்களின் வரிசை, கோயில்களில் தரிசனத்துக்குக் காத்திருப்போர் வரிசை,


வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பவர்களின் வரிசை, ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க நிற்பவர்களின் வரிசை, கோயில்களில் தரிசனத்துக்குக் காத்திருப்போர் வரிசை, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவசரப்படுபவர்களது வரிசை இங்கெல்லாம் சிறிய அளவிலாவது வாய்ச் சண்டைகள் சலசலப்புகள் இல்லாமல் இருக்காது.
குடும்பத் தலைவர் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் இத்தனை பேர்களுடன் அடக்கம் குடும்ப அட்டையில். பெண்கள் - வயது வந்தவர்கள் திருமணமாகிச் செல்வதும், ஆண் பிள்ளைகள் திருமணமாகித் தனிக்குடித்தனம் போவதும், முதுமைப் பெற்றோர்களில் ஒருவர்க்கு இறப்பு நிகழ்வதும் தவிர்க்க வியலாதவை.
இவர்களது பெயர்கள் ரேஷன் அட்டைகளில் நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்படி நீக்கம் செய்யாமல் வழக்கமான பொருள்களை வாங்கிக் கொண்டேயிருப்பர். ரேஷன் கடைக்காரர் கண்டுகொள்ள மாட்டார். ஒருவகையில் அவருக்குச் சாதகமாகவும் இருக்கும்.
பத்து ஏக்கர்களுக்குச் சொந்தமானவர் ஒன்றிரண்டு ஏக்கர்களை மட்டும் பயன்பாட்டு விளைநிலமாக வைத்திருப்பார். மற்றவை தரிசுகள். பயிர்க் காப்பீடு, மானியம், வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் இத்தனையும் மொத்த நிலங்கள் முழுமைக்குமே வாங்குவார்.
தேசத்தின் உண்மையான மக்கள்தொகை நூறு கோடியைத் தாண்ட மாட்டா. ஆனால் ரேஷன் கார்டுகளின்படி மக்கள்தொகை 130 கோடி. முப்பது கோடி மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் ஆண்டுதோறும் விரயம்.
நம்மை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி நடத்திச் செல்ல கண்காணிப்பாளர் ஒருவர் தேவைப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று வாக்குப்பதிவு செய்யமாட்டோம். ரேஷன் கடைகளில் வரிசை பேணி பொருள்களை வாங்கும் எண்ணம் நமக்கில்லை.
கோயில் தரிசனங்களில் வரிசையில் செல்வது நமக்குக் கேவலம். பேருந்துகள் ரயில்களில் ஏறும்போது இறங்குவோர்க்குக் காத்திருந்து அடுத்து ஏறுவது நமக்கு இழுக்கு. முண்டியடித்தும், இறங்குவோரைத் துன்புறுத்தியும் கீழே தள்ளியும் ஏறுவதுதான் நமது ஆண்மையின் அடையாளம். நடத்துநரை உதாசீனம் செய்து இருக்கையை உறுதி செய்ய டவலையும், செய்தித்தாள்களையும் பேருந்தினுள் எறிவதுதான் நமது நாகரிகம்.
பயணம் செய்ய முன்பின்னாக ஏறுபவர்கள் இருக்கைகளின் வரிசைப்படி அமர்ந்து இருக்கைகளை நிறைவு செய்வதே முறை. ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லை. அவ்வாறு நடந்து கொள்ளக் கற்கவில்லை.
மற்றவர்களுக்குள்ள உரிமைகளைக் குறுக்குவழிகளில் நாம் தட்டிப் பறிக்க முயல்வது; பிறரைத் துன்புறுத்தலில் நாம் சுகம் அனுபவிப்பது; அரசு சட்டங்களை ஏமாற்றித் தந்திரமாக அரசு நிதியைச் சுரண்டுவது; காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறிக் காவல்துறையை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்ப்பது; நம்மைப் பற்றிய தகவல்களைப் பொய்யானதாக அரசுக்கு அளிப்பது நமது பெரிய மனிதத் தன்மை. வாழ்வு பற்றிய நமது மதிப்பீடுகளில் அறத்தின் சுவடுகள் இல்லை.
சட்டம் } ஒழுங்கு, மனிதநேயம், நம்மைப் போலவே பிறரையும் மதிப்பது இவையனைத்தையும் இன்று நாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம். 'எதிலும் முண்டியடித்து முதல் ஆளாக நின்றால் அவர்தான் பெரியவர். தலைவர், மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் தகுதி பெற்றவர்'. நமது அனுபவத்தின் மூலம் பெறும் தவறான பாடங்கள் இவை.
சில ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட நமது நாட்டைப் போல அடிக்கடி சுனாமிகளாலும், பூகம்பங்களாலும் சீரழிக்கப்படும் நாடு. குட்டித் தீவு ஜப்பான். அந்நாட்டினர் தரும் பாடங்கள் காலத்தால் அழியாதவை.
சுனாமி அத்தேசத்தையும் சின்னாபின்னப் படுத்தியது. உடைமைகள் வீடுகள் நாசமாயின. நினைத்துப் பார்க்க முடியாத கோடிகளில் இழப்புகள்.
பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகள், தங்களைக் காப்பாற்றும் பிள்ளைகளை இழந்து கண்ணீரில் மிதந்த முதியவர்கள், கணவனின் இழப்பால் துடிக்கும் மனைவி, மனைவியைப் பறிகொடுத்து ஏங்கும் கணவன், வீடுகளை இழந்து தெருக்களில் குளிர் பனியிலும், கோரமான புயற்காற்றிலும் மரணத்துடன் போராடும் பலர்.
பிற நாடுகளின் உதவிக்கரங்களாலும் நிறைவு செய்ய முடியாத கொடுமை, அழிவின் விளிம்பில் நின்றதை நாளேடுகள் உலகின் கண்களுக்குக் காட்டின.
ஒரு வீட்டில் சுனாமியால் தாக்குண்டு மிஞ்சியவர்களில் முதியவர்கள் இருவர் மட்டுமே. வயது வந்த ஆண் பிள்ளைகள் இருவர் காணாமற் போய் மாதங்கள் பல கடந்தும் உயிருடன் இருப்பதற்கான அடையாளங்கள் கிடைக்கவில்லை.
உயிரிழப்புகள் நேர்ந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு சார்ந்தோர் இவர்களுக்கும் நிவாரணம் அளிக்க, முதியோர் இருவரும் இழப்பீடு தொகையை வாங்க மறுக்கிறார்கள்.
எங்களது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ஒரு நாள் எங்களைத் தேடி வருவர் என்பதை நம்புகிறோம். நாங்கள் நம்புகிறபோது நீங்கள் ஏன் இறந்ததாகக் கணிக்க வேண்டும். நாங்கள் இழப்பீடு பெற விரும்பவில்லை.
முறையில்லாமல் கிடைக்கும் பணத்தைப் பெற விரும்பாத அம்மூத்தோர், தேசிய நிதியை விரயமாக்கத் துளியும் எண்ணமில்லா தேசப் பற்றாளர்களான அந்த முதுமைத் தம்பதியினர் நம்மவர்களா, இல்லை. ஜப்பானியர்கள். நம்மவர்கள் ஒருவரையொருவர் ஏய்ப்பதில் வல்லமையுடையவர்கள். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாதவர்கள்.
கால்நடைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் மேய்ப்பர்கள் போன்று நமக்கும் மேய்ப்பர்களும் கண்காணிப்பாளர்களும் தேவைப்படுகிறார்கள். அதிகபட்சக் கடுமையான தண்டனைகள்தான் நம்மை ஒழுங்குபடுத்தக்கூடும். நாம் இன்னும் பண்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...