திறன் சார்ந்த கல்வி தேவை

பொதுவாக இன்று நம் நாட்டில் மக்களின் மேம்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி என்று விவாதிப்பதைவிட அதிகமாக விவாதிக்கப்படுவது அரசியல்
திறன் சார்ந்த கல்வி தேவை
Updated on
3 min read

பொதுவாக இன்று நம் நாட்டில் மக்களின் மேம்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி என்று விவாதிப்பதைவிட அதிகமாக விவாதிக்கப்படுவது அரசியல். அதிலும் வளர்ச்சி அரசியல் பற்றியோ, மக்கள் அரசியலைப் பற்றியோ விவாதிப்பதைவிட கட்சி அரசியல் பேசுவதில்தான் அனைவருக்கும் ஆர்வம். ஊடகங்களும் அதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
மக்கள் பிரச்னை என்பது பொருளாதாரம்போல் வளர்ந்து வருகிறது. சிக்கல்கள் நிறைந்ததாகவும் மாறி வருகின்றது. வளர்ந்து வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் சக்தியை அரசாங்கங்கள் இழந்துவருவதை நாம் இன்று பார்த்து வருகின்றோம். அதன் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் நெடுவாசல் போராட்டம்.
ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, மரியாதையையும் இழந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. எந்த அரசியல்வாதியும் தனியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் சூழ்நிலை இன்று இல்லை.
எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை மக்கள் அருவருப்பாக பார்க்கக்கூடிய இன்றைய சூழல் மிகவும் ஆபத்தானது. இதை நம் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணர்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சமீபத்தில் நம் கல்வித்திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஜெர்மனிய நாட்டு நிறுவனம் ஒன்று. அந்த ஆய்வு அறிக்கை பள்ளிக்கல்வியை முடித்து மேலே செல்லும் மாணவர்களின் கல்வி பற்றிய உலகளாவிய அறிக்கை.
இந்த அறிக்கை நம் நாட்டிற்கு இருக்கும் வாய்ப்பையும், அதைப் பயன்படுத்தாமல் போனால் வரும் ஆபத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. ஒரு காலத்தில் உயர்குடி மக்களுக்கானதாக இருந்த உயர்கல்வி இன்று யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாக மாறி உயர்கல்வி வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக உள்ளது என்பதைப் படம் பிடித்துகாட்டும்போது, இந்தியாவில் உயர்கல்வி அடைந்துள்ள அசுர வளர்ச்சி உலகை வியக்க வைத்துள்ளது.
அதே நேரத்தில் இந்த அறிக்கை நம் நாட்டில் உயர்கல்வி அடைந்துள்ள வளர்ச்சி என்பது ஒரு சிக்கலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
சுதந்திரம் அடைந்த நேரத்தில், 2,15,000 மாணவர்களுக்கு 20 பல்கலைக்கழகங்களும், 496 கல்லூரிகளும் உயர்கல்வியைப் போதித்தன. ஆனால் இன்று 757 பல்கலைக்கழகங்களும், 38,056 கல்லூரிகளும், 11,922 ஆராய்ச்சி நிறுவனங்களும் 33.3 மில்லியன் மாணவர்களுக்கு உயர்கல்வியை போதித்து வருகின்றன.
இந்த எண்ணிக்கைச் சாதனையை மறுக்க முடியாது. ஆனால் இந்த வளர்ச்சி, திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட, வாய்ப்புகளைப் பயன்படுத்த தகுதியுள்ள வளர்ச்சியா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் என்பதை எடுத்து வைக்கிறது அந்த அறிக்கை.
ஏனென்றால், கல்வித்துறை வளர்ந்த வேகம், கல்வி நிறுவனங்கள் வளர்ந்த எண்ணிக்கை இரண்டுமே பிரச்னைகளையும் சிக்கல்களையும் உருவாக்கவல்ல தன்மைகளைக் கொண்டவை. இதை யாரும் மறுக்க இயலாது. அடுத்து இப்படி வளர்ந்த வேகமும், எண்ணிக்கையும் சிக்கலைக் கொண்டுவரும்போது இந்த வளர்ச்சியில் பங்கெடுத்த தனியார் நிறுவனங்கள் கொண்டுவந்த சிக்கல்கள் ஏராளம்.
எனவே உயர்கல்வி வளர்ச்சியின் வேகமும், எண்ணிக்கையும் தனியாரின் பங்களிப்பால் வந்த பிரச்னைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு சரியான கோணத்தில் முடிவுகள் எடுத்து சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டுகளில் அது நடைபெறவில்லை நம் நாட்டில்.
இன்று நாம் முதன்மையாக சந்திக்கின்ற பிரச்னை, தொழிலாளர் சந்தையின் தேவையும், உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் முரண்பட்ட நிலையில் உள்ளதே. சந்தைக்குத் தேவையான மாணவர்களை நமது கல்வி நிறுவனங்களால் தேவைக்கு ஏற்றாற்போல் தயார் செய்து கொடுக்க முடியவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக இந்த ஆய்வு அறிக்கை படம்பிடித்துக் காட்டுகின்றது.
தேவை என்பது வேறு ஒரு நிலையில் உள்ளது. கல்வி நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு அதிக எண்ணிக்கையில் தேவையில்லாத தொழில்களுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. தொழிலாளர் சந்தையின் தேவை பற்றி ஒரு சில ஆய்வுகள் இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கட்டளை இடும் அளவிற்கு சீரிய உயர் ஆய்வு பெரிய அளவில் இந்தியாவில் நடைபெறவில்லை.
அதேபோல் உயர்கல்வி நிறுவனங்களும் இவ்வளவு பெரிய தொகையை மூலதனம் செய்து மாணவர்களை உருவாக்கும்போது, சந்தையின் தேவை பற்றிய ஒரு பொதுப் புரிதலே இல்லாமல் மக்களின் ஆசைக்கு தீனிபோட்டு மாணவர்களை உருவாக்கி வேலை இல்லாமல் செய்ததுதான் இன்றைய உயர்கல்வி தேக்க நிலைக்குக் காரணம்.
சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு நிலையில் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதலும், புதியதாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவதும், அவை அனைத்தையும் உலகத்தரத்திற்கு உயர்த்துவதும்தான் இன்றைய தேவை.
அந்த நிகழ்வு பெரும் அளவில் இந்தியாவில் நடைபெறவில்லை. மேற்கண்ட செயல்களில் நம் மத்திய அரசும் மாநில அரசாங்கங்களும் கவனம் செலுத்தியிருந்தால் நாம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் சாதனைகளை செய்திருக்க முடியும்.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாகவே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தும்கூட மாநில அரசுகள் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டிருந்தால் நாம் இப்போது உலகத் தேவைக்கு நம்மால் மாணவர்களை உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் அது நடைபெறவில்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் அறிவுப் பொருளாதாரத்தில் பங்கெடுக்க, ஆராய்ச்சி ஆற்றல் பெருக்கப்பட்ட மாணவர்களை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும். அந்தச் சூழலையும் இந்தியாவில் உருவாக்கவில்லை.
மாறாக இந்தியாவில் சான்றிதழ் தருவதற்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிலையங்களாகத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இதற்கு ஒரு படி மேலே சென்று இவ்வளவு வளர்ச்சியும் சிக்கலும் நிறைந்த சூழலில் கல்விக்கொள்கை இல்லாமல் இருப்பதும், கல்விக்கென ஒருங்கிணைந்த துறை இல்லாமல் இருப்பதும், கல்வியில் தரம் பற்றிய பார்வை இல்லாமல் இருப்பதும் இந்தியக் கல்விச் சூழலை மாசுபடும்
சூழலுக்கு கொண்டு சென்றுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயர்கல்வியில் தரத்தைக் கூட்டிடும் வகையில் தரச்சான்றிதழ் வழங்க உருவாக்கப்பட்ட நாக் (NAAC) என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்களைக்கூட இன்னும் தர மதிப்பீடு செய்து முடிக்கவில்லை.
தர மதிப்பீடு முடிந்த நிறுவனங்களுக்கும் எந்த வித சலுகைகளையும் அளித்து ஊக்கப்படுத்தவில்லை. இது தரமான கல்விக்கு இந்தியாவில் என்ன மதிப்பளிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
நாம் உடனடியாக அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிலையங்களில் உற்பத்தி செய்கின்ற மாணவர்களை சந்தைக்குத் தேவையான நிலையில் முறைப்படுத்தி உருவாக்காவிட்டால், இந்தக் கல்வி என்பது சமூகத்திற்கு பிரச்னைகளை உருவாக்கக் கூடிய வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கும்.
கல்வியின்மூலம் மக்கள் தொகையால் நமக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சியும், வருவாயும், நன்மையும் கிடைக்கப்போவது இல்லை என்பதை அந்த ஆய்வறிக்கை எடுத்து வைக்கின்றது.
திறன் வளர்ப்பில் காட்ட வேண்டிய ஆர்வம் கூட்டப்படவில்லை. அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகின்றது. திறன் வளர்ப்புக் கல்விக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை சமூகமும், அரசாங்கங்களும், கல்வியாளர்களும் தரவில்லை. இன்னும் நம் சமூகத்தில் திறன் வளர்ப்புக் கல்விக்கான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமாறி சமூகம் வரை இதற்கான விழிப்புணர்வு வந்தாக வேண்டும். இந்தச் செயல்பாடுகள் ஒரு இயக்கம்போல் நடைபெற வேண்டும். அந்த முனைப்பு அனைவருக்கும் வந்திட வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும், அமைச்சகங்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்படுவதுபோல் செயல்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
வணிகமயமாக்கப்பட்டு தனியார் கையில் சிக்கி லாபம் ஈட்டும் ஒரு வணிகமாக உயர்கல்வி திகழ்வதை நாம் பார்க்கின்றோம். பொது உயர்கல்வி நிறுவனங்கள் ஊழலில் ஊறி சிதைந்துவரும் இந்தச் சூழலில் இந்த அறிக்கை நம் கண்களைத் திறக்க உதவிடும்.
இந்த அறிக்கை நம் ஆட்சியாளர்களின் கண்களைத் திறக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com