ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழுக்கு ஆங்கிலமே தடைக்கல்!

உயர்வானது தமிழா - வடமொழியா என்றொரு விவாதம் ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையும் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2017, 7:53 pm

சா. பன்னீர் செல்வம்

உயர்வானது தமிழா - வடமொழியா என்றொரு விவாதம் ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையும் நடைபெற்றது. தமிழை ஒரு மொழியெனச் சொல்லுதற்கு அறிவுடையோர் நாணுவரெனத் தமிழ் இலக்கண ஆசிரியரொருவர் கூறியமை உச்சகட்டம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்டுவெல்லின் ’திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்' வெளியான பின்னர் தமிழ்த்தரப்பு சற்று மேலோங்கியது. ’வால்போச்சு; கத்தி வந்தது' என்னும் கதையாக இருபதாம் நூற்றாண்டில் விவாதப் போக்கு தமிழா - ஆங்கிலமா எனத் திசை மாறியது.
இன்றைய விவாதத்தில் ஆங்கிலத்தின் பக்கம் தமிழர் என இனவுணர்வு பேசுவோரில் ஒருசாராரும் சேர்ந்து கொள்ளுதல் முறையா என்பதும் விவாதப் பொருளாகிறது. தற்போது தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வடமொழியல்ல, இந்தியல்ல, ஆங்கிலமே தடைக்கல்லாகிறது.
ஆங்கில மொழி உலகளாவிய மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் விளங்குகிறதே எனலாம். அதற்குக் காரணம் மொழியல்ல, மொழியாளர். ஆங்கிலேயர் ஆதவன் மறையாப் பேரரசாக அனைத்துக் கண்டங்களிலும் ஆட்சி செய்தமையால் அவர்தம் மொழி அனைத்துலக மொழியாயிற்று.
அதன் காரணமாகவும் ஆங்கிலேயர், ராயல் கழகம் எனுமொன்றை நிறுவி, எந்தவொரு கண்டுபிடிப்பும் அதன் ஒப்புதலைப் பெறவேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதாலும் புதிய கண்டுபிடிப்பாளரும், சிந்தனையாளரும் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடும் நெருக்கடிக்காளாயினர்.
எனவே, ஆங்கிலம் அறிவியல் மொழியாகவும், உலகளாவிய மொழியாகவும் ஆனதற்கு ஆங்கிலேயரின் ஆள்வினைத் திறனின்றி ஆங்கிலம் என்னும் மொழியின் சிறப்பியல்பு காரணமல்ல. இடைப்பிறவரலாக ஒன்று. இங்கிலீஷ் என்னும் மொழிப்பெயரை ஆங்கிலம் எனப் பெயர் மாற்றிக் கூறுதல் முறையா என்றொரு வினா எழுகிறது. ஆங்கிலோ சாக்சன் எனும் பழைய மொழி லத்தின் மற்றும் கிரேக்க மொழிகளின் கலப்பால் பெற்ற உருமாற்றமே இன்றைய இங்கிலீஷ்.
இன்றும் பழைமையான இங்கிலீஷ் என்பதை ஆங்கிலோ சாக்சன் என்றே குறிப்பிடுகின்றனர். அதனடிப்படையில்தான் நம்மவர்கள் ஆங்கிலம், ஆங்கிலேயர் எனும் சொல்லாட்சிகளை மேற்கொண்டனர். இனி, எந்த மொழியாளரும் உலகளாவிய ஆட்சிபுரிய வாய்ப்பில்லையாதலால் எந்த மொழியும் உலகளாவிய மொழியாகும் வாய்ப்பில்லை.
’சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்றார் பாரதியார். இன்றைய தகவல் தொழில்நுட்ப நிலையில் எட்டுத்திக்கும் செல்லத் தேவையில்லை. இருக்கும் இடத்தில் இருந்தபடியே கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்துத் தமிழை அறிவியல் மொழியாக்க முடியும்.
இனி, ’இந்தியர் எவரும் ஆங்கிலம் கற்க வேண்டாமெனக் கூறவில்லை; ரசியாவில் அவர்கள் செய்திருப்பதையும், தென்னாப்பிரிக்காவிலும், சப்பானிலும் செய்து கொண்டிருப்பதையும் நாமும் செய்வோமாக' - எனக் காந்தியார் அறிவுறுத்தி நூறாண்டுகள் முடிந்த பின்னரும், ஆங்கிலம் கற்றால் ஆங்கில வழியில் கற்றால் அனைத்துலகும் சென்று வென்று வரலாமெனும் பொய்யுரை தொடர்தலை என்னென்று சொல்ல?
ஆங்கிலேயரின் தாயகமான இங்கிலாந்து, அவர்களின் குடியேற்ற நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்பன தவிர்த்து பிரான்சு, செர்மனி, ரசியா, சீனா, சப்பான் முதலான வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஆங்கிலத்தைக் கொண்டு காலந்தள்ள முடியாது என்பதும், அவர்களெல்லாம் கணினி உட்பட அவரவர் தாய்மொழியில் படித்துப் பெறும் பட்டங்களின் அடிப்படையிலேயே அமெரிக்கா முதலாக ஆங்கில மொழி நாடுகளில் வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள் என்பதும் இங்கே மூடிமறைக்கப்படுகின்றன.
அதாவது, அமெரிக்கா முதலான நாடுகளில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு ஆங்கில மொழியறிவுதான் தேவை; ஆங்கில வழிக்கற்றல் தேவையில்லை என்னும் உண்மையை நம் இளையோர்க்கும், அவர்களைப் பெற்றோர்க்கும் எடுத்துரைக்குமளவுக்கு செல்வாக்கு மிக்க நம் பெரிய மனிதர்களுக்கு உள்ளம் பெரிதாகவில்லையென்பதே இங்கே அடிப்படைச் சிக்கலாகிறது.
அது மட்டுமா? தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்துப் பட்டம் பெற்று, சிங்கப்பூர் உள்ளிட்ட அயலக வேலைவாய்ப்புப் பெறுவோர் அங்குள்ளோரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசிப்பழகத் தடுமாறுகிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இதற்கென்ன காரணம்?
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறுதற்கும், அயலகம் சென்று ஆங்கிலத்தில் பேசிப் பழகுதற்குமான ஆங்கில மொழிப் பயிற்சி மட்டுமே நம் பிள்ளைகளுக்குத் தேவை. எனவே, ஆங்கில மொழிப் பாடத்தில் பேச்சுப் பயிற்சி கட்டாயமான ஒரு பகுதியாக வேண்டும். அதற்கேற்றவாறு, ஆங்கில மொழிப் பட்டப்படிப்பும், ஆங்கிலத்தில் பேச்சுத் திறனுமுடையோரே பள்ளிகளில் ஆங்கில மொழியாசிரியர்களாக வேண்டும்.
தமிழ் வழியில், திறமான ஆங்கில மொழிப் பயிற்சியுடன் பயிலுமொருவன் தேவைப்படும் கட்டத்தில் தனது படிப்பை, பணியை ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளுதலும், அயலாருடன் ஆங்கிலத்தில் உரையாடுதலும் வெகு இயல்பாகிவிடும். அதன் பின்னரும் அயலக வேலைவாய்ப்பிற்காகத் தம் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புமளவுக்கு நம்மவர்கள் பைத்தியக்காரர்களல்ல.
சட்டம் என்பது ஒரு குழுவாக, ஓர் அமைப்பாக, ஒரு சமூகமாக இணைந்து வாழும் மக்களின் தனிமனித உரிமைகளைக் கட்டுப்படுத்திக் குழு, அமைப்பு, சமூகம் என்பவை சிதையாவாறு ஒழுங்குப்படுத்துதலன்றி வேறல்லவே?
மொழியென்பது யாது? இணைந்து வாழவும், செயற்படவுமாக மக்களை ஒருங்கிணைக்கின்ற கட்டமைப்பன்றி வேறல்லவே? சமூகமெனும் கட்டமைப்பு நீடிக்க வேண்டுமானால் அதற்கடிப்படையாகும் மொழியென்பதும் நீடிக்க வேண்டுமல்லவா? தாய்மொழி வேண்டாமெனக் கூறவில்லை. தாய்மொழியே பயிற்று மொழியாகத் தேவையில்லை எனலாம்.
தாய்மொழிக் கல்வியே கற்றல் எளிமையாவது என்பதும், தாய்மொழி வழிக் கல்வியுடன் தேவையான அயல் மொழியறிவு பெறுதலே அயலார் தொடர்புக்கும், அயலக வேலைவாய்ப்பிற்கும் போதுமானதென்பதும், அயல்நாட்டார் பலரும் அவ்வகையாகவே முன்னேறுகிறார்கள் என்பதும் பட்டறிவாகும் மெய்ப்பாடாகத் தெளிந்த பின்னரும், அவசியமற்றதென அனுபவ பூர்வமாக உணருமொன்றிற்காக அதிகப்படியான அல்லலுக்குப் பிள்ளைகளை உள்ளாக்குதல் அவசியமா - நியாயமா என்பதே கேள்வி.
எனவே, தமிழக அரசின் இருமொழித் திட்டத்தை, முதல் பாகம் தமிழ் - கட்டாய பாடம். இரண்டாம் பாகம் - ஆங்கிலம் அல்லது தமிழல்லாத தாய்மொழி என்றமைக்க வேண்டும். ஆங்கிலோ இந்தியருட்பட மொழிச் சிறுபான்மையர் அவரவர் தாய்மொழி கற்பதற்கான வாய்ப்பும் உள்ளடக்கமாகிறது.
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவர்க்கும் அவரவர் தாய்மொழியுடன் ஆங்கில மொழியையும் கட்டாய பாடமாகக் கற்பிக்க வேண்டுமென இந்திய அரசியலமைப்பில் எந்த இடத்திலும் கூறவில்லை.
அதேசமயம், கர்நாடகத்தில் கன்னடம் கட்டாயமாக்கப்பட்டபோதும், மராட்டியத்தில் மராட்டிய மொழி கட்டாயமாக்கப்பட்டபோதும் அவை தொடர்பான வழக்குகளில், ஒரு மாநிலத்தில் அம்மாநில மொழியைக் கட்டாயமாக்குதல் இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு முரணல்லவென உச்சநீதிமன்றம் ஒரு முறைக்கு இரு முறையாகத் தீர்ப்பளித்திருப்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
’மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை' - என்றார் பாரதியார். அவ்வகையில் ஒருபடி முன்னேறியிருக்கிறோம். பலமொழிகளறிந்த நம் தமிழறிஞர்கள் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைப் பாரெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும் ஓரச்சம். இப்படியான தமிழ் உங்கள் நாட்டில் எப்படியாக இருக்கிறது என அயலவர் கேட்கும்போது நம்மவர் என்ன பதில் கூறுவார்?
இந்திய அரசியல்வாதிகள் பலரும் வியக்கும்படியாகக் கல்வித் துறை, நிதித் துறை இரண்டையும் ஒருசேரக் கையாண்ட சி. சுப்பிரமணியம் ’தமிழால் முடியும்' என நூல் வெளியிட்டு ஐம்பத்தெட்டாண்டுகள் கடந்துவிட்டன. ’படிப்படியாக அனைத்து நிலைகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக்கப்படும்' என அண்ணாதுரை அறிவித்து நாற்பத்தெட்டாண்டுகள் கடந்து விட்டன.
உலகின் முதல் மகளான தமிழன்னை, இந்திய அரசுப் பயன்பாட்டிற்கும் தமிழகத்தில் கட்டாய பாடமாகவும், பயிற்றுமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் தகுதியின்மை எனும் அலங்கோலத்துடன் தமிழ்நாட்டிலேயே இரண்டாம் நிலைக்குடிமகளாக அலைந்து கொண்டிருக்கிறாள்.
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் அவள் தலையில் செம்மொழி மகுடஞ்சூட்டி அன்னையின் அருமை பெருமைகளை உலகெலாம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவல்ல தமிழ் வீரம். அன்னைத் தமிழ்வழியாக ஆயகலைகள் அனைத்தையும் தேர்ந்து கொள்ளும் திறத்தாலே வையம் போற்றும் வெற்றிகளை வாரிக்குவித்து, தமிழால் முடியும் என சாதித்துக் காட்டும்படி எழுக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.